கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை பகுதி – 4

II

            அகதிகள் மற்றும் உள்ளூர் தீவுவாசிகள் தொடக்கத்தில் அரசின் தென்னை, புளிய மரங்களுக்கு கீழே தீவின் பண்படுத்தப்பட்ட நிலத்தில், சில தற்காலிகமான குடிசைகளை அமைத்தனர். அகதிகள் மீன்களையும், நண்டுகளையும் பிடித்து உள்ளூர் தீவு மக்களின் உதவியோடு அருகே உள்ள கிராமங்களில் விற்றதன் மூலம் உயிர் வாழ்ந்தனர். அந்த நாட்களை நினைவு கூரும்போது, சுந்தர்பான் தீவு மக்கள் தங்களுக்கும் அகதிகளுக்கும் இடையே இருந்த ஆழமான சகோதரத்துவ உணர்வை அடிக்கடி வலியுறுத்திக் கூறுகின்றனர். மேலும், இறுதியில் உண்மையான தலைவர்களை கண்டு கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பற்றியும் கூறுகின்றனர்.

royal_bengal_tigerசுந்தர்பான் தீவின் கிராமங்களில் உள்ள ஆளும் மேல்தட்டு மக்கள், பெரும்பாலும் பெருநிலவுடைமையாளர்கள். அவர்கள் கல்கத்தா சென்று குடியேறுவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். எனவே, தீவு மக்கள் கிழக்கு வங்காளத் தலைவர்களே தங்களுக்காகப் பேச தகுதியானவர்கள் என்று எண்ணினர். இந்தத் தலைவர்கள் ஏழைகள், கிராமங்களிலிருந்து வந்தவர்கள் மற்றும் "கீழ் சாதி'யினர் ஆவர். எனவே, மீன் பிடித்தல் போன்ற உடலுழைப்பு வேலைகளையும் மேற்கொள்ளத் தயங்காதவர்கள். விதி நிகழ்த்திய திருப்பங்களால், உரிமைகளுக்குப் போராடுவது என்றால் என்னவென்று தெரிந்து கொண்டவர்கள். இதனாலேயே சுந்தர்பான் தீவு மக்கள், கிழக்கு வங்காளத்திலிருந்து வந்த அகதிகளின் தலைவர்களை தங்கள் தலைவர்களாகப் பார்த்தனர்.

மொத்தத்தில் மரிச்ஜாப்பியில் குடியேறிய அகதிகள், தங்களை விடப் படித்தவர்களாகவும், தங்களைவிட குரலுயர்த்திப் பேசக் கூடியவர்களாகவும், அனைத்தையும் இழந்தவர்களாகவும் இருந்தபோதும் – கல்கத்தா ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கக் கூடிய உள்ளத் துணிவு கொண்டவர்களாகவும் இருந்ததை உள்ளூர் மக்கள் பார்த்தனர். கிழக்கு வங்காளி அகதிகள், மிக விரைவில் மரிச்ஜாப்பியை சுந்தர்பான் தீவுகளிலேயே மிகவும் வளர்ச்சி பெற்ற தீவாக மாற்றியதையும், சில மாதங்களில் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டியதையும், மீன்பிடித் தொழிலை வளர்த்தெடுத்ததையும், உப்பளங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் உருவாக்கியதையும் குறித்து தங்கள் வியப்பையும் தீவு மக்கள் அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர். தாங்கள் வாழ்ந்துவந்த தீவுகளில் அன்றும், ஏன் இன்றும்கூட இந்த வசதிகளே இல்லையென்பதை அவர்கள் அழுத்திக் கூறுகின்றனர்.

மரிச்ஜாப்பியில் தங்கியிருக்க அகதிகள் மேற்கொண்ட முயற்சியானது, தங்களுக்கு ஒரு மரியாதைக்குரிய அடையாளத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறந்த முயற்சியாகும். அதோடு, மேற்கு வங்காளத்தின் அரசியல் சூழலில் ஏழைகளிலும் ஏழைகள் மற்றும் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான இடத்தை மீட்டெடுப்பது என்பதும் இதில் அடங்கும். ஏழை அகதிகளை மேற்கு வங்காளத்திலிருந்து வெளியே அனுப்பியதன் மூலம் செய்யப்பட்ட தவறை சரி செய்ய, அரசு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளும் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர்.

தங்களுக்குத் தாங்களே உதவுதல், மக்களிடையே வெளிப்பட்ட கூட்டுறவு உணர்ச்சி ஆகிய எதற்கும் அசைந்து கொடுக்காத அரசு, மரிச்ஜாப்பியிலிருந்து குடியேற்றக்காரர்களை வெளியேற்றும் தன் முயற்சியில் முனைந்து நின்றது. 1979, சனவரி 31 அன்று மரிச்ஜாப்பியில் போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி 36 பேரைக் கொன்றது. ஊடகங்கள் மரிச்ஜாப்பி அகதிகளின் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டத் தொடங்கின. அகதிகளை அரசு நடத்தும் முறைகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள், மாநில சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் எதிர்ப்புகள் வரலாம் என்பதையும், மக்கள் அகதிகள் மீது மென்மேலும் இரக்கம் காட்டி வருகிறார்கள் என்பதையும் கண்ட முதலமைச்சர் ஜோதிபாசு, மரிச்ஜாப்பிக்கு பத்திரிகையாளர்கள் செல்லக் கூடாது என்று அறிவித்தார். பத்திரிகையாளர்களின் செய்திகளால் அகதிகளின் போர்க்குணமும், சுயமரியாதையும் அதிகரிக்கிறது என்று அவர்களைக் கண்டித்தார். இதற்கு பதிலாக நாட்டு நன்மையைக் கருத்தில் கொண்டு, அகதிகளை வெளியேற்றுவதை செய்தியாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

குடியரசு நாளன்று மரிச்ஜாப்பி மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை அதே ஆண்டு மே மாதம் தோல்வி அடைந்ததும், அரசு வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றத் தொடங்கியது. 30 பெரிய படகுகளில் போலிசார் தீவை சுற்றி வளைத்தனர். குடியேற்றக்காரர்களுக்கு உணவையும் நீரையும் அனுமதிக்க மறுத்தனர். குடியேறிய மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அவர்களது குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டன. அவர்களது படகுகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன. அவர்களுடைய மீன் பண்ணைகளும், ஆழ்துளைக் கிணறுகளும் அழித்து நாசமாக்கப்பட்டன. ஆற்றைக் கடக்க முயன்றவர்கள் சுடப்பட்டனர்.

தீவில் குடியேறியவர்கள் நீர் கொண்டு வருவதற்காக, இப்போது இரவு நேரங்களில் தீவின் காடுகள் சூழ்ந்த பகுதிகளில் வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் காட்டில் விளையும் புல்லை தின்ன வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். பலநூறு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இந்த நாட்களில் இறந்து போனதாகவும், அவர்களது உடல்கள் ஆற்றில் வீசி எறியப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. கல்கத்தா உயர் நீதிமன்றம், இந்தப் பொருளாதாரத் தடையை இரண்டு வாரங்கள் நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சிகார் (1982), பிஸ்வாஸ் (1982) ஆகியோர் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் ராஸ்மாலிக், தண்டகாரண்யாவிலிருந்து மேற்று வங்காளத்திற்கு வந்தவர்களில், 4,128 குடும்பங்கள் காலரா, பட்டினி, பிற நோய்கள், களைப்பு மற்றும் தங்களது முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டபோது அல்லது அவர்களது படகுகள் போலிசால் மோதி கவிழ்க்கப்பட்டபோது அல்லது காசிப்பூர், குமிர்மாரி, மரிச்ஜாப்பி ஆகிய இடங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளில் இறந்திருக்க வேண்டும் என்று மதிப்பிடுகிறார். இவற்றில் எத்தனை சாவுகள் மரிச்ஜாப்பியில் நடந்தன என்று நமக்கு தெரிய வருவதற்கு வாய்ப்பே இல்லை. நமக்குத் தெரிவது என்னவென்றால், தொடர்புடைய எந்த அதிகாரிகளின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும், கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான். அப்போதைய பிரதமரான மொரார்ஜி தேசாய்கூட, தனது அரசுக்கு கம்யூனிஸ்டுகள் அளித்து வந்த ஆதரவைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட முடிவு செய்தார். முன்பு அகதிகளை மேற்கு வங்கத்தில் குடியமர்த்த தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக உறுதியளித்ததன் காரணமாகவே பல அகதிகளும், கிராம மக்களும் இந்த அரசுக்கு வாக்களித்திருந்தனர்.

சுந்தர்பான் தீவு மக்களை மனிதர்களாகவே மதிக்காத, புலிகளை அவர்களைவிட அதிகம் மதித்த "பத்ரலோக்' எனப்படும் ஆதிக்க சாதியினரின் ஆதரவு பெற்ற அரசு என்பதனாலேயே – இந்த அரசு தங்கள் மீது இவ்வளவு கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது என்று கிராம மக்கள் கருதுகின்றனர். மரிச்ஜாப்பி துரோகத்திற்குப் பின்பு நகரம் மய்யமாகவும், கிராமம் ஒதுக்கப்பட்ட பகுதியாகவும் கருதப்பட்டு வந்தது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

            சுந்தர்பான் காடுகளைச் சேர்ந்த கிராம மக்களின் நினைவுகளில் இந்த நிகழ்வுகள், இரண்டு குழுக்களைச் சேர்ந்த மக்களிடையே நடந்த போராகப் பதிவாகியுள்ளது. போரில் ஈடுபட்ட ஒரு தரப்பு அரசால் ஆதரிக்கப்பட்டது. நவீன கருவிகள் அளித்த பலமும் அதற்கிருந்தது. இன்னொரு தரப்பு அனைத்தையும் இழந்தது; தங்கள் கைகளையும், ஊக்கத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டிருந்தது.

ஜெயந்தா என்ற பெயருடைய ஒரு கிராமவாசி, மரிச்ஜாப்பி நிகழ்வுகளின்போது இளைஞராக இருந்தவர். அவர் அப்போது தன் மனைவியுடனும், குழந்தையுடனும் அங்கே சென்றிருந்தார். அவர் மரிச்ஜாப்பி நிகழ்ச்சிகள் குறித்து ஒரு துயரம் தோய்ந்த வர்ணனையை அளிக்கிறார். தங்கள் குழந்தைகள் காலராவாலும், பட்டினியாலும் சாவதைக் கண்ட அகதிகள், போலிஸ் மற்றும் ராணுவப் படகுகள் அமைத்திருந்த முற்றுகையை உடைக்க முயன்றனர். அவர்கள் மரத்தாலான அம்புகளை எய்தனர். கவண்களில் செங்கல் துண்டுகளையும், காய்ந்த சேற்றையும் வைத்து வீசினர். அரசு அதிகாரிகளைத் திட்டித் தீர்த்தனர். அந்த அதிகாரிகள், போலிசாரை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசும்படியும், துப்பாக்கிகளைப் பயன்படுத்தும்படியும் தூண்டினர். போர் தொடங்கியது. ஒரு பிரிவு மர அம்புகளையும், கற்களையும் கொண்டு போரிட்டது. இன்னொரு பிரிவு கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கிகளையும், ஒலி பெருக்கிகளையும் பயன்படுத்தியது. மேலதிக பாதுகாப்புக்காக போலிசாரின் படகுகளில் கம்பி வலைகள் அமைக்கப்பட்டன. சுற்றிலுமுள்ள கிராமங்களில் காவல் துறை முகாம்கள் அமைக்கப்பட்டன. போலிசாரின் படகுகள் கொட்டும் தேனீக்கள் நிறைந்த மிதக்கும் தேன்கூடுகள் போல தோற்றமளிக்கத் தொடங்கின என்று ஒரு கிராமவாசி குறிப்பிட்டார்.

மரிச்ஜாப்பியில் பரபரப்பான வாழ்க்கை நடந்ததற்கான அனைத்து அடையாளங்களையும், கடந்த 18 மாதங்களில் கட்டப்பட்ட அனைத்தையும் அரசு அலட்சியமாகவும், கொடூரமாகவும் துடைத்தெறிந்தது. இரண்டு வார காலத்தில் எல்லா விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு அகதிகள் மூட்டை கட்டி அனுப்பப்பட்டனர். “எங்கள் குடிசைகளை எரித்து நாசமாக்க நாங்கள் மூட்டைப் பூச்சிகளா?'' என்று ஒரு கிராமவாசி கோபத்துடன் கேட்டார். அகதிகள் பின்பு வலுக்கட்டாயமாக பெரிய படகுகளில் ஏற்றப்பட்டு, ஹஸ்னாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தண்டகாரண்யாவிற்கு அல்லது அந்தமானிற்கு லாரிகளில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அகதிகளோடு சுற்றி வளைக்கப்பட்ட பல தீவு மக்கள் தப்பி ஓடினர். சில நேரங்களில் தங்கள் புதிய கூட்டாளிகளான அகதிகளையும் அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் தங்கள் பழைய தீவு களுக்குத் திரும்பி வந்து ஆற்றங்கரைகளில் குடியேறினர். வேறுபலர் மேற்கு வங்காளத்தின் இருப்புப் பாதைகளின் ஓரமாக அல்லது பராசத், கோபோர்டங்கா அல்லது பஸ்கோன் ஆகிய இடங்களில் குடிசைகள் அமைத்துத் தங்கினர். தீவு மக்கள் ஏன் அகதிகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, சுந்தர்பான் தீவுகளில் வாழ்க்கை நிலைமைகள் எப்படி இருந்தன என்று தெரிந்து கொள்வது அவசியமாகும்.

சுந்தர்பான் காடுகள் என்பது, சுமார் 300 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும். இந்தத் தீவுகள் மேற்கு வங்காளத்திலிருந்து வங்க தேசம் வரை நீண்டு உள்ளன. தீவுகள் அனைத்தும் கங்கை வடிநிலத்தில் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியின்போது பாதி தீவுகளில் காடுகள் அழிக்கப்பட்டு மக்கள் குடியேறினர். இந்தத் தீவுகளின் இடையே எண்ணற்ற ஆறுகள் குறுக்கும் நெடுக்கும் செல்வதால் இவற்றை அடைவது கடினமாக உள்ளது. மேற்கு வங்காளத்திலும் வங்க தேசத்திலும் உள்ள காடுகள் நிறைந்த சுந்தர்பான் தீவுகள் (சுமார் 10,000 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு காடுகள் உள்ளன). வங்கப் புலிகளுக்கு இயற்கையான, மிகப் பெரிய இருப்பிடமாக உள்ளன. சுமார் 600 புலிகள் தீவுகளில் வசிக்கின்றன. மரிச்ஜாப்பி நிகழ்வுகளுக்கு சில ஆண்டுகள் முன்பு, அதாவது 1973 இல் தொடங்கப்பட்ட "டைகர் திட்டம்' வெற்றி அடைந்ததும் சுந்தர்பான் காடுகள் பெரும்புகழ் பெற்றன.

1985லிருந்து இந்த சுந்தர்பான் காடுகள் "யுனெஸ்கோ'வின் உலக பண்பாட்டு மய்யங்களின் பட்டியலில் (ஙிணிணூடூஞீ ஏஞுணூடிtச்ஞ்ஞு குடிtஞுண்) சேர்க்கப்பட்டன. சுந்தர்பான் காடுகள் "ராயல் பெங்கால் டைகர்ஸ்' எனப்படும் வங்கப் புலிகள் நிறைந்திருக்கும் அழகு நிறைந்த மாங்குரோவ் காடுகள் என்றே வர்ணிக்கப்படுகின்றன. இந்தப் பகுதி, சட்ட ஒழுங்கின்மைக்கும் வன்முறைக்கும் பெயர் பெற்றது. இதற்கும் மேலாக – மின்சாரம், குடிநீர், மருத்துவ மய்யங்கள் ஆகிய எந்த உள்கட்டமைப்பு வசதிகளுமின்றி இருப்பது, இந்தப் பகுதியை மேற்கு வங்காளத்தின் வறுமை மிகுந்த பகுதிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது. சுந்தர்பான் தீவுப் பகுதியிலிருந்து பலர் கல்கத்தா சென்று வசதி பெற்றவர்களின் வீடுகளில் வேலை செய்வது வழக்கம். எனவே, இப்பகுதி "கல்கத்தாவின் வேலைக்காரன்' (ஓணிடூடுச்tச்ணூ டீடடி) என்றும் அழைக்கப்படுகிறது. 1980களில் இறால் மீன் முட்டைகளை சேகரிக்கும் பணி அறிமுகப்படுத்தப்படும் வரை, தீவு மக்களுக்கு போதுமான உணவு பெற வாய்ப்பே இல்லாமலிருந்தது.

பெரும்பாலான தீவு மக்களுக்கு, குறிப்பாக நிலமற்றவர்களுக்கு காட்டில் வேலை செய்வதே பிழைப்பதற்கு இருந்த ஒரே வழி. இந்நிலையில் மரிச்ஜாப்பியில் குடியேறிய அகதிகள், தங்களுடன் புது நம்பிக்கையையும் கொண்டு வந்தனர். தீவுவாசியான ஜெயந்தா, மரிச்ஜாப்பியில் புது வாழ்க்கையைத் தொடங்க தவிப்புடன் காத்திருந்தார். அங்கே கீழ் நிலையில் இருக்கும் மக்களின் விருப்பங்கள் நிறைவேறும்; உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று எண்ணியிருந்தார். ஆனால், அவரும் அவரது குடும்பமும் மரிச்ஜாப்பியில் குடியேறிய அய்ந்து மாதங்களில் அவரது குடிசை போலிசால் எரிக்கப்பட்டது.

marichjhapi_422

சி.பி.எம். கட்சியிலும் மரிச்ஜாப்பி பிரச்சினையை கட்சித் தலைமை கையாண்ட விதம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சித் தலைமை ஏழை அகதிகள் குறித்த தங்கள் பொறுப்பை, அதிகார வர்க்கத்தனமான முறையில் கை கழுவிவிட்டது என்று கட்சி உறுப்பினர்கள் கருதினர். பஞ்சாபி அகதிகளுக்கும், வங்காள அகதிகளுக்கும் இடையே மத்திய அரசால் காட்டப்படும் பாரபட்சம், வங்காளி அகதிகள் மீது காட்டப்படும் அலட்சியம் ஆகியவற்றை முன்னிறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டமைக்க இப்பிரச்சினையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணம் கொண்டிருந்தனர்.

எப்படியிருந்தாலும் சி.பி.எம். கட்சியின் மாநிலக் குழுவின் அரசியல் – நிறுவன அறிக்கை, இந்த விஷயத்தை அதோடு முடித்துக் கட்டுவதில் தீவிர ஆர்வம் காட்டியது. “எந்தச் சூழ்நிலையிலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு மாநிலத்தில் இடம் கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை'' என்ற அது ஓர் அறிக்கை வெளியிட்டது. மரிச்ஜாப்பி நிகழ்ச்சிக்குப் பின்னணியில் சில அந்நிய நிறுவனங்கள் உள்ளன என்ற ஓர் ஆதாரமற்ற குற்றச்சாட்டை, நில வருவாய்த் துறை அமைச்சர் பினாய் சவுத்ரி கூறினார்.

தீவு மக்களும், அகதிகளும் கிழக்கு வங்காளத்தின் ஒரே பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதால் மட்டுமே ஒன்றிணையவில்லை. தாங்கள் கடந்து வந்த கொடூரமான பாதையினாலேயே, எதிர்கொண்ட கொடும் வேதனைகளினாலேயே ஒன்றிணைந்தனர். அகதிகளோடு தமக்குள்ள பிணைப்பை வலியுறுத்தும் ஜெயந்தா, தாங்கள் மரிச்ஜாப்பியில் குடியேறி இருந்த நாட்களில் எப்படி தாங்கள் எல்லோரும் ஒரே பெரிய குடும்பமாக இருந்தோம்; ஒரே விதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தோம்; ஒரே விதமான வேதனைகளை எதிர்கொண்டோம்; ஒரே தரப்பிலிருந்து போரிட்டோம் என்று விளக்குகிறார்.

கல்கத்தா தங்களை கைவிடும் கணம் வரை தாங்கள் இப்படித்தான் இருந்தோம் என்கிறார் அவர். பின்பு, “உடைந்து நொறுங்கிய இதயங்களோடு, ரத்தம் வடியும் கரங்களோடு, நொறுக்கப்பட்ட ஒற்றுமை குலைந்த பலவீனமான குழுவாக நாங்கள் ஒவ்வொருவரும் தீவுகளுக்கோ, முகாம்களுக்கோ – நாங்கள் எங்கிருந்து வந்தோமோ, அதே இடங்களுக்குத் திரும்பிச் சென்றோம்.'' இந்த அத்தியாயம் அத்தோடு விரைவாக முடிக்கப்பட்டது.

“ஏன் எங்களில் இறந்தவர்களை கல்கத்தா பாபுக்கள் கண்டுகொள்வதில்லை? ஏன் அவர்களுக்காக கல்கத்தா பாபுக்கள் துக்கம் கொள்வதில்லை? இறந்தவர்கள் ஆவிகளாக காடுகளில் சுற்றி வருகிறார்கள். ஆனால், எங்கள் கிராமங்களில் நுழைந்ததற்காக எங்களால் ஒரு புலி கொல்லப்பட்டால், ஏன் நாங்கள் அத்தனை பேரும் சிறை கொட்டடிகளில் அடைக்கப்படுகிறோம்?'' பொதுவாக மக்களிடையே நிலவும் ஆழமான வெறுப்புணர்வை ஜெயந்தா இப்படி வெளியிட்டார்.

            மரிச்ஜாப்பியில் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கு பாதி உடைக்கப்பட்ட கரைகளும், சில குடியேறிகள் நட்டு வைத்திருந்த ஒரு சில பழ மரங்களும் மட்டுமே சாட்சிகளாக உள்ளன. மற்ற பகுதிகள் காடுகளால் சூழப்பட்டு விட்டன. மக்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உண்மை துல்லியமாக ஒருபோதும் நமக்குத் தெரிய வரவே போவதில்லை. தீவு மக்கள் சொல்கிறபடி பார்த்தால், மரிச்ஜாப்பிக்கு வந்தவர்களில் 25 சதவிகிதம் பேரே உயிருடன் திரும்பிச் சென்றனர்.

மரிச்ஜாப்பியின் ரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் பற்றிய வாதத்தின் அடிப்படையில் சுந்தர்பான் தீவு மக்கள் – தங்களுக்கு அரசும், கல்கத்தா நகர வாசிகளும் துரோகம் இழைத்து விட்டார்கள் என்று கருதுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல வழிகளில் முஜிபூர் ரகுமானின் கொலை, புதிதாகத் தோன்றிய இந்திய வங்கதேச உறவு, இந்து முஸ்லிம் உறவு, மேல் சாதி கீழ் சாதி உறவு, மக்கள் புலிகள் உறவு ஆகியவற்றிற்கு முடிவு கட்டியதாக கிராம மக்கள் கருதுகின்றனர்.

காடுகளில் ஏவிவிடப்பட்ட வன்முறையால் எழுந்த பிரச்சினைகளால் குழப்பமடைந்த புலிகள், மக்களைத் தாக்கத் தொடங்கின. இப்படித்தான் அவை மனித சதையை ருசி கண்டு கொண்டன என்று கிராமத்தினர் விளக்குகின்றனர். கொல்லப்பட்டு ஆறுகளில் வீசப்பட்ட அகதிகளின் உடல்களை தின்றே புலிகள் இத்தகைய மனித சதையின் மீதான சுவையை ஏற்படுத்திக் கொண்டன என்று வாதிடுகின்றனர். மரிச்ஜாப்பி ஒரு திருப்பு முனை. அதற்குப் பின்பு மனிதனைத் தின்பது புலிகளின் இயல்பு அல்லது குணமாக மாறிவிட்டது.

முந்தைய நாட்களில் புலிகளும், அதன் அண்டை வீட்டாரான மனிதர்களும் சமநிலையில் இருந்தபோது, அவை விரைவாக இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு அவற்றிற்கு விரைவாகக் கருத்தரிக்கச் செய்யும் மருந்துகளை செலுத்தியதால், அவற்றின் இனப்பெருக்க வேகம் அதிகரித்தது.

“ஆமாம். அவர்கள் வீரியமான "ஹைபிரிட் புலி'களை உருவாக்கி விட்டனர். அவை இன்னும் அபாயகரமானவை; மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடும் என அஞ்சிய அரசு, புலிகளின் உண்மையான எண்ணிக்கையை மறைத்து மிகவும் அற்பமான எண்ணிக்கையிலேயே புலிகள் இருப்பதாக எப்போதும் சொல்லி விடுகிறது'' என்று ஒரு தீவுவாசி கூறினார். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வரை அரசு மகிழ்ச்சி கொள்கிறது. மாறாக, அகதிகள் விஷயத்தில் நடந்தது போல மக்கள் வாழ்ந்ததாலோ, இறந்ததாலோ அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஏனெனில், மக்கள் புலிகளுக்கு உணவு அவ்வளவு தான் என்று அடிக்கடி பேசப்படுகிறது.

மீனவர்களைவிட, தேன் சேகரிப்பவர்களைவிட, மரம் வெட்டுபவர்களைவிட சுந்தர்பான் காடுகளில் புலிகள்தான் முக்கியம் என்ற அரசின் ஆழமான நம்பிக்கையால் எடுக்கப்படும் இந்த முடிவுகள்தான், புலிகள் மனிதர்களைத் தின்பவையாக மாறி விட்டதற்கு அடிப்படையான காரணம் என்று கூறப்படுகிறது.

“மரிச்ஜாப்பிக்குப் பிறகு புலிகள் கொடூரமாக மாறி விட்டன'' என்று என்னிடம் அடிக்கடி சொல்லப்பட்டது. புலிகள் முதலில் மிக அற்புதமான விலங்குகளாக, மனிதர்களைக் கண்டால் அஞ்சுபவையாக இருந்தன. அவை அன்பானவையாக இருந்தன. காடுகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் கிடைப்பவற்றை மனிதர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று புலிகள் உணர்ந்திருந்தன என்று ஒரு மூதாட்டி என்னிடம் கூறினார். புலிகளின் பெயரால் கொலைகள் நியாயப்படுத்தப்பட்ட பின்பு – புலிகள் மூர்க்கமானவையாகவும், மனிதர்களைத் தாக்க தயங்காதவையாகவும் மாறிவிட்டன என்று அவர் அழுத்திக் கூறினார். இப்போது புலிகள் காட்டைப் பகிர்ந்து கொள்ள – வாய்ப்புள்ள அண்டை வீட்டாரல்ல, அரசாங்கத்தின் சொத்து. தீவு மக்களை புலிக்கு உணவாகக் கருதும் ஆளும் வர்க்கங்கள், புலிகளுக்கு பக்கபலமாக உள்ளன.

மரிச்ஜாப்பி நிகழ்ச்சியின் இறுதிக் கட்டங்களில் ஒன்றுமே செய்ய முடியாத கண்மூடித்தனமான கோபத்தால், அகதிகள் அரசு – தோப்புகளிலிருந்த தென்னை, புளிய மரங்களை வெட்டிச் சாய்த்தனர். இப்போதும்கூட அரச பிரதிநிதிகளின் மீது கோபம் கொள்ளும்போது, கிராம மக்கள் மரங்களை வெட்டி சூரிய சக்தி விளக்குகளை உடைத்து, அரசு திட்டங்களைக் கொள்ளை அடித்து, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கிறார்களே அதைப்போல!

“எங்களைக் கீழான மனிதர்களாக அவர்கள் நடத்துவதால், அவர்களுக்கு இந்த விதத்தில்தான் பதிலடி கொடுப்போம்'' என்றார் ஒரு தீவுவாசி.

மரிச்ஜாப்பிக்கு பின்பு புலிகளின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்தது. 1980கள் முழுக்க சுந்தர்பான் காடுகள், புலிகளின் மனிதனைத் தின்னும் இயற்கையான இயல்பு குறித்து பல்வேறு நிபுணர்கள் பல கல்கத்தா நாளிதழ்களில் தொடர்ந்து விவாதித்தனர். புலிகள் மனித சதையின் மீது கொண்ட காதலை முறியடிப்பதற்காக, அரசு பல்வேறு தந்திரங்கள் செய்தது.

1986 நவம்பரிலிருந்து 87 அக்டோபர் வரை காடுகளுக்குள் நன்னீர் குளங்கள் தோண்டும் திட்டத்தை மேற்கொண்டது. மக்கள் அணியும் உடை அணிவிக்கப்பட்ட நான்கு உருவ பொம்மைகளை காடுகளின் முக்கிய இடங்களில் போட்டு வைத்தது. மனித வாடை தருவதற்காக இந்த "டம்மி'களின் மேல் ஏற்கெனவே மனிதர்கள் அணிந்த ஆடைகள் அணிவிக்கப்பட்டன. இவற்றைத் தொட்டால் ஷாக் அடிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. சுந்தர்பான் காடுகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் மரம் வெட்டுபவர்களுக்கும், தேன் சேகரிப்பவர்களுக்கும், 2,500 பிளாஸ்டிக் முகமூடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

குளங்கள் வெட்டுவதன் நோக்கம் புலிகளின் இயல்பை "இனிமை' யாக்குவதாகும். மனிதர்களைப் போல் தோன்றும் "டம்மி'களை வைத்ததன் நோக்கம், அவைகளைத் தொட்டு புலிகள் மின்னதிர்ச்சி வாங்கினால், அவை மனிதர்களைத் தாக்குவதை நிறுத்திவிடும் என்று கருதப்பட்டது. (மின்னதிர்ச்சி புலிகளுக்கு பெரிய அளவில் ஆபத்து விளைவிக்காத விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு டம்மியுடனும் 12 வோல்ட் பேட்டரி, ஒரு பியூஸ் இணைக்கப்பட்டிருந்தது). முகமூடிகள் தலையின் பின்புறம் அணிந்து கொள்வதற்காகும். புலிகள் பின்புறமிருந்து தாக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, பின்புறமிருந்து தனது இலக்கை புலி தாக்க வரும்போது அங்கிருந்தும் இரண்டு கண்கள் தன்னை உற்று நோக்கினால், புலிகள் குழப்பமடைந்து இலக்கை விட்டுச் சென்றுவிடும். இந்த தந்திரங்கள் அடிப்படையில்லாதவை. அவை உண்மையான பிரச்சினையைத் தொடுவதேயில்லை என்று கிராம மக்கள் நம்புகின்றனர். வாழ்வாதாரங்கள் குறைந்து வருவதே இதற்கு முக்கியக் காரணங்கள் என்று மக்கள் கருதுகின்றனர். மேற்கு வங்காளத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புலிகளாலும், முதலைகளாலும் 150 பேர் கொல்லப்படுகிறார்கள்.

1980 களில் சுந்தர்பான் காடுகளில் புலிகளால் கொல்லப்படுவது என்பது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஏன் கிராமம் முழுவதற்குமே பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தால் பிணத்தை காட்டிலேயே விட்டுவிட வேண்டியிருக்கும். புதிய விதவையும், பலியானவரின் குழந்தைகளும் அழுவது தடை செய்யப்படும். தேவைப்பட்டால் தந்தை பேதியால் இறந்துவிட்டார் என்று சொல்ல அவர்கள் பழக்கப்படுத்தப்படுவார்கள். உண்மை வெளியானால், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இறந்தவர் அத்துமீறி காட்டிற்குள் நுழைந்ததற்காக தண்டம் வசூலிக்கப்படும். அதோடு அவர்கள் கிரிமினல்களாகவும் நடத்தப்படுவார்கள்.

புலிகளால் மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் மேற்கு வங்காள அரசு எடுத்த ஒரே நடவடிக்கை, புலிகளின் இயற்கைத் தன்மையை (அதாவது இயல்பை) மாற்றியமைப்பதாகும். இந்த புலிகளின் இயற்கைத் தன்மை என்பதைப் பொருத்தவரை, ஆதிக்க சாதியினரின் கருத்தையே அரசு தனது கருத்தாக எடுத்துக் கொண்டது. புலிகள் ஏன் மனிதர்களைத் தின்பவையாக மாறிவிட்டன என்பது குறித்த உள்ளூர் மக்களின் புரிதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை. இப்படி ஒரு சாரரின் புரிதலைவிட, இன்னொரு பிரிவினரின் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிப்பது மக்களிடையே தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவதாகும்.

மேற்கு வங்காள இடதுசாரி "உயர் சாதி' அரசானது, புலிகளின் மனிதனைத் தின்னும் இயல்பை விவாதப் பொருளாக எடுத்துக் கொள்வதன் மூலம் "நிம்னோபர்னே லோக்' எனப்படும் "கீழ் சாதி' மக்கள் புலிகளோடு ஒப்பிடப்படும்போது, முக்கியத்துவம் அற்றவர்கள் என்ற கருத்தை சட்டபூர்வமானதாக்குகிறது.

வங்காள ஆதிக்க சாதியினர் வங்கப் பிரிவினைக்கு குரல் கொடுத்ததால், நாமசூத்ரா இயக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அது, பல்லாயிரம் அகதிகள் கொன்று குவிக்கப்படு வதில் சென்று முடிந்தது. இந்த உண்மை "கீழ் சாதி'யினருக்கு மேற்கு வங்காளமும், குறிப்பாக கல்கத்தாவும் எட்டாக் கனியாக மாறிவருகின்றன என்பது மட்டுமல்ல; இயற்கை வளங்கள் மோசமான முறையில் பங்கீடு செய்யப்படுகின்றன என்பது மட்டுமல்ல; இன்னும் பெரிய பிரச்சினையை அது முன்னிறுத்துகிறது. அது, வங்காளியாக இருந்து ஆதிக்க சாதியாக (பத்ரலோக்) இல்லாமலிருப்பது பற்றியதாகும்.

மரிச்ஜாப்பியில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை, அவர்கள் கதைகள் வரலாற்றில் இன்னும் இடம்பெறவில்லை என்ற உண்மையே இதற்கு ஆதாரமாகும்.

கட்டுரையாளர் குறிப்புகள் :

1.         நிம்னோபர்னோ – கீழ் சாதி என்று பொருள். இச்சொல் பொதுவாக கெட்டவார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டாலும், நான் இதை எந்த இழிவான பொருளிலும் பயன்படுத்தவில்லை.

2.         பத்ரலோக் – நிலத்தில் உழைக்காத குத்தகை, வாடகைப் பணத்தில் வாழும் ஆதிக்க சாதியினர்.

3.         சுந்தர்பான் காட்டுப் புலிகள் மனிதர்களைத் தின்பவைகளாக மாறியதற்கு, இது மட்டுமே ஒரே காரணமாகக் கூறப்படுவதில்லை. கடுமையான புவியியல் உள்ளிட்ட வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. 

தமிழில் : கோபால்

நன்றி : "எக்கனாமிக் அண்ட்பொலிடிகல் வீக்லி' ஏப்ரல் 23, 2005