ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், நிர்மாணத் திட்டத்தில் ஒன்றாகிய மதுவிலக்குக்கு சட்டசபையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு வந்திருப்பதாக அவர் பல பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் கட்டுரைகளிலிருந்து வாசகர்களுக்கு விளங்கியிருக்கும். அத் தோடு தீண்டாமை ஒழிப்பதற்கும், கோர்ட்டுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகக் கருதியிருப்பதாய் அவர் சென்ற சில தினங்களுக்கு முன் சித்தூர் ஜில்லா சப்டிவிஷனில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஓர் ஆதி திராவிட ஆலயப்பிரவேச வழக்கில் ஆஜராகி ஜெயம் பெற்றதன் மூலமாகவும் அறியலாம்.

இனி மகாத்மாவின் மூவகைப் பகிஷ்காரத்தில் முக்கியமாயுள்ளது, சர்க்கார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடாது என்பதுதான். ஆனால் அது அநுபவத்தில் இப்போது அடியோடு இல்லவே இல்லை. அதில் இப்போது நம்பிக்கை வரவேண்டிய அவசியமும் இல்லை. கோர்ட்டு, சட்டசபை ஆகிய இவ்விரண்டிலும் ஸ்ரீமான் ஆச்சாரியார் அவர் களுக்கு நம்பிக்கை வந்திருப்பது தற்கால நிலைமையில் அதிசயமுமல்ல, அது ஓர் வகையில் குற்றமுமல்லவென்றே சொல்லுவோம். ஆனால் காரியத்தில் இவையிரண்டும் தேசீய சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுமா என்பதுதான் நமது கவலை.

 ஸ்ரீமான் சி. ஆர். தாஸ் அவர்கள் சட்டசபையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற காலத்தில்,சட்டசபையால் தேசத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று மனப்பூர்வமாய் நம்பித்தான் நாம் ஆக்ஷபித்தோமேயல்லாமல் மற்றபடி ஸ்ரீமான் தாஸ் முயற்சிக்கு விரோத மாய் இருக்க வேண்டுமென்கிற எண்ணத்தோடல்ல. அதுபோலவே தேசத்துக்காகத் தொண்டு செய்த நிரபராதிகளை நமது சர்க்கார் வேண்டுமென்றே கூட்டங்கூட்டமாய்ப் பிடித்துத் தண்டித்து ஜெயிலிலடைத்த காலத்தில் அநேகர் எதிர் வழக்காடும்படி அறிவுறுத்தியபோதும் சர்க்கார் கோர்ட்டுகளில் தேசீய சம்பந்தமான வழக்குகளுக்கு நியாயங்கள் கிடைக்காதென்கிற உறுதியின் பேரில்தான், நாம் எதிர் வழக்காட மறுத்தோமேயல்லாமல், வேண்டுமென்றே சிறைக்குப்போக வேண்டுமென்கிற எண்ணத்தினாலல்ல. அப்படியிருக்க, இவ்விரண்டு தத்துவங்களும் இப்பொழுது நம்பிக்கைப் பாத்திரமாகி விட்டதற்கு காரணம் என்னவென்று யோசிக்கும்போது, மகாத்மா காந்தி தனது இயக்கம் வெற்றிப்பெற முடியாமற்போனதற்குக் காரணம் படித்தவர்களென்று சொல்லப்படுவோரின் மனப்பான்மையை மாற்ற தனக்குச் சக்தியில்லாமல் போனதுதானென்று பல முறையும் சொல்லி வந்திருப்பது ஸ்ரீமான். சி. ராஜகோபாலாச்சாரியாரின் புது தோற்றத்தால் கல்லின் மேல் எழுத்து போலாகி விட்டது. அப்படி இல்லையென்று சொல்ல வேண்டுமானால் ஒத்துழையாமை தத்துவம் பொய்த்துப்போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்விதம் ஸ்ரீமான் ஆச்சாரியார் சொல்ல மாட்டார். ஆனால் ஒரு சமயம் சட்டசபைகளில் பொறுப்பில்லாதவர்களும், சுயநலக்காரர்களுமாகக் கூடிக்கொண்டு ஒருவரையொருவர் தேசத்தின் பேரால் வைது கொண்டும் வழக்காடிக்கொண்டும், சர்க்காருக்கு அனுகூலமாய் இருப்பதின் பலனாய், பொது ஜனங்களைப் பிரிப்பதற்கும், வகுப்பு வேற்றுமைகளையும் உண்டாக்குவதற்கும் காரணமாயிருக்கிறது. ஆதலால் பொறுப்புள்ள ஒரு சிலர் இந்த ஸ்தானங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தேச நலத்திற்கு நன்மையொன்று மில்லாவிட்டாலும், கெடுதியாவது உண்டாகாமல் மதுவிலக்கு என்கிற ஒரு நல்ல காரியத்தின் பெயரையாவது சொல்லிக் கொண்டு, காலத்தைக் கடத்தி வரலாம் என்று ஒரு சமயம் கருதி இருக்கலாம். அக்கருத்து ஒழுங்கானதென்றே வைத்துக்கொண்டாலும், காரியத்தில் அது எவ்வளவு தூரம் சாத்தியப்படுமென்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்பொழுது சட்டசபையில் நாலைந்து கொள்கைக்காரர்கள் இருக்கின்றார்கள். ஒன்று ஜஸ்டிஸ் கட்சியாரென்போர் மற்றொன்று சுயராஜ்யக்கட்சியார். இன்னுமொன்று சுயராஜ்யக் கட்சியில் சேராமலிருக்கும் சிலரும், ஜஸ்டிஸ் கட்சியில் சேராமலிருக்கும் சிலரும், இவ்விரண்டிலிருந்து பிரிந்து வந்த சிலரும் ஆக மூன்று முக்கியக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் மதுவிலக்கு என்கிற ஒரே காரியத்திற்குப் பாடுபடுவதைத் தவிர வேறு காரியம் பார்க்கக் கூடாதென்பதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஒத்துழையாமை மனப்பான்மையுள்ள ஆசாமிகளைப் பிடித்து சட்டசபைக்கு புதிதாக அனுப்பலாமென்று நினைப்போமேயானால், ஒரு நாலைந்து பேருக்கு மேல் சட்டசபையில் ஸ்தானம்பெற சவுகரியமே கிடைக்காது.

ஒவ்வொரு ஜில்லாக்களிலும் ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம், இருபதினாயிரம் செலவு செய்து கொண்டு சட்ட சபைக்குப் போகிற சுயநலப்புலிகள் போட்டி போடும்போது பெரும்பாலும் தாராளமான பணம், காசு இல்லாத வெறும் ஆசாமியாயிருக்கின்ற ஒத்துழையாதாருக்கு எப்படி ஸ்தானங்கள் கிடைக்கும்? அது மாத்திரமல்லாமல், ஒத்துழையாதாருக்குள்ளேயே வகுப்பு விஷயங்களில் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கை ஏற்பட்டு ஆளுக்காள் ஜாக்கிரதையாய் இருக்கிற நிலைமையில் இந்தக்காரியம் ஒழுங்காய் நடைபெறுமென்று எப்படி என்ன முடியும்? இப்பொழுதிருக்கிற வகுப்புக் கட்சி வாதங்களெல்லாம் அதிலும் பிரவேசிக்குமா? பிரவேசிக்காதா? இவ்வளவையும் தாண்டிக் கொண்டு சட்டசபையில் போய் பத்துப்பேர் உட்காருவதாய் வைத்துக்கொண்டாலும், நான்கு வருடமாய் ஒத்துழையாமையின் நிமித்தம் மகாத்மா காந்தி அவர்களும் இன்னும் பல தேசபக்தர்களும் செய்த தொண்டுகளையும், தியாகத்தை யும், அனுபவித்த கஷ்டத்தையும், சிறைவாசத்தையும் தங்கள் சுயநன்மைக்கு அனுபவித்துக் கொள்ள சுயராஜ்யக் கக்ஷியாரென்கிற ஒரு கூட்டத்தார் எப்படித் திடீரென்று வந்து உட்கார்ந்துக் கொண்டார்களோ, அதுபோலவே சட்டசபையிலும் ஒரு பத்துபேர் கஷ்டப்பட்டு சட்டசபையில் ஸ்தானம் பெற்று வாதாடுவதினால் சர்க்காருக்கு ஏதாவது இடைஞ்சல் நேரிடுவதாய் தோன்றி, அவர்கள் ஏதாவது ஒன்றிரண்டு துண்டு வீசுவதாயிருந்தால் அதற்கு ஆசைப்பட்ட சில ஆசாமிகள், அதை உபயோகப்படுத்திக் கொண்டு நம் காரியத்தை கெடுக்கமாட்டார்களென்பது என்ன உறுதி ?

அல்லது, ஒத்துழையாமையில் நம்பிக்கையுள்ளவர்கள் என்று சொல்வோர் தாங்கள் போகவில்லையானாலும் தங்கள் திட்டத்திற்கு அனுகூலமாயிருப்பவர்களை சட்டசபையில் ஸ்தானம் பெற உதவி செய்வதாக வைத்துக்கொண்டாலும், ஒத்துழையாதாரின் உதவிபெற்று சட்ட சபைக்குப் போகிறவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்பவர்களென்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது? தற்காலம் தேர்தல்களுக்கு நிற்கிறவர்கள் சொல்லுகிற வாக்குறுதிகளும், ஸ்தானம் பெற்ற பிறகு அவர்கள் நடந்துகொள்ளும் யோக்கியதையும் தலைவர் முதல் தொண்டர் வரையில் உள்ளவர்களின் யோக்கியதையையும் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். காஞ்சீபுரம் மகாநாட்டைக் கவனித்தவர்களுக்கு நமது ஜனங்களின் நாணயத்தைப்பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆதலால், இம்மாதிரி திட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பதைவிட காரியத்தில் பலன் தரத்தக்கதானத் திட்டங்களை வைத்து, பழைய ஒத்துழையாமையையே உயிர்ப்பித்துப் படித்த கூட்டத்தாரை விலக்கி, சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகம் முதலிய காரியங்களைச் செய்து ஒரே உறுதியாய் அதில் நம்பிக்கையுள்ளவர்களை மாத்திரம் சேர்த்துக் கொண்டு, அதற்கு விரோதமான மனச் சாட்சியுள்ளவர்களையெல்லாம் வெளியில் தள்ளி, பரிசுத்தமான எண்ணத்தோடு பழையபடி மகாத்மா சாரதியாயிருந்து அஹிம்சா தர்ம தேரை ஓட்டினாலல்லாது வேறு எந்த காரியத்தாலும் நாடு விடுதலையும், சுயமரியா தையும் பெறுமென்று எண்ணுவது வெறுங்கனவேயாகும். ஆதலால், இந்நிலை வரும்வரை மனிதரை மனிதர் தின்றும், ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் தின்றும் ஏப்பம் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உண்மை மனிதனின் கடமை.

(குடி அரசு - தலையங்கம் - 27.12.1925)

Pin It