நான் பல நாடகங்களுக்கு தலைமை வகிக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறேன். என்றாலும், அவை அநேகமாக சீர்திருத்த நாடகங்களாகவே இருந்தன. புராண நாடகங்களுக்கு என்னை அழைப்பதில்லை என்பது மாத்திரமல்லாமல், நானும் அதிகமாகப் போவதில்லை. ஆனால், இந்த நாடகத்திற்கு அழைத்தவர்கள் என்னிடம் இக்கூட்டத்திற்கு இன்று வெகு பெண்கள் இங்கு வருவார்கள் என்றும், இந்த சமயத்தில் பகுத்தறிவு, சீர்திருத்த விஷயங்கள் பற்றிப் பேசலாம் என்றும் சொல்லி என்னை அழைத்தார்கள். அதனாலேயே நான் மிக ஆசையோடு ஒப்புக் கொண்டேன்.

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே பெரிதும் காரணமாகும். அதுவும் நம் தாய்மார்கள் இடம் இவ்வளவு இருக்குமானால், பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்? எந்தச் சீர்திருத்தமும் பெண்களிடம் இருந்து வந்தால் அதற்குப் பலம் அதிகம்.

இன்று இங்கு நடித்த சகுந்தலை நாடகம் ஒரு மூடநம்பிக்கை கதை அல்லாமல் – பெண் அடிமைக் கதை அல்லாமல் அதில் படிப்பினையோ, பகுத்தறிவோ என்ன இருக்கிறது? கொஞ்ச நாளைக்கு முன் இப்படித்தான் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடப் பெண்கள் – மாணவர்கள் சாவித்திரி சத்தியவான் நாடகம் நடித்தார்கள். அக்கதையில் மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு முரண்பாடு ஏராளமாய் இருந்ததோடு, உலகில் உள்ள விதவைகள் என்பவர்களை எல்லாம் கற்பில்லாதவர்களாக ஆக்கிவிட்டது. இப்படி புராணக் கதைகள் அவ்வளவும் ஒரு படிப்பினையும் இல்லாமல், ஒழுக்க ஈனத்தையும் கற்பித்துவிட்டு நம்மை இழிவுபடுத்தியும் விடுகின்றன.

சகுந்தலை கதை ஒரு புராணக்கதை என்பது மாத்திரமல்லாமல், ஆரியர் தன்மையை விளக்கிக் காட்டக்கூடிய ஒழுக்கமற்ற வஞ்சகத்தில் இருந்து புறப்படுகிறது. அதாவது, ஆரியர்கள் தேவனான இந்திரன் தன் பதவிக்குப் போட்டி போடும் ஆரியரல்லாத ஒருவனை ஏமாற்ற, ஓர் ஆரியப் பெண்ணை அனுப்பி அவள் மூலம் அவனுக்கு காம உணர்ச்சியுண்டாக்கி வஞ்சிக்கிறான். அந்த ஆரியனல்லாதவன் அந்தப் பெண்ணால் ஏமாந்து போகிறான். இந்த ஏமாற்றத்தில் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. இந்தச் சகுந்தலை ஒரு ஆரியனல்லாதவன் ஏமாந்து போனதற்கு அறிகுறியாய் இருக்கிறாள். இந்த லட்சணத்தில் அந்த ஆணும் பெண்ணும் சேர்க்கையான உடனே ஒரு குழந்தை பிறந்து விடுகிறது. அது காட்டில் எறியப்பட்டு ஒரு பட்சியால் வளர்க்கப்படுகிறது. பிறகு, ஒரு ரிஷியால் வளர்க்கப்படுகிறது.

இதுவரை பார்த்தோமானால், இதில் அறிவோ – ஒழுக்கமோ படிப்பினையோ ஏதாவது இருக் கிறதா? ஏதாவது இருக்குமானால் ஆரியர்கள் ஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதையும், அவர்கள் ஒருவனை ஏமாற்றவோ, ஒரு காரியத்தைச் சாதிக்கவோ என்ன என்ன முறைகளை கையாளுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ள இதில் ஒரு படிப்பினை இருக்கலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கும் எத்தனை மூடநம் பிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது பாருங்கள்.

இனி சகுந்தலை கலியாணத்தை கவனியுங் கள். ராசகுமாரன் என்கிற காரணத்தால் கண்டதும் காதல் – உடனே கர்ப்பம் – பிறகு வலிய அவனிடம் போய்க் கெஞ்சுதல். பிறகு என்ன என்னமோ மூடநம்பிக்கை கற்பனைகள். இந்நாடகத்தில் ஆண் பெண் காதலாடின சில வேடிக்கை தவிர, வேறு என்ன லாபம்? அதுவும் வெகு சிறு பச்சிளங் குழந்தைகளைக் காதலாடச் செய்தோம். இதை நான் குற்றம் சொல்வதாக யாரும் கருதக் கூடாது. இதன் ஆசிரியர்கள் மிகக் கஷ்டப்பட்டு, இச்சிறு குழந்தைகளை இவ்வளவு அருமையாய் நடத்தும்படி கற்பித்த திறத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால், பயனில்லாத காரியம் என்றுதான் சொல்லுகிறேன்.

நமது நாடகக் கதைகள் 100க்கு 90 இப்படியே இருக்கின்றன. வயிற்றுப் பிழைப்புக்கு நடிப்பவர்கள் எதையோ நடித்து வயிறு வளர்க்கட்டும். இந்த முறை, நாடகத்தில் மாத்திரமல்ல வேறு அநேகக் காரியங்களில் அரசியல், சமுதாய இயல், பகுத்தறிவு இயல், சுயமரியாதை இயல் என்பவற்றிலும்கூட வயிற்றுச் சோற்றுக்காகவும் சுயநலத்துக்காகவும் எந்த வேஷமும் போடுகின்ற மக்கள் இருக்கிறார்கள். ஆதலால், இன்றைய உலக சராசரி ஒழுக்கத்தில் இதைக் கெட்டதென்று சொல்ல வரவில்லை. ஆனால், யாதொரு சுயநல உணர்ச்சி இல்லாமல் உற்சாகத்திற்கு ஆகவும், கலை உணர்ச்சிக்கு ஆகவும் செய்யப்படுகிற காரியத்தில் இக்கேடுகளைப் புகுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் எதிரிகளாகிய ஆரியர்கள் ஆதியில் தாங்கள் நம்மீது வெற்றி பெற்று, நம்மை அடிமை கொண்டவுடன் மறுபடியும் அதிலிருந்து மீளாதிருக்கவும், மீளுவதற்கு நினைக்காமல் இருக்கவும் செய்து கொண்ட சூழ்ச்சிப் பிரச்சாரங்களில் இக்காரியமும் – அதாவது புராணக் கதைகள் நடிப்பதும் ஒன்றாகும்.

இன்று மக்கள் பெயர்கள் எல்லாம் திராவிட எதிரிகளான ஆரிய தெய்வங்கள், ஆரிய முனிகள், ஆரிய ரிஷிகள், ஆரிய அரசர்கள் ஆகியவைகளின் பெயர்களாகவே ஆகிவிட்டன.

– தொடரும்

13.10.1940 அன்று சென்னையில் ஆற்றிய தலைமை உரை, "குடியரசு' – 27.10.1940

Pin It