குடற்காய்ச்சல் (Typhoid) தடுப்புச்சத்து நீரை (Vaccine), சர் அலமோர்த் ரைட் (Sir Almorth Wright) (1861-1947) என்ற பிரிட்டிஷ் அறிவியலார் நோய்களை உண்டாக்கும் நுண் உறுப்பமைதியுடைய உயிரான நோய் நுண்மங்களைத் தனிச்சிறப்பாக ஆய்ந்து, அந்த நச்சுக்காய்ச்சலை எதிர்த்துத் தடைக்காப்புச் (immunity) செய்யக் கண்டுபிடித்தார். லூயிஸ் பாஸ்டர், (Louis Pasteur) (1822-95) என்ற பெரிய பிரெஞ்சு வேதியியலாரை அவர் பின்பற்றி ஆய்வு செய்தவர். பாஸ்டர் மக்களின் நோய்களுக்கான எதிர்ப்புக்கான தடைக்காப்பை, நோய்த் தடுப்புச் சத்து நீர்களை (Vaccines) ஊசி மூலம் குருதியில் உட்செலுத்தியோ அல்லது திறன் குறைந்த நுண்ணுயிர்களின் சேகரிப்புத் தொகுதியை உட்செலுத்தியோ இயற்கையான பகைவர்களை உள்ளேயே உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தி வளர்த்தார்.

ரைட், இறந்த நோய் நுண்மங்களையும் ஊசி வழிச் செலுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்து நச்சார்ந்த வடிவில் (virulent form) நோய்களை உண்டாக்கும் அம்மை குத்துவதிலுள்ள (inoculate) அபாயத்தை விலக்கினார். நோய்க்குறிச் சோதனைப் பேராசிரியராக (Professor of Experiemental Pathology) இலண்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அவர், தொற்றிப் பரப்பும் உணவு அல்லது தண்ணீர் காரணமாய் அமைந்த தொற்று நோயான குடற்காய்ச்சல் சிக்கல்களை, ஆய்வதில் தனித்த விருப்பமுடையராயிருந்தார். கிரிமியன் போரில் (Crimean War) பிரிட்டிஷ் படைவீரர்கள் பலர், எதிரியால் கொல்லப்பட்டவர்களைவிட, மிகுதியாகக் குடற் காய்ச்சலால் இறந்தனர்.

Pin It