தென் ஆப்பிரிக்காப்பிரதிநிதிகள் நாளது 24-ந் தேதி கோயமுத்தூர் ஜில்லாவாகிய நமது ஜில்லாவுக்கு வரப்போவதாக அறிந்து மிகவும் சந்தோஷிப்பதோடு, மனப்பூர்த்தியாய் வரவேற்கிறோம். தென் ஆப்பிரிக்காக் கவர்ன்மெண்டார் தென் ஆப்பிரிக்காவிற்குக் குடியேறின இந்திய சகோதரர்களுக்குச் செய்து வரும் ஆணவம் பொருந்திய கொடுமைகள் சுயமரியாதையுள்ள சமூகத்தாருக்குச் சகிக்க முடியாதிருப்பினும் - உயிரைத் துறந்தாவது தங்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசிய முள்ளதாயிருப்பினும், இக்கஷ்டத்தை நீக்குவதற்குத் தென் ஆப்பிரிக்கா இந்தியர்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்வதில் காதறுந்த ஊசியளவு பிரயோஜனமாவது உண்டாகுமாவென்பது நமக்குச் சந்தேகமாகவேயிருக்கிறது.

ஆயிரம் தென்னாப்பிரிக்கா கவர்ன்மெண்டைக் கசக்கிப்பிழிந்து சத்து எடுத்ததற்குச் சமானமான தமிழ்நாட்டுப் பிராமணர்கள் சிலர், அதாவது, தமிழ்நாட்டில் தங்களுக்கு முந்தியுள்ள பூர்வீகக்குடிகளாகவும் தங்கள் நாட்டாராகவும் இருக்கிற ஜனங்களைத் தொடக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாதவர்கள், கண்ணில் தென்படக் கூடாதவர்கள், அவர்கள் தெய்வத்தைக் காணக்கூடாதவர்கள், அவர்கள் மத - வேத மென்பதைப் படிக்கக் கூடாதவர்கள் என்று கொடுமைப்படுத்தி வைத்திருக்கிற ஒரு கூட்டத்தார் - இக்கொடு மைகளுக்கு ஆதாரமாக ஸ்மிருதிகளையும், சாஸ்திரங்களையும், புராணங்களையும் சட்டமாக வைத்துக்கொண்டிருக்கிற ஒரு கூட்டத்தார்- இக்கொடு மைகளை ஒழிக்கப்பாடுபட்ட மகாத்மாகாந்தி போன்றவர்களை மூலையில் உட்கார வைத்த ஒரு கூட்டத்தார் - இக்கொடுமைகளை நிலைநிறுத்த வர்ணாசிரம ஸ்தாபனங்களையும் “பிராமணன்” ஆகிய பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டும் இக்கொடுமைப்படுகிறவர்களிலேயே சில சுயமரியாதையற்றவர்களையும், சமூகத் துரோகிகளையும் பலவழிகளில் தங்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டும் பிரசாரம் செய்யும் ஒரு கூட்டத்தார் - இத் தென்னாப்பிரிக்கா தூதர்களை ஊர் ஊராய் கூட்டிக்கொண்டு திரிவதினாலும், இவர்களைக் காட்டி, வரப்போகும் எலெக்ஷனுக்கு தங்களுக்கு வோட் கிடைக்கும் படியான மாதிரியில் சூழ்ச்சிப்பிரசாரம் செய்வதினாலேயும் தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடக்கூடும்.

இம்மாதிரியான ஜனங்களின் தந்திரங்களால் நடத்தப்படும் பிரசாரம் தென்னாப்பிரிக்கா சகோதரர்களுக்கு எவ்விதம் பயன்படும் என்பதை மாத்திரம் நாம் வெளியில் சொல்லாமலிருக்க முடியவில்லை.

ஆனால், ஆங்காங்கு கூட்டிக்கொண்டுபோவதில் அவர்கள் இவர்களுக்கு உபசாரம் படித்துக் கொடுக்கவில்லை; இவர்கள் அவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை; இவர்கள் அவர்களுக்கு வண்டி கொடுக்கவில்லை என்று இம்மாதிரி ஒரு கக்ஷியாரின் மேல் பொது ஜனங்களுக்குத் துவேஷ முண்டாகும்படியான விஷமப்பிரசாரம் செய்ய மாத்திரம் உபயோகப்படுமென்பதை நாம் மறைக்க முடியாது.

(குடி அரசு - கட்டுரை - 24.01.1926)

Pin It