திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கரிக்காலி பஞ்சாயத்தில் உள்ளது வசவநாயக்கன்பட்டி என்ற கிராமம். கட்டுமானத் தொழில், விவசாயம் ஆகிய தொழில்களை நம்பி இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் வெளியூர் சென்றவர்கள் ஏராளம். இங்கேதான் ஒரு அரசு தொடக்கப்பள்ளி ஒரு ஆசிரியரைக் கொண்டு ஒரு மாணவரோடு இயங்கி தற்போது மூடப்படும் நிலையில் உள்ளது. ஐம்பது ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்கி வருகிற இப்பள்ளிகளில்தான் சுற்று வட்டார மக்கள் கல்வி கற்று வந்தனர். ஆரம்பத்தில் 1955களில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும், 2005ல் 52 மாணவர்களும் தற்பொழுது படிப்படியாக குறைந்து ஒரே ஒரு மாணவர் மட்டும் ஒரு ஆசிரியரைக் கொண்டு படிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. காரணம் இந்த ஊரிலிருந்து 2கி.மீ. தொலைவில் 1987களில் ஆரம்பிக்கப்பட்ட இராணி மெய்யம்மை என்ற தனியார் பள்ளி. இது தற்பொழுது விருட்சம் பெற்று இருபள்ளிகளாக தமிழ்வழி கல்வி, மெட்ரிக் பள்ளி என எண்ணூறு மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

முறையான அடிப்படை வசதிகள் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், தனித்தனியாக கழிப்பிட வசதி, தரமான குடிநீர், ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம் வீட்டில் இருந்து அழைத்து வருவதற்கு வேன் என அனைத்தையும் கொண்டு இயங்குகிறது. இவையனைத்தும் காசு கட்டினால் மட்டுமே.

ஆனால் முன்பு சுட்டிக் காட்டிய அரசுப்பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பது, போதிய கட்டமைப்பு வசதி இல்லாதது, பேருந்து வசதி, நர்சரி கல்வி இல்லாதது என இப்பள்ளியை மூடுவதற்கு காரணமாய் அமைகிறது.

இதே தாலுகாவிற்குட்பட்ட நாகையாகோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட கரையாம்பட்டி கிராமத்தில் 1962ல் துவக்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். தற்பொழுது இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு 18 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களாக விளங்குகின்றனர். இப்பள்ளியில் இருந்து 1/2 கி.மீ தொலைவில் 1995ல் ஆரம்பிக்கப்பட்ட நுசூஞ என்ற தனியார் பள்ளியில் தற்போதைய மாணவர் எண்ணிக்கை முன்னூறு. பல அரசுப் பள்ளிகள் முறையான வசதிகள் இல்லாதது இத்தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது. அனைவருக்கும் கல்வி தருகிற கடமையிலிருந்து அரசு படிப்படியாய் விலகி, தனியார் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டு வருகின்றது. இதன் விளைவு அனைவருக்கும் கல்வி என்பது கேள்விக்குறியாய் மாறியுள்ளது.

1990களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மய, தாராளமயக் கொள்கையின் விளைவால் அனைத்துத் துறைகளிலும் தனியாரின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டது. அதற்கு கல்வித்துறையும் விதிவிலக்கல்ல. அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதிலிருந்து அரசாங்கம் படிப்படியாக விலகிவருவது இந்தக் கொள்கையின் விளைவால்தான். 1980களுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில், பல்வேறு துறைகளில் பணியாற்றினார்கள். தற்போதைய சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளை அரசு கண்டு கொள்ளாமல் விடுவதென்பது மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாய் அமைந்துள்ளது. காசு கொடுத்து கல்வி கற்கும் சூழ்நிலை உருவானதால் “ஊழலின் ஊற்றுக்கண் கல்வி” என்ற நிலை உள்ளது.

அனைத்து கல்விமுறைகளை இணைத்து ஒரே பாடத்திட்டம், தாய்மொழி கல்வி, அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் பொழுதுதான் அரசுப் பள்ளிகளை காப்பாற்றி ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி பெறுவதை உறுதிபடுத்த முடியும்.

Pin It