இந்தோ-ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்கள் நான்காம் வருணத்தவர் என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும், இந்தச் சூத்திரர்கள் என்போர் யார், அவர்கள் எவ்வாறு நான்காம் வருணத்தவரானார்கள் என்பது பற்றித் துருவி அறிந்துகொள்ள விரும்புவோர் ஒரு சிலரேயாவர். அத்தகையதொரு ஆய்வு, முதல் தர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது பற்றி இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

ambedkar 361அவர்கள் எவ்வாறு நான்காவது இடத்தைப் பெற்றார்கள், அது பரிணாம வளர்ச்சியின் இயக்கத்தால் ஏற்பட்டதா அல்லது புரட்சியின் விளைவாக ஏற்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

சூத்திரர் எனப்படுவோர் யார், அவர்கள் எவ்வாறு நான்காம் வருணத்தவர் ஆனார்கள் என்பதைக் காணமுயல்கையில், இந்தோ-ஆரிய சமுதாயத்தின் சதுர்வருணத் தோற்றத்தினை முதலாக வைத்துத்தான் ஆரம்பிக்க வேண்டும். சதுர்வருணக் கோட்பாட்டை ஆராய்வதற்குப் ‘புருஷ சூக்தம்’ என்னும் புகழ்பெற்ற பெயரால் குறிப்பிடப்படும் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலம் தொண்ணூறாவது பாடலிலிருந்து தொடங்க வேண்டும்.

இந்தப் பாடல் கூறுவதென்ன? (முயிர், சமஸ்கிருத மூலநூல்கள், தொகுதி I, .9)

“1. புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரங் கால்களும் உள்ளவன். அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.

2. புருடனே இதுவரை இருந்து வந்துள்ள இனி இருக்கப் போகும் இந்த முழுப் பிரஞ்சமும் ஆவான். அவன் அழியாமையைத் தரும் தலைவன். அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான்.

3. அவனுடைய மகிமை அத்தனை பெரியது. அவன் இந்த மகிமையையும் விஞ்சும் மகிமையுள்ளவன். எல்லா சீவர்களும் அவனுடைய கால் பங்கு அளவே மகிமையுடையவை. அவனுடைய முக்கால் பங்கு அளவு அமுதமாவதால் சோதியிலே நிலைத்துள்ளது.

4. புருடனுடைய முக்கால் பாகம் மேலே ஏறிற்று. இந்த உலகத்தில் மிகுதியாக கால் பாகம் அடிக்கடி இயங்குகின்றது. அது பல வடிவங்களில் உயிருள்ளவற்றிற்கும் உயிரற்ற பொருள்களுக்கும் சென்றது.

5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான். விராஜனிடமிருந்து புருடன் பிறந்தான். பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருந்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான்.

6. தேவர்கள், புருடனைப் பலிப் பொருளாக்கி யக்ஞத்தை நடத்தியபோது, வசந்தம் அதற்கு நெய்யாயிற்று. கோடை அதற்கு விறகாயிற்று. சரத்காலம் அதன் அவிப் பொருளாயிற்று.

7. சிருஷ்டிக்கு முன் பிறந்த புருடனை அவர்கள் யக்ஞத்தில் அவிப்பொருளாகத் தருப்பைப் புல்லால் தெளித்துப் பலியிட்டார்கள். ஸாத்திரியர்களும், ரிஷிகளுமான தேவர்கள் இவ்வாறு புருடனை அவிப்பொருளாகக் கொண்டு யக்ஞத்தை நடத்தினார்கள்.

8. ஸர்வாத்மாவான புருடனைப் பலியிட்டு நடத்திய யக்ஞத்திலிருந்து தயிரும் நெய்யும் தோன்றின. அவை வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வன விலங்குகளையும் உருவாக்கின.

9. எங்கும் வியாபித்த இந்த யக்ஞத்திலிருந்து ரிக், ஸாம வேதங்கள் தோன்றின. அந்த யக்ஞத்திலிருந்து சந்தங்கள் பிறந்தன, யஜூர் தோன்றியது.

10. அந்த யக்ஞத்திலிருந்து குதிரைகளும், இருவரிசைப் பற்களுள்ள விலங்குகள் அனைத்தும் பிறந்தன. பசுக்கள் அதிலிருந்து தோன்றின. அந்த யக்ஞத்திலிருந்து ஆடுகளும் பிறந்தன.

11. தேவர்கள், புருடனைக் கூறுபோட்டபோது எத்தனை விதமாக கூறுபோட்டார்கள்? அது அவனுடைய முகமானது? எவை கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆயின?

12. பிராமணன் அவனது வாயானான். ராஜன்யன் அவனுடைய கைகளானான். அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று. அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.

13. அவனது மனத்திலிருந்து சந்திரன் பிறந்தான். கண்களிலிருந்து சூரியன் பிறந்தான். அவனுடைய வாயிலிருந்து இந்திரனும், அக்கினியும் பிறந்தனர். அவனுடைய சுவாசத்திலிருந்து வாயு பிறப்பிக்கப்பட்டான்.

14. அவனுடைய நாபியிலிருந்து காற்றும், சிரசிலிருந்து வானமும், பாதங்களிலிருந்து புவியும், செவிகளிலிருந்து திசைகளும் பிறந்தன. இவ்வாறு தேவர்களால் உலகங்கள் பிறப்பிக்கப்பட்டன.

15. தேவர்கள் புருடனைப் பலி உயிராகக் கட்டிப் போட்டபோது நெருப்பைச் சுற்றிலும் ஏழு கழிகளை நட்டனர். மூவேழு சமத்து விறகுகள் உருவாக்கப்பட்டன.

16. தேவர்கள் யக்ஞத்தால் யக்ஞத்தை நடத்தினர். இவை முதல் சடங்குகளாயின. பழைய சாத்தியர்களும் தேவர்களும் வசிக்கும் வானுலகிற்கு இப்பெரும் சக்திகள் சென்றன.”

புருஷ சூக்தம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடாகும். அதாவது ஆகாயவெளியும், அகிலமும் தோன்றிய விதத்தை விவரிக்கும் கோட்பாடு ஆகும். சிந்தனா சக்தியில் உயரிய வளர்ச்சி பெற்ற எந்த நாடும், பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள தவறியதில்லை. எகிப்தியர்கள், புருஷ சூக்தம் கூறும் கோட்பாடு போலவே பிரபஞ்ச வரலாறு பற்றிய கோட்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதன்படி (முயிர் சமயம் மற்றும் அறவியல் கலைக் களஞ்சியம், தொகுதி, 4, .145) ‘குனுமு’ என்னும் கடவுள் அதாவது, ‘படைப்புக் கடவுள்’ குயவனது சுழலும் சக்கரத்தின் மூலம் அனைத்து ஜீவராசிகளையும் படைத்தார். உலகில் காணப்படும் அனைத்தையும் சிருஷ்டித்தார். இருக்கும் அனைத்தையும் உண்டாக்கினார்.

அவர் தந்தைக்கெல்லாம் தந்தையாகவும், தாய்க்கெல்லாம் தாயாகவும் இருக்கிறார். அவர் மனிதர்களை உருவாக்கினார். கடவுளர்களை உருவாக்கினார். அவர்தான் ஆதிமுதல் பிதாவாகவும் இருக்கிறார்… அவர்தான் சொர்க்கலோகத்தையும், பூமியையும், கீழுலகத்தையும், நீரையும், மலைகளையும் படைத்தார். அனைத்து வகைப் பறப்பனவற்றையும், மீனினங்களையும், வன விலங்குகளையும், கால்நடைகளையும் மற்றும் அனைத்துக் கிருமிகளையும், புழு பூச்சிகள் யாவற்றையும் ஆணாகவும், பெண்ணாகவும் படைத்தார். இதே போன்ற பிரபஞ்சத் தோற்ற வரலாறு கிறித்தவர் வேத நூலான பழைய ஏற்பாட்டின் முதல் அதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது.

பிரபஞ்சத் தோற்றம் பற்றிய இந்தக் கோட்பாடுகள் கல்வியாளர்களின் கவனத்தை மட்டுமே கவர்ந்ததாக இருந்ததோடு, புதுமையைக் காண அவாவுறும் மாணவர்களின் ஆவல் துடிப்பிற்கு வடிகாலாகவும், சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் கதையாகவும் பயன்பட்டதைத் தவிர வேறு எவ்வித பயனையும் தந்ததில்லை. புருஷ சூக்தத்தின் சில பகுதிகளைப் பொருத்தவரையில் இது உண்மையானதாக இருக்கலாம்.

ஆனால் முழுவதும் உண்மையாக இருக்க முடியாது. புருஷ சூக்தத்தின் அனைத்துப் பாடல்களும் ஒரே விதமான முக்கியத்துவத்திற்கோ, சிறப்பிற்கோ உரியவை அல்ல. இதன் 11வது மற்றும் 12வது பாடல்கள் ஒரு வகையைச் சேர்ந்தவையாகவும் ஏனைய பாடல்கள் வேறு வகையைச் சேர்ந்தவையாகவும் அமைந்துள்ளன. 11 மற்றும் 12வது பாடல்களைத் தவிர, ஏனையவை கல்வியாளர்களின் கவனத்தைக் கவர்வனவாக மட்டும் இருப்பவை. எவரும் அவற்றை நம்பத் தயாராக இல்லை. எந்த இந்துவும் அவற்றை நினைவில் கொள்வதும் இல்லை.

11 மற்றும் 12வது பாடல்களைப் பொருத்தவரை இந்த வகையில் முற்றிலும் வேறுபாடு உள்ளது. எடுத்த எடுப்பிலேயே இந்தப் பாடல்கள், சிருஷ்டி கர்த்தாவின் உடம்பிலிருந்து நால்வகை வகுப்பினர் அதாவது (1) பிராமணர் அல்லது புரோகிதர்கள், (2) சத்திரியர் அல்லது போர் வீரர்கள் (3) வைசியர்கள் அல்லது வணிகர்கள் (4) சூத்திரர் அல்லது பணியாளர்கள் ஆகியோர் எவ்வாறு தோன்றினார்கள் என்பதை விளக்குவதைத் தவிர, வேறு எதனையும் சிறப்பாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் உண்மையில் இப்பாடல்கள் பிரபஞ்சத் தோற்ற விந்தையை மட்டும் கூறுவதோடு நின்றுவிடவில்லை.

ஒரு கவிஞனின் வரட்டுக் கற்பனையில் தோன்றிய கள்ளங்கபடமற்ற ஒரு துணுக்கு இது என்று இந்தோ-ஆரியர்கள் இவற்றைக் கருதி இருக்கலாம் என்று கொள்வோமானால் நாம் பெருந்தவறு செய்தவர்களாவோம். சூக்தத்தில் குறிப்பிட்டுள்ளபடியே நால்வகை வகுப்பினராக சமுதாயம் பகுத்தமைக்கப்பட வேண்டும் என்று படைப்புக் கடவுளால் விதிக்கப்பட்ட கட்டளைகளே இவை என்று கருதப்படுகின்றன. நம்முடைய கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள பாடல்கள் இவ்வாறு பொருள் கொள்ளத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளன என்று எண்ண இடமில்லை.

ஆயினும் பரம்பரை பரம்பறையாக, இவ்வாறு பொருள் கொள்ளத்தக்க வகையிலேயே இவை எழுதப்பட்டுள்ளன என்பதிலும், மரபு வழியாக இத்தகைய பொருள் கொள்வதற்குரிய வகையில் சூக்தத்தை எழுத வேண்டும் என்பது அதன் ஆசிரியரின் நோக்கம் என்பதிலும் ஐயமேதுமில்லை. எனவே, புருஷ சூக்தத்தின் பாடல்கள் 11 மற்றும் 12 வெறும் பிரபஞ்சத் தோற்றம் பற்றிக் கூறுவதோடு நிற்கவில்லை. சமுதாய அமைப்பிற்குக் குறிப்பிட்டதொரு வடிவத்தை நிர்ணயித்து அதற்குத் தெய்வீகத் தன்மையை ஏற்றிக் கூறுவதாகவும் அவை அமைந்துள்ளன எனலாம்.

புருஷ சூக்தம் நிர்ணயித்துள்ள சமுதாய அமைப்பு சதுர்வர்ணயம் எனப்படுவதாகும். கடவுளின் ஆணைப்படி அமைந்தது என்று நம்ப வைக்கப்பட்டுள்ள இந்தச் சதுர்வர்ணய அமைப்பு, இயல்பாகவே இந்தோ-ஆரிய சமுதாயத்தின் இலட்சிய அமைப்பானது. இந்தச் சதுர்வர்ணய முறையின் அடிப்படையில்தான் இந்தோ-ஆரிய சமுதாய வாழ்க்கை முறை, அதன் ஆரம்ப காலத்தில் அல்லது அது நெகிழ்ந்த நிலையில் இருந்தபோது உருவானது. இந்த அமைப்பு முறையே இந்தோ-ஆரிய சமுதாயத்துக்கு தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பையும் கட்டமைப்பையும் வழங்கிற்று.

இந்த சதுர்வருணய இலட்சிய அமைப்பின் மீது இந்தோ-ஆரியச் சமுதாயம் கொண்டிருந்த பெருமதிப்பு, அதனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக ஆக்கியதோடு, விவரித்து விளக்குவதற்கும் அப்பாற்ப்பட்டதாக்கியது. இந்தோ-ஆரிய சமுதாயத்தில் இதற்கேற்பட்ட செல்வாக்கு, ஆழமானதாகவும் அழிக்க முடியாததாகவும் ஆனது.

புருஷ சூக்தம் நிர்ணயித்த இந்தச் சமூக அமைப்பு முறை, புத்தரைத் தவிர வேறு எவராலும் எதிர்த்துக் கேட்பதற்கில்லாததாயிற்று. பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மட்டுமல்லாமல், புருஷ சூக்தத்தின் இந்த இலட்சியத்தை ஆதரிப்பதையும் அதனை விரித்துரைத்துப் பரப்புவதையும் தொழிலாக மேற்கொண்டுவிட்டவர்கள் பலர், சட்டத்தை உருவாக்கியளிப்பவர்களாக இருந்த காரணத்தால் புத்தர் வாழ்ந்த காலத்திலேயும் கூட இதனை அசைக்க முடியாமல் போயிற்று.

புருஷ சூக்தத்திற்கு ஆதரவாக எழுந்த பிரசாரத்திற்குச் சில எடுத்துக்காட்டுகளாக, ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்திலிருந்தும் வசிட்ட தர்ம சூத்திரத்திலிருந்தும் சான்றுகளைக் குறிப்பிடலாம் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் கூறுவதாவத:

“பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு சாதிகள் உள்ளன. இவர்கள் பிறப்பில் படிப்படியாக ஏறுவரிசையில் (சாதியில்) ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள்” (பிரஸ்னம் 1, படலம் 1, காண்டம் 1, சூத். 4-5)

இவர்களுள் சூத்திரர்கள் மற்றும் தீயச் செயல்களைச் செய்பவர்கள் தவிர ஏனையோர் (1) உபநயனம் அல்லது பூணூல் அணியவும், (2) வேதங்கள் ஓதவும், (3) புனித வேள்விகள் செய்யவும் விதிக்கப்பட்டவர்களாவர். (பிரஸ்னம் 1, படலம் 1, காண்டம் 1, சூத். 6)

இதையே வாசிட்ட தர்ம சூத்திரம் எடுத்துரைக்கிறது:

“பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்ள, சூத்திரர்கள் என்போர் நான்கு சாதியினர் (வருணங்கள்). பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர் ஆகியோர் இரு பிறப்பாளர்கள் எனப்படுபவர்கள். முதல் பிறப்பு அவர்களுடைய தாயினிடமிருந்தும், இரண்டாவது பிறப்பு அவர்கள் பூணூல் அணிவதனாலும் ஏற்படுகின்றது. இந்த இரண்டாவது பிறவியில் சாவித்ரி தாயாகவும், ஆசிரியர் தந்தையாகவும் இருக்கின்றனர்.

ஆசிரியர் வேதங்களைப் பயிற்றுவிப்பதால் தந்தை எனப்படுகிறார். (இயல் 11, பாடல்கள் 1-4)

இந்த நான்கு சாதியாரும் பிறப்பாலும், புனித வினைமுறைகளாலும் வேறுபடுத்தி அறியப்படுகின்றனர். வேதத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“பிராமணர்கள் அவருடைய வாயிலிருந்தும், சத்திரியர்கள் அவருடைய தோள்களிலிருந்தும், வைசியர்கள் அவருடைய தொடைகளிலிருந்தும் சூத்திரர்கள் அவருடைய பாதங்களிலிருந்தும் பிறந்தவர்கள்.”

பின்வரும் பகுதியில், சூத்திரர் புனிதச் சடங்குகளைச் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டங்களை வகுத்தளித்த ஏனையோரும் புருஷ சூக்தம் கூறியதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பித் திருப்பிச் சொல்வதோடு அதன் புனிதத் தன்மையை நிலைநிறுத்தவும் செய்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துக்காட்டுவது அவசியமற்றதாகும். புருஷ சூக்தம் தெரிவித்துள்ள இலட்சியத்தின் புனிதத்தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வாயை முடிவாக அடக்கி வைத்தவர் இந்து சமுதாயத்தின் சிற்பி என்று போற்றப்படும் மனுவே ஆவார். இதற்காக மனு இரு காரியங்களைச் செய்துள்ளார். முதலாவதாக, புருஷ சூக்தத்திற்கு தெய்வீகத் தன்மையை ஏற்றுவதற்காக அது கூறும் இலட்சியத்திற்குப் புது விளக்கம் கூறினார்:

“உலங்களின் நலனைக் கருதி, அவர் (படைப்புக் கடவுள்) தன்னுடைய வாயிலிருந்தும், தோள்கள், தொடைகள், மற்றும் பாதங்கள் ஆகியவற்றிலிருந்தும் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆகியோரைப் படைத்தார். (மனு, இயல்.I, சூத். 31)

பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் ஆகியோர் இரு பிறப்பாளர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான்காவதாக உள்ள சூத்திரர் ஒரே ஒரு பிறவி பெற்றவர்கள்.” (மனு, இயல். X, சூத். 4)

இந்த வரிகளில் மனு தனக்கு முன்னிருந்தோரை அப்படியே பின்பற்றியுள்ளார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு ஒருபடி மேலே சென்று அவர் இன்னொரு கூற்றையும் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“வேதம் ஒன்று மட்டுமே முதலும் முடிவுமான தர்மத்தின் இசைவாணை” (மனு, இயல் II, சூத். 6)

புருஷ சூக்தம், வேதத்தின் ஒரு பகுதியே என்பதைக் கருத்தில் கொள்வோமானால், மனு புருஷ சூக்தத்தில் அடங்கியுள்ள சதுர்வருணயத்திற்கு தெய்வீகத் தன்மையையும், இதற்கு முன்பு இருந்திராத எவராலும் அழிக்க முடியாத தன்மையையும் ஏற்றி வைத்துச் சமூக இலட்சியமாக ஆக்கியுள்ளதைப் புரிந்து கொள்வதில் எவ்வித சிரமமும் இருக்காது.

II

 எனவே, புருஷ சூக்தத்தை நுணுக்கமாக அலசி ஆராய வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

புருஷ சூக்தம் ஒப்புயர்வற்றது என இந்துக்கள் உரிமை கொண்டாடுகின்றனர். மனிதனின் மனம் முதிர்ச்சியுறாதிருந்த, காலத்தில், தற்காலத்தில் கிடைப்பது போன்ற பல திறப்பட்ட சிந்தனைகளால் வளமுறாத நிலையில் உதித்த ஒரு கருத்திற்கு இத்தகைய சிறப்பளிப்பது அதன் தகுதிக்குத் தக்கதல்ல என்பதில் ஐயமேதுமில்லை. ஆயினும், புருஷ சூக்தம் எவ்வகையில் தனித்தன்மை வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு வேண்டுமானால், இத்தகைய சிறப்பை அதற்கு அளிப்பதில் சிரமம் ஏதுமில்லை.

புருஷ சூக்தம் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கு முதன்மையான காரணம், அது நிலைநிறுத்த முயலும் சதுர்வருணய சமுதாய அமைப்பு பற்றிய இலட்சியம் புதுமையானதாக இருப்பதுதான். புருஷ சூக்தம் தனித்தன்மையுடையது என்று கொள்ள இதுவே போதிய ஆதாரமாகிவிட முடியுமா? வகுப்புகள் அற்றதொரு சமுதாயத்தை இலட்சிய சமுதாயமாக அது எடுத்துரைத்திருக்குமானால், உண்மையிலேயே புருஷ சூக்தம் ஒப்புயர்வற்றது என்பதாகியிருக்கக் கூடும். ஆனால் புருஷ சூக்தம் செய்திருப்பதென்ன? அது செய்திருப்பதை வைத்து ஒப்புயர்வற்றதெனக் கருத முடியுமா? தேசியவாதியும், நாட்டுபற்று உடையவரும் மட்டுமே இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்க முடியும்.

முழுக்க முழுக்கப் பழங்காலத்ததாக இல்லாத எல்லாச் சமுதாயங்களிலும் வகுப்புப் பாகுபாடுகள் இருந்துள்ளன என்பது உண்மையே. ஒன்றோடோன்று ஒப்பவைத்துப் பார்க்குமளவில், முன்னேற்றமடைந்த நிலையில் உலகெங்குமுள்ள சமுதாயத்தில் இந்த நிலை சர்வ சாதாரணமாக இருந்ததுதான். இந்தக் கோணத்தில் பார்த்தோமானால், இந்தோ – ஆரிய சமுதாயத்தில் நிலவிய ஒருவகையான வகுப்புப் பாகுபாட்டையே புருஷ சூக்தம் பிரதிபலிக்கிறது என்னும்போது அதில் ஒப்பற்ற சிறப்பென்பது எங்கே இருக்க முடியும்?

இதுமட்டுமல்லாமல், புருஷ சூக்தம் தனித்தன்மையது என்பதனை முற்றிலும் வேறான இன்னொரு காரணத்திற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும். புருஷ சூக்தம் தனித்தன்மையானது என்பதற்கான உண்மையான காரணங்களை மக்களில் பலர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமானதாகும். இந்த உண்மைக் காரணம் தெரியவருமானால், புருஷ சூக்தம் மனிதனது அறிவின் விந்தையான படைப்பு என்பதை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கத்தையும் மக்கள் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், மனிதனின் அசாதாரணமான அறிவினால் தோன்றிய அசாதாரணமான படைப்பாகவும் அது உள்ளது என்பதை அறிந்து திகைப்படைவார்கள்.

தனித்தன்மையது என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புருஷ சூக்தம் கூறும் சமுதாயம் பற்றிய இலட்சியத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன? எல்லாச் சமுதாயங்களிலும் வர்க்கப் பிரிவினைகள் இருந்துள்ளன என்பது உண்மையே என்றபோதிலும், எந்தச் சமுதாயமும் அதனை ஓர் இலட்சிய சமுதாயத்தின் சட்டபூர்வமான நிலைக்கு உயர்த்தி வைத்துச் சாசுவதமானதாக்கவில்லை.

புருஷ சூக்தத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள திட்டம், உண்மைநிலையை ஓர் இலட்சியம் என்ற அளவில் உயர்த்தியுள்ளது. இதுதான் புருஷ சூக்தம் அளித்துள்ள திட்டத்தின் முதலாவது தனித்த அம்சமாகும். இரண்டாவதாக, எந்த ஒரு சமுதாயமும் நடைமுறையிலிருந்த நிலையற்றதொரு சமுதாய அமைப்பைச் சட்டபூர்வமானதாக்கி அதை ஒரு இலட்சிய சமுதாயமாக்கிக் கொண்டதில்லை.

கிரேக்கர்களைச் சுட்டிக்காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். பல்வேறு வர்க்கத்தினர் உள்ளடக்கி இருப்பதை ஒரு இலட்சிய சமுதாய அமைப்புக்கு ஏற்றதென ஒப்பற்ற ஞானி பிளேட்டோவே கருதினார்.

ஆயினும் கிரேக்கர்கள் இதனைச் சட்டபூர்வமானதாக்கி நடைமுறைப்படுத்த நினைத்ததே இல்லை. ஆனால் புருஷ சூக்தம் மட்டுமே ஒரு இலட்சியத்தை நிஜமாக்கி நடைமுறைபடுத்துவதற்கு முயன்றுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மூன்றாவதாக, எந்த ஒரு சமுதாயமும் வர்க்கப் பிரிவினையை ஒரு இலட்சியமாக ஏற்றுக் கொண்டதில்லை. உயர்ந்தபட்சம் அதனை இயல்பானது என்று மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உயர்ந்தபட்சம் அதனை இயல்பானது என்று மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் புருஷ சூக்தமோ இதற்கு மேலாகச் சென்று, வர்க்க அமைப்பினை இயல்பானது, இலட்சியத் தன்மை கொண்டது என்று கருதியதோடு, தெய்வீகமானது, வழிபடத்தக்கது என்றும் கூறியது.

நான்காவதாக, வரலாற்றில் குறிப்பிடப்படும் எந்த ஒரு சமுதாயத்திலும், வர்க்கப் பிரிவுகளின் எண்ணிக்கை மறுக்கப் படாத, பிடிவாதமான கோட்பாடாக இருந்ததில்லை. ரோமானியர் களிடையே இரு வர்க்கங்கள் இருந்தன. கிரேக்கர்கள் மூன்று வர்க்கங்கள் போதுமெனக் கருதினர். இந்தோ-ஈரானியர்களிடையேயும் மூன்று வர்க்கங்களுக்கு மேல் இருந்ததில்லை (கெய்கர், பண்டைய கால கிழக்கிந்திய ஈரானியர்களின் நாகரிகம், தொகுதி II, v,64) அவை (1) அத்ரவான்கள் (புரோகிதர்கள்), (2) ரதாஸ்டர்கள் (போர் வீரர்கள்), (3) வஸ்திரிய ப்ஸ்யட்கள் (விவசாயிகள்) எனப்பட்டன. ஆனால் புருஷ சூக்தம் சமுதாயத்தை நான்கு வர்க்கமாக்கி அதனை மறுக்க முடியாத கொள்கையாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை கூட்டவோ, குறைக்கவோ முடியாததாக்கப்பட்டுள்ளது. ஐந்தாவதாக, ஒவ்வொரு சமுதாயமும் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினரின் எதிர் திசையில் அதனதன் போக்கில் தனித்தியங்கவும், அவ்வப்போது சமுதாயத்தில் செயல்படும் செயற்பாடுகளின் சிறப்பம்சத்திற்கேற்ப முக்கியத்துவம் பெற்று விளங்கவும் அனுமதித்துள்ளன.

எந்த ஒரு சமுதாயமும், அதிகார பூர்வமான தரவாரியான பாகுபாட்டை அமைத்து அதனை நிரந்தர மானதாக நிலைநிறுத்திக் கொண்டு, ஏறுவரிசைக்கேற்ப மரியாதைக்குரியதாகவும், இறங்குவரிசைக்கேற்ப அவமரியாதைக்குரியதாகவும் ஆக்கியதில்லை. பல்வேறு வர்க்கத்தினருக்கிடையே மாற்ற முடியாத வகையில் நிரந்தரமான வரிசைமுறையைப் புகுத்தி, காலத்தாலே சூழ்நிலைகளாலோ மாற்ற முடியாதபடி அமைந்துள்ள வகையில், புருஷ சூக்தத்தின் திட்டம் தனித்தன்மை வாய்ந்தது. தரவாரியான சமத்துவ மின்மை என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நான்கு வர்க்கத்தினரிடையே புகுத்திய வரிசை முறையின்படி, பிராமணர்களை அனைவருக்கும் மேலாகவும், சத்திரியர்களை பிராமணர்களுக்குக் கீழாகவும், அதே நேரத்தில் வைசிரியர்களை சூத்திரர்களுக்கு மேலாகவும், வைசியர்களைச் சத்திரியர்களுக்குக் கீழாகவும் ஆனால் சூத்திரர்களுக்கு மேலாகவும், சூத்திரர்களை இவர்கள் அனைவருக்கும் கீழாகவும் ஆக்கியுள்ளது.

III

இவையே புருஷ சூக்தம் தனித்தன்மையானது என்பதற்குரிய உண்மையான காரணங்கள். ஆனால் புருஷ சூக்தம் தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, அசாதாரணமானதுமாகும். இது அசாதாரணமானது – ஏனென்றால் இதில் பல புதிர்கள் நிறைந்து கிடக்கின்றன. மிகச் சிலரே இந்தப் புதிர்களை அறிந்திருக்கக் கூடும். இவற்றை அறிந்துகொள்ள விரும்பி முனைவோர், இவற்றின் உண்மைத் தன்மை என்ன என்பதையும் இந்தப் புதிர்களின் குழப்பம் எத்தகைய விந்தையானது என்பதையும் அறிவார்கள். புருஷ சூக்தத்தில் விவரித்துள்ள பிரபஞ்சத் தோற்றம், ரிக் வேதத்தில் காணப்படும் பிரபஞ்சத் தோற்றம் பற்றியது மட்டுமல்ல, ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலம், 72வது பாடலிலும் பிரபஞ்சத் தோற்றம் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது. (வில்சன், ரிக் வேதம், தொகுதி VI, V. 729)

1) கடவுளர்களின் தோற்றங்களைப் (தெய்வங்களின் சேர்க்கை) பற்றி நாம் விளக்கமாக அறிவிப்போமாக! யார் கடவுளர்களது புகழை போற்றித் தொழுது ஓதுகிறார்களோ அவர்கள் பிந்திய காலத்தில் நன்கு வாழ கடவுளர்களால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

2) பிரம்மனாஸ்பதி, கருமான் தனது துருத்தியிலிருந்து காற்றை வரவழைப்பதுபோல், இந்தக் கடவுளர்களின் சந்ததிகளைத் தமது சுவாசத்தால் நிரப்பினார். கடவுளர்களின் முதல் யுகத்தில் இல்லாதவற்றிலிருந்து இருப்பவை பிறந்தன.

3) இந்தக் கடவுளர்களின் தொடக்க காலத்தில் இல்லாததிலிருந்து இருப்பவை உண்டாயின. அதன்பிறகு அடிவானத்தின் பகுதிகள் உண்டாயின. அவற்றின் தோற்றத்திற்குப் பிறகு மேலே எழும்பும் மரங்கள் தோன்றின.

4) மேலே எழும்பும் மரங்களிலிருந்து இந்தப் பூமி தோன்றிற்று. வாழ்வன பூமியிலிருந்து தோன்றின. தக்‌ஷா அதிதியிலிருந்து தோன்றினார். அதன் பிறகு அதிதி தக்ஷனிலிருந்து தோன்றினாள்.

5) அதிதி, தக்ஷனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்குப் பின் இறப்பெனும் பந்தத்தினின்று விடுபட்ட பாராட்டுக்குரிய கடவுளர்கள் தோன்றினார்கள்.

6) கடவுளர்களே! நீங்கள் நன்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குளத்தில் நீராடும்போது, ஒரு காரமான தூசு உம்மிலிருந்து வெளிப்பட்டு நீங்கள் நடனமாடுவதுபோல் வெளியேறியது.

7) மேகங்கள் பூமியை மழையால் நிரப்புவதுபோல் நீங்கள் உங்களது ஒளிக்கற்றையால் உலகை நிரப்பினீர்கள், பின் நீங்கள் சமுத்திரத்தில் மறைந்திருக்கும் சூரியனை வெளிக்கொணர்ந்தீர்கள்.

8) அதிதியின் உடம்பிலிருந்து எட்டு மகன்கள் பிறந்தனர். அவள் மார்த்தாண்டனை மேலே வான வெளியிலே அனுப்பிவிட்டு ஏழு மகன்களுடன் கடவுளை அணுகினாள்.

9) அதிதி தனது ஏழு மகன்களுடன் கடந்த சந்ததியில் புகுந்து கொண்டு மார்த்தாண்டனைப் பிறப்பும் இறப்பும் உள்ள மனித வர்க்கங்களுக்காகப் பெற்றாள்.”

*****************

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய இந்த இருவகையான கூற்றுக்களிலும் கொள்கை அளவிலும் விவரத்திலும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. முன்னர் சொல்லப்பட்டதில் ‘இல்லாமையிலிருந்து இருப்பது பிறந்தது’ என விளக்கப்பட்டுள்ளது. பின்னால் சொல்லப்பட்டதில் படைப்புகளுக்குக் காரணம் என ஒரு பொருளைக் குறிப்பிட்டு அந்தப் பொருளை புருஷன் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரே நாளில் இருவகையாக ஒன்றுக்கொன்று எதிரான பிரபஞ்சத் தோற்றம் பற்றிய விளக்கம் சொல்லப்படுவானேன்? புருஷ சூக்தத்தின் ஆசிரியர், ஒரு புருஷனை உண்டாக்கி அவர் மூலம் எல்லா படைப்புகளும் தோன்றின என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததேன்?

புருஷ சூக்தத்தைப் படிக்கும் எவரும், அதில் கழுதைகள், குதிரைகள், வெள்ளாடுகள் முதலியவற்றின் படைப்பைப் பற்றியே முதலில் தொடங்குவதையும் மனிதனின் தோற்றம் பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் காண்பார்கள். மனிதனின் தோற்றத்தைப் பற்றிக் கூற வேண்டிய இயல்பானதொரு கட்டத்தில் முன்பின் தொடர்ச்சி எதுவுமில்லாமல் ஆரிய சமுதாயத்தில் வர்க்கங்களின் தோற்றத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கிவிடுகின்றது. இதனால் ஆரிய சமுதாயத்தின் நான்கு வர்க்கங்களை விளக்கியுரைப்பதே புருஷ சூக்தத்தின் தலையாய நோக்கமென்று தோன்றுகிறது. இவ்வாறு செய்ததன் மூலம், புருஷ சூக்தம் மற்ற மத நூல்களுக்கு மட்டுமல்லாமல், ரிக் வேதத்தின் ஏனைய பகுதிகளுக்கும் முரண்பட்டதாக உள்ளது.

எந்த மதநூலும், சமுதாயத்தில் நிலவிய வர்க்கங்களின் தோற்றத்தை விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டின் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மனிதனின் தோற்றம் பற்றிய விளக்கம், புருஷ சூக்தத்தைப் போன்றே நோக்கத்திலும், ஒப்புமையிலும் அமைந்துள்ளது என்று கூறப்பட்ட போதிலும், பழை ஏற்பாடு மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதை விளக்குவதோடு மட்டுமே நிற்கிறது.

பழைய யூத சமுதாயங்களிலும் வர்க்கப் பிரிவினைகள் வந்துள்ளன. இதற்கு இந்தோ-ஆரியர் சமுதாயம் விலக்கானதல்ல என்ற போதிலும், எந்த மத நூலும் வர்க்கப் பிரிவினைகள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்குவது அவசியம் என்று கருதியதில்லை. ஆனால் புருஷ சூக்தம் மட்டும், சமுதாயத்தில் நிலவிய வர்க்கங்களின் தோற்றத்தைப் பற்றி விளக்குவதில் கண்ணும் கருத்துமாக இருப்பானேன்?

ரிக் வேதத்தில் புருஷ சூக்தம் ஓரிடத்தில் மட்டுந்தான் படைப்பின் தோற்றத்தை பற்றி விளக்குகிறது என்றில்லை. இதைப் பற்றியே ரிக் வேதத்தில் வேறு இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பின்வரும் பகுதிகளைக் குறிப்பிடலாம். (முய்ர், தொகுதி, ப.180)

ரிக் வேதம் 1. 96 2: “முதல் நிவிடில், ஆயுவின் அறிவுக் கூர்மையால், அவர் (அக்னி) இந்த மனிதக் குழந்தைகளைப் படைத்தார். அவரது பிரகாசிக்கும் ஒளியால் பூமி, நீர் ஆகியவற்றுடன் கடவுளர்கள் செல்வத்தை வழங்கும் அக்னியை நிலைநிறுத்தினார்கள்.”

வெவ்வேறு வர்க்கத்தினர் படைக்கப்பட்டதற்கு இதில் எவ்வித குறிப்பும் கொடுக்கப்படவில்லை. என்ற போதிலும் ரிக் வேத காலத்தில் இந்தோ-ஆரிய சமுதாயம் பல்வேறு வகுப்பு வேறுபாடுகளைக் கொண்டிருந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும் ரிக் வேதத்தில் மேலே குறிப்பிட்ட வரிகளில் வர்க்கங்கள் பற்றிக் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, மனிதர்களின் படைப்பு பற்றி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. புருஷ சூக்தம் மட்டும் ஒருபடி மேலே சென்று வர்க்கங்களைப் பற்றி பேசுவது அவசியம் என்று கருதியதேன்?

புருஷ சூக்தம் இன்னொரு விதத்தில் ரிக் வேதத்தினின்றும் முரண்படுகின்றது. ரிக் வேதம், இந்தோ-ஆரியர்களின் தோற்றம் பற்றி உலகியல் சார்ந்த கொள்கையையே வகுத்துள்ளது என்பதைப் பின் வரும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம்:

1) ரிக் வேதம், i. 80.16: “தொழுகைகளும், ஓதுதலும் நடத்த இந்திரனிடத்தில் கூடினார்கள். இந்தச் சடங்கில் அதர்வணனும், தந்தை மனுவும், தத்யான்சும் சேர்ந்து கொண்டாடினார்கள்.” (முய்ர், தொகுதி1, ப.162)

2) ரிக் வேதம், i. 114.2: “ஓ! ருத்ரபகவானே! என்னென்ன செழுமைகளும், உபகரணங்களும் தந்தை மனு யாகங்களால் பெற்றாரோ நாங்களும் அவற்றை உன் மூலமாக அடைய அருள் புரியும்.” (அதே நூல், ப.163)

3) ரிக் வேதம், ii. 33.13: “ஓ மருத்துகளே! தங்களது தூய்மையான அந்தப் பரிகாரங்களும், எவையெல்லாம் அனுகூலமான நன்மைகளோ அவற்றையும் ஓ சக்தி வாய்ந்த கடவுளர்களே எவையெல்லாம் நன்மை பயப்பனவோ, எவற்றையெல்லாம் தந்தை மனு அவர்கள் தேர்ந்தெடுத்தார்களோ அவற்றையும், ஏனையவற்றையும், வாழ்த்துகயையும், ருத்ரனின் உபகாரங்கள்யாவற்றையும் அடைய வேண்டுமென நான் விரும்புறேன்.” (முய்ர்,தொகுதி 1, ப.163.)

4) ரிக் வேதம், viii. 52.1: “பழைமையான காலத்து நண்பர் சர்வ வல்லமை படைத்த கடவுளர்களின் சக்திகளைப் பெற்றுள்ளார். தந்தை மனு, கடவுளர்களை அணுகும் வாயில்களாகக் கீர்த்தனைகளை இயற்றினார்.” (அதே நூல், ப.163)

5) ரிக் வேதம், iii. 3.6: “அக்னி, கடவுளர்களுடனும் மனுஷின் குழந்தைகளுடனும் (ஜந்துபி) கீர்த்தனைகளை (மந்திரங்களை)ச் சொல்லி வழிபட்டு பலவகைப்பட்ட யாகங்களைச் செய்தார்.” (முயர், தொகுதி 1, ப.165)

6) ரிக் வேதம், iv. 37.1: “ஓ கடவுளர்களே, வஜாஸ் மற்றும் ரிபுக்‌ஷனா, கடவுளர்கள் வந்த வழிகளில் எங்களது யாகங்களுக்கு வருகை தாருங்கள். ஓ அருமைத் தெய்வங்களே, நீங்கள் மனுஷ் (மனுஷோ விக்ஷூ) அவர்களின் பிள்ளைகளாகிய இவர்களுக்கு நல்ல நாளில் ஒரு யாகத்தைச் செய்ய அருள் செய்யுங்கள்.” (அதே நூல், ப. 165)

7) ரிக் வேதம், vi. 14.2: “மனுஷ் அவர்களின் மக்கள் யாகத்தில் கடவுளர்களை அழைப்பவராகிய அக்னியைப் பாராட்டித் தொழுவோமாக. (முய்ர், தொகுதி 1, ப.165)

இந்த வாசகங்களிலிருந்து ரிக் வேதத்தை எழுதிய ரிஷிகள், மனுவை இந்தோ – ஆரியர்களுக்கு ஆதிகர்த்தா எனக் குறிப்பிடுகிறார்கள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இந்தோ- ஆரிய சமுதாயம் ஏற்படக் காரணகர்த்தாவாக இருந்த மனுவின் கோட்பாடு ஆழ்ந்த, அடிப்படையைக் கொண்டதாக இருக்கிறது. அக்கோட்பாட்டைப் பிராமணர்களும் புராணங்களும் மேலும் வளர்ச்சியடையச் செய்து தொடர்ந்து எடுத்துரைத்து வந்துள்ளன. இது ஐத்ரேய பிராமணத்திலும் விஷ்ணு புராணத்திலும் (அதே நூல், பக். 105-107) மச்ச புராணத்திலும் (முய்ர் மேற்கோள், தொகுதி 1, ப. 110-112) அழுத்தந் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் பிரம்மாவை மனுவின் ஆதி கர்த்தா, என ஆக்கியுள்ளார்கள் என்பது முற்றிலும் உண்மையாகும்.

ஆனால் ரிக்வேத கோட்பாடாகிய மனுதான் ஆதிகர்த்தா என்பதை ஏற்றுக்கொண்டு அதையே அவர்கள் பின்பற்றியும் வருகிறார்கள். (இது பற்றிய விவரங்கள் பெரிதும் குழப்பம் அளிப்பதாகும். விஷ்ணு புராணம், பிரமன் தன் உடம்பை இரு கூறுகளாக்கி அதன் ஒரு அம்சத்தை ஆணாகவும், இன்னொரு அம்சத்தைப் பெண்ணாகவும் ஆக்கினார் என்கிறது.

சதரூபை என்னும் பெயர் பெற்ற அந்தப் பெண், பெருந்தவம் செய்து மனு சுவாயம்பு என்னும் ஆணைத் தன் கணவனாகப் பெற்றாள். பிரமன் தன் மகளுடன் தகாதவகையில் கூடியது பற்றி விஷ்ணு புராணம் குறிப்பிடவில்லை. ஐத்ரேய பிராமணமும், மச்ச புராணமும், பிரமன் தன் மகள் மூலம் மனுவைப் பெற்றதாகக் கூறுகின்றன.

மனு ஆண் அல்லவென்றும், பெண்ணே என்றும் தக்ஷ பிரஜாபதியின் மகளென்றும், கஸ்யபரின் மனைவி என்றும் இராமயணம் கூறுகின்றது. (பார்க்க: முய்ர், தொகுதி I, v. 117)) ஆனால் ஏன் புருஷ சுக்தம் மனுவைப் பற்றி அப்படியொன்றும் குறிப்பிடவில்லை? இது புதுமையானதே! ஏனென்றால் புருஷ சூக்த ஆசிரியர், மனு சுவாயம்புவாவே விராஜ் என அழைக்கப்படுபவர் என்பதையும் விராஜ் ஆதிபுருஷன் என அழைக்கப்படுபவர் என்பதையும் அறிந்தே இருக்கலாம். (மச்ச புராணம் – முய்ர், தொகுதி I, v. III அடிக்குறிப்பு) ஏனென்றால் விராஜோ ஆதி புருஷன் பற்றி சூக்தம் ஐந்தாம் பாகத்தில் அவரும் பேசுகிறார்.

புருஷ சூக்தம் ரிக் வேதத்தைக் கடந்து மேலே சென்றிருக்கிறதென்பதற்கு மூன்றாவது காரணம் ஒன்றும் இருக்கிறது. வேத கால ஆரியர்கள் தொழிலைக் கொண்டு மக்களைப் பாகுபடுத்தும் அளவிற்கு நாகரிகத்தில் மேன்மை பெற்றிருந்தார்கள். வேத கால ஆரியர்களுள் வெவ்வேறு வகையான மக்கள் வெவ்வேறான பணிகளைச் செய்து வந்தார்கள். அதைப் பற்றி அவர்கள் நன்கு தெரிந்திருந்தார்களென்பதற்குக் கீழ்காணும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்:

ரிக் வேதம் i. 113.6: “சிலர் அதிகாரப் பதவிகளைத் தேடியும், சிலர் புகழைத் தேடியும், சிலர் செல்வத்தைத் தேடியும், சிலர் பணிகளைத் தேடியும் செல்லலாம். ஒவ்வொருவரும் அவரவருக்கேற்ற தனித்துவம் வேறுபட்டதுமான தொழில்களைச் செய்து அவரவருக்கேற்றவாறு சம்பாதித்து வாழ்க்கையை நடத்த, உஷை மக்களைத் தட்டி எழுப்பினாள்.”

இதைப் பற்றி ரிக்வேதம் இந்த அளவு மட்டும்தான் கூறுகிறது. ஆனால் புருஷ சூக்தமோ இதையும் தாண்டி வெகுதூரம் சென்றுள்ளது.

இது தொழிலின் தன்மையைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினையை மாற்றி, தொழிலால் பிரிந்துள்ள திட்டத்திலிருந்து பணியாளர்களைப் பிரித்து, அந்தந்தப் பணியைச் செய்யும் மக்களை அந்தந்தப் பணியை மட்டுந்தான் செய்ய வேண்டுமென்ற நியதியை உண்டாக்கி அப்பணியாளர்களின் வகைகளை நிரந்தரம் ஆக்கிவிட்டது. புருஷ சூக்தம் மட்டுமே இத்தகைய வேற்றுமையை உருவாக்கக் காரணம் என்ன?

இன்னொரு வகையிலும் புருஷ சூக்தம் ரிக்வேதத்திலிருந்து மாறுபடுகின்றது, ரிக் வேதம் மனிதர்களைப் பற்றி மட்டும் கூறவில்லை.

அது இந்தோ-ஆரிய தேசத்தைப் பற்றியும் சொல்லுகிறது. அந்த தேசமானது ஐந்து பழங்குடியினரால் உருவானதென்றும், அவையாவும் ஒன்றோடொன்று இணைந்து பொதுவான இந்தோ-ஆரிய சமுதாயம் உண்டாகியுள்ளது என்றும் கூறுகிறது. கீழ்க்காணும் சுலோகங்கள் அந்த ஐந்து பழங்குடியினர்களாலான தேசத்தைப் பற்றி கூறுகின்றன:

1) ரிக்வேதம், vi. 11.4: “அக்னி, தனக்கு நிறைவானயாகம் வளர்த்துவதற்காக, இந்த ஐந்துவிதப் பழங்குடி மக்களுக்கும் வெகுமதிகளையும் பெருமைமிக்க மரியாதைகளையும் அளிக்கிறான்.” (முய்ர், தொகுதி 1, ப.117)

2) ரிக்வேதம், vii, 15.2: புத்தி கூர்மையும் இளமையும் உடைய எஜமானன் (அக்னி), இந்த ஐந்துவிதப் பழங்குடி மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் வியாபித்திருக்கிறான். (அதே நூல் , ப.178)

இந்த ஐந்து பழங்குடியினர் யார் யார் என்பதில் சில கருத்து வேறுபாடுகளிருக்கின்றன. யாஸ்கர் தமது நிருக்தத்தில் இவர்களைக் கந்தர்வர்கள், பித்ரிகள், தேவர்கள், அசுரர்கள், இராட்தர்கள் எனக் குறிப்பிடுகிறார். ஆயூபமணியவர், இது நான்கு வருணத்தவர்களையும் மற்றும் நிஷாதர்களையும் குறிப்பதாகக் கூறுகிறார். இந்த இரு வாதங்களும் அறிவுக்கு ஒவ்வாதவையாகும். ஏனென்றால், முதலாவதாக, இந்த ஐந்து குடியினரும் ஒட்டுமொத்தமாகக் கீழ்க்காணும் பாடல்களில் புகழப்பட்டிருக்கிறார்கள்.

1) ரிக்வேதம், ii. 2.10: “நமது பெருமை, இந்து ஐந்து பழங்குடி மக்களுக்குமிடையே மிகச் சிறப்பான சுவர்க்கத்தைப் போல வானளாவ ஜொலிப்பதாக.” (அதே நூல், ப.178)

2) ரிக்வேதம், vi. 46.7: “இந்திரனே, எத்தகைய ஆற்றலும் ஆளுமையும் நஷூஷ பழங்குடி மக்களிடத்தில் இருப்பினும் அதுவுமல்லாது எத்தகைய பெருமைகளும் இந்த ஐந்து இனத்தைச் சேர்ந்ததாயினும் எங்களுக்கு அளிப்பாயாக.” (அதே நூல், ப.180)

சூத்திரர்களும் இந்து ஐந்து இனத்தவர்களுள் அடங்குவாராயின் இந்த அளவு உயர்வாகப் பேசப்பட்டிருக்க முடியாது. அதுவுமல்லாமல் வருணங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ‘ஜனா- என்கிற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கே ஐந்து பழங்குடி மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர நான்கு வருணத்தவர்களையோ, நிஷாதர்களையோ குறிப்பிடவில்லை என்பது கீழ்க்காணும் ரிக்வேத வரிகளிலிருந்து நன்கு உணரலாகும்: ரிக் வேதம், i. 108.8: “ஓ இந்திரனே, அக்னியே, யதுக்கள், துர்வாசர்கள், துருயுக்கள், அனுஸ்கள், புருஸ்கள் ஆகியோரிடையே நிரந்தரமாக இருப்பவர்களே, எல்லாத் திக்கிலிருந்தும் இங்கே வாருங்கள், இங்கு கொட்டி வைத்திருக்கும் சோமபானத்தைப் பருகுங்கள். (முய்ர், தொகுதி 1, ப.179)

இந்த ஐந்து பழங்குடி மக்களும் ஆரிய மக்களாக ஒன்றாகக் கலந்திருந்தார்கள் என்பது அதர்வண வேதத்திலிருந்து (iii.24.2) தெளிவாகின்றது:

 “இந்த ஐந்து மண்டலங்களும், ஐந்து குடியினரும் மனுவிலிருந்து உதித்தார்கள்”.

ரிக் வேத பாடல்களை யாத்த ரிஷிகள், இந்த ஐந்து பழங்குடி மக்களைப் பற்றி இது போன்று குறிப்பிடப்பட்டிருப்பதை ஒற்றுமை உணர்வும், இன உணர்வும் மட்டுமே விளக்கக் கூடியதாகும்.

இப்போது எழக்கூடிய வினாக்களாவன:

புருஷ சூக்தம் மட்டும் இந்த ஐந்து இன மக்களின் ஒற்றுமையை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் தோற்றத்தைப் பற்றி புராண சார்பான வியாக்கியானம் கூறுவது ஏன்? மேலும் இந்தப் பழங்குடி மக்களிடையே சாதிப்பிரிவுகளை ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறது? புருஷ சூக்தம், சாதி பாகுபாட்டை நாட்டை விட முக்கியமானதாகக் கருதியது எதனால்? இக்கேள்விகளைப் பற்றி நோக்குவோம்.

இவையே புருஷ சூக்தத்தை ரிக்வேதத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது புலப்படும் சில புதிர்கள். புருஷ சூக்தத்தைச் சமூகவியல் கண்கொண்டு நோக்குமிடத்தில் வேறு சில புதிர்களும் கிளம்புகின்றன.

இலட்சியங்கள் நியதிகளாக அமைவது மிகவும் நல்லது; அவசியமானதும் கூட. சமுதாயமோ அல்லது தனி நபரோ அடிப்படை நியதிகள் ஏதும் இன்றி நலம்பெற இயங்குவது முடியாது. அடிப்படை நியதிகளானவை காலத்தின் மாறுதலுக்கும் அதன் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபட்டே தீரும். எந்த நியதியும் நிரந்தரமாக இருப்பதில்லை. நமது அடிப்படை நியதியின் மதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் அவ்வப்போது வரும். எந்த ஒரு அமைப்பையும், மறுபடியும் மதிப்பீடு செய்வதற்கு, அந்த அமைப்போடு தெய்வத்தன்மையை இணைக்காதிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

தெய்வத்தன்மை மீண்டும் மதிப்பீடு செய்வதைத் தடுக்கிறது. ஒருமுறை தெய்வத்தன்மை பெற்றுவிட்டால் எப்போதும் தெய்வத்தன்மை பெற்றது தான். புருஷ சூக்தம் சதுர்வருணக் கோட்பாட்டைத் தெய்வத்தன்மை பெற்றதாக்கியுள்ளது. புருஷ சூக்தம் ஒரு குறிப்பிட்ட சமூகக் கட்டுப்பாட்டைத் தெய்வத்தன்மை பெற்றதாக்கி, விமர்சிப்பதற்கும், மாற்றத்திற்கும் அப்பாற்பட்டதாக ஆக்கியது ஏன்? நிரந்தரமான கொள்கையாகக் கொண்டு விமர்சித்தலுக்கும், மாறுதலுக்கும் அப்பாற்பட்டதாக ஆக்கியுள்ளது ஏன்? இதுதான் புருஷ சூக்தத்திலுள்ள முதல் புதிராகச் சமுகவியல் மாணவனின் கண்ணில் படும்.

இந்த சதுர்வருணக் கொள்கையை வேரூன்ற வைத்திருப்பதில், புருஷ சூக்தம் விளையாடியிருக்கிறது. முதலாவதாக, இந்தோ-ஆரிய சமுதாயத்தில், நான்கு வகுப்பாரை ஏற்படுத்தி, அதை ஒரு சிறப்பான கொள்கைக்கு ஒப்பானதாக்கியுள்ளது. இது ஒரு ஏமாற்று வித்தை. ஏனென்றால் இதன் கருத்தாக்கம் அது எப்படி இருந்ததோ, அந்நிலையிலிருந்து நீண்ட நெடுங்காலமாக எந்தவிதத்திலும் மாறுபடவே இல்லை. இருந்த நிலையை உன்னத நிலைக்கு உயர்த்திய பிறகு, அதற்கு முழுவடிவம் கொடுத்துக் கடைபிடிக்கக் கூடிய ஒரு சிறப்பம்சமாக அதை எல்லோர்க்கும் காட்டியது. இது மேலும் ஒரு வஞ்சகத் தகடுதத்த வேலையாகும். ஏற்கனவே, இருந்த இலட்சியத்தை அமலாக்க அது விழைந்தது.

புருஷ சூக்தம் இருந்த நிலையை இலட்சியம் ஆக்கி அதை எல்லோர்க்கும் உணர்த்தவும் வைத்தது, இது ஒருவித அரசியல் தந்திரமாகும். இது போன்ற தகிடுதத்தம் வேறு எந்த ஒரு மத புத்தகத்திலும் இருப்பதை காணமுடியாது. இது ஒரு தில்லுமுல்லும், மோசடி வேலையன்றி வேறென்ன? ஏற்கனவே இருக்கின்ற நிலையைச் சிறப்பம்சமாக்கி, அதில் சமத்துவமின்மையை புகுத்தியதைத் தவிர, வேறு பொது நலனொன்றுமில்லாத இச்செயல், அப்பட்டமான சுயநலச் செயல் அல்லவா? ஒரு மனிதன் தனக்குப் பிரத்தியேக அனுகூல மிருப்பதை உணரும்பொழுது, இருப்பதைச் சிறப்பம்சமாக்கிக் காட்டப் பெரிதும் முயலுகிறான். ஆதுபோன்ற ஒரு நிலைமையைச் சிறப்பம்சமாக்கி காட்ட முனைவது தண்டனைக் குரிய குற்றத்தைக் காட்டிலும் குறைந்ததல்ல.

ஒரு காலத்தில் தீர்மானிக்கப்பட்ட ஒன்று காலம் பூராவும் தீர்மானிக்கப்பட்டதாகிவிட்டது என்பதன் மூலம் சமத்துவ மின்மையை நிரந்தரமாக்குவது என்பதாகிவிடும். இக்கருத்து அனைத்து ஒழுங்குமுறைகளுக்கும் எதிரான தாகும். சமூக மனச்சாட்சியுள்ள எந்த ஒரு சமுதாயமும் இதை என்றும் ஏற்றுக் கொள்ளாது. இதற்கு மாறாக, தனிப்பட்டவர்களுக்கிடையே சேர்ந்து வாழ்ந்ததனால் நீண்டதொரு வரலாற்றோடு ஏற்பட்ட முன்னேற்றமும் தனிப்பட்ட நபர்களுக்கும், மக்கள் பிரிவினர்களுக்குமிடையே காலப்போக்கில் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட எப்படிப்பட்ட முன்னேற்றமும், நேர்மையான நீதி நெறிக் கோட்பாட்டினால் ஏற்பட்டதேயாகும். அது தவறான அடிப்படையில் நிலைப்படுத்தப்பட்டிருந்தால், என்றும் நிலைப்படுத்தப்பட்டதாகவே ஆகாது. எனவே மீண்டும் அதைச் சீரிய வழியில் நிலைப்படுத்த வேண்டும்.

புருஷ சூக்தம் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், மேல் சொல்லப்பட்ட காரணங்களால் அதன் உள்நோக்கம் தண்டனைக்குரிய குற்றமாகும். அதன் விளைவுகள் சமூக விரோதம் கொண்டதாகும். எனவே இதன் நோக்கம் ஒரு வகுப்பார் சட்ட விரோதமாக இலாபம் அடைவதை நிரந்தரமாக்குவதும் அதே சமயம் மற்ற வகுப்பார் மீது அநீதியான கெடுதலைத் திணித்தலுமாகும். எனவே புருஷ சூக்தத்தின் கண்கட்டு வித்தையின் பின்னால் பொதிந்து கிடக்கும் நோக்கம்தான் என்ன? இதுதான் இரண்டாவது புதிர்.

புருஷ சூக்தத்தைச் சமூகவியல் கண்கொண்டு ஆய்ந்து அலசிப் பார்க்கும்போது, இப்புதிர்களுக்கெல்லாம் மிகப் பெரியதும் கடைசியுமான புதிர் சூத்திரர்களின் நிலை சம்பந்தமானது. புருஷ சூக்தம் வகுப்பு பிரிவுகளின் தோற்றத்தை ஏற்படுத்தியதோடு அப்பிரிவுகளெல்லாம் கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்றும் சொல்லுகிறது. எந்த சமய தத்துவமும் இதுபோன்ற ஒரு கோட்பாட்டை தெரிவிப்பது அறிவுடைமை என்று கருதியதில்லை. இதில் விந்தையிலும் விந்தையானது என்னவென்றால், ஒவ்வொரு வகுப்பும் சிருஷ்டி கர்த்தாவின் ஒவ்வொரு உறுப்புடனும் ஒப்பிடப்பட்டுள்ள விநோதம்தான்.

வெவ்வேறு வகுப்பினரை வெவ்வேறு உடலுறுப்புடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது ஏதோ திடீரென்று நிகழ்ந்த எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாக இருக்க முடியாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்ததாகும். இத்திட்டத்தின் பின்னால் பொதிந்து கிடக்கும் கருத்து இதற்காகவே ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடிக்கக் கையாண்ட வழிமுறை இரு பிரச்சினைகளை விடுவிக்கிறது. இவற்றில் ஒன்று, இந்த நான்கு வகுப்பாரின் செயல்களைத் தீர்மானிக்கிறது. மற்றது இந்த நான்கு வகுப்பினரின் படிப்படியான தரத்தை முன்கூட்டித் திட்டமிட்டபடி தீர்மானிக்கிறது.

இந்தச் சூத்திரம் வெவ்வேறு வகுப்பினரையும் சிருஷ்டிகர்த்தாவின் வெவ்வேறு உடலுறுப்புகளுக்குச் சமப்படுத்தி ஒப்பிட்டிருப்பதில் அனுகூலம் இருக்கின்றது. உறுப்பு, வகுப்பின் படிப்படியான தரத்தை நிர்ணயிக்கிறது. பிராமணர்கள் சிருஷ்டிகருத்தாவின் வாய்க்குச் சமப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வாயானது மனித உடலுறுப்புகளின் முதன்மையான உறுப்பாகும். எனவே பிராமணர்கள் இந்நால்வகைப் பிரிவினர்களில் மேன்மையானவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுகோலில் மிக மேலானவர்களாக ஆக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மிக மேன்மையான வேலைகளை ஒதுக்கியுள்ளனர். அறிவுக்கும் கல்விக்கும் பாதுகாவலர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

சத்திரியர்கள் சிருஷ்டி கர்த்தாவின் தோள்களுக்குச் சமப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு மனிதனின் அவயங்களில் தோள்கள் வாயை அடுத்துக் கீழே உள்ளவை. அதன் விளைவாக, சத்திரியர்கள் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக வரிசைக்கிரமத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிவுக்கு அடுத்தபடியாக உள்ள போரிடுவது செயல்பாடாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

வைசியர்கள், சிருஷ்டிகர்த்தாவின் தொடைகளுக்கு ஒப்பாகச் சமப்படுத்தப்பட்டுள்ளனர். அவயங்களின் முக்கியத்துவத்தில் தொடைகள் கைகளுக்கு அல்லது தோள்களுக்கு அடுத்துக் கீழே இருக்கின்றன. எனவே வைசியர்கள் வரிசைக் கிரமத்தில் சத்திரியர்களுக்கு அடுத்துக் கீழே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைத்தொழில் மற்றும் வாணிகம் செய்பவர்களாக ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பழங்காலத்தில் பெருமையிலும் புகழிலும் தரத்திலும் போர் வீரர்களுக்குக் கீழானவர்கள். சூத்திரர்கள் சிருஷ்டி கர்த்தாவின் பாதங்களுக்குச் சமப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதங்கள், மனிதனின் உறுப்புகளில் கடைசியும் இழிந்ததுமாகும். எனவே அதற்கொப்ப சூத்திரர்கள் சமுதாய மட்டத்தில் மிகவும் கடைசியாகவும் தாழ்ந்தவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் இழிவான வேலைகளைச் செய்யும் வேலையாட்களாக, பணி செய்பவர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

ஏன் புருஷ சூக்தம் இம்மாதிரி நான்கு வகை வகுப்பு பிரிவினைகளை அமைத்திட இவ்வழிமுறைகளைக் கையாண்டது? ஏன் சூத்திரர்களைப் பாதங்களுக்கு ஒப்பாக்கியது? இந்த நான்கு வகுப்பினரின் பிறப்பிற்கு வேறு எந்த வழிமுறைகளையும் ஏன் பின்பற்ற வில்லை? புருஷன் மட்டுமே சிருஷ்டியை விளக்கத் தருவித்துத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு உருத்தோற்ற அச்சுமாதிரி அல்ல. சாந்தோக்கிய உபநிடதத்தில் இருக்கின்ற வேதங்களின் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிற விளக்கத்தோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்போம் அதில் கூவதாவது:

“பிரஜாபதி வெப்பத்தை உலகங்களுக்குள் செலுத்தினார். மேலும் மேலும் வெப்பத்தை அதிகமாக்கி மூலங்களைப் படைத்தார். அக்னியை (நெருப்பு) பூமியிலிருந்தும், வாயுவை (காற்று) காற்றிலிருந்தும், சூரியனை (ஞாயிறு) ஆகாயத்திலிருந்தும் தோன்றச் செய்தார். இம்மூன்று கடவுளர்களின் மேல் வெப்பத்தை அதிகரிக்க வைத்து அவர்களினின்று சாரத்தை வடித்தெடுத்தார். அக்னியிலிருந்து ரிக் வேத வரிகளையும், வாயுவிலிருந்து யஜூர் வேதத்தையும், சூரியனிலிருந்து சாம வேதத்தையும் வரவழைத்தார். இம்மூன்று வேதங்களின் மேல் வெப்பத்தை அதிகம் செலுத்தி அவற்றிலிருந்து சாற்றை எடுத்தார். ரிக் வேதத்திலிருந்து ‘பூஹ்’ சொல்லையும், ‘பூவஹ்’ சொல்லை யஜூர் வேதத்திலிருந்தும், சாம வேதத்திலிருந்து ‘ஸ்வர்’ என்ற சொல்லையும் வரவழைத்தார்.

“இங்கே வெவ்வேறு கடவுளர்களிடமிருந்து வேதங்கள் தோன்றியதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறத. இந்தோ-ஆரியர்களைப் பொறுத்த வரையிலும் இவை போன்ற வானளாவிய கற்பனைகளுக்குக் குறைச்சலே இல்லை. தேவர்கள் 30 கோடி உள்ளனர். நான்கு கடவுளர்களிடமிருந்தும் நான்கு வருணங்கள் தோன்றியதைப் பற்றிக் கூறும் விளக்கம் இந்த நான்கு வகுப்பினரிடையே பிறப்பால் சம அந்தஸ்து இருக்குமாறு உண்டாக்கி இருந்திருக்க வேண்டும். புருஷ சூக்தம் இதுபோன்ற விளக்கத்தைத் தர ஏன் தவறிவிட்டது?

இன்னொன்றும் பார்ப்போம், வெவ்வேறு வருணத்தார்களும் புருஷனின் வெவ்வேறு வாய்களினின்றும் பிறந்தார்கள் என புருஷ சூக்தத்தின் ஆசிரியரால் சொல்ல முடியாதா என்ன? இதுபோன்ற எண்ணம் ஏற்படுவதில் எந்தவித கடினமுமில்லை. ஏனெனில் புருஷ சூக்தத்தில் ஆயிரம் தலைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தலையிலிருந்தும் ஒவ்வொரு ஜீவன் தோன்றியதாகச் சொல்ல இயலும். சிருஷ்டிக்கு அதுபோன்ற விளக்கம் தர அந்த புருஷ சூக்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்! விஷ்ணு புராணத்தில் வேதங்களின் தோற்றத்தைப் பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம்: (முய்ர், தொகுதி III, பக்.11)

“அவரது கிழக்கு வாயிலிருந்து காயத்திரி, ரிக்வேதம், திரிவிருத்தம், சாம – ரதாந்தரம் மற்றும் அக்னிஸ்தோமம் என்ற யாகத்தையும் உண்டாக்கினார். அவர் தமது தெற்கு வாயிலிருந்து, யஜூர் வேதத்தையும், திரிஷ்டுப மந்திரத்தையும், பஞ்சதாச ஸ்தோமத்தையும், பிரிஹத்சாமனையும் மற்றும் யுக்தியாவையும் உண்டாக்கினார். மேற்கு வாயிலிருந்து அவர், சாம வேதத்தையும், ஜகட்டி மந்திரத்தையும், சப்ததாச ஸ்தோமத்தையும் வைருபாவையும், மற்றும் ஆதிரத்ராவையும் உண்டாக்கினார். வடக்கு வாயிலிருந்து அவர், ஏகவிம்ஸா, அதர்வணம், அப்தோரியமன், அனுஸ்தபம் மற்றும் விராஜ் மந்திரங்களையும் உண்டாக்கினார்.”

ஹரிவம்சம் வேதங்களின் தோற்றங்களைப் பற்றி வேறுவிதமான விளக்கங்களைத் தருகின்றது. அதன்படி: (முய்ர், தொகுதி III, பக்.13)

“கடவுள் அவரது கண்களினின்றும் யஜூருடன் ரிக்வேதத்தையும், அவரது நாவின் நுனியிலிருந்து சாம வேதத்தையும், அவரது தலையிலிருந்து அதர்வண வேதத்தையும் உருவாக்கினார்.”

புருஷ சூக்தத்தின் ஆசிரியர் சிருஷ்டி கர்த்தாவின் உடலின் வெவ்வேறு பாகங்களை நான்கு வருணங்களின் தோற்றத்திற்கு சம்பந்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தவதைத் தவிர்க்க முடியாது போயிற்று என்பதைச் சில காரணங்களுக்காக ஏற்றுக் கொண்ட போதிலும் புருஷனின் வெவ்வேறு உறுப்புகளுக்கு வெவ்வேறு வகுப்புகளை ஒப்பிட்டுச் சமப்படுத்த இவ்வழியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது இன்னும் விடுபடாத கேள்விக்குறியாகவேயுள்ளது.

சிருஷ்டி கர்த்தாவின் வெவ்வேறு உடலுறுப்புகளை வெவ்வேறு வகுப்புகளுக்குச் சமப்படுத்தியுள்ள விளக்கம் புருஷ சூக்தத்தில் மட்டும்தான் கூறப்பட்டிருக்கவில்லை என்பதை அறிகின்ற போது, இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. இதே போன்றே விளக்கத்தை வைசம்பாயனர், யாகங்களை நடத்துவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல்வேறு வகுப்பினரான புரோகிதர்களின் தோற்றத்தை விளக்கும்போது தெரிவிக்கிறார். ஆனால் இவ்விரு விளக்கங்களுக்குமிடையே எவ்வளவோ வித்தியாசம்! வைசம்பாயனர் ஹரிவம்சத்தில் கூறியுள்ள விளக்கம் பின்வருமாறு: (முய்ர், தொகுதி, I, பக். 154-155)

“இந்தவிதமாக, பெருமைமிக்க பகவான் ஹரி நாராயணன் நீர் முழுவதும் வியாபித்து பலம் வாய்ந்த கைகளை விரித்து உலகின் மீது துயில் கொள்கிறார். அது ஒரு கடலாக உருப்பெற்றுள்ளது. இந்தப் பரந்த நீர்ப் பரப்பில் (ராஜஸ்) அது பெரும் சமுத்திரமாகத் தோற்றமளிக்கிறது. அவர் வேட்கைகளிலிருந்து (விராஜஸ்க) விடுபட்டவர். அவர் என்றும் அழிவில்லாதவர் என்பதை பிராமணர்கள் அறியும். கடினமான பலத்துடன் அவரது ஜொலிக்கும் உருவத்தோடு முக்காலத்தை (கடந்த, நிகழ்கிற, வருகிற காலங்கள்) ஆடையாக அணிந்து பகவான் துயின்றார்.

புருஷோத்தமன் (விஷ்ணு) எதை அறிவிக்கின்றாரோ அவையாவும் மிக உயர்ந்தவையாகும். புருஷன் தியாகியானவன். உலகில் உள்ள ஒவ்வொன்றும் புருஷன் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கே எப்படி பிராமணர்கள் யாகம் செய்வதில் ஈடுபடுத்தப்பட்டள்ளார்களோ அவர்கள் ரித்விஜாஸ் என்றழைக்கப்படுகிறார்கள்.

யாகங்கள் செய்வதற்கென்றே அவரது உடலிலிருந்து ஏற்கெனவே அவரால் உண்டாக்கப்பட்டவர்கள். பகவான் வாயிலிருந்து தோன்றிய பிரமா முதன்மையாகிறார், உத்காத்திரி என்போர் சாம வேதத்தை ஓதுபவர்கள். அவர் தமது தோள்களிலிருந்து ஹோத்ரி மற்றும் அத்வாரியுவையும் படைத்தார். பின்பு பிராஸ்தோத்ரி, மைதிரேவருணா மற்றும் பிராதிஸ்தாத்ரிகளையும் படைத்தார். அவரது வயிற்றிலிருந்து பிரதிஹார்தியும், போத்ரியும், அவரது தொடைகளினின்று அச்சவகவும், நெஸ்திரியும், அவரது கைகளிலிருந்து அக்னித்ரா மற்றும் வேள்வியான பிராமணியாவும், தோள்களிலிருந்து கிரவான் மற்றும் உன்னேத்ரியும் படைக்கப்பட்டார்கள்.

இந்தவிதமாக பரம்பொருளான பகவான் 16 வகை சிறப்புமிக்க ரித்விஜாஸை, எல்லா நிவே தனங்களையும் ஓதுவோர்களாகப் படைத்தார். எனவே இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புருஷன் வேள்வியில் உருவாயினர். அது வேதமென அழைக்கப்படுகிறது. வேதங்களுடன் எல்லா வேதாங்கங்களும், உபநிடதங்களும் மற்றும் சடங்குகளும் அவரது சாற்றிலிருந்து உண்டாக்கப்பட்டன.”

எனவே யாகங்களை நடத்த மொத்தத்தில் 17 வகைப்பட்ட புரோகித வகுப்பினர் இருந்தனர். ஆனால் சிருஷ்டி கர்த்தாவின் அவயங்களோ சில. ஆனால் பூசாரிகளின் வகைகளின் எண்ணிக்கையோ அதிகம். எப்படி இருப்பினும் இங்கே வெவ்வேறு உறுப்புகளையும், வெவ்வேறு வகுப்பினருக்கு ஒப்பிட்டு, எந்த வகையினரையும் புருஷனின் பாதங்களுக்கு சமப்படுத்துவது கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே இவர்களின் வெவ்வேறு வகையினரான சிருஷ்டியில் பாதங்களுக்குச் சமப்படுத்தி இவர்களை உருவாக்குவது முக்கியமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும் வைசம்பாயனர் என்ன செய்திருக்கிறார்? அதில் சிருஷ்டி கர்த்தாவின் ஒரே அவயத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட புரோகிதர் வகையினரை ஒப்பிட்டுள்ளார். அங்கே அவர்களின் எந்த வகையினரையும் பாதங்களுக்கு ஒப்பிடுவதை மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளார்.

எனவே புருஷசூக்தம் பிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் சூத்திரர்களை எப்படி நடத்தியுள்ளதென்பதையும், ஹரிவம்சம் பிராமணர்களின் பலவகைப்பட்ட வகையினரை எப்படி நடத்தியுள்ளதென்பதையும் ஒப்புநோக்கிப் பார்க்கும்பொழுது இதன் சூழ்நிலை மிகவும் சிக்கலானதாகிறது. புருஷ சூக்தம் எந்தவித தயக்கமுமின்றி சூத்திரர்கள் புருஷன் பாதங்களிலிருந்து பிறந்தார்கள், அதனால் அவர்கள் மற்றவர்களுக்குக் குற்றேவல் செய்ய வேண்டுமென்று எழுதுவதற்கு ஏதாவது ஒரு பயங்கரமான பகையுணர்வு இருந்திருக்குமோ? அப்படி பகை உணர்வு இருந்திருப்பின், அப்பகை உணர்வுக்குக் காரணமாக இருந்ததென்ன?

IV

புருஷ சூக்தத்தைச் சமுகவியல் கண்கொண்டு நுண்ணாய்வு செய்தபோது சூத்திரர்களைப் பற்றிச் சொல்லப்பட்டதில் மேற்கண்ட புதிர்கள் எழுந்தன. சதுர்வருணக் கோட்பாடுகளின் பிந்திய கால வளர்ச்சியில் சூத்திரர்களின் நிலையைப் பற்றிய ஏனைய புதிர்களும் எழுகின்றன. இம்முடிவுகளைப் பரிசீலிப்பதற்குப் பிந்திய காலத்தில் அதன் வளர்ச்சியைப் பற்றி முதலில் கவனத்தைச் செலுத்துவது அவசியமாகிறது. பிந்திய கால சதுர்வருண வளர்ச்சிகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று ஐந்தாவது வகுப்பினரைப் படைத்துச் சூத்திரர்களுக்கு அடுத்து கீழ்நிலையில் வைத்தது. இரண்டாவது முதல் மூன்று வருணத்தவர்களினின்றும் சூத்திரர்களைத் தனியாகப் பிரித்தது.

இந்த மாற்றங்களால் புருஷ சூக்தத்தில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி ஒவ்வொரு வகுப்பினரையும் தனித்தனியாக இயங்க வைத்து அந்தந்த வகுப்பினருக்குத் தனித்தனி விநோதமான பெயரிட்டு அப்பெயர்களால் அழைக்கப்படுவதாலேயே அவர்களது வகுப்பை யாவரும் அறிந்து கொள்ளும் வழிமுறையை ஏற்படுத்திவிட்டனர். அவ்வாறு கொடுக்கப்பட்ட பெயர்கள்: சவர்ணர்கள், அவர்ணர்கள், துவிஜர்கள், துவிஜர் அல்லாதவர்கள், மற்றும் திரிவருணிகர்கள் என்பன. இவை ஆரம்பத்தில் நான்கு வகுப்பினர்களின் உட்பாகுபாடுகளையும், அவர்களுக்குள் உள்ள வேற்றுமையைக் குறிக்கும் பெயர்களாகவுமிருந்தன. இந்த வகுப்புகளுக்கிடையே நிலவிய வேறுபட்ட நிலைமைகளை எடுத்து ஆராய்வது மிக அவசியமாகப் படுகிறது. ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் ஒரு புதிய புதிரை வெளிப்படுகிறது.

இந்தப் புதிர் மக்களின் கண்களில் படாமலிருப்பதற்கு இரு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, இப்பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் இயங்கவில்லை என்பதையும் இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உரிமைகளையும், சலுகைகளையும் உடையதாகியிருப்பதையும் அறியாததாலேயே இவர்கள் இதுபற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இரண்டாவதாக இந்தக் குழுக்களுக்கு ஒவ்வொரு பெயரைக் கொடுத்து ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள உரிமைகள், பயன்கள் இவையாவும் எந்த நியாயத்தின் அடிப்படையில் ஏற்பட்டது என்பதைப் பற்றி ஆராய்வதில் அவர்கள் நாட்டம் கொண்டதாகவும் தெரியவில்லை.

எனினும், இந்த வார்த்தைகளின் சட்டபடியான நுண்பொருள் என்ன என்பதை நாம் எடுத்துக்கொண்டு ஆராய்வோம். சவர்ணர் என்பது பொதுவாக அவர்ணர் என்பதற்கு எதிர்மறையானது. சவர்ணர் என்பது நான்கு வருணங்களில் ஒன்றை சேர்ந்தவர் எனப் பொருள்படும். அவர்ணர் என்பது நான்கு வர்ணங்களில் எதையும் சேர்ந்தவரல்லர் எனப் பொருள்படும். பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் யாவரும் சவர்ணர்களாவர். தீண்டப்படாதவர்கள் அல்லது ஆதி சூத்திரர்கள் அவர்ணர்கள் என அழைக்கப்படுவர். அதாவது அவர்களுக்கு எந்த வருணமுமில்லை.

ஆழ்ந்து பார்க்கையில், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் யாவரும் சதுர்வருணத்திற்குட்பட்டவர்கள். வாதப்படி, தீண்டப்படாதவர்கள் அல்லது ஆதிசூத்திரர்கள் சதுர் வருணத்தினருக்கு அப்பாற்பட்டவர்கள். துவிஜர் என்பவர்கள் பொதுவாக அத்விஜர் என்பவர்களுக்கு எதிரானவர்கள். துவிஜர் என்பதன் பொருள் இருபிறவிகள் எடுத்தவர்கள் என்றும் அத்விஜர் என்பபோர் ஒரே பிறவி எடுத்தவர்கள் என்றும் பொருள்படும். இந்த வித்தியாசம் உபநயனத்திற்கு (பூணூல் அணிவது) உரிமை கொண்டவர்கள் என்னும் அடிப்படையாகக் கொண்டது.

உபநயனம் (பூணூல் அணிவது) இரண்டாவது பிறப்பைக் குறிப்பதாகும். யார் பூணூல் அணிய உரிமை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் துவிஜர்கள். சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் பூணூல் அணிய உரிமை பெற்றவர்களல்லர். எனவே அவர்கள் அத்விஜர்களாவர். திரிவருணிகர்கள், சூத்திரர்களிலிருந்து வேறுபட்டவர்கள். இந்த வேறுபாட்டில் எவ்வித சிறப்பும் சமன்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதில் துவிஜர்களுக்கும் அத்விஜர்களுக்குமிடையே எந்த வேறுபாட்டை வெளிப்படுத்துகிறதோ அதே வேறுபாட்டைத்தான் உணர்த்துகிறது. இதில் ஒரு விதிவிலக்கு என்னவென்றால் இந்த வித்தியாசம் சூத்திரர்கள் வரை வரையறுக்கப்பட்டதே ஒழிய, ஆதி சூத்திரர்கள் வரை நீட்டிக்கப்பட வில்லை. ஆதி சூத்திரர்கள் தனி வகுப்பினராக எழுவதற்கு முன் ஏற்பட்ட சொல்லாக்கமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் அத்விஜர்கள் என்பதை மனத்திலிருத்திக் கொள்ள வேண்டு. பின் ஏன் சூத்திரர்கள் சவர்ணர்களென்றும், ஆதி சூத்திரர்கள் அவர்ணர்களென்றும் கருதப்படுகிறார்கள்? ஏன் முன் சொல்லப்பட்டவர்கள் உள்ளேயும் பின் சொல்லப்பட்டவர்கள் சதுர் வருணத்திற்கு வெளியேயும் வைக்கப்பட்டார்கள்? பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் சதுர்வருணத்தின் நான்கு முனைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களெல்லோரும் சவர்ணர்கள் ஆவர். பின் ஏன் சூத்திரர்கள் மட்டும் திரிவருணிகர்களுக்குரிய உரிமைகளை அளிக்க மறுக்கப்பட்டுள்ளார்கள்?

எனவே சூத்திரர்கள் பற்றிய புதிரைவிட பெரியதொரு புதிரை உலகில் வேறெங்காவது காண இயலுமா? உண்மையாகவே, அவர்கள் யார், அவர்கள் எவ்வாறு ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதை ஆராயவும், விளக்கவும் அவசியமேற்பட்டுள்ளது.

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 1)

Pin It