இதற்கு முன் நான் பேசியும் எழுதியும் வந்ததில் முனிசிபாலிட்டி தாலூகா போர்டு டிஸ்டிரிக்ட் போர்டு முதலிய ஸ்தாபனங்களை காங்கிரஸின் பெயரால் கைப்பற்ற எல்லா இந்திய காங்கிரசோ மாகாண கான்பரன்சோ ஜில்லா கான்பரன்சோ உத்திரவு கொடுக்கவில்லை என்று வெகு காலமாய் நான் சொல்லி வந்திருப்பதோடு அவ்விதமான ஒரு உத்தரவோ சிபார்சோ காங்கிரஸ் ஸ்தாபனங்கள் செய்யக்கூடாதென்றும் நானும் எனது நண்பர்கள் சிலரும் வாதாடி வந்திருக்கிறோம். அவ்வித ஒரு தீர்மானம் காங்கிரஸில் இல்லாமல் செய்துமிருக்கிறோம். அப்படி இருக்க கோயமுத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் பேரால் 22.8.25 ல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு துண்டு பிரசுரத்தில் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரு தீர்மானத்தை தமிழில் தப்பாய் வெளியிட்டு ஜனங்களை ஏமாறும்படி செய்திருப்பதைக் கண்டு நான் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. அத்தோடு பொது ஜனங்களும் இந்தத் தப்பு பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கும்படி ஒரு தெளிவு பிரசுரம் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. அதாவது ³ நோட்டீசில்.

“எங்கெங்கே காங்கிரஸின் திட்டங்களை நிறைவேற்றி வைக்கக் கூடுமோ, அவ்விடங்களிலெல்லாம் காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு (முனிசிபாலிடி ஜில்லா, தாலூக்கா போர்டுகளுக்கு) அபேக்ஷகர்களாக நிற்பது விரும்பத்தக்கது என இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானிக்கிறது” என்று தமிழில் எழுதியிருக்கிறது.

ஆனால் இங்கிலீஷில்

“Resolved that in the opinion of the Committee it is desirable for Congress-men to offer themselves for elections to local bodies whereever it is likely to further the programme of the Congress.”

Congress men to offer themselves for election

 என்றிருப்பதை தப்பு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். to offer themselves என்கிற பதத்தின் அர்த்தத்தையே தமிழ் மொழிபெயர்ப்பில் மறைத்து விட்டார்கள். அதனுடைய அர்த்தம் தாங்களாகவே நிற்க வேண்டும். அதாவது காங்கிரசின் பேரைச் சொல்லிக்கொண்டு நிற்கக் கூடாது என்பதுதான். ஆதலால் காங்கிரஸின் பேரால் அபேக்ஷகர்கள் நிற்பதும் காங்கிரஸ் சபையார் இவர்களுக்காக பிரசாரம் செய்வதும் தீர்மானத்தின் படியே பெரியதப்பு.

 இத்தீர்மானம் பெல்காம் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானமாகும்போது நானும் இருந்தேன். இதற்கு ஆதி தீர்மானம் கொண்டு வந்தவர்கள்; காங்கிரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி முதலியவைகளைக் கைபற்ற வேண்டுமென்று காங்கிரஸ் கட்டளை இடுவதாய் கொண்டு வந்ததை நானும் மற்றும் சிலரும் காங்கிரஸ்காரருக்கு பரிக்ஷையேயில்லாமல் போய்விட்டதால் இத்தீர்மானம் நிறைவேறினால் விரும்பத்தகாதவர்களும் யோக்கியதை அற்றவர்களும் வந்து புகுந்து காங்கிரஸ் பெயரைக் கெடுத்து விடுவார்கள் என்றும் யோக்கியர்கள் தள்ளப்பட்டு போவார்கள் என்றும் இதனால் அந்தந்த ஊர்களில் கக்ஷி ஏற்பட்டுவிடுமென்றும் ஆட்க்ஷபித்ததின் பேரில் அதை மாற்றி இங்கிலீஷில் எழுதியிருப்பது போல் நிறைவேறிற்று. அதன் அர்த்தம் உள்ளூர் ஸ்தாபனங்களில் எங்கெங்கே காங்கிரஸ் திட்டங்களை முன்னேறச் செய்யக் கூடுமோ அங்கெல்லாம் காங்கிரஸ் மெம்பர்கள் தாங்களாக (அதா வது காங்கிரஸ் பெயர் சொல்லிக்கொள்ளாமல்) அபேக்ஷகர்களாக நிற்பது விரும்பத்தக்கது என்று இருக்கிறது.

இதில் தாங்களாக என்கிற பதத்தை விட்டுவிட்டு மொழி பெயர்த்து உங்களுக்குக் காட்டப்பட்டிருக்கிறது. தாங்களாக என்றால் காங்கிரஸ் பெயரை உபயோகித்துக்கொள்ளாமலும், காங்கிரஸ் பிரசாரத்தை உபயோகித்துக் கொள்ளாமலும் என்றுதான் அர்த்தம் என்று விளங்கவில்லையா? அப்படியிருக்க கோவை நகர் காங்கிரஸ்காரரின் இப்பேர்ப்பட்ட நடவடிக்கை கோவை மகாஜனங்களாகிய நீங்கள் ஏமாற்றப் படுவதோடு அல்லாமல் என்னுடைய எழுத்துக்களையும் வார்த்தைகளையும் உண்மையற்றதாகவும் உபயோகப்படக் கூடியதாயிருப்பதால் இதை வெளிப் படுத்தாமல் இருக்கமுடியவில்லை. ஆகையால் ஓட்டர்களாகிய நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு செய்யுங்கள். எனக்கு வேண்டாதவர் களோ முனிசிபாலிட்டிக்கு உதவாதவர்களோ இப்பொழுது எலக்ஷனுக்கு நிற்கும் சுமார் 20 கனவான்களில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் எனது நம்பிக்கை. காங்கிரஸ்காரர் அல்ல என்பதர்காக மாத்திரம் யாருக்கும் ஓட்டு செய்யாமல் இருந்து விடாதீர்கள். காங்கிரஸ்காரர் என்பதர்க்கு மாத்திரம் மற்ற விஷயங்களை கவனியாமல் நீங்கள் ஓட்டு செய்துவிடாதீர்கள். இந்த வேண்டுகோளை நீங்கள் ஆதரித்தால் மாத்திரம் தான் நீங்கள் உங்கள் ஓட்டை யோக்கியமான வழியில் உபயோகிக்கிறவர்களாவீர்கள்.

(குடி அரசு - அறிக்கை - 30.08.1925)

Pin It