ஒவ்வொரு மொழி வரலாற்றிலும் பதிப்புக் காலம் மிகமிக முக்கியமான இடத்தைப்பெறுகின்றது. குறிப் பிட்ட மொழியின் இலக்கண இலக்கியப் பதிப்புகள் அம்மொழிவரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்து எதிர்கால ஆய்வுக்கான அடிப்படை ஆதாரங்களாக அமை கின்றன. தமிழின் சுவடிப்பதிப்பு வரலாற்றில் மூலநூல் களையும் உரைகளையும் பேணிக்காக்கும் வகையில் அவற்றைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் கடந்தகால ஆய்வைக் காத்ததுடன் எதிர்கால ஆய்வுக்கான வழியைக் கட்டமைத்துத் தந்தவர்களாகவும் உள்ளனர். சங்க இலக்கியத்தின் இன்றைய இருத்தலுக்கான ஆதாரமாக அமைந்தவை சங்கஇலக்கியப் பதிப்புகளே. இருந்த போதிலும் சங்கஇலக்கியங்களுக்கான செம்பதிப்பு வெளிவராமல் இருப்பது குறைபாடாகவே உள்ளது.

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் சங்கஇலக்கியப் பதிப்பான சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) சங்கஇலக்கியப் பதிப்பு வரலாற்றில் ஒரு வளர்ச்சிநிலையாக உள்ளது. தொல்காப்பியத்திற்குத் “தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள் ஆழ்நோக்காய்வு” என்னும் தலைப்பிலான ஒரு செம்பதிப்பு 1996-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியற்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகு நிலையிலான பதிப்பு ஒன்று சங்க இலக்கியங்களுக்கு இனித்தான் வரவேண்டும். இந்நிலையில் தமிழிலக்கியம் ஒவ்வொன்றிற்கும் செம்பதிப்பு தேவைப்படும் காலம் இது. இந்நிலையில் நன்னூலுக்கான பதிப்பு வரலாறு வெளிவந்தது போன்று ஒவ்வொரு இலக்கண இலக்கியத்திற்குமான பதிப்புகள்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன. இந்தப் பின்னணியில் இந்த ஆய்வு சித்தர்பாடல் பதிப்புகளின் சிக்கல்கள் பற்றி ஆராய்கின்றது.

சித்தர்பாடல் பதிப்பு

“சித்தர்களை அறியும் முயற்சியில் உள்ள மிகப்பெரிய முட்டுக்கட்டை சித்தர் பாடல்களுக்கு நம்பத்தகுந்த பதிப்பு இல்லை என்பதுதான். சித்தர் பாடல்களுக்குத் தற்போது ஐந்து பதிப்புகள் வழங்கிவருகின்றன. நமது காலவினையோ என்னவோ கிடைக்கின்ற ஐந்து பதிப்புகளில் எதுவும் செம்பதிப்பு இல்லை. சித்தர் பாடல்கள் என்னும் பெயரில் நம்மைக் குழப்புவதற்கென்றே எக்கச்சக்கமான மலிவுப் பதிப்புகள் தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றன. நெல் மணிகளிலிருந்து பதரைப் பிரிக்கின்ற உண்மையான முயற்சி இதுவரை மேற்கொள்ளப்படவேயில்லை. இந் நிலையில் ஓர் உண்மையான ஆராய்ச்சியாளன் நீரைப் பிரித்துப் பாலை மட்டும் பருகும் அன்னம் போல் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது” (2005:4) என டி.என். கணபதி குறிப்பிடும் நிலையில் சித்தர்பாடல் பதிப்புகள் காணப் படுகின்றன. சித்தர்பற்றி ஆராய்ந்த மு. அருணாசலம் 1969-லேயே “நல்லபதிப்பு இனித்தான் வரவேண்டும்” (14-ஆம் நூ.2005: 294) எனக் குறிப்பிட்டுள்ளார். 1969-இல் எழுப்பப் பட்ட இந்தக் குரல் இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டு வருவது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் பதிப்புச் செம்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் தேவையை முன்வைக்கின்றது.

சித்தர்பாடல் பதிப்புகளாகப் பின்வருவன காட்டப் பெற்றுள்ன.

பதினெண்சித்தர் பெரியஞானக்கோவை, எம்.சரவண முத்துப்பிள்ளை, (பதி.)ரத்தினநாயகர் சன்ஸ், 1903.

சித்தர் ஞானக்கோவை, மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (பதி.) (பிற விவரங்கள் தரப்பெறவில்லை)

சிவவாக்கியர் பாடல் உரையுடன், மா.வடிவேலு முதலியார் (பதி.), பி.இரத்தினநாயகர், சென்னை, 1953.

சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள், அரு.ராமநாதன் (பதி.) பிரேமா பிரசுரம், சென்னை, 1959 முதல்பதிப்பு.

பதிப்புக்குப் பயன்பட்ட நூல்கள் என்ற தலைப்பில் பின்வரும் நூல்களை த.கோவேந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வா.சரவணமுத்துப்பிள்ளை பதிப்பு, 1904.

(மறைமலையடிகள் நூல்நிலையம்)

பதினெண்சித்தர் பாடல்கள், வித்யாரத்நாகர அச்சுக்கூடப்பதிப்பு, 1933.

இரத்தினநாயகர் அன் சன்ஸ் பதிப்பு

எம்.ஆர்.அப்பாத்துரை பதிப்பு, 1956, வித்வான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை மேற்பார்வையில்.

1976-ஆம் ஆண்டு வெளிவந்த பூம்புகார் பதிப்பகப் பதிப்பின் ஆறாவது பதிப்பில் (2001) மேற்படி குறிப்புகள் தரப்பெற்றுள்ளன. வித்தியாரத்நாகரப் பதிப்பு 1903-இல் வந்ததாக டி.என். கணபதி தமது நூலின் நூலடைவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மேற்படி குறிப்பில் பதிப் பாண்டு 1933 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பின் பதிப்பாசிரியர் பெயர் எதுவும் குறிப்பிடப் பெறவில்லை.

இவற்றுடன் இக்காலத்தில்

சித்தர்பாடல்கள் பட்டினத்தார் முதல் பாரதியார் வரை, 2003.

புலவர் த.கோவேந்தன், (தொ.ஆ.) இரண்டாம் அச்சு பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.

சித்தர்பாடல்கள் (பெரிய ஞானக்கோவை), 2004. சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், சென்னை.

என்னும் பதிப்புகள் வெளிவந்துள்ளன. மேலும் எஸ்.பி.ராமச்சந்திரனைப் பதிப்பாசிரியராகக் கொண்ட நாற்பத்தெண்சித்தர்கள் பெரியஞானக் கோவை, 1995, தாமரை நூலகம், சென்னை; யோக ஞான சாஸ்திரத்திரட்டு ஒன்பது தொகுதிகள், 1998, தாமரை நூலகம், சென்னை என்பனவும் சா.அ.அ.ராமய்யாவைப் பதிப்பாசிரியராகக் கொண்ட சித்தர்யோகக் கோவை பாராயணப்படி, 1991 என்ற நூலும் வெளிவந்துள்ளன.

சிவவாக்கியர் என்னும் பெயரில் 1000 பாடல்களைக் கொண்ட ஒரு தனி நூல் 1955-ஆம் ஆண்டு இரத்தின நாயகர் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்னும் குறிப்பை மு.அருணாசலம் “செங்கம் மணவை தேவேந்திரநாத பண்டிதர் தம்மிடமிருந்த ஒரு ஏட்டுப் பிரதியோடு பரிசோதித்தார். இவர் ‘திருமழிசை ஆழ்வாரே பின்னால் சிவவாக்கியராகிப் பாடினார். அதன்பின் மீண்டும் திருமாலை 206 பாடல்களால் தொழுதார்’ என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ‘அறிதொரு நமச்சிவாயம்’ என்ற முதல் பாடலோடு திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் 120 பாடல்களும் அதன் பின்னால் சிவவாக்கியப் பாடல் 560-ம் அதன் பின் பலநூறு பாடல்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு மொத்தம் 1012 பாடல்கள். சில விசித்திர நிலைகளும் இங்கே காணலாம். இவ்வளவும் ஒருகால் தேவேந்திரநாத பண்டிதருடைய சொந்தச் சேர்க்கை போலும்” (14-ஆம் நூ. 2005: 289) என்று குறிப்பிட்டுள்ளார். ஆக அவரவர் மனம் போனபோக்கிலும் எந்த வரையறை இன்றியும் சித்தர்பாடல் பதிப்புகள் தொகுக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பதற்கு இது ஒன்றே போதுமான சான்றாக உள்ளது. கிடைக்கும் இந்தப் பதிப்புகளில் ஒருமித்த போக்கு எதுவும் காணப்பட வில்லை. சித்தர் எண்ணிக்கை, பாடல் எண்ணிக்கை, பாடல் வைப்புமுறை, பாடல்களுக்கு உள்தலைப்பிடும் முறை என்னும் சிக்கல்களுடன் பாடவேறுபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன.

சித்தர் எண்ணிக்கையும் வேறுபாடுகளும்

சித்தர்களாகக் கொள்ளப்பட்டவர்கள், சித்தர் எண்ணிக்கை என்னும் இரண்டிலும் பதிப்புகள் தோறும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஒன்றாவது ஒப்பீட்டுப் பட்டியலில் உள்ளவாறு அரு.ராமநாதன் பதிப்பில் 32 சித்தர்களும் த.கோவேந்தன் பதிப்பில் 27 சித்தர்களும் சி.எஸ்.முருகேசன் பதிப்பில் 19 சித்தர்களும் இடம்பெற்றுள்ளனர். எஞ்சிய இரண்டு நூல் களில் இடம்பெறாத சித்தர் பாடல்கள் இவர் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

த.கோவேந்தன் தொகுத்த சித்தர்பாடல் தொகுப்பு ஒன்று பாவை பப்ளிகேஷன்ஸால் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தப் பதிப்பில் பூம்புகார் பதிப்பில் இடம் பெற்ற பீர்முகம்மது இடம்பெறவில்லை. பாரதியின் பாரதி அறுபத்தாறுஇடம் பெற்றுள்ளது. பூம்புகார் பதிப்பில் உள்ள காரைச்சித்தர், தடங்கண்சித்தர் பாடல்கள் பாவைப் பதிப்பில் சேர்க்கப்பெறவில்லை. 2000-இல் வெளியிடப் பட்ட இந்தப் பதிப்பை வேறுபடுத்தித் தரவே பூம்புகார் பதிப்பில் உள்ள சில சித்தர்களை விடுத்துப் பாரதி அறுபத் தாறை, த. கோவேந்தன் சேர்த்துள்ளார் போலுள்ளது. சங்கர் பதிப்பக சி.எஸ்.முருகேசன் பதிப்பில், வேறு இரண்டு பதிப்புகளிலும் உள்ள 19 சித்தர்பாடல்களுடன் கஞ்ச மலைச்சித்தர், கல்லுளிச்சித்தர், சங்கிலிச் சித்தர், சத்திய நாதர் என்ற ஞானச்சித்தர், திரிகோணச்சித்தர், மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச்சித்தர், ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர், புண்ணாக்குச்சித்தர், வகுளிநாதர் என்னும் மௌனச் சித்தர், கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச்சித்தர், ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர், சதோக நாதர் என்ற யோகச்சித்தர் ஆகிய பன்னிரண்டு சித்தர்பாடல்களும் இடம்பெற்றுள்ளன. அவ்வையார், உலோகாயதசித்தர், ஏனாதிச்சித்தர், காளைச் சித்தர் ஆகியோர் த. கோவேந்தன் பதிப்பில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பின்னிருவர் பற்றிக் குறிப்பிடும் மு. அருணாசலம் “இவர் களுள் ஏனாதிச்சித்தர், காளைச்சித்தர் என்ற இருவர் பாடல்களும் அச்சாகவில்லை. சித்தர் ஞானக்கோவையில் சேரவில்லை. ஏனையோர் பாடல்கள் கிடைத்தவரை அச்சாகி உள்ளன” (15-ஆம் நூ. 2005: 269)) எனக் குறிப் பிட்டுள்ளார். அரு.ராமநாதன், த-கோவேந்தன் பதிப்பு களில் உள்ள நந்தீசுவரர் இராமதேவர், கருவூரார், பீர் முகம்மது, வாலைசாமி, சேஷயோகி பாடல்கள் சி.எஸ்.முருகேசன் பதிப்பில் சேர்க்கப்படவில்லை.

இவ்வாறு பதிப்புகள்தோறும் சித்தர் எண்ணிக்கை வேறுபட்டுக் காணப்படுகின்றது. வரிசைப்படுத்துவதிலேயும் பதிப்புகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதை மேற்காட்டிய பட்டியல் வெளிப்படுத்துகின்றது. சித்தர் களின் காலத்தை நிர்ணயித்து அந்தக் காலநிரலில் இந்தப் பாடல்களைத் தொகுத்துத் தரவேண்டும் என்ற உணர்வு எவரிடத்திலும் இல்லை என்பதற்கு இந்தப் பதிப்புகளே சிறந்த சான்று.

கொங்கணச்சித்தர் 7-ஆம் நூற்றாண்டு, சிவவாக்கியர் 9-ஆம் நூற்றாண்டு, பட்டினத்தார் 10-ஆம் நூற்றாண்டு, இடைக்காட்டுச் சித்தர் 15-ஆம் நூற்றாண்டு, அகத்தியர் 11-ஆம் நூற்றாண்டு என்றவாறு சில சித்தர்களுக்குக் கால நிர்ணயம் செய்து அதைத் தமது சித்தர்பற்றிய விவரங் களடங்கிய பகுதியில் (9-39) தந்துள்ளார் அரு.ராமநாதன். இவர் தமது பதிப்பில் பட்டினத்தாரை முதலில் வைத்து விட்டுக் கொங்கணச்சித்தரைப் பத்தாவதாக வைத்துள்ளார். இவர் தரும் இந்தக் காலவரையறைகளுக்கு வேறுபாடுகள் உள்ளன. “சிவவாக்கியர் என்ற பெயரால் பெரியோர் இருவர் இருந்தனர், ஒருவர் சிவவாக்கிய தேவர் என்று பெயர் பெற்ற செல்வராய் 10-ஆம் நூற்றாண்டுக்கு முன்னே வாழ்ந்தார் என்றும், மற்றவர் சிவவாக்கியர் என்ற பெயரோடு சிவவாக்கியம் பாடிப் பின்னே 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றும் வரையறை செய்து கொள்ள வேண்டும்” (14-ஆம் நூ. 2005: 285) எனச் சித்தர் சிவவாக்கியர் காலத்தை 14-ஆம் நூற்றாண்டு என வரை யறுத்துள்ளார் மு.அருணாசலம். இவ்வாறே பட்டினத் தார், பத்திரகிரியார் காலங்களையும் வரையறுத்துள்ளார்.

“பட்டினத்தார் வாழ்க்கையோடு தொடர்புடைய மற்றொரு பெரியார் பத்திரகிரியார். இவர் வரலாறு இதன்பின் தனியே கூறப்பெற்றுள்ளது. இவர் காலம் ஏறக்குறைய 1400 ஆகலாம் என்பதை அங்கு காண்போம். ஆகவே இப்பட்டினத்தார் காலம் அதுவேயாகும். இப்பட்டினத்தார் பின்வந்தவர் அல்லது இரண்டாம் பட்டினத்தார் என்றும் நாம் கூறலாம்” (மேலது, 312) என வரையறுத்துக் கூறியுள்ளார். எனவே காலவரையறையிலும் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் சித்தர்பாடல்கள் கால முறையில் தொகுக்கப்படுவதிலும் இடர்ப்பாடுகள் உள்ளன. இருப்பினும் அரு.ராமநாதன் போன்ற பதிப்பாசிரியர்கள் தாம் வரையறுத்துக்கொண்ட கால அடைவிலாவது சித்தர் பாடல்களை வரிசைப்படுத்தித் தந்திருக்கலாம்.

பதிப்புமுறை

ஒரு பதிப்பு, அடிப்படையில் பல நெறிமுறைகளுக்கு உட்பட்டது. திட்டமிடல் என்பது பதிப்பு உருவாக்கத்தில் மிகமிக வேண்டப்படுவது. இந்தத் திட்டமிடலே பதிப்பை ஒருமித்தபோக்கில் வடிவமைக்க, பதிப்பின் நம்பகத் தன்மையைக் கூட்ட உதவும். சி.வை.தாமோதரம்பிள்ளை, இ.வை.அனந்தராமையர், உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் உருவாக்கிய பதிப்புகள் திட்டமிடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன. இதனால் அவை பதிப்புச் செம்மையும் பயன்பாட்டு எளிமையும் உடை யனவாக ஒருநிலையில் மாதிரிப் பதிப்புகளாக உருப் பெற்றுள்ளன. பதிப்பில் இடம்பெறும் ஒவ்வொரு கூறும் ஒரே சீராய் ஒருமித்த நெறியில் தரப்படுதல் அவசியம். பதிப்பு முன்னுரை தருதல், தலைப்பிடல், வரிசை எண் தருதல், பாடவேறுபாடுகளைச் சுட்டல், ஒத்த தொடர்களை எடுத்துக்காட்டல், மேற்கோள் ஆட்சி சுட்டல், அருஞ்சொற் பொருள் தருதல், ஒவ்வொரு பக்கத்திலும் தொடங்கும் பாடல் எது என்பதை அறிய உதவும் வழிகாட்டு சொல் (ஊயவஉh றடிசன டிச ழுரனைந றடிசன) தருதல், பல ஆசிரியர்களின் பாடல்கள் ஒரே தொகுப்பில் தரப்பெறும் நிலையில் உரிய ஆசிரியர் பெயரைப் பக்கத் தலைப்பில் தருதல், உள் தலைப்புகளிடல் என்பன போன்ற பலவிதப் பதிப்பு நெறிமுறைகள் உருவாக்கத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக உள்ளன. இவை போன்ற பதிப்பு சித்தர் பாடல் பதிப்புகளில் எவ்வாறு அமைந்து உள்ளன என்பதை இனிக் காணலாம்.

முன்னுரை

பதிப்பு நூல்களின் நுழைவாயிலாக அமைவது முன்னுரை. இது அகராதி போன்ற நோக்குநூல்களுக்கு மட்டுமல்ல பதிப்பு நூல்களுக்கும் மிகவும் அவசியம்.

நூலின் உள்ளே தரப்பட்ட தகவல்கள் எவ்வெவ்வாறு தரப்பட்டுள்ளன என்பதைப் பயன்பாட்டாளருக்கு விளக்கும் இந்த முன்னுரை சித்தர்பாடல் பதிப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமையவில்லை.

அரு.ராமநாதன் பதிப்பில் சித்தர்களைப்பற்றிய சில குறிப்புகள் என்ற தலைப்பில் 31 பக்க அளவில் அமைந்து உள்ள பகுதி (9-39) சித்தர்கள் பற்றிய விவரங்களைத் தருவதாக உள்ளதேயன்றிப் பதிப்புநெறிபற்றிய தகவல்களைத் தருவதாக அமையவில்லை. பட்டினத்தாரில் தொடங்கும் வரிசைமுறைக்கான காரணமும் விளக்கப்படவில்லை. பாடல்களுக்கு எண்கள் தரப்பட்ட முறையும் குறிப்பிடப் பெறவில்லை. நூல் ஒன்று, நூல் இரண்டு என ஒவ்வொரு சித்தர் பாடல் தொகுதிக்கும் எண் தரப்பட்டதற்கான காரணமும் சுட்டப்பெறவில்லை. த.கோவேந்தன் பதிப்பிலும் சி.எஸ். முருகேசன் பதிப்பிலும் சித்தர் பற்றிய குறிப்புகள் அந்தந்த சித்தர் பற்றிய பாடல் தொடங்கும் இடத்தில் தரப்பட்டுள்ளன. முன்னுரைகள் பதிப்புமுறை பற்றியனவாக அமையவில்லை. ஓரிரு பக்கங்களில் அமைந்த முன்னுரைகள் சித்தர்பற்றிய பொது விளக்கத்தைத் தருவனவாகவே உள்ளன. அரு.ராமநாதன், சி.எஸ்.முருகேசன் பதிப்புகளில் சிவவாக்கியர் பாடல்களுக்கு உள்தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இவை தரப்பட்டதற்கான காரணம் பதிப்பில் எங்கும் கூறப்பெறவில்லை. உள்தலைப்பிடுமுறை ஒரு மரபான பதிப்பு நெறி என்பதை வா. சரவணமுத்துப் பிள்ளையின் பதிப்புவழியும் உணரலாம். அந்த முறையையே இந்தப் பதிப்புகளிலும் இவர்கள் பின்பற்றியுள்னர்.

வழிகாட்டு சொல் தருமுறை

அகராதி போன்ற நோக்குநூல்களில் அந்தந்தப் பக்கத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் என்ன சொல் இடம்பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட பக்க மேற் புறத்தின் வல இடப் பக்கங்களில் அந்தச் சொற்களைத் தருவது ஒரு பதிப்பு நெறி. இந்த நெறி பல ஆசிரியர்களின் பாடல் தொகுப்பிலும் பின்பற்றப்படுவது. பல ஆசிரியர் களின் பாடல்களை ஒரே தொகுதியாகத் தொகுக்கையில் எந்த ஆசிரியர் பாடல்கள் குறிப்பிட்ட பக்கத்தில் இடம் பெற்றுள்ளன அவரின் பாடல்களில் எந்தத் தலைப்புப் பாடல்கள் இடம்பெறுள்ளன என்பதைப் பக்கத்தின் மேற்புறத்தில் சுட்டிக்காட்டுவது அவசியம். இது பயன் பாட்டாளரின் எளிய பயன்பாட்டுக்குத் துணைபுரியக் கூடியது. இந்தக் குறிப்பு அரு.ராமநாதன் பதிப்பில் ஓரளவு முறையாகத் தரப்பட்டுள்ளது.

இருபக்கங்களில் வலப்பக்கத்தில் சித்தர்பாடல் என்ற பொதுத்தலைப்பும் இடப்பக்கத்தில் குறிப்பிட்ட சித்தர் பெயரும் சித்தர்பாடல்.... காகபுசுண்டர் என்றவாறு தரப்பட்டுள்ளன. உள்தலைப்புகளுடன் பதிப்பிக்கப்பெற்ற சித்தர் பாடல் இடம்பெற்ற பக்கங்களில் வலப்பக்கத்தில் ‘சித்தர்பெயர் இடப்பக்கத்தில் உள்தலைப்பு’ என்ற அடிப்படையில் சிவவாக்கியர்... யோகநிலை ...திரு ஏகம்பமாலை என்றவாறு தரப்பட்டுள்ளன. இந்த நெறி இந்தப் பதிப்பில் ஒரே சீராகவும் முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றப்படவில்லை. இவர் பதிப்பில் இந்தக் குறிப்பைத் தருதலில் இடமாற்றம் இடம்பெற்று உள்ளது. சில சித்தர் பாடல் பகுதிகளில் இடப்புறம் சித்தர் பெயரும் வலப்புறம் சித்தர்பாடல் என்ற பொதுத் தலைப்பும் தரப்பட்டுள்ளன. அகப்பேய்ச் சித்தர்... சித்தர் பாடல், திருமூல நாயனார் ஞானம்... சித்தர்பாடல், அகஸ்தியர் ஞானம்... சித்தர்பாடல் எனத் தரப்பட்ட வழிகாட்டு சொற்கள் இதற்குச் சான்றுகள். இனி உள்பகுப்பும் உள்தலைப்பும் ஏதும் இன்றி ஒரே தலைப்பில் அமைந்த பாடல்களும், உள்தலைப்பு கொண்ட பாடல் களைப் போல் பத்திரகிரியார்... மெய்ஞ்ஞானப் புலம்பல் எனத் தரப்பட்டுள்ளன. இந்தமுறையிலும் வேறுபாடு இடம்பெற்றுள்ளது. சில சித்தர் பாடல்களில் இடப்புறம் சித்தர் பெயரும் வலப்புறம் தலைப்பும் அமையுமாறு நெஞ்சறி விளக்கம்... கணபதி தாசர் என்றவாறு தரப் பெற்றுள்ளன. இவை அச்சுக்கோப்பாளர் முறை அறியாது செய்த தவறுகளாகவும் இருக்கலாம்.

பூம்புகார்பிரசுரப் பதிப்பில் உள்தலைப்பு ஏதும் தரப்படாத காரணத்தால் சித்தர்பாடல்கள்... அவ்வையார் என்றாற்போன்று வழிகாட்டுசொல் ஒரே மாதிரியாகத் தரப்பட்டுள்ளது. சி.எஸ்.முருகேசன் பதிப்பில் வலம் இடம் என்னும் இருபுறமும் சித்தர் பாடல் என்ற பொதுத் தலைப்பே தரப்பட்டுள்ளது. சிவவாக்கியர் போன்றோர் பாடல்கள் உள்தலைப்புடன் பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் பக்க மேற்புறத்தில் உள் தலைப்பைத் தருதல் என்ற நெறி இப்பதிப்பில் பின்பற்றப்படவில்லை.

பாடல் எண்ணிக்கை வேறுபாடு

மு. அருணாசலம் சிவவாக்கியர் 520, பத்திரகிரியார் 235, (14-ஆம் நூ. 2005: 275-324), குதம்பைச் சித்தர் 32 கண்ணிகள், ஏனாதிச்சித்தர் 10, காளைச் சித்தர் 8 (15-ஆம் நூ.2055: 267-286) என்றவாறு பாடல் எண்ணிக்கையைத் தந்துள்ளார். இந்த எண்ணிக்கை சித்தர்பாடல் பதிப்பு களில் இவ்வாறே இடம்பெறவில்லை. பாடல் எண்ணிக்கை, பதிப்புகள்தோறும் வேறுபட்டுள்ளது. பட்டியல் இரண்டைக் காண்க.

பட்டியல் இரண்டில் கண்டவாறு பதிப்புகள் தோறும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குதம்பைச்சித்தர் பாடல் சி.எஸ்.முருகேசன் பதிப்பில் 246 கண்ணிகளாகத் தரப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைப் பெருக்கக் காரணம் பதிப்பில் எங்கும் தரப்பெறவில்லை. 1000 பாடல்களோடு சிவவாக்கியர் என்னும் பெயரில் 1955-இல் இரத்தினநாயகர் பதிப்பகம் நூல் ஒன்றை வெளியிட்ட தகவலை மு. அருணாசலம் குறிப்பிட்டுள்ளார் (14-ஆம் நூ.2005: 289). ஏடுகளைப் பரிசோதித்த தேவேந்திரபண்டிதர்தம் சொந்தச் சேர்க்கையாக இவை இருக்கலாம் என்ற கருத்தையும் அவர் தந்துள்ளார். இவ்வாறு பாடல் எண்ணிக்கை பெருகி உள்ளதைப்போல் குறைந்துள்ளதற்கும் சான்றுகள் உள்ளன. மு.அருணாசலம் 10 என்றும் 8 என்றும் குறிப் பிட்ட பாடல்கள் த.கோவேந்தனின் பூம்புகார்பதிப்பில் நான்காகவும் மூன்றாகவும் இடம்பெற்றுள்ளன.

எண்தரு முறை

பாடல்களுக்கான வரிசை எண் தருமுறையிலேயும் பதிப்புகளுக்கு இடையேயும் ஒரே பதிப்பிலேயும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரு.ராமநாதன் பதிப்பில் சில பகுதிகளில் பாடல் எண்கள் பாடலின் முதல் வரியை அடுத்து வலப்புறத்தில் தரப்பட்டுள்ளது. சில இடங்களில் பாடலின் இறுதி வரியை அடுத்துத் தரப் பெற்றுள்ளது. சில பாடல்களில் பாடல் தொடக்கத்தில் இடப்புறத்தில் தரப்பட்டுள்ளது. இதே சிக்கலை சி.எஸ்.முருகேசன் பதிப்பிலும் காணலாம்.

உள்தலைப்புச் சிக்கல்

சில பதிப்புகளில் சித்தர் பாடல்களுக்கு உள்தலைப்புகள் தரப்பெற்றுள்ளன. அரு.ராமநாதன். சி.எஸ்.முருகேசன் வா.சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் பதிப்புகளில் இந்தப் பதிப்புமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சிவவாக்கியர் பாடல்களுக்கு அக்ஷரநிலை, சரியை விலக்கல், யோகநிலை, தேகநிலை, ஞானநிலை, கிரியை நிலை, உற்பத்தி நிலை, அறிவுநிலை என உள்தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இதிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பின்வரும் ஒப்பீட்டுப் பகுதி இதற்குச் சான்று. பட்டியல் மூன்றைக் காண்க.

பட்டியல் மூன்றில் காட்டியவாறு உள்தலைப்பு மாற்றம் பரவலாக இடம்பெற்றுள்ளது. ஒருவர் ஒரு தலைப்பில் கொடுத்ததை வேறு பதிப்பாசிரியர் பிறிதொரு தலைப்பில் தந்துள்ளார். பட்டியல் நான்கில் உள்ளவாறு அரு.ராமநாதனின் பதிப்பிலுள்ள உள்தலைப்புகள் ஒத்த உள்தலைப்புகளை உடைய மேற்குறிப்பிட்ட இருவர் பதிப்புகளிலிருந்தும் வேறுபட்டுள்ளன.

பாடல் முன்பின் வைப்புமுறை

எல்லாப் பதிப்புகளிலும் ஒரே எண்ணிக்கையில் பாடல்கள் இல்லாதது மட்டுமல்ல, இருக்கின்ற பாடல் களும் ஒரே வரிசைமுறையில் அமையவில்லை. இதுவும் சித்தர்பாடல் பதிப்புகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.

‘தூரம் தூரம் தூரமென்று சொல்லுவார்கள் சோம் பர்கள்’ எனத் தொடங்கும் பாடல் பூம்புகார் பிரசுரப் பதிப்பிலும் சி.எஸ்.முருகேசன் பதிப்பிலும் முறையே 11,

15-ஆம் பாடலாகச் ‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே’ எனத் தொடங்கும் பாடலை அடுத்தும் ‘நாலு வேதம்’ எனத் தொடங்கும் பாடலுக்கு முன்னும் வைக்கப் பட்டுள்ளது. அரு. ராமநாதன் பதிப்பில் உற்பத்திநிலை என்ற தலைப்பில்அமைந்த ‘அண்ணலே அநாதியே’ எனத்தொடங்கும் பாடலை அடுத்து அறிவுநிலை என்ற தலைப்பின் கீழ் இரண்டாவது பாடலாக இடம்பெற்றுள்ள (27) இதற்குமுன் ‘பண்டுநான்’ (26) எனத் தொடங்கும் பாடலும் பின்னர் “தங்கம் ஒன்று ரூபம் வேறு’ எனத் தொடங்கும் (28) பாடலும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு பாடல்களும் பூம்புகார் பதிப்பில் ‘அண்ணலே’ (23) எனத் தொடங்கும் பாடலை அடுத்து 24, 25-ஆம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. ‘தங்கம் ஒன்று’ எனத் தொடங்கும் பாடல் சி.எஸ்.முருகேசன் பதிப்பில் 22-ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இது ‘சங்கிரண்டு’ எனவும் ‘அஞ்செழுத்திலே’ எனவும் தொடங்கும் பாடல்களுக்கு இடையில் வைக்கப் பெற்றுள்ளது.

பூம்புகார் பதிப்பகப் பதிப்பிலும் சி.எஸ்.முருகேசன் பதிப்பிலும் நீளவீடு, வீடெடுத்து, ஓடமுள்ள எனத் தொடங்கும் பாடல்கள் முறையே 20, 21, 22, 25, 26, 27 என்ற எண்ணுள்ள பாடல்களாக இடம் பெற்றுள்ளன. வா.சரவண முத்துப்பிள்ளை பதிப்பிலும் இதே வரிசைமுறையே காணப்படுகின்றது. இந்த மூன்று பாடல்களில் ‘ஓடமுள்ள’ எனத் தொடங்கும் பாடல் அரு.ராமநாதன் பதிப்பில் இரண்டாவது பாடலாக இடையில் உள்ளது. இதே போன்று ‘மீன் இறைச்சி’ (154), ‘ஆட்டிறைச்சி’ (155) எனத் தொடங்கும் பாடல்கள் அரு.ராமநாதன் பதிப்பிலும் சி.எஸ்.முருகேசன் பதிப்பிலும் அடுத்தடுத்த பாடல்களாக இடம்பெற்றிருக்க பூம்புகார் பிரசுரப்பதிப்பிலும் பாவை பதிப்பிலும் 149, 150-ஆம் பாடல்களாக முன்பின்னாக இடம்பெற்றுள்ளன. சிவவாக்கியர் பற்றி ஆராயும் மு. அருணாசலம் ‘சிவஞான சித்தியார் சுபக்கத்துக்கு உரை எழுதிய மறைஞான சம்பந்தர் 298-ஆம் பாடலில் உரை எழுதும் போது உதாரணமாக, ‘பஞ்சாக்கர தரிசனம்’ என்று பெயரிட்டு, சிவவாக்கியம் 90-ஆம் பாடலை மேற்கோள் காட்டுகிறார்.

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்ச்

சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்

யவ்வுமேன் முடியதாய் எழுத்துநின்ற நேர்மையைச்

செவ்வ னொத்து நின்றதே சிவாய அஞ்செழுத்துமே”

(14-ஆம் நூ.2005: 289)

எனக் குறிப்பிட்டுள்ளார். சிவவாக்கியரின் பாடல் வரிசையில் 90-ஆம் பாடலாக இடம்பெற்றிருப்பதாக இவர் குறிப்பிடும் இந்தப் பாடல் த.கோவேந்தன் பதிப்பு, சி.எஸ்.முருகேசன் பதிப்பு அரு.ராமநாதன் பதிப்பு ஆகியவற்றில் முறையே 91. 97, 93-ஆம் பாடல்களாக இடம்பெற்றிருப்பதும் பாடல் வரிசைமுறையில், எண்ணிக் கையில் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் காட்டுகிறது.

இருபாடல்கள் ஒரே பாடலாக

ஒரு பதிப்பில் ஒரே பாடலாகத் தரப்பட்ட பாடல்கள் வேறு பதிப்புகளில் இரண்டு பாடல்களாகத் தரப்பட்ட நிலைகளையும் இந்தப் பதிப்புகளில் காணமுடிகின்றது. த.கோவேந்தன், சி.எஸ்.முருகேசன் ஆகியோர் பதிப்புகளில் இடம்பெற்ற ‘மிக்க செல்வம்”, ஒக்க வந்து’, மாடுகன்று’, ‘பாடுகின்ற’ (முறையே 75-78; 81-84 என்ற எண்கள் கொண்டவை) எனத் தொடங்கும் பாடல்கள் அரு.ராம நாதன் பதிப்பில் இரண்டு பாடல்களாக (79, 80) இடம்பெற்றுள்ளன. இவ்வாறே இவர் பதிப்பில் 26-ஆம் பாடலாக இடம்பெற்ற ‘பண்டுநான்’ எனத் தொடங்கும் பாடல் பூம்புகார் பதிப்பிலும் சி.எஸ்.முருகேசன் பதிப் பிலும் ‘பண்டுநான்’ எனவும் ‘அண்டர்கோன்’ எனவும் தொடங்கும் இரு பாடல்களாகத் (முறையே 24, 25, 29, 30 என்னும் எண்ணுள்ளவை) தரப்பட்டுள்ளன. இதே நிலையை வா.சரவணமுத்துப் பிள்ளையின் பதிப்பிலும் காணமுடிகின்றது.

இவ்வாறு அமையும் எட்டுவரிப் பாடல்கள் பற்றிக் குறிப்பிடும் மு.அருணாசலம் “அச்சில் 8 வரிப் பாடல்கள் காணப்படுகின்றன. இவை 8 வரிப் பாடல்களல்ல: இரண்டு பாடல்கள், எதுகையைப் பார்க்காமலே இவர் பாடுவதால் ஒரே பாடல் என்று அச்சுப்போட்டது பிழை. இரண்டாகக் கொள்ளலாம்; கருத்தும் இரண்டே” (14-ஆம் நூ.2005: 285) என்னும் கருத்தை முன்வைத்துள்ளார்.

பாடவேறுபாடு

“நூற்பதிப்பில் ஈடுபடுபவர் தமக்குக் கிடைத்துள்ள ஏடுகளை ஒன்றிற்கொன்று ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றுள் பிழைகளின் எண்ணிக்கையில் குறைந்தும், ஏட்டின் பழமையில் முதிர்ந்தும், சொல் அமைப்பில் தெளிவுபட்டும் தோன்றும் ஏதேனும் ஒரு பிரதியை ஆதாரப் பிரதியாகக் கொள்ளவேண்டும். பின்பு அதனுடன் மற்றப் பிரதிகளைத் தனித்தனியே வைத்து ஒப்புநோக்கிப் பாடவேறுபாடு களைக் குறித்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஆசிரியர் கருத்துக்கு ஒத்தபாடம் எது எனச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவல்லாத மற்றைய பாடங்ளைப் ‘பாட வேறுபாடு’ என்ற பகுதியில் தரவேண்டும்” என அ.விநாயக மூர்த்தி (1978:6) குறிப்பிடும் பாடவேறுபாட்டுடன் கூடிய பதிப்புநெறி எதுவும் சித்தர்பாடல் பதிப்புகளில் பின்பற்றப் படவில்லை.

சித்தர்பாடல்களின் முதன்மையான சிக்கல்களில் தலைமையானது பாடவேறுபாடே. இந்தப் பாட வேறுபாடு இல்லாத சித்தர்பாடல் பதிப்புகளே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் மேலே அ.விநாயகமூர்த்தி குறிப்பிட்டதைப் போலப் பிரதிகளைப் பரிசோதித்து உரிய பாடவேறுபாடுகளைத் தரும் முறை எந்த சித்தர் பாடல் பதிப்பிலும் கைக்கொள்ளப்பெறவில்லை. வெளிவந்துள்ள பதிப்புகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுநோக்குகையில் இந்தப் பாடவேறுபாடுகள் மலிந்து காணப்படுவதை எவரும் உணரலாம். இந்தப் பாடவேறுபாடுகள் வரிக்கு வரி இடம் பெறுபவையாக உள்ளன. சொற்கள் மட்டுமல்ல, வரிகளும் கூட வேறுபட்டுக் காணப்படுகின்றன. பின் வருவன சித்தர்பாடல் பாடவேறுபாட்டுக்கான சில சான்றுகள். பட்டியல் ஐந்தைக் காண்க.

200 பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்ததின் மூலம் 200-க்கும் மேற்பட்ட பாடபேதங்கள் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகின்றது (இங்குச் சில மட்டுமே பட்டியலிடப் பட்டுள்ளன). இவை எழுத்துப்பிழை, அச்சுப்பிழை, எழுத்து மாறுபாடு, சொல் வேறுபாடு என்ற பல காரணங் களினால் உண்டான பாடவேறுபாடுகளாக உள்ளன. எந்தப் பதிப்பும் இந்தப் பாடபேதங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை, பதிப்பில் தரவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

வரிகளே முழுக்க மாறிப்போன பாடல்களும் இந்தப் பதிப்புகளில் உள்ளன. அரு.ராமநாதன் பதிப்பில் உள்ள “இங்குமங்குமாய் இரண்டு தேவரே இருப்பரோ, அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலே” (128) என்னும் அடிகள் பூம்புகார் பதிப்பில் “அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ, அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில்” (123) என உள்ளன. அரு.ராமநாதன் பதிப்பில் உள்ள

உருவுஅல்ல வெளியும் அல்ல ஒன்றைமேவி நின்றதல்ல

மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும் அல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே     (72)

என்னும் பாடல் த.கோவேந்தனின் பூம்புகார் பதிப்பில்

உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்

மருவுவாசல் சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்

பெரிதல்ல சிறிதல்ல பேசலான தானுமல்

அரியதாகி நின்றநேர்மை யாவர் காணவல்லரே     (68)

எனவும் சி.எஸ்.முருகேசன் பதிப்பில்

உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல

மருவுமல்ல சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல

பெரிதல்ல சிறிதல்ல பேசலான தானுமல்ல

உரியதாகி நின்றநேர்மை யாவர் காணவல்லரே

எனவும் இருப்பதே சித்தர்பாடல் பதிப்புகளில் பாட வேறுபாட்டுச் சிக்கலுக்குச் சிறந்த சான்று.

பாட்டு முதற்குறிப்பகராதி முதலியன

பதிப்பு நெறிமுறைகளில் பயன்பாட்டாளரின் எளிய பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புறப்பதிப்பு நெறிமுறை களாகச் சில நோக்கீட்டுநெறிகளைக் கொண்ட இணைப்பு களை உருவாக்கித் தருவது முக்கியமானது. இத்தகைய நோக்கீட்டுக் கூறுகளில் முக்கியமானது பாட்டு முதற் குறிப்பகராதி. பதிப்பில் இடம்பெற்ற உரிய பாடலின் இடத்தை அறிந்துகொள்ளப் பயன்படும் வழிகாட்டியாக அமைவது பாட்டுமுதற்குறிப்பகராதி. இது சித்தர்பாடல் பதிப்புகளில் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட எந்தப் பதிப்பிலும் தரப்பெறவில்லை என்பது ஒரு பதிப்பவலம். அரு.ராமநாதன் பதிப்பில் தத்துவங்கள்பற்றிச் சில விளக்கங்கள் (714-753), பொருள் அகராதி (754-773) என்பன தரப்பட்டிருந்தாலும் நூலை எளிதாகப் பயன்படுத்து வதற்கு உரிய பாட்டு முதற்குறிப்பகராதி தரப்பட்டிருந் தாலும் நூலை எளிதாகப் பயன்படுத்துவதற்கு உரிய பாட்டு முதற்குறிப்பகராதி தரப்படவில்லை. பாட்டுமுதற் குறிப்பகராதி இல்லாத காரணத்தால் சித்தர்பாடல் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பாடலின் தொடக்கத்தைக் கொண்டு உரிய பாடலைத் தேடிப் பிடிப்பது மிகமிகக் கடினம்.

பூம்புகார் பதிப்பில் பதிப்புக்குப் பயன்பட்ட நூல்கள் என்ற பகுதியில் தரப்பட்டுள்ள நூல் விவரங்கள் எதுவும் முழுமையாக இல்லை. ஒன்றில் பதிப்பாசிரியர், ஆண்டு என்பனவும் பிறிதொன்றில் தலைப்பு, அச்சகம், ஆண்டு என்பனவும் மற்றுமொன்றில் பதிப்பகம், ஆண்டு என்பனவும் வேறொன்றில் நூற்பெயர், ஆசிரியர் பெயர் என்பனவும் மட்டுமே தரப்பட்டுள்ளன (524). சி.எஸ்.முருகேசன் பதிப்பில் பின்னிணைப்பு எதுவும் தரப்படவில்லை. த.கோவேந்தனின் பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பில் உள்ளடக்கப் பகுதியே தரப்பெறவில்லை. இந்தக் குறைபாடுகள் எல்லாம் பதிப்பு வெறும் சடங்காகிப் போய்விட்ட வணிக மனப்பான்மையையே காட்டுகின்றன.

முடிபாக

பதிப்பு என்பது மிகச்சிறந்த ஆவணப்படுத்தம். இந்த ஆவணப்படுத்தமே எதிர்கால ஆய்வின் ஆதாரம். இந்த ஆதாரம் முழுநம்பிக்கைக்கு உரியதாக இருப்பது மிகமிக அவசியம். இந்த நம்பகத்தன்மையின் உருவாக்கத்திற்கு அடிப்படையாவது திட்டமிட்ட அறிவியல்பூர்வமான பதிப்புநெறிமுறைகளே. இந்தப் பதிப்பு நெறிமுறைகள் சி.வை.தாமோதரம்பிள்ளை, ஆறுமுகநாவலர், இ.வை.அனந்த ராமையர், பவானந்தம்பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோர் பதிப்புகளில் இடம்பெற்றுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பராமாயணத்திற்குப் பாடவேறுபாடுகளோடு கூடிய சிறந்த பதிப்பை வெளியிட்டுள்ளது. பாடபேதத் திறனாய்வு பற்றிய ஆய்வும் வெளிவந்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் இருந்தும் தமிழ்ச்சமுதாயத்தில் இவை தொடர்ந்து பின்பற்றப்படாமல் போயுள்ளதைத்தான் சித்தர்பாடல் பதிப்புகள் காட்டுகின்றன.

சித்தர்பாடல்களுக்கான பழைய பதிப்புகளில் உள்ள நேர்மைகூட இன்று வெளிவந்துள்ள புதிப்புகளில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. பதிப்பகம், பதிப்பாசிரியர் என்னும் இருநிலைகளிலும் அக்கறையின்மைகளே காணப்படுகின்றன. நம்பகத்தன்மை இல்லாத இந்தப் பதிப்புகள் ஆய்வுக்குப் பெருந் தடையாக உள்ளன. எனவே சித்தர் ஆய்வில் ஆழ்ந்து தோய்ந்த அனுபவம் உள்ள அறிஞர் களையும் சிறந்த பதிப்பனுபவம் உள்ள அறிஞர்களையும் துணையாகக் கொண்டு செம்பதிப்பு ஒன்றை வெளிக் கொணரவேண்டிய காலத்தேவை கட்டாயத்தேவையாக இன்று நம்முன் உள்ளது. குறிப்பிட்ட சிந்தனைமரபின் அறிவுப்பெட்டகமான சித்தர்பாடல்களை எதிர்காலச் சமுதாயத்திற்கு உரிய பொருட்செறிவோடு பாதுகாத்து அளிக்கவேண்டிய கட்டாயப் பொறுப்பு இந்தக் கருத்தரங்கின் வழி ஆக்கம் பெறுவது நலம்.

ஆய்வுத்துணை நூல்கள்

அருணாசலம், மு., 2005 தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு, தி.பார்க்கர் - தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், சென்னை.

........................................ 2005. தமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு, தி பார்க்கர் - தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், சென்னை.

கணபதி, டி.என்.2005 தமிழ்ச் சித்தர் மரபு, ரவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

கோவேந்தன், த., (பதி.) 2000 சித்தர் பாடல்கள், பட்டினத்தார் முதல் பாரதியார் வரை, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.

..................................... 2001. சித்தர்பாடல்கள், பூம்புகார் பதிப்பகம், சென்னை.

முருகேசன், சி.எஸ். (பதி.) 2004. சித்தர்பாடல்கள் (பெரிய ஞானக்கோவை), சங்கர் பதிப்பகம், சென்னை.

ராமநாதன், அரு.(பதி) 2004 சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள். பிரேமா பிரசுரம், சென்னை.

விநாயகமூர்த்தி, அ., 1978. மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், மதுரை.

Pin It