தலைவர் அவர்கள் தனது உரையில் எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்த தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல, உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமையேற்க வருவான். அதுவரை யார் என்றால், இந்தப் புத்தகங்கள்தான் வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான்!

முகமது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு, அவர் எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறி விட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை. அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்.

("விடுதலை" 22.1.1965)

****

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:-

நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும்.

இந்த மூன்றையும் ஒழிக்கின்றது தான் எங்கள் கொள்கையாகும். கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவற்றில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியைப் பயன்படுத்துவது தடைப்பட்டு விட் டது. அதனால் தான் மனிதன் இந்த அவல நிலையில் இருக்கின்றான். இதனை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் வேலை.

மனிதன் அறிவை எவ்வளவுக்கு பயன்படுத்தி ஆராய்கின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு உன்னத நிலையை அடை கின்றான்.

மனிதன் ஆகாய விமானத்தில் சுமார் 150 மைல்கள் உயரத்துக்கு மேல் பறந்து விமானத்தை விட்டு வெளியே வந்து காற்றில்லாத விண்வெளியில் நீச்சல் அடிக்கக்கூடிய நிலை மையினை நாம் பத்திரிகையின் வாயிலாகக் காண்கின்றோம்.

மனிதன் பிறந்த நாள் முதல் கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணாக்கனாகவே இருக்கின்றான். அவன் கற்றுக் கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.

மனிதன் பற்றற்ற நிலையிலிருந்து எதையும் சிந்திக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகை யில், சீர்திருத்தத் திருமணம் மூலம் பெண்ணுரிமை நிலை நாட்டப்படுவது பற்றியும் நமது இன இழிவு மூட நம்பிக்கையும் ஒழிக்கப்படுவது பற்றியும், மணமக்கள் வாழ்க்கையில் பகுத்தறிவுடனும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவராகவும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுப்படுத்திப் பேசினார்.

--------------------------

தந்தை பெரியார் -"விடுதலை" 22.6.1965.
அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா

Pin It