கீற்றில் தேட...

‘ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூகத்தை எதிர்த்ததற்காக, அவரை யாரும் தியாகி என்று கொண்டாடுவதில்லை. அவருடன் உறவாடுவதற்குக்கூட எல்லோரும் தயங்குவர். ஆனால், அரசியல்வாதி அரசை எதிர்த்துப் பேசினால், முழு சமூகமும் அவருக்குத் துணை நிற்கிறது. அவர் புகழப்படுகிறார்; போற்றப்படுகிறார்; மீட்பர் என்ற நிலைக்கும் உயர்த்தப்படுகிறார். அதிகத் துணிவுடன் செயல்படுவது, தன்னந்தனியே போராடும் சமூக சீர்திருத்தவாதியா? பெருங்கூட்டத்தைக் கவசமாகவும், துணையாகவும் கொண்டு போராடும் அரசியல்வாதியா? ... மாமனிதர் என்ற சிறப்புப் பெயர் சமூக நோக்கில் அவர் செய்த சேவை, அதற்கு அவர் கடைப்பிடித்த வழிமுறைகள் இவற்றின் அடிப்படையில்தான் ஒருவர் மாமனிதர் என்று அழைக்கப்பட வேண்டும்.’
- டாக்டர் அம்பேத்கர்

‘விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்' என்ற சிறப்புமிக்க வரலாற்றுத் தொடரை, கடந்த ஆறு ஆண்டுகளாக தலித் முரசில் பதிவு செய்து வந்த சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள் 19.5.2007 அன்று, நம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் பரிதவிக்கவிட்டு மாரடைப்பால் மறைந்து விட்டார். தலித் முரசின் கொள்கைகளுக்கும், கருத்தியலுக்கும் ஓர் அச்சாணியாய்த் திகழ்ந்த அந்தப் போராளியை இழந்து சொல்லொணா வேதனையில் ‘தலித் முரசு' அமிழ்ந்திருக்கிறது.
பவுத்தம், அம்பேத்கரியம், பெரியாரியம் ஆகிய கொள்கைகளை தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்த தோழர் ஏபி. வள்ளிநாயகம், இக்கருத்தியலை மய்யப்படுத்தி, 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு அமைப்பிலும் சிக்கிக் கொண்டு, தமது சுதந்திரத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த வள்ளிநாயகம், தலித் முரசில் மட்டும் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். அந்த வகையில் ‘தலித் முரசு' தனது சமூகக் குடும்பத்தின் மூத்த சகோதரரை இழந்திருக்கிறது.

விடுதலைக்கு வித்திட்டு, இந்து சமூகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட தலைவர்களை அகழ்ந்தாய்ந்து தலித் இயக்கத்திற்கான வேர்களை தோழர் வள்ளிநாயகம் கண்டெடுத்தார் : எல்.சி. குருசாமி, உ.ஆ. பெருமாள் பீட்டர், ஆர். வீரையன், எச்.எம். ஜெகந்நாதன், பாலசுந்தர்ராஜ், டி. ஜான் ரெத்தினம், பி.எம். மதுரைப் பிள்ளை, ம. பழனிச்சாமி, பி.வி. சுப்பிரமணியம் பிள்ளை, மகராசன் வேதமாணிக்கம், மீனாம்பாள், சத்தியவாணி முத்து, பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, வி.ஜி. வாசுதேவபிள்ளை, ஜோதி அம்மாள், எம்.சி. ராஜா, அன்ன பூரணி அம்மாள், ஜி. அப்பாதுரையார், இ.நா. அய்யாக்கண்ணு புலவர், க. பூசாமி, எம்.சி. மதுரைப் பிள்ளை, எம்.ஒய். முருகேசம், குமாரன் ஆசான் மற்றும் பெரியார் பற்றிய ‘இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதம்' தொடரும், புத்தர் பற்றிய ‘அம்பேத்கரின் ஆசான் புத்தர்' தொடரும். இவை எல்லாம் தலித் போராளிகளுக்குப் பாடநூல்களாக இருக்க வேண்டியவை.

தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட சூழலில், அரசுக்கு அறைகூவல் விடுக்கவும், தொல் தமிழர்களைத் தட்டியெழுப்பவும் அவர் துணிச்சலாக மேற்கொண்ட ஊர்திப் பயணம்தான் ‘நாங்கள் இந்துக்கள் அல்லர்’ என்பது. அதன் மூலம் இரு வாரங்கள் ‘தலித் முரசு' இல்லாத கிராமங்களே இருக்கக் கூடாது என்ற வகையில், அனைத்து இடங்களிலும் தலித் முரசைப் பரப்பினார். தலித் அரசியலை அவர் ஒருபோதும் சுருக்கிக் கொண்டதில்லை. அதனால்தான் பல்வேறு இயக்கங்களிலும் தன் பங்களிப்பை நல்கினார்.

‘நான் ஒரு தலித்தாகப் பிறந்துவிட்டதால், தலித் பிரச்சினையைப் பேசவில்லை. தலித் பிரச்சினையைத் தீர்க்காமல், இந்து சாதி அமைப்பைத் தகர்க்க முடியாது என்பதாலேயே நான் தலித் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறேன். தலித் விடுதலை என்பது தனியாகப் பெறுவதில்லை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இணைந்து, சாதி அமைப்பை நிர்மூலமாக்குவதிலேயே அது அடங்கியிருக்கிறது’ என்று இடையறாது முழங்கி வந்தார். இச்செயல் திட்டத்திற்கு, அவர் தலித் தலைமையை முன்நிபந்தனையாக்கினார். அதிலும் குறிப்பாக, பெண்களின் தலைமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தனது ஆதங்கத்தை இடையறாது வலியுறுத்தி வந்தார்.

தான் வாழும் காலம்வரை தன்னல மறுப்பாளராகவே, எந்தப் பணிக்கும் செல்லாமல் முழுநேர இயக்கவாதியாகவும், சமூக மனிதராகவுமே வாழ்ந்த ஏபி. வள்ளிநாயகம் அவர்களின் நூல்களை, அனைத்து நூலகங்களிலும் ஏற்பதன் மூலம் தமிழக அரசு அவருக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்க வேண்டும். டாக்டர் அம்பேத்கர் மய்யம் சர்பில் நடைபெறும் ‘தலித் முரசு' நூலகத்திற்கு, ‘சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் நினைவு நூலகம்' எனப் பெயரிட்டு, அவர் நினைவை நாம் நிரந்தரமாக்கிக் கொள்கிறோம். மேலும், 16.6.2007 அன்று ‘பாலம் தலித் முரசு கலை இலக்கிய விருது 2007' ஏபி. வள்ளிநாயகத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. அவருடைய எழுத்தால் உந்துதல் பெற்ற ஒவ்வொருவரும் இந்நிகழ்வில் பங்கேற்று, தங்களுடைய வீரவணக்கத்தைச் செலுத்துமாறு அழைக்கிறோம்.

கொண்டாட முடியாத வெற்றி

‘அனைத்து ஜாதிகளுக்கும் கிடைத்த வெற்றி’ என்று பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த வெற்றியைக் குறிப்பிடும்போது, உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி அவர்கள், முழங்கி இருக்கிறார். அவர் முன்வைத்துள்ள ‘சர்வஜன் சமாஜ்' (அனைத்து சாதியினர்) தத்துவம், அவருடைய கட்சி நிறுவனர் மேதகு கான்ஷிராம் உருவாக்கிய ‘பகுஜன் சமாஜ்' (பெரும்பான்மை சாதியினர்) என்ற தத்துவத்திற்கு நேர் எதிரானது என்பதை வெற்றிக் களிப்பில் அவர் மறந்திருக்கக்கூடும். அனைத்து சாதியினருக்கும் வெற்றி என்பது, ஒடுக்கப்படுகின்ற சாதிக்கு மட்டுமின்றி ஒடுக்குகின்ற சாதிக்கும் கிடைத்த வெற்றி என்று பொருள். இது, இயற்கை நீதிக்கு எதிரானது. அப்படியானதொரு வெற்றி இருக்க முடியாது.

இருப்பினும், இவ்வெற்றி கொண்டாடப்படுகிறது. மாயாவதியின் முதல் வெற்றி, பிற்படுத்தப்பட்ட மக்களுடனான கூட்டணி. அப்போது அவர் அம்பேத்கர் பெரியார் பூங்காக்களை உருவாக்கினார். அது நிலைக்கவில்லை. பிறகு இருமுறை சாதித்த வெற்றி, பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி. அப்போது அவர் இந்துத்துவவாதிகளுடன் இணைந்து, குறிப்பாக குஜராத்தில் மோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். அதுவும் நிலைக்கவில்லை. இம்முறை பார்ப்பனர்களுடன் இணைந்த வெற்றி. இதுதான் நிலையான ஆட்சியைத் தந்திருக்கிறது என்கிறார்கள்.

இதற்கு நன்றிக்கடனாக, பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீட்டை அவர் முன்மொழிந்திருக்கிறார். எந்தக் கொள்கையும் தேவையில்லை; ஒரு தலித் ஆட்சிக்கு வந்தால் போதும் எனில், நாமும் இந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால், தலித் அரசியலை தேர்தல் அரசியலாக மட்டுமே கொள்ளாமல், சாதி ஒழிப்பு அரசியலாகவும் ஏற்று அம்பேத்கரை வழிகாட்டியாகக் கொண்டிருப்பவர்களால் இவ்வெற்றியைக் கொண்டாட முடியாது.

‘இக்கூட்டணி ஒரு சமூகக் கூட்டணி; எதிரெதிர் துருவங்களாக இருக்கும் சமூகங்கள் (இப்போதாவது ஒப்புக் கொண்டார்களே) ஓரணியில் சேர்ந்திருப்பது பிற மாநிலங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்’ என்று இவ்வெற்றி சிலாகிக்கப்படுகிறது. ஆனால், ‘டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டின் செய்தி, சமூகக் கூட்டணியின் சதியை அம்பலப்படுத்துகிறது : ‘முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றுக் கொண்டபோது, அவருடன் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட தலித் அமைச்சர்கள் அனைவரும், அவருடைய காலைத் தொட்டு வணங்கினர்.

ஆனால், அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற பார்ப்பன சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அதைப் பின்பற்றவில்லை. இதற்கு மாறாக, மாயாவதியின் பின்புறம் நின்று கொண்டிருந்த சதீஷ் சந்திர மிஷ்ரா என்ற பகுஜன் சமாஜ் கட்சியின் பார்ப்பனப் பொதுச் செயலாளரின் காலைத் தொட்டு வணங்க, அவர்கள் எந்தத் தயக்கமும் காட்டவில்லை.’ அறிவுஜீவிகள் பாராட்டும் சமூகக் கூட்டணியின் லட்சணம் இதுதான்!

எவ்வளவு பெரிய தேர்தல் அரசியல் வெற்றியானாலும், அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையையும், சுயமரியாதையையும், சமத்துவத்தையும் பெற்றுத் தராது என்பதற்கு வேறு அகழ்வாராய்ச்சிகள் தேவை இல்லை. சமூக ஏற்றத்தாழ்வுகளை, சாதி அமைப்பை, அதற்கு அரணாக இருப்பவற்றைக் கேள்விக்குள்ளாக்காமல் – தேர்தல் அரசியலின் கவர்ச்சியை மட்டுமே பூதாகரமாக்கி, அதனால் மட்டுமே சமூக விடுதலை சாத்தியம் என்று பாமர மக்களை ஏய்த்துப் பிழைப்பதே இன்றைய உண்மையான அரசியலாகப் போற்றப்படுகிறது.

மாயாவதி ஏற்படுத்தி இருக்கும் பார்ப்பனக் கூட்டணி, அவருடைய அரசியல் தலைமையை ஏற்றுக் கொள்ளும்; ஆனால், அவருடைய சமூகத் தலைமையை அது ஒருபோதும் ஏற்காது. பகுஜன் சமாஜ் கட்சியில் ‘மிக ஏழை'ப் பார்ப்பனர்கூட உயரிய பொறுப்பைப் பெற முடியும். ஆனால், பிராமணர் சங்கத்தில் ஓர் அடிப்படை உறுப்பினராக முதல்வர் மாயாவதியைக்கூட அச்சமூகம் அனுமதிக்காது.

இதைத்தான் அம்பேத்கர் அழகாகச் சொன்னார் : ‘முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் நாம் நுழைகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதாரத் தளங்களில் அது மறுக்கப்படும். இது தொடரும் எனில், அரசியல் அமைப்பே தகர்த்தெறியப்படும்.’ அம்பேத்கர் சுட்டிக்காட்டிய ஆபத்தான முரண்பாடு, இன்றளவும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

அந்த சமூக முரணை, 60 ஆண்டுகால தேர்தல் அரசியல் தீர்க்கவில்லை என்பதை, நாம் கூடுதல் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, தீர்க்கப்படாத சமூக முரண்பாடுகளே நமக்கு சாதகமாக இருக்கும் என்று கூறுவது, கடைந்தெடுத்த முட்டாள்தனம்!

‘மநுவாதிகளை தீவிரமாக எதிர்த்து வந்த பகுஜன் சமாஜ், மிதவாதக் கட்சியாக மாறிவிட்டது. இனி அது எந்தக் காலத்திலும் பழையபடி அனல் கக்கும் மநுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது. சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன’ என்று எஸ். குருமூர்த்தியின் பச்சைப் பார்ப்பன, இந்துத்துவக் குரல் ஓலமிடுகிறது (‘தினமணி', 17.5.07). தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே பார்ப்பனர்கள் இந்தக் கூட்டணியை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் அம்பேத்கரிஸ்டுகளின் முடிவு, அதற்கு நேர் எதிராகவே இருக்க வேண்டும். அணைத்து அழிப்பதுதானே ஆரியம்!