உஸாமா பின்லேடனை கொல்வதற்காக, பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அடாவடித்தனம் உலக அளவில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை ஏதோ புத்திசாலித்தனமான வீரமிக்க செயல் என்று சிலர் பாராட்ட முற்படுகின்றனர். அதில், அதிகாலையில் அகிலத் தின் செய்திகளை அனைவரும் அறிய அய்யா ஆதித்தனார் தந்த அற்புதமான நாளிதழான தினத் தந்தி முன்னிலை வகிக்கிறது.

"கடந்த 7-5-2011 அன்று தலையங்கம் தீட்டியுள்ள தினத்தந்தி, தாவூத் இப்ராஹீம், ஹபீஸ் சயீத், மவ்லானா மசூத் அசார் மற்றும் பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் முழு ஆதரவில்தான் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கே தெரியாமல் அந்த நாட்டிற்குள் நுழைந்து உஸாமா பின்லேடனின் கதையை முடிக்க அமரிக்காவால் முடிகிறபோது, அண்டை நாடான இந்தியா ஏன் தூங்கிக் கொண்டிருகிறது?

நமது நாட்டில் நாசவேலைகளை செய்த இந்த நாசகாரர்களை பிடிப்பதற்கு அமெரிக்காவின் அதே பாணியை நாம் பின்பற்றினால்தான் என்ன? என்பதுதான் மக்களின் இப்போதைய கேள்வி' என்று எழுதியுள்ளது தினத்தந்தி.

தினத்தந்தி இதன் மூலம் சொல்ல வருவது, அமெரிக்காவின் பாணியில் அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளை பிடித்து வாருங்கள் என்பதுதான். தாவூத் இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் தீவிரவாதிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களை முறைப்படி கைதிகள் பரிமாற்றம் அல்லது குற்றவாளிகள் பரஸ்பரம் ஒப்படைப்பு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேசி இந்தியா கொண்டு வர வேண்டும் என்று தினத்தந்தி கூறினால் அது பாரட்டிற்குரியதாகும்.

ஆனால், ஒருவன் தனக்கு வேண்டிய பொருள் அடுத்த வீட்டில் இருக்கிறது என்று கூறிக்கொண்டு அண்டை வீட்டாரின் அனுமதியின்றி நுழைந்தான் என்பதற்காக அவன் செய்த அதே முட்டாள்தனத்தை அதாவது, யார் வீட்டிலும் யாரும் நுழையலாம் என்ற சித்தாந்தத்தை ஒரு பத்திரிகை ஆதரிப்பதுதான் பத்திரிகை தர்மமா? இவ்வாறு ஒவ்வொரு நாடும் செய்ய முனைந்தால் உலகம் நிம்மதியாக இருக்குமா? நாடுகளின் பாதுகாப்புக்குத்தான் உத்தரவாதம் இருக்குமா?

ஒரு பத்திரிகையின் எழுதுகோல் எந்த அளவுக்கு நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்கும், ஒரு நாடு தவறு செய்தால் அதை தட்சாண்யமின்றி சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்கும், மற்றொரு பத்திரிகையின் தலையங்கத்தையே தினத்தந்தியின் பார்வைக்குத் தருகிறோம்.

லிபியாவில் நடந்துவரும் ஆட் சிக்கெதிரான கிளர்ச்சிக்கு நடுவே, அப்பாவிகளை கொள்வதாக கூறி லிபியா மீது அநியாய தாக்குதல் நடத்தி வருகிறது அமெரிக்கா தலை மையிலான நேட்டோ படைகள்.

இதுகுறித்து தினமணி நாளிதழ் கடந்த மார்ச் 12 அன்று, "அந்நியர் புகலென்ன நீதி?' என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் ஒரு பகுதி கீழே;

"லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?

நமது காஷ்மீரிலும்தான் பிரச்சினை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது.

இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?' என்று நடுநிலையுடன் கேட்கிறது தினமணி.

அமெரிக்காவின் பாணியில் அத்துமீறுவதுதான் வீரம் என்றால், தர்மம் என்றால் காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினையில், அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக் குள் நுழைந்தால் அதையும் தினத்தந்தி சரியே என தலையங்கம் வடிக்குமா என்பதே சாமான்ய மக்களின் இப்போதைய கேள்வி.

எனவே தீவிரவாதிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கடுகின் முனையளவும் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்கான வழி என்பது நேர்மையானதாக இருக்க வேண்டும். அத்தகைய வழியைத்தான் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைகள் முன் வைக்க வேண்டும்.

அதை விடுத்து குறுக்கு வழியை ஊக்கப்படுத்தி குறுகிய மனப்பான்மையுடன் வெளியிடும் செய்தியை தினத்தந்தி நிறுத்திக் கொள்வதுதான் அய்யா ஆதித்தனார், அந்த நாளிதழை தொடங்கிய நோக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை வாஞ்சையுடன் கூறிக்கொள்கிறோம்.

- முகவை அப்பாஸ்

Pin It