நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை அறவே ஒழிப்போம்! இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் முழங்கும் வாசகமாகும். ஆனால் எந்த கட்சியும் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதற்கு அக்கட்சிகளின் மேல் அவ்வப்போது பாயும் ஊழல் வழக்குகளே சான்றுகளாக உள்ளன.

தேனை கையில் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் இருக்க முடியாது என்பதைப்போல் கோடிகளை கொட்டி செய்யும் அரசியல் வியாபாரத்தில் நியாயமாக கிடைக்கும் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகைகள், சலுகைகளை மட்டும் வைத்து 'லாப கரமான' வியாபாரம் செய்ய முடியாது என்பதால்தான் எத்தனை பூஜ்ஜியங்கள் போடுவது என்று குழம்பும் அளவுக்கு பெருந்தொகை எல்லாம் ஊழல் செய்யப்படுகின்றன.

இரும்பைத் தின்று கசாயம் குடித்தால் சரியாகிவிடும் என்று நினைப்பவர்களைப் போல் ஊழல் செய்து விட்டு, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் மக்கள் சேவையாற்றவே அவதாரம் எடுத்ததாக அடுக்குமொழி பேசுகின்றனர் சில அரசியல்வாதிகள். ஆனால் ஊழல் இல்லாமல் அரசியல் செய்ய இயலாது என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ஒரு அரசியல்வாதி.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஒரு பேட்டியில், "இன்றைய கால கட்டத்தில் ஊழலின்றி அரசியல் செய்வது கஷ்டம். தற்போது அரசியலில் மகாத்மா காந்தி இருந்தாலும் கூட, அவரால் ஊழல் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. அப்படி செய்யா விட்டால் அரசியலில் இருந்து அவர் விலக வேண்டியது இருக்கும்.

கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு ஊழல் இன்றி ஒன்றும் செய்யமுடியாது. நான் முதல்வராக இருந்தபோது அரசு திட்டங்களை திறம்பட நிறைவேற்றினேன். அப்போது ஊழல் எதுவும் செய்யவில்லை. ஆனால் சிலர் எனக்கு சுய விருப்பத்தின் பேரில் நன்கொடை கொடுத்துள்ளனர். அதை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

"கள்ளுக்கடை காசில தாண்டா கட்சிக்கொடி ஏறுது போடா' என்ற பாடலைப்போல் அரசியல் கட்சிகளை இயங்க வைக்கும் எரிபொருள் ஊழல்தான் என்பது குமாரசாமியின் கூற்றில் வெளிப்படுகிறது. இதையும் தான்டி அரசியலில் ஊழல் செய்யாமல் ஒருவர் செயல்பட்டால் அவர் கின்னஸில் இடம்பெறக் கூடியவர்தானோ!

- முகவை அப்பாஸ்

Pin It