மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பார்வை கொண்டவரும் அவ்வழியில் செவ்வானம், சடங்கு, நீண்டபயணம் போன்ற தலைசிறந்த நவீனங்களை எழுதியவரும், குந்தவைக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், மான்விழிக்கு கடிதங்கள் போன்ற நூல்கள் மூலம் மார்க்சிய சித்தாந்தத்தை எல்லோரும் படிக்கும் விதத்தில் எளிய முறையில் எடுத்துச் சொன்னவரும், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த மார்க்சிய ரீதியிலான தமிழ் எழுத்தாளராக விளங்குபவருமான செ. கணேசலிங்கன் அவர்கள் 05-06-2008 அன்று மதுரைக்கு வந்திருந்தார்.

தனது இலக்கிய மற்றும் லட்சிய நண்பரான பேராசிரியர் டாக்டர்.கோவிந்தன் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அவரை மாற்றுக்கருத்து இதழின் சார்பில் தோழர்கள் ஆனந்தன், சிவக்குமார், K.K.சாமி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர். மிகவும் இயல்பான விதத்தில் நடைபெற்ற அவ்வுரையாடலின் போது இலங்கை மற்றும் இந்திய தமிழ் இலக்கியங்கள் குறித்து பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சமூகம் குறித்த மார்க்சியப் பார்வையே எழுத்துக்களை வழிநடத்தவேண்டும்

மார்க்சிய அடிப்படையில் எழுதுபவர்கள் என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர்கள் பெரும்பாலும் தமிழ் இலக்கிய உலகில் முன்னிலை வகிக்கும் மு.வ., தி.ஜானகிராமன் போன்றவர்களைப் பற்றி சிறிது கூட கருதாது கடிவாளமிட்ட குதிரைகள் போல் இருக்கும் சூழ்நிலையில், திரு.கணேசலிங்கன் அவர்கள் தனது படைப்புகளில் பல இடங்களில் இது போன்ற முன்னணி எழுத்தாளர்களின் புதினங்களில் இடம் பெறும் சம்பவங்கள் குறித்தும் பேசும் போக்கு இருப்பதற்கு குறிப்பான காரணம் ஏதாவது உண்டா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது திரு. கணேசலிங்கன் அவர்கள் ‘இங்கு மார்க்சிய இலக்கியவாதிகள் என்று றியப்படுபவர்கள் பெரும்பாலும் மார்க்சிய ரசியல்கட்சிகளின் வழியில் எழுதுபவர்களாகவே உள்ளனர். இவர்களிடமிருந்து வேறுபட்டு என்னைப் போன்றவர்கள் கொண்டிருப்பது சமூக மற்றும் இலக்கியம் குறித்த மார்க்சிய ரீதியிலான பார்வையாகும். அந்த அடிப்படையில் சமூகத்தின் அக, புற நிலைகளை சரியாக படம் பிடித்துக்காட்டும் அனைத்து இலக்கியவாதிகளின் படைப்புகளயும் படிப்பவர்களாகவும் நாங்கள் இருக்கிறோம்; அவர்களது எழுத்துக்களை உரிய இடங்களில் மேற்கோள் காட்டுவதையும் செய்கிறோம்; மேலும் இத்தகைய இலக்கியவாதிகளின் பரந்துபட்ட ஒற்றுமை இலங்கையில் பலகாலமாகவே நிலவி வருகிறது. எடுத்துக்காட்டாக 1983ம் ஆண்டு என்னுடைய முன் முயற்சியின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்ஸ் நினைவு தின நூற்றாண்டு நிகழ்ச்சியில் 40ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்’ என்று கூறினார்.

மார்க்சிய சிந்தனைப்போக்கை இலங்கை இலக்கிய உலகில் உயர்த்திப் பிடித்த எழுத்தாளர்கள்

இலங்கை தமிழ் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது அதைப்போல் பல மடங்கு மக்கள் தொகை கொண்டதாக தமிழகம் இருந்தபோதிலும், இந்தியாவில் கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக இடதுசாரி சிந்தனைப் போக்கும் ஸ்தாபனங்களும் அதிகளவு உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருந்தபோதிலும், கடந்த காலங்களில் சிறப்புமிக்க வீறுகொண்ட தொழிலாளர் விவசாயிகளின் இயக்கங்கள் இங்கு அவ்வப்போது நடைபெற்றிருந்த போதிலும், தமிழ்நாட்டைக் காட்டிலும் இலங்கை தமிழ் இலக்கிய உலகம் பல குறிப்பிடத்தக்க, அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரி மற்றும் மார்க்சிய இலக்கியவாதிகளை கூடுதல் எண்ணிக்கையில் உருவாக்கியிருப்பதற்கு சிறப்பான காரணம் ஏதாவது உண்டா என்று வினவிய போது, திரு. கணேசலிங்கன் அவர்கள் அதற்கு முக்கிய காரணமாக கலாநிதி கைலாசபதி அவர்களையும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களையும் குறிப்பிடலாம் என்று கூறினார். இந்த இலக்கியப் பாதையினை வடிவமைத்து பல சமயங்களில் செப்பனிட்டு தந்தவர்கள் அவர்களாகவே இருப்பர்; குறிப்பாக திறனாய்வு இலக்கியத்தில் கலாநிதி கைலாசபதி அவர்கள் ஆற்றிய பணியும், படைத்த திறனாய்வுகளும் உலகத்தரம் வாய்ந்தவை என்று கூறினால் அது மிகையாகாது என்று கூறினார்.

அப்போது அவரது கூற்றை வழிமொழிந்து மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு தோழர்கள் அதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாக செவ்வானம் நாவலில் இடம்பெற்றிருக்கும் அவரது அணிந்துரையை மேற்கோள் காட்டியபோது அதனை உடனடியாக ஆமோதித்த கணேசலிங்கன் அவர்கள் இலக்கியம் குறித்த பல மார்க்சிய விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களை நயம்பட முன்வைத்த அணிந்துரை அது என்று குறிப்பிட்டார்.

எந்தவகைப் பார்வையுமற்ற அனுபவ வாதம் நல்ல இலக்கியங்களுக்கு உருக்கொடுக்காது

மேலும் இலக்கியம் படைக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான அறிவுரையாக, அவர் ‘இலக்கியத்திலும் விஞ்ஞான ரீதியான பார்வை இருக்க வேண்டும்; அது இன்றைய நிலையில் மார்க்சிய விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். அத்தகைய பார்வையைக் கைக்கொள்வது அத்தனை எளிதான காரியமன்று; இருப்பினும் அதனை கைக்கொண்டு சோசலிச யதார்த்தவாத இலக்கியங்களை படைக்க வேண்டும். சோசலிச யதார்த்தவாதம் என்பது சமூக நிகழ்வுகளை எந்த வகையான பார்வையும் இன்றி படம் பிடித்துக் காட்டும் போக்கல்ல அது அனுபவவாத இலக்கிய போக்குமல்ல. மார்க்சிய பார்வையோடு சமூக நிகழ்வுகளைப் பார்த்து அவற்றை நயத்துடன் மெருகூட்டி முன்வைப்பதே சோசலிச யதார்த்த வாதம். அந்த அடிப்படையில் உருவாக்கப்படும் இலக்கியங்கள் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் மார்க்சிய விஞ்ஞானம் முன் வைக்கும் அடித்தளம், மேல்கட்டுமானம் ஆகிய கண்ணோட்டங்களில் மிகவும் அடிப்படைத் தன்மை வாய்ந்த அடித்தளம் ஆற்றும் பிரதான சமூக மாற்ற பணியையே ஆற்றவல்லதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

அடுத்து இலங்கையின் இனப்பிரச்னை குறித்த கேள்வி எழுந்தபோது, அப்பிரச்னை விரைவில் தீர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று திரு. கணேசலிங்கன் அவர்கள் குறிப்பிட்டார். ‘தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகளின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நிலை குலைந்துள்ளது; இலங்கை அரசின் ராணுவச் செலவின் சுமை முழுவதும் சாதாரண மக்கள் மேல் ஏற்றி வைக்கப்படுகிறது; அதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை தாங்கவொண்ணா சுமை நிறைந்ததாக ஆகியுள்ளது. அதனால் கடுமையான திருப்தியில் உள்ள மக்களை, அந்த திருப்தியின் அடிப்படையில் அணிதிரட்டி போராடவைக்கவல்ல இடதுசாரி சக்திகள் சிங்கள பகுதி இலங்கையைச் சேர்ந்தவரிடையே அவ்வளவாக இல்லை; தொடர்ந்து கொண்டுள்ள போரினால் ராணுவத்தினரிடையே ஏற்படும் திருப்தி மேலோங்காதிருப்பதற்காக இலங்கை அரசு அவர்களுக்கு அடுத்தடுத்து பல சலுகைகளை வழங்கி வருகிறது; அதற்காகும் செலவினத் தொகை முழுவதும் சாதாரண மக்கள் தலைமீதே இறக்கி வைக்கப்படுகிறது; தமிழ் சிங்கள இனங்களின் தொழிலாளி வர்க்கத்தினரிடையே வர்க்க ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தவல்ல சக்திகள் பெரும் வலுவுடன் அவ்விரு இனத்தவரிடையேயும் இல்லை என்ற நிலையே நிலவுகிறது. இச்சூழலில் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு விரைவில் ஏற்பட்டுவிடும் என்று யாராலும் கூற முடியாது’ என்று கூறினார்.

அடுத்து சமீபத்தில் அவர் இயக்குநர் பாலுமகேந்திராவுடன் இணைந்து பார்த்த ஒரு மெக்சிகோ நாட்டின் திரைப்படம் எவ்வாறு மிகச் சாதாரணமான தன்னிச்சையான நிகழ்வுகள் கூட பயங்கரவாதம் என ஆட்சியாளர்களாலும், அரசு எந்திரத்திரத்தாலும் சித்தரிக்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்கும் அத்திரைப்படம் குறித்த பாராட்டுதலுடன் அவருடனான மாற்றுக்கருத்து ஆசிரியர் குழுவின் சந்திப்பு நிறைவு பெற்றது.

கருத்துப் பரிமாற்றங்களும் இடைவிடாத சந்திப்புக்களும் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை

அவருடைய எழுத்துக்களின் மூலம் அவரது உயரத்தையும், சிறப்பினையும் அளவிட்டு வைத்திருந்த மாற்றுக்கருத்தின் ஆசிரியர் குழுவினருக்கு அவர் எந்தவகையான தோரணையும் இன்றி மிகச் சாதாரணமாக உரையாடலில் பங்கேற்ற விதம் உண்மையிலேயே பிரமிப்பை ஊட்டுவதாக இருந்தது. அதுமட்டுமின்றி நமது அரசியல் கருத்துக்களை கேட்டறிந்த போது அவர் கூறிய அறிவுரை நெஞ்சில் நிலையாக நிறுத்த வேண்டியதாக உள்ளது. எவ்வளவு தூரம் அதிகளவில் உங்களுக்கிடையில் சந்திப்புகள் இருக்க வேண்டுமோ அந்தளவிற்கு சந்திப்புகளையும், கருத்துப் பரிமாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிகுந்த பயன்மிக்க கருத்தை மாற்றுக்கருத்து ஆசிரியர் குழுவிற்கு அவர் வழங்கினார்.

நேபாளம் போன்ற நாடுகளின் வளர்ச்சிப் போக்குகள் குறித்து தனது கருத்தை முன் வைத்த போதும், கருத்துக்களை கூறியபின்னர் ‘எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் ஒருவகையில் தன்வயப்பட்ட போக்கில் பலருடன் கலந்து பேசும் வாய்ப்பின்றி இருப்பவர்களாகவே உள்ளாம்; அதனால் நான் கூறும் இந்த கருத்துக்களை எனது சொந்த கருத்துக்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்’. அது சரியான கருத்துக்கள் உருவாக வேண்டும் என்பதில் வருக்கிருந்த உறுதியான எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

மார்க்சிய இலக்கியங்கள மார்க்சியத்தை வாழ்க்கைத் தத்துவமாக உயர்த்த வல்லவை

இன்று பல மொழிகளில் மார்க்சிய அடிப்படையிலான தரமான இலக்கியங்கள் இல்லாத நிலையே நிலவுகிறது. அதிலிருந்து வேறுபட்டு தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் கணேசலிங்கன், கைலாசபதி போன்ற மார்க்சிய இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் தமிழ் வாசகர்களுக்கு நன்கொடைகளாக நிறையவே கிடைத்துள்ளன. ஆனால் இடதுசாரி கண்ணோட்டம் கொண்டவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் பலரும் கூட அந்த எழுத்துக்களில் பரிச்சயம் ஏதும் இன்றி இருக்கும் வலமே நிலவுகிறது.

மார்க்சியத்தை வாழ்க்கை தத்துவமாக கடைப்பிடிக்க விரும்பும் எவரும் சமூக வாழ்க்கையை மார்க்சிய ரீதியில் ஆய்ந்தறிந்து வழங்கப்படும் இலக்கியங்களை கற்காமல் அதனை செய்ய முடியாது. இதனை உணர்ந்து கணேசலிங்கன், கைலாசபதி போன்றவர்களின் எழுத்துக்களை பரவலாக தமிழ் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அதுவும் நாம் சிரமேற்கொண்டுள்ள சமுதாய மாற்றப் பணியின் பங்கும் பகுதியுமே என்ற எண்ணம் திரு.கணேசலிங்கன் அவர்களுடனான சந்திப்பின் முடிவில் மாற்றுக்கருத்து ஆசிரியர் குழுவின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

வாசகர் கருத்துக்கள்
kannan
2009-01-10 02:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

kaneshalingam is a wonderful writer,his many novels landmark of our communist thoughts

kesav
2009-01-26 01:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

i like this article

Pin It