கடந்த 31-10-2011 அன்று, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மாநராட்சி அதிகாரிகளால், தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட பல கட்டிடங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, இதன் தொடர்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் / எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது எனும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தங்களைப் பெரிய துப்பறியும் நிபுணர்கள் என நினைத்துக் கொண்டு இருக்கும் சில ஊடக நிருபர்கள், அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி, தொடர்புள்ள அலுவலகங்கள் மெளனம் சாதிக்கின்றன என்றும் அவ்விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதும்; ஊடகங்களுக்குக் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறுவதாகவும் செய்திகளை வெளியிடுகின்றனர்.
 
          ஊடகங்கள் ஆதிக்க வர்க்கத்தினரின் பிடியில் இருக்கிறது என்பது ஒன்றும் பிரம்ம ரகசியம் அல்ல. அவை நியாயமான செய்திகளை வெளியிடுவது இல்லை என்று ஆதிக்க வர்க்கத்தினரின் எடுபிடி அரசியல்வாதிகளே கூட, புலம்பும் அளவிற்கு உண்மை நிலையை மக்கள் உணர முடியாதபடியான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. உதாரணத்திற்காக கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்ட நிகழ்வு பற்றிய செய்திகளை அலசிப் பார்ப்போம்.
 
          நமது அலுவலக நடைமுறை பற்றிய விதிமுறைகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டன. அவ்விதிமுறைகளின்படி 300 கோப்புகளைக் கையாள்வதற்கு ஒரு உதவியாளர் தேவை. இது போல ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு பணியாளர்கள் வேண்டும் என ஆங்கிலேயர்கள் விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயர்கள் நிச்சயமாக நாம் சுகமாகத் தூங்கி விட்டுச் சம்பளம் பெற்றுக் கொண்டு போகும்படியான விதிமுறைகளை உருவாக்கி இருக்கமாட்டார்கள். நம்மைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கிய பின் தான் சம்பளம் கொடுத்து இருப்பார்கள். 300 கோப்புகளுக்கு மேல் ஒரு உதவியாளர் கையாண்டால் வேலையின் தரம் குறைந்து விடும் என்றும் ஊழலுக்கு வழிவகுத்து விடும் என்றும், அது தங்கள் நாட்டிற்குக் கொண்டு போகும் செல்வ அளவைக் குறைத்து விடும் என்றும் உணர்ந்து தான் ஊழியர்களின் எண்ணிக்கை தேவையான அளவிற்கு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள்.
 
          ஆனால் சுதந்திர நாடான பின்பு நம்மைக் கசக்கிப் பிழியும் விதிமுறைகளைத் தளர்த்தி இருக்க வேண்டும் அல்லவா? குறைந்த பட்சம் மேலும் இறுக்காமலாவது இருக்க வேண்டும் அல்லவா?
 
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பணிகள் என்னவென்று பாருங்கள். அவ்வலுவலகத்தின் ஊழியர்களின் எண்ணிககையைப் பாருங்கள். இது நகரமைப்புத் திட்டமிடும் பணியைச் செய்து வருகிறது. அப்பணியில் ஒரு சிறு பகுதி தான் அனுமதி மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது. சென்னைப் பெருநகர்ப் பகுதியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் அனுமதி மீறிக் கட்டப்பட்டு உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகளோ 95 சதவிகிதத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் அனுமதி மீறிக் கட்டப்பட்டவையே என்று கூறுகின்றனர்.
 
          இவற்றை எல்லாம் கண்காணிக்கப் போதுமான பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருக்கிறார்களா? கிடைக்கும் விவரங்களில் ஊடகங்களுக்கு மிகவும் சாதகமான விவரத்தையே கணக்கில் எடுத்துக் கொள்வோம். மூன்று லட்சத்திற்கும் அதிகமான அனுமதி மீறிய கட்டிடங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு கட்டிடத்திற்கு ஒரு கோப்பு என்றாலும் அவ்வலுவலகத்தில் குறைந்த பட்சம் மூன்று லட்சம் கோப்புகள் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவ்வலுவலகத்தில் குறைந்த பட்சம் 1,000 உதவியாளர்கள் பணி புரிய வேண்டும். ஆனால் அவ்வலுவலகத்தின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையே ஓராயிரத்திற்கும் குறைவு. அவர்களில் உதவியாளர்கள் நூறு பேர்களை விடக் குறைவு. அவர்களிலும் அனுமதி மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரிவுகளில் உள்ள உதவியாளர்களின் எண்ணிக்கை மொத்த வேலைப் பளுவை ஒப்பிடும் போது குருவியின் தலையில் பனங்காய் வைத்தது போல் அல்ல; பெரிய பாறாங்கல்லை வைத்தது போல் என்று தான் சொல்ல வேண்டும். உதவியாளர்களின் எண்ணிக்கையே இப்படி என்றால் மற்ற தொழில் நுட்பப் பணியாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இப்படிக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் தங்கள் கடமையை முழுமையாக எப்படிச் செய்ய முடியும்? அவர்கள் மீது நடவடிக்கை என்று அச்சுறுத்துவதன் பின்னணி என்ன?
 
          இது போன்று அரசு ஊழியர்களை மன நிம்மதி இழக்கச் செய்யும் வேலைகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் பணி புரிபவர்களுக்கு மட்டுமல்ல; நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிராக நடந்து கொண்டு இருப்பதை அரசு ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தோர்களும் நன்கு அறிவர். இது போல் அரசு ஊழியர்களை மன நிம்மதி இழக்கச் செய்யும் வேலைகள் எப்பொழுது ஆரம்பித்தன என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
 
          மறைந்த பிரதமர் வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மைய அரசாங்க வேலைகளில் 27 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும் வரை அரசுப் பணி என்பது மகிழ்ச்சி நிறைந்ததாகவும், கெளரவம் மிக்கதாகவும், மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் விதத்திலும் இருந்தது. ஆனால் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்பு உயர்சாதிக் கும்பலினர் பீதியடைந்து விட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் 5 சதவிகிதம் கூட  கொடுக்காமல் ஏமாற்றுவது போல் பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றுவது கடினம் என்பதைப் புரிந்து கொண்டனர்.
 
          பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் மிகக் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைச் செய்வதற்கு, பார்ப்பனர்களின் அதிகார வலைப் பின்னல் கச்சிதமாக இருக்கிறது. பொதுப் போட்டி முறையில் முடிவெடுக்கும் இடங்களில் பார்ப்பனர்களும், அவர்களிடம் ஆசைக்கும், அச்சத்திற்கும் விலை போனவர்களும் மட்டுமே இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை 27 சதவிகிதம் ஆகிவிட்டால் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ள அனைவரையும் ஆசைக்கும், அச்சத்திற்கும் அடிமையாக்க முடியாமல் போய் விடலாம். அப்படிப்பட்ட நேரங்களில் திறமையற்ற பார்ப்பனர்களுக்கு உயர்நிலை வேலைகளை அளிக்க, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் தடையாக ஆகிவிடுவார்கள். ஆகவே இதை எப்படியாவது தடுத்தே ஆக வேண்டும் என்று திட்டமிட்ட பார்ப்பனர்கள் தனியார்மயக் கொள்கையைக் கவ்விப் பிடித்துக் கொண்டனர்.
 
          அனைத்தையும் தனியார்மயமாக்கி விட்டாலும் அரசுப் பணி என்பதை முற்றிலும் ஒழித்து விட முடியாது. அரசுப் பணி என்பது அதிகாரம் கொண்ட பணி. இதில் சூத்திரர்களுக்கு இடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம் போல எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள முடியாமல் போய் விடும். ஆகவே இந்த இட ஒதுக்கீடு ஆணையை இல்லாததாக்கினால் தான் நிம்மதியாக இருக்கலாம் என்று திட்டமிட்ட / திட்டமிடும் பார்ப்பனர்கள், அரசு ஊழியர்களின் மன நிம்மதியைக் கெடுக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இத்திருப்பணியை நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது ஆரம்பித்தார்கள். இப்பொழுது இது நன்றாகத் தலை விரித்து ஆடிக் கொண்டு இருக்கிறது. நரசிம்மராவ் பிரதமர் ஆவதற்கு முன்னும் பின்னும் அரசு ஊழியர்களின் பணிச் சூழ்நிலையை ஆராய்ந்தால் இது நன்கு விளங்கும்.
 
          பார்ப்பனர்களின் திட்டம் இது தான். அரசு ஊழியம் என்பது மன நிம்மதியைக் கெடுக்கும் ஒன்று; நம் குழந்தைகளை அரசு வேலைகளுக்கு அனுப்பக் கூடாது என்று சூத்திரர்கள் முடிவெடுக்கும் வரை அரசு ஊழியர்களைப் பாடாய்ப் படுத்த வேண்டும். அரசு வேலைகள், அதுவும் அதிகாரம் கொண்ட அரசு வேலைகள் வேண்டவே வேண்டாம் என்று சூத்திரர்கள் முடிவெடுத்த பின், இட ஒதுக்கீடு விதி எந்த விதத்திலும் பயன்படுவதில்லை; ஆகவே அதை நீக்கி விடலாம் என்று அரசு முடிவெடுக்கும்; அப்படி முடிவெடுத்த பின் மீண்டும் அரசுப் பணியை பழைய மாதிரியே மகிழ்ச்சிசரமாகவும், கெளரவம் மிக்கதாகவும், மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் விதமாகவும் செய்து கொள்ளலாம்.
 
          இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பெருந்திட்டமாகத் தான் அரசு ஊழியர்களின் மன நிம்மதியைக் கெடுக்கும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட பெருந்திட்டத்தின் ஒரு சிறு பகுதி தான், விதி மீறிக் கட்டபட்ட கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்காத (?!) அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ற அச்சுறுத்தலும்.
 
          இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உடனடிப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண்போம்; அது போதும் என்று நினைத்தால் உங்கள் பிரச்சினை தீராது. ஒரு பிரச்சினை முடிந்த உடன் இன்னொரு பிரச்சினை கிளம்பும்.
 
          எதற்கு வம்பு? இனி அரசு வேலைகள் வேண்டாம்; வேறு வேலைகளைச் செய்து நிம்மதியாக இருப்போம் என்று முடிவெடுத்தால் அது அடிமை வாழ்வே. உங்களைப் பொறுத்த மட்டில் நீங்கள் அடிமையாக இருப்பதற்கு ஒப்புக் கொள்ளலாம்; ஆனால் உங்கள் குழந்தைகள் அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் குழந்தைகளின் உரிமைகளுக்காகவாவது பார்ப்பனர்களின் பெருந்திட்டத்தைத் தவிடு பொடியாக ஆக்கியே தீர வேண்டும்.
 
          அதற்கு என்ன செய்ய வேண்டும்?
 
          முதலில் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவுத் திறன் என்பது அனைவருக்கும் பொது. பார்ப்பனர்களில் அறிவுத் திறன் மிகுந்தோர் உண்டு; இடைநிலை அறிவுத் திறன் உடையவர்கள் உண்டு; குறைந்த அறிவுத் திறன் உடையவர்களும் உண்டு. இதே போல் சூத்திரர்கள், பஞ்சமர்கள், கிருத்தவர்கள், இஸ்லாமியர்கள் என இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிலும் அனைத்து நிலை அறிவுத் திறன் உடையவர்களும் இருக்கிறார்கள். இது  பகவத் கீதை, மனு ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி போன்ற புனித நூல்கள் எனப்படும் அனைத்து நூல்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. நமது அனுபவத்திலும் இதை நாம் தெளிவாக உணர முடியும்.
 
          ஆனால் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் பார்ப்பனர்கள் உயர் பதவிகளில் நிலை கொள்கின்றனர். அதிகாரம் இல்லாத, ஊதியம் மிகக் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைத் திறமைக் குறைவானவர்கள் செய்ய வேண்டும் என்று பார்ப்பனர்கள் நம்மிடம் கூறுகின்றனர். ஆனால் அவர்களில் உள்ள  திறமைக் குறைவானவர்கள் அவ்விதமான வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளையே செய்கின்றனர். இதனால் சூத்திரர்களிடையே உள்ள திறமைசாலிகள் அப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய நேரிடுகிறது. இது மனித வளத்தை வீணடிக்கும் செயல்.
 
          அதை விடக் கொடுமை என்னவென்றால், திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் மிகக் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, உயர்நிலைகளில் அமர்வதால் நிர்வாகம் சீரழிந்து, நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இது கொடூரமான தேசத் துரோகம். இதை எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஒப்புக் கொள்ளாத, ஒத்துழைக்காத பார்ப்பனர்களும் தேசத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட வேண்டும்.
 
          மேற்சொன்ன எளிய உண்மையின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு உட்பட நாட்டின் அனைத்து நடவடிக்கைகளிலும் (தனியார் துறைகளையும் சேர்த்துத்தான்) அனைத்து வகுப்பு மக்களும் பங்கு கொள்ளும் விதமாக மக்கட் தொகையில் அந்தந்த வகுப்பு மக்களின் விகிதாசாரத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். திறமையற்ற பார்ப்பனர்களை உயர்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் தற்போதைய பொதுப் போட்டி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் அந்தந்த வகுப்புகளில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலைகளிலும் திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலைகளிலும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வகுப்புகளுக்கிடையில் எற்படும் மோதல்கள் தவிர்க்கப்படும். நாட்டின் முன்னேற்றம் விரைவுபடும்.
 
          அதற்கு முதல் கட்டமாக மேற்கண்ட எளிய உண்மையை உணர்த்தி ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வு கொள்ளச் செய்வோம்; பொதுக் கருத்தையும் வென்றெடுப்போம். பிரச்சினைகளின் மேற்பகுதியை மட்டும் பார்க்காமல் அவற்றின் ஆணி வேரையே அறுத்து எறிவோம். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் சந்ததிகளுக்காக இதைச் செய்தே தீர வேண்டும். கட்டிடங்களுக்கு சீல் வைப்பது போல நமது வாழ்வுரிமையை சீல் வைக்க அனுமதிக்கக் கூடாது.
 
- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It