Gandhiதமிழகம் தற்போது ஒரு நிரந்தரக் கொதிநிலையில் உள்ளது. இது கடந்த ஓராண்டாகவே நீடித்துக் கொண்டுள்ளது. இது தமிழர் மனிதினில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. 16 தீக்குளிப்புகள், பலப்பல உண்ணாவிரதங்கள், போராட்டங்கள், ஆரப்பாட்டங்கள், எல்லாமே அறவழிப் போராட்டங்கள். ஆனால், இந்த "காந்தி தேசம்" அசைந்து கொடுக்கவில்லை. எனவே மக்கள், தமது மனதில், வன்முறைதான் அரசை வழிநடத்தும் என்ற புதிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். இது விபரம் தெரிந்த தமிழர் அனைவரும் கொண்டுள்ள உணர்வு.
 
அதன் வெளிப்பாடாக எனது மொழிநடையும் தேவைப்படும் இடங்களில் மட்டும் அதை பிரதிபலித்தது. சில விமர்சனங்கள் வந்தன; எதிர் கொண்டேன். பாராட்டுகளும் வந்தன. என்னை அறிந்தவர்கள் பலர் தொடர்பு கொண்டு ஆதரித்தனர். இது பற்றி எனது தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு இளைய தோழர், காந்தியின் "எழுத்து விபச்சாரம்" பற்றிப் பேசி அதிர்வலைகளை உண்டாக்கினார்.
 
அவர் சொன்னார், உலகிலேயே தமிழில் தான் எழுத்திலக்கியத்தையே அகம் என்றும் புறம் என்றும் பகுக்கும் பாங்கு இருந்தது. அதிலும் வெளிப்படையான மென்மையான காதலை மட்டும் வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பாங்குதான் தமிழின் அக எழுத்தாக இருந்தது. அதே நேரம், ஒருவர் சட்டத்திற்கும், சமூக ஒழுங்கிற்கும் உட்பட்டு, தனது உறவோடு அடையும் அந்தரங்கமான காதலின்பத்தை வெளியில் பகிர வேண்டியதில்லை. பகிரவும் கூடாது. அப்படிச் செய்வது நாகரிகமல்ல. அது ஒரு வேசித்தனம்!
 
அப்படி இருக்கும் போது காந்தி, "சத்திய சோதனை" என்ற தனது நூலில், தனது அந்தரங்கங்களின் வக்கிரங்களைப் பச்சையாக எழுதினார். ஏதோ பாவ விமோசனத்திற்காகத்தான் என்பது போல அவரது எழுத்து தெரிந்தாலும், அதன் நோக்கம் மக்கள நடுவில் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தைக் கட்டுவதற்காகத் தான். யாருமே சொல்லக் கூசும் அந்தரங்கங்களை அவர் சொன்னதால், அவர் ஒரு சுத்த சத்தியவான் என்ற எண்ணமே அனைவரின் மனதிலும் மேலோங்கும். அதைப்போலவே, அவரை அனைவரும் வியப்பாகவும், அதிசயமாகவும் பார்த்தனர். இவர் ஒரு அக்மார்க் சத்தியவான் என்றே கருதினர். ஆனால், அவர் பிரதாபப் படுத்திக்கொண்டது போல அவரது நேர்மை இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் சத்தியத்திற்கு முரணாக, தெரிந்தே, உணர்ந்தே நடந்துள்ளார் என்பது தான் சத்தியத்தை உணர்ந்தவர்கள் தெரிந்து கொண்ட செய்தி.
 
ஒரு அரசியல் உத்தியாக, தனது அந்தரங்கத்தை எழுதி, எதிர்பார்த்த விளைவுகளை அடைந்த அவரை, ஒரு "எழுத்து விபச்சாரி" என்பது தான் சரி என்றார் அந்த இளைஞர். உண்மைதான்!
 
அகில இந்தியாவெங்கும் விரவிக்கிடக்கும் பார்ப்பன, பனியா ஊடகங்கள் அம்பேத்கர் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ததால், காந்தி பற்றிய பல உண்மைகள் வெளிவருவதில் தாமதம் இருந்து வருகிறது. வட்டமேசை மாநாட்டில் ஆங்கிலேயர்கள் ஒத்துக் கொண்ட இரட்டை வாக்குரிமை முறையை, தனது உண்ணாவிரதத்தால் காந்தி முறியடித்தார். அம்பேத்கர், பெரியார், சுபாஸ் சந்திரபோஸ் போன்ற எண்ணற்றோரை இருட்டடிப்பு செய்தார். பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை விரைவுபடுத்தினார், இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு புரட்சியாக வடிவெடுத்த போதெல்லாம், அதை நீர்த்துப் போகும்படியான நடவடிக்கைகளை எடுத்து, "தனது திட்டப்படி" சுதந்திரம் கிடைக்குப்படிப் பார்த்துக்கொண்டார். இதற்கெல்லாம் காரணங்கள் உண்டு.
 
எனது மாணவப் பருவத்தில், 1979 என்று நினைவு, The Illustratted Weekly of India என்ற இதழில் பிரத்தீஷ் நந்தி என்பவர், காந்தியின் பாலியல் ஒழுக்கம் பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர், ஆச்சார்யா கிருபளானியின் மனைவியாரை காந்தி பயன்படுத்திய விதம் பற்றி எழுதி இருந்தார். அது பல விமர்சனங்களை எழுப்பியது. விபரம் தெரியாத நானும், பிரதீஷ் நந்தி அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தேன்.
 
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது கிருத்துவசமயத்தை ஏற்றுக் கொள்ளலாமா என்று கிருத்துவத்தைப் படித்தேன், ஆனால், வாரத்தில் ஆறு நாட்கள் தவறு செய்துவிட்டு, ஏழாவது நாள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற தொனியில் அமைந்த அதன் தத்துவம் என்னைக் கவரவல்லை என்று எழுதியவர், இந்தியாவின் சமயங்களை அதைப்போல் அணுகிப்பார்த்தாரா? பௌத்தத்தை அவர் தழுவாதது ஏன்? ராமனின் அட்டூழியங்களை அவரிடம் எடுத்துக் காட்டியபோது, தான் வணங்குவது மனித ராமனல்ல, இறைவ ராமன் என்றார். மனித ராமனாகப்பட்டவர், இறைவ ராமனின் பல அவதாரங்களில் ஒன்று என்ற இந்துமதக் கருத்தை இவர் அறியாதவரா? இது போன்ற சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் தான் புத்தர் என்பதை அறியாதவரா இவர்?
 
பல சமய இந்தியாவின் தலைவர் வெளிப்படையாக ஒரு மதக்கருத்தை ஆதரிப்பது சரியில்லையென்று அறியாதவரா? தான் ஒரு இந்துவாக இருக்கட்டும், தனிப்பட்ட முறையில் அவர் இந்து மதத்தை அனுசரிக்கட்டும், ஆனால், பொதுவான சபைகளில் ராம்பஜனை என்பது அபத்தமல்லவா? "ஈஸ்வரு, அல்லா தேரே நாம்" என்ற இவரது "பஜனையை" அவ்வம்மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
 
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கர், அன்பையும் சாதிகளற்ற சமூகத்தைப் போதித்த, பௌத்தத்தைத் தழுவியதும், இந்து சமயத்தில் பிறந்த ராமசாமிப் பெரியார் நாத்திகவாதியாகவும், சாதியை எதிர்ப்பவராகவும் இருந்ததும், மேட்டுக்குடி காந்தி என்ற அக்மார்க் சத்தியவான், வர்ணாசிரமக் கோமானான ராமனின் "பஜனை" பாடியதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
 
சபர்மதி ஆசிரமத்தை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ஓரு பிரபல அம்மையாரிடம் ஒருவர், காந்தி இவ்வளவு எளிமையாக வாழ்கின்றாரே என்றபோது, அவர் சொன்னாராம் We only know, how much we are spending to keep him starving (இவரை இப்படி அரைப்பட்டினியாய் வைத்திருக்க, நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம் தெரியுமா?) என்று. காந்தியாரின் "வேஷத்தை" இதைவிட யாரும் இப்படி நச்சென்று அம்பலப் படுத்த இயலாது. (அந்த அம்மையார் அம்பலப் படுத்துவதற்காக சொல்லவில்லை என்றாலும்!). எளிமை என்பது செலவில்லாமல் வாழ்வது. செலவு செய்து எளிமையாக வாழ்வது தான் நடிப்பென்பது!
 
இந்த நடிப்பு காந்திக்கு தேவைப்பட்டது. தனது சேட்டு சமூகம் அகில இந்தியாவெங்கும் விரவி வாழ்கின்றனர். பார்ப்பனர்களும் அவ்வாறே! இவர்கள் உற்பத்தியோடு சம்பந்தமில்லாமல் வாழும் சுரண்டல் சமூகங்களே! ஒட்டுமொத்த இந்திய சமூகத்தை பணத்தால் சேட்டும், சூழ்ச்சியால் பார்ப்பனர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இந்தியா தேசிய இன அடிப்படையில் பிரியுமானால், இந்த இரு சமூகங்களுமே சிறுபான்மை சமூகங்களாக, அதிகாரமிழக்க நேரிடும். அதே நேரம் பல்தேசிய இந்தியாவை ஒரு குடைக்குள் கொண்டுவருவதும் அவ்வளவு எளிதான செயலல்ல. தனது மொழியைப் பேசாதவனை மக்கள் தங்களது தலைவனாக ஏற்கமாட்டார்கள். இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒரு மனிதனால் கற்றுத் தெளிய இயலாது.
 
மாறாக, ஒருவன் தியாகி, யோகி, அஹிம்சாவாதி என்று பலவாரெல்லாம் தன்னைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டால், மொழிகளைக் கடந்த ஒரு "தியாக" தேசியத்தைக் கட்டிவிடலாம். இதை உணர்ந்து, கேம்பிரிட்ஜிலே (மேற்குலகின் சூழ்ச்சிகளைப்)பயின்ற காந்தி, தன்னைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கிக் கொண்டார். அனைத்தையும் அறிந்த பார்ப்பனீயம் உறுதுணையாயிருந்தது.
 
வடநாட்டிலே ஏழைகளெல்லாம் பட்டும் பீதாம்பரமுமா உடுத்துகின்றனர்? அவர் மதுரையில் வந்து தனது உடைகளைக் களைந்து, பிச்சைக்கார வேடம் போட்டது, தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட தமிழனை இந்தியாவோடு சேர்க்கும் குயுக்தி தான். இவருக்கு முன்னால், தமது புரட்சிவழி விடுதலை அடைந்த மக்களுக்கு "தேசிய இனத் தன்னுரிமையைக்" கொடுத்த லெனினை இவர் தனது வழிகாட்டியாக ஏற்கவில்லை! இது காந்தி தெரிந்தே செய்த பெருங்குற்றம்!
 
வரலாற்று ரீதியாக ஆய்ந்தால், காந்தி தன்னை நம்பிய மாற்றின மக்களுக்கு துரோகம் செய்தார் என்றே உணரவைக்கிறது. தனது இன நலத்துக்காக, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, சிறுபான்மை தேசிய இனங்களை சிறைவைத்துச் சென்றார் என்பது தான் உண்மை. தனது இன மக்களுக்கான பாதுகாப்பாக அவர் இந்தியாவை உருவாக்கிக் கொள்ளட்டும். அதேநேரம், இந்திய மண்னின் ஒவ்வொரு இன மக்களுக்கும், அவர்களது தாயகம், மொழி, பாண்பாடு போன்றவற்றைக் காக்க, இந்திய அரசமைப்பில் வழி கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இங்குள்ள சிறுதேசியங்களின் உரிமையைக் காக்க குறைந்தபட்சம் ஒரு கூட்டாட்சி முறையையாவது அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். விடுதலைக்கு முன்பாகவே அவர் இந்தியாவிற்கான அரசியல் கோட்பாட்டை வகுத்திருக்க வேண்டும்.
 
தேசியப் பாதுகாப்புக் குழுவில் அனைத்து தேசிய இனங்களும் கண்டிப்பாக பங்குபெற வேண்டும், இந்திய வெளியுறவுத் துறையில் அனைத்து இனங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றெல்லாம் இருந்திருந்தால், இன்று ஈழம் இந்த நிலையில் இருந்திருக்காது. இன்று பார்ப்பானும், மலையாளியும், சேட்டும் மட்டுமே நமது தலைவிதியை தீர்மானிப்பவராக இருக்கின்றனர்.
 
மேற்குலகெல்லாம் தேசிய இன அடிப்படையில் தேசங்களாக மலர்ந்த காலகட்டத்தில், உலகின் உயர்ந்ததாகக் கருதப்படும் பல்கலையில் பயின்ற அவர், தேசிய இனச் சில்கல்களை அறியாதவரா? ஒரு குடும்பத்தந்தை தனது இறுதியைக் கருதி உயில் எழுதுவார். ஒரு பொறுப்புள்ள தந்தை, தனக்குப் பின் சிக்கல் வராமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடுவார். அதுபோன்றதொரு தொலைநோக்குப் பார்வை இல்லாதவரா நமது "மஹாத்மா?". இந்த காந்தி ஒரு தேசத்தந்தையா?
 
இப்படிப்பட்ட காந்தி தேசம் தான் ஈழ விடுதலையை நசுக்கியது. ஈழ ஆதரவுப் போராட்டங்களை நசுக்கியது. "காந்தி தேசம் சொல்லுது, புத்த தேசம் கொல்லுது" என்று முழக்கம் செய்தார்கள். இந்தியா என்பது காந்தி தேசம் மட்டுமல்ல, இது புத்தனைப் பெற்றெடுத்த தேசமும் தான்.
 
இந்தியாவின் 1974ன் அனுகுண்டு வெடிப்புக்கு "Smile of Buddha" என்று பெயரிட்டிருந்தார்களாம். அது வெற்றிகரமாக வெடித்தவுடன் "Buddha Has Smiled" என்று தயிர்சாதப் பசு அப்துல் கலாம், இந்திரா அரசிற்குத் தெரியப் படுத்தினாராம்!
 
என்ன...வக்கிரம் பாருங்கள்!!!
 
இவர்களின் ரகசிய குழூஉக்குறி மொழிக்கு புத்தன் தான் கிடைத்தானா? பௌத்தத்தைப் பற்றிய இவர்களிது மதிப்பீடு அவ்வளவே! உலகின் ஒவ்வொரு தத்துவ நாயகனின் வாழ்க்கைக்குப் பிறகு, அவரது தத்துவங்கள் கேவலமாக திரிக்கப்படுவது தான் வரலாறாய் இருக்கிறது. இந்தியாவில் கார்ல் மார்க்ஸ் படும் அவதி நாம் அறியாததா?
 
புத்தனைப் பெற்ற ஆரிய தேசமும் (இந்தியா), புத்தனை ("வெற்று")அடையாளமாகப் பெற்ற ஆரிய தேசமும் (இலங்கை), ஒரே லட்சணத்தில் தான். அது தான் ஆரியத்தின் லட்சணம்!!!
 
தமிழத் தேசியத்தைக் கட்டியெழுப்பும் நாம் "மஹாத்மா காந்தி" என்ற பொய்ப்பிம்பத்தை உடைக்க வேண்டும். நமது கத்தியில்லாப் போரின் முக்கியக் கட்டம் அதுவாக இருக்கட்டும். காந்தியைப்பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் படிப்போம். அவரின் உண்மைத் தன்மைகளை தமிழ் மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.

- முனைவர் வே.பாண்டியன்

Pin It