தபாற்காரர் வேலைநிறுத்தம் செய்து விட்டபடியால் பாட்னாவில் குப்பைத் தொட்டிகளில் பெருவாரியான கடிதங்கள் கிடந்தனவாம்!

kuthoosi gurusamy 263இக்கடிதங்களிலெல்லாம் “ஸ்ரீராமஜெயம்” என்று தலைப்பில் குறித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். குறித்திருந்தால் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்குமா?

வெளிமாகாகாணங்கள் எப்படியோ போகட்டும். தமிழ்நாட்டு “ஆஸ்திகர்”களுக்கு இப்போது சோதனைக் காலம். அதாவது, ஸ்ட்ரைக் நிற்கிறவரையில் “உ” என்று தலைப்பில் போட்டுவிட்டுத்தான் பலர் கடிதம் எழுதுவார்கள், இங்கே! அதற்குப் பிள்ளையார் சுழி என்று பேராம்!

நான் சிதம்பரய்யர் என்ற உபாத்தியாயரிடத்தில் சில வருஷங்கள் படித்தேன். அவர் அடிக்கடி சொல்வார், எங்கள் வகுப்பில்:- “ஏய்! எவனாவது பரீட்சையில் பிள்ளையார் சுழி போட்டீர்களோ, மார்க்கும் ‘சுழி’ தான் கிடைக்கும்! உங்கள் பக்தியையெல்லாம் பரீட்சை அறைக்கு வெளியே மூட்டை கட்டி வைத்து விட்டுப் போங்கள்! தெரியுமா?” என்று கூறுவார். அவரைப் போல எங்களுக்கும் கேட்ட கேள்விக்குப் பதில் எழுதத் தெரிந்திருந்தால் அவர் சொன்னபடி கேட்டாலும் 100க்கு 100 மார்க் வாங்கி விடுவோம். அதுதானே இல்லை! ஆகையால் பரீட்சையின்போது மேஜையின்மீதாவது பிள்ளையார் சுழி (“உ”) போட்டு விட்டுத்தான் தொடங்குவோம். ஆனால், பிள்ளையார் சுழி போட்டவர்களெல்லாம் பரீட்சையில் தேறி விட்டார்களா?” என்று கேட்காதீர்கள்.

பிள்ளையார் சுழி மட்டுமல்ல; “ஓம்,” “கடவுள் துணை”, “முருகன் துணை,” “ஸ்ரீராமஜெயம்,” என்ற மந்திர வார்த்தைகளில் ஒன்றையாவது எழுதாமல் கடிதம் எழுதத் துணிவு (அறிவு) கொண்டவர்கள் தமிழ் நாட்டில் 100 -க்கு 10 பேராவது இருப்பார்களா? சந்தேகந்தான்.

எனக்குத் தெரிந்த காரைக்குடிவாசி ஒருவர் 15 நாட்களுக்கு முந்தி ஒரு கார்டு எழுதினாராம்! எழுதி முடித்துவிட்டு, அடியில் “இப்படிக்கு, அண்ணாமலையார் துணை” என்று தம் வழக்கம்போல் எழுதித் தபாலில் போட்டு விட்டாராம். சென்ற வாரம் என்னைச் சந்தித்தபோது, “என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்? உடனே புறப்பட்டு வரச் சொல்லி எழுதினால், பேசாமலிருந்து விட்டீர்கள்! உங்களால் முடிந்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான காரியம் பாழய்ப் போச்சே!” என்று உரிமையோடு கோபித்துக் கொண்டார். “கடிதம் எதுவும் வரவில்லையே,. அட, பாவமே!” என்றேன், நான்.

ஒரு நிமிஷம் யோசித்தார். மூக்கில் விரல் வைத்தார். “ஆஹா!” என்றார். வலது கையை உதறினார்.

“என்ன?” என்று கேட்டேன்.

“அவசரத்தில் உங்கள் விலாசத்தை எழுத மறந்து போனேன்”, என்றார்.

“விலாசம் கிடக்கட்டுமய்யா! அண்ணாமலையார் துணை என்று மறக்காமல் போட்டீர்களோ?,” என்று கேட்டேன், வேடிக்கையாக. அன்று முதல் இன்றுவரையில் என்னோடு பேசுவதில்லை அவர்!

தபாற்காரர் துணை யில்லாவிட்டால் ‘கடவுள் துணை’யால் மட்டும் கடிதம் போய்ச் சேர மாட்டேன் என்கிறது இப்போது. பழுத்த ஆஸ்திகர் ஒருவர், ஏன்? மகான் ரமண ரிஷியாகத்தான் இருக்கட்டுமே! அல்லது விநாடிதோறும் கடவுளை அழைக்கும் காந்தியாராகத்தான் இருக்கட்டுமே! பயபக்தியோடு, ‘கடவுள் துணை’ யென்று மெதுவாகவோ, அல்லது தனிப்பட்ட முறையில் நெருங்கிப் பழகிய காரணத்தால் “முருகன் துணை” யென்றோ, கடிதத்தில் எழுதிவிட்டு, விலாசமும் எழுதாமல், ஸ்டாம்பும் ஒட்டாமல், தபால் பெட்டியில் போட்டுப் பார்த்தால் அப்போது தெரியும்! இவ்வளவு ஏன்? வேண்டும்போதெல்லாம் கடவுளைக் கண்டு விஷயங்களைக் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வரும் தோழர் காந்தியாருக்குக்கூட, கடவுள் கையை விரித்து விட்டாராமே, 5, 6 நாட்களாய்! தபாலே வருவதில்லையாமே, கடவுள் துணையிருந்தும், தபாற்காரர் துணையில்லாத காரணத்தால்.

இதற்காக இனிமேல் “தபாற்காரர் துணை” யென்று எழுத ஆரம்பித்து விடாதீர்கள்! அவர்களுக்கு நீங்கள் துணையாயிருந்து உதவி செய்தால் போதும்! இப்போது மட்டுமல்ல, எப்போதும்! விலாசத்தைத் தெளிவாக எழுதுங்கள், தவறில்லாமல்! ஸ்டாம்பு ஒட்டுங்கள், மறந்துபோகாமல்! பிறகு “கடவுள் துணை” அமோகமாய்க் கிடைக்கும், கார்டுக்கும், கவருக்கும்!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It