கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“நவம்பர் 26” துக்க நாள் என்பதை மறவாதீர்கள்

தந்தை பெரியார் அவர்கள் 1934 முதல் பட்டியல் வகுப்பாருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு கோரினார். அவருடைய முயற்சியினால் தான், சென்னை மாகாணத்தில் 1947இல் முதன் முதலாக, பிற்படுத்தப்பட்டோருக்கு, மாநில அரசில் 14% இட ஒதுக்கீடு கிடைத்தது.

அத்தோடு, அவர் நிறைபெறவில்லை. 1936இல், சென்னை மாகாண எல்லைக்குள் இருக்கிற மத்திய அரசுத்துறை அலுவலகங்களில் எல்லாம், பார்ப்பனரல்லாதாருக்கும், ஆதித்திராவிடருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதை, பொப்பிலி அரசர், ஏ.இராமசாமி முதலியார் மூலம் பெரியார் சாதித்தார். அதனை அடுத்து, 11-08-1943இல், மேதை டாக்டர் அம்பேத்கர் ஆதித்திராடவிடருக்கு 8.33% விழுக்காடு மத்திய அரசு வேலைகளில் மட்டும் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். 1946இல், அவரே, அதை விகிதாசாரமாக உயர்த்திப் பெற்றுத் தந்தார்.

பட்டியல் வகுப்பினர் இன்று மக்கள் தொகையில் 17% உள்ளனர். 1943 முதல் மத்திய அரசு வேலை யில் இடஒதுக்கீடு பெற்று வந்தாலும், 2009 இல், மத்திய அரசில் உள்ள முதல்நிலைப் பதவிகளில்-மொத்தம் உள்ள 97,951 இடங்களில்-12,281 இடங் களை மட்டுமே இவர்கள் பெற்றுள்ளனர். ஆனால் மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு மட்டுமே உள்ள முற்பட்ட சாதிக்காரர்கள் 97,951 பதவிகளில் 75,585 இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். இது கண்டு எல்லோரும் கொதித்தெழ வேண்டாமா?

இது மட்டுமா? இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் இந்துக்களிலும், மதச்சிறுபான்மையினரிலும் சேர்த்து மக்கள் தொகையில் 58% பேர் உள்ளனர். இவர்கள் முதல்நிலை பதவிகளில் 2009 வரையில் பெறும் 5,331 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் வெறும் 17.5% உள்ள முற்பட்டவர்கள் 75,585 இடங் களை ஆக்கிரமித்துள்ளனர்.

மத்திய அரசில் உள்ள இரண்டாம் நிலைப் பதவி கள் மொத்தம் 1,40,223 ஆகும். இதில் வெறும் 17.5 விழுக்காடு மட்டுமே உள்ள முற்பட்ட வகுப்பினர் 1,06,283 இடங்களைப் பெற்று, ஆதிக்கம் செலுத்து கின்றனர். ஆனால் 58% உள்ள பிற்படுத்தப்பட் டோருக்கு, இரண்டாம் நிலைப் பதவிகளில், 5,052 இடங்களும்; 17% உள்ள பட்டியல் வகுப்பினருக்கு 20,884 இடங்களும், பழங்குடியினருக்கு 8.004 இடங்களும் மட்டுமே கிடைத்துள்ளன. இதில் மொத்த இடங்களில் 77% இடங்களைக் கடந்த 62 ஆண்டு களில் முற்பட்ட வகுப்பினர் பெற்றுள்ளனர். இவர்களே ஆதிக்கச் சாதிகள். ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 83% பேரும் விகிதாசார உரிமை மறுக்கப்பட்டவர்கள். இது மோசடி அல்லவா? இது கண்டு ஒடுக்கப்பட்ட வகுப்பில் கடும் எரிச்சலும் சினமும் கொண்டு, விகிதாசார இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிப் போராட வேண்டாமா?

இதில் அமைப்பு வேறுபாடு பார்க்கலாமா? உள் சாதி வேறுபாடோ, மதவேறுபாடோ பார்க்கலாமா? யார் தலைமேலோ கல் விழுகிறது-நமக்கென்ன எனறு இருக்கலாமா? இது அடுக்குமா?

மொத்தம் உள்ள 97,951 முதல் நிலைப் பதவி களில்-வெறும் 17.5% உள்ள முற்பட்டவர்கள் 78% பதவி களை அல்லவா பெற்றிருக்கிறார்கள்! இது சட்டத்துக் கும் சமூக நீதிக்கும் எதிரானது அல்லவா?

இந்த அவலநிலை இருக்கும்போது, “இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்வதற்கான தேசிய ஒருங்கிணைப்புக்குழு” என்ற பெயரிலான அமைப்பின் தலைவர் ஓ.பி.சுக்லா என் பவர், 62 ஆண்டுகளுக்குப் பிறகும் இடஒதுக்கீடு தருவது அடுக்குமா?” என்று கேட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். (“தி இந்து”, 24-8-2011) அதன் பேரில், 23-8-11 அன்று, உச்சநீதிமன்றம் மய்ய அரசு, மாநில அரசுகள், யூனியன் பகுதி அரசுகளுக்கு இது பற்றி விளக்கம் கேட்டுத் தாக்கீது விடுத்துள்ளது.

மத்திய அரசில் இருப்பதில் முக்கால் பங்கை அனுபவிப்பர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக் கீடு தருவதைத் தடுத்திட எல்லாம் செய்கிறார்கள். இந்த நிலையில், 100க்கு 83 பேராக உள்ள பிற்படுத் தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் சேர்ந்து மொத்தம் இருப்பதில் கால்பங்கு இடங்களைக் கூட, கடந்த 62 ஆண்டுகளில் அடைய முடியவில்லையே-இது அநீதி அல்லவா? மக்கள் நாயகத்துக்கு எதிரானது அல்லவா?

ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உண்மையை உணருங்கள்! மொத்தம் இருக்கிற 100% இடங்களையும் பங்கீடு செய்!-என்று உரத்துத் கூவுங்கள்! எல்லா வகுப்பா ருக்கும்-அவரவர் விகிதாசாரப்படிப் பங்கீடு செய்! என்று தெருத்தோறும் முழங்குங்கள்!

2011 அக்டோபருக்குள் மேலே கண்ட கோரிக் கைக்கு இணங்க, அரசமைப்பில் திருத்தம் செய்! என்று அரசிடம் கோருங்கள்.

இந்திய அரசு இதைச் செய்யத் தவறினால், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், வரும் நவம்பர் 26 அன்று, அவரவர் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்-அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 26 ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுங்கள்! கறுப்புக் கொடி ஏற்றுங்கள்.

- வே.ஆனைமுத்து