தேசபந்துவினிடம் இத்தேசத்தார் வைத்திருந்த பேரன்பையும், அவருடைய மரணத்தினால் அடைந்துள்ள துக்கத்தையும் காட்டும்பொருட்டு ஜுலை முதல் தேதி மாலை 5 மணிக்குத் தேசமெங்கும் பொதுக்கூட்டங் கள் கூட்டித் தீர்மானங்கள் செய்யவேண்டுமென்று மகாத்மா காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசபந்து காலஞ்சென்று அன்றுடன் பதினாறுநாள் ஆகின்றமையால் அன்று அவரது சிரார்த்த தினமும் ஆகும். தமிழ்நாட்டார் இத்தினத்தைத் தகுந்தவண்ணம் நடத்திவைக்க வேண்டுமென நாம் சொல்ல வேண்டுவதில்லை. எல்லாக் கட்சியினரும், எல்லாச் சமூகத் தினரும் அன்று ஒன்றுபட்டு விண்ணுற்ற பெரியாரின் ஆன்மா சாந்தியடையுமாறு இறைவனை வழுத்துவார்களென நம்புகிறோம். தேசபந்துவின் ஞாபகதினத்தில், தேசத்திற்குத் தற்போது இன்றியமையாததாயிருக்கும் ஒற்றுமை விதை விதைக்கப்படுமாக.

கைம்மாறு யாது ?

இமயம் முதல் கன்னியாகுமரிவரையில் இந்நாட்டு மக்கள் தேச பந்துவின் எதிர்பாரா மரணத்தினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கின்றனர் என்று கூறுதல் மிகையாகாது. நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதற்குச் சான்றாகும். லோகமான்ய திலகரின் மரணத்திற்குப் பிறகு இந்தியர் இத்துணைப்பெரிய துக்கம் அடைந்ததில்லை யென்று திட்டமாகக் கூறலாம். ஆனால், துக்கப்படுவதோடு நமது கடமை முடிந்துவிட்டதா என்பது ஆராயற்பாலது. நாட்டிற்கு இத்தகைய அரிய தொண்டுகள் செய்த ஒருவருக்கு நாம் செய்யும் கைம்மாறு யாது? அவருடைய ஞாபகத்தை இந்நாட்டில் நிலைபெறுத்துவதெங்ஙனம்? நாட்டிற்கு நலன் எதுவும் செய்யாத பட்டதாரிகளுக்கும், ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உருவச் சிலைகள் நாட்டப்பட்டிருக்கின்றன. ஆதலால் நமது அருந்தலைவருக்கு உருவச்சிலை நாட்டுதல் போதாதென்று நாம் சொல்லவேண்டுவதில்லை. பின்னர் என் செய்வது? அவருடைய வாழ்க்கை நெறியை ஓரளவேனும் மேற்கொண்டு ஒழுகுதலே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாகுமெனக் கருதுகிறோம்.

இரு பெருங் குணங்கள்

தேசபந்துவின் உயர்ந்த குணங்கள் பலவற்றுள் தியாகமும், செயல் திறனுமே தலையாயவையென்பது வெள்ளிடைமலை. உண்மையில் உரம் அற்றதான சுயராஜ்யக் கட்சி, சிறிது காலத்தில் நாட்டில் இணையற்ற பலமுள்ள கட்சியானது எவ்வாறு? தேசபந்துவின் தியாகமும், கருமஞ் செய்வதில் அவருக்குள்ள ஆற்றலுமன்றோ இதற்குக் காரணங்கள்? மகாத்மா காந்தியின் கொள்கைகட்கு விரோதமான கட்சியொன்றை - பயனற்றதென்று நாட்டார் நன்கறிந்து தள்ளிவிட்ட திட்டமொன்றை - இவ்வளவு திறமுடன் அமைத்து நடத்த இக் குணங்களில்லாத பிறரால் முடிந்திருக்குமோ? தேசபந்துவின் இவ்விரு குணங்களையும் தேசமக்கள் மேற்கொள்ளுவதுதான் அவருக்கு நாம் செலுத்தக்கூடிய சிறந்த கைம்மாறாகும். சுயநலமும், சோம்பரும் மிகுந்துள்ள இந்நாளில், தேசமக்கள் தாஸரின் தியாகத்தையும், செயல்திறனையும் ஓரளவேனும் பின்பற்றி ஒழுக முன்வந்தால் நாட்டிற்குப் பெருநலம் விளை யும் என்பதில் ஐயமில்லை.

நமது கடமை

தேசபந்துவைப்போல் லட்சக்கணக்கான வருமானத்தைத் துறக்க எல்லாராலும் முடியாது. எல்லாரும் அவ்வளவு வருவாய் உள்ளவர்களு மல்லர். ஆனால், எத்துணை எளிமையில் ஆழ்ந்தவராயினும், மில் துணிகளை அறவே விலக்கிக் கதர் உடை தரிக்கலாம். தாஸரின் பெரிய தியாகத்தை நினைந்து நாம் ஒவ்வொருவரும் இச்சிறு தியாகமேனும் செய்ய ஒருப்படுவோமாக. எல்லாரும் தேசபந்துவைப்போல் ஒருபெரும் அரசியல்கட்சி கண்டு ஜெயம்பெற நடத்த முடியாது. ஆனால், ஒவ்வொரு வரும் தினம் அரைமணிநேரம் நூல் நூற்பதில் தமது செயல்திறனைக் காட்டலாம். கருமஞ் செய்வதில் தேசபந்து காட்டிய பேராற்றலை நினைந்து நாம் இச்சிறு தொண்டேனும் செய்து வரலாகாதா? தாசர் தினத்தன்று இந்நாட்டார் ஒவ்வொருவரும் அவருடைய நினைவை நிலை நாட்டும் பொருட்டு இவ்விரண்டு விரதங்களையும் மேற்கொள்வார்களென நம்புகிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.06.1925

Pin It