நினைப்போடு சிவந்து கொண்டே காலத்துக்கும் உடன் வரும் மருதாணி எல்லாருக்கும் பொதுவானது.

விரல்களில் சிவக்கும் போதே இதயத்தில் சிவக்கும் சித்திர விரல்கள் அவை. அண்ணி மருதாணி இலை பறித்து வைத்திருக்கும் அன்று மாலையே கண்ணில் சிவப்பு பொங்க பார்ப்பேன். அது ஒரு நிகழ்த்து கலை போல நிகழும். அது ஒரு சித்திர வேலைப்பாடு போல உலவும். ஒரு பெரும் வேலை போல பகல் எல்லாம் நடக்கும். சேர்க்க வேண்டியதை சேர்த்து... அளவாக நீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுக்கையில் அங்கமெல்லாம் மணக்கப் போகும் அந்த இரவுக்கு தூக்கம் போயிருக்கும்.

எனக்கு... எனக்கு.... எனக்கும்.... எனக்கும் என்று எங்கள் லைன் வீடுகளில் உள்ள குட்டீஸ் அனைவருமே கைகளை நீட்டும் முன்பே கண்களை நீட்டி விடுவார்கள். பாட்டி கதை சொல்வது போல... எங்க அண்ணி மருதாணி கலர் சொல்லும்.

வாகாக அமர்ந்து கண்ணும் கருத்துமாய் நீட்டிய விரல்களில் நோகாமல் குப்பி மாட்டும். ஒரு பிடி மருதாணி உருண்டை எடுத்து அதை விரல்களால் அப்பிடி இப்பிடி என ஒரு அழுத்தம் தந்து பெருவிரலால் உருட்டி அழுத்தி அப்படியே எடுத்து ஒவ்வொரு விரலுக்கும் அளவு பார்த்து அழகு பார்த்து அம்சம் பார்த்து வைத்து நகம் முழுக்க அப்பும். வைத்த பிறகு மேலாப்பில் அழுத்தம் தந்து அது ஆழமாய் ஒட்டிக் கொள்ள வேண்டிய நேரத்தை உருட்டும். விரல் நுனி அழகாய் சிவக்க வேண்டும் என்ற ஆவல் அது கண்ணில் மருதாணி இலை உதிர்க்கும். கூர்ந்திருக்கும் முகத்தில் மிக மெல்லிய புன்னகை சிவந்து கொண்டே இருக்கும்.marudhani 550மருதாணி வைத்துக் கொள்ள விரும்பாத ஆள் உண்டா. இன்றைய காலம் கருதி... வயது கருதி சிரித்துக் கொண்டே ரசித்தபடியே விலகி போக வாய்ப்பிருக்கிறதே தவிர உள்ளே சிவக்கும் ஒவ்வொரு விரலின் பின்னும் ஒரு பால்ய வாசம் அடிப்பதை மறுக்க இயலாது. மறக்க முடியாத மௌன வாசம் அதற்கு உண்டு. ஒவ்வொரு விரலிலும் செக்கச் சிவந்த வானம் எழுவதை எப்படி விரும்பாமல் போக.

ஒவ்வொரு விரலுக்கும் பார்த்து பார்த்து வைக்கும். அசையாமல் ஆடாமல் ஊசி போட அமர்ந்திருக்கும் பாவனையில் பார்த்துக் கொண்டிருப்போம். அன்று செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்து முடித்து இரவு உணவுக்கு பிறகு தான் இந்த மருதாணி மகத்துவம் அரங்கேறும். முதலில் பக்கத்து வீட்டு தோழிக்கு தான் வைக்கும். நாங்கள் வேடிக்கை பாப்போம். கண்கள் சிவக்க சிவக்க பார்க்கும் வேடிக்கைக்கு.... நேரம் இல்லை. காலம் இல்லை. ஆசை மட்டுமே. சிவப்பேறிய புன்னகை நிரந்தரமாய் இருக்கும். தொடைகளில் கைகளை ஊன்றி ஒரு தவத்தை நடத்துவது போலவே குனிந்து கொண்டு சூழ்ந்திருப்போம்.

அது ஒரு சிற்ப வேலை. துளி பிசகாமல் கால்வாசி விரல் மூடி... மீந்த மருதாணியை அப்படியே கையோடு எடுத்து மீண்டும் மருதாணி குண்டாவுக்குள் போட்டு மீண்டும் அப்படி இப்படி என்று பிசைந்து ஒரு சிறு உருண்டையை எடுத்து அடுத்த விரலுக்கு அப்பும். நீட்டிய கைக்காரன் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருப்பான். அவன் முகம் கூட வேர்த்து விட்டிருக்கும். மருதாணி வைக்கும் போது பெரிதாக பேசிக்கொண்டது இல்லை. மூச்சின் வாசத்தில் மருதாணி தான் பேசும். இன்னதென சொல்ல இயலாத விவரிக்க முடியாத வாசம் மருதாணி வாசம். மருதாணி வாசத்தில் அந்த லைனே பச்சை பிடித்துக் கிடக்கும். அடுத்து யாருக்கு என்று போட்டியே நடக்கும். அந்த நேரத்தில் எந்த கை கண்ணில் முழுதாக விழுகிறதோ அந்த கைக்கு தான் அடுத்த லாட்டரி பரிசு. எப்போதும் அந்த கை எனதாகத்தான் இருக்கும்.

எங்க அண்ணி என்பதால் எனக்கு கொஞ்சம் அதிகப்படியான சலுகைகள் இருக்கும். ஒரு சட்டாம்பிள்ளைத்தனம். இப்பிடி வா அப்படி வா என்று எல்லாரையும் ஒருங்கிணைப்பேன். கொஞ்சம் ஓவராவே. குட்டி அமைதியா உக்காரு.. அப்பதான் நல்லா செவக்கும் என்ற அதட்டலில் கூட அக்கறை தான் இருக்கும். எனக்கு எப்போதுமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக வைத்து விடும். பார்த்து பார்த்து வைத்து விட்டு.. உள்ளகையில் வைக்க வரும் போது வேண்டாம் என்று சொல்லி விடுவேன். புள்ளைங்க தான் உள்ளங்கைல வைப்பாங்க. எனக்கு விரலே போதும் என்று இழுத்துக் கொள்வேன்.

இந்த மருதாணி இரவு மிக மோசமான இரவு. தூக்கமும் வராது. வந்தாலும் தூங்க முடியாது. மருதாணிக் கையை நெஞ்சோடு மெல்ல சாய்த்து வைத்து விட்டு மல்லாக்கவே படுத்திருப்பது தண்டனை. கொஞ்சம் அசந்து திரும்பி விட்டால் அது அங்கு இங்கு பட்டு விரலில் மாட்டி இருக்கும் மருதாணி குப்பி காய்ந்தும் காயாமலும் உதிரத் தொடங்கிவிடும். எத்தனை நேரம் தான் சித்தனைப் போலவே படுத்திருப்பது. கொஞ்சம் புரண்டால் மருதாணி மறந்தே போகும். ஆனாலும் திடுக்கென நினைவில் மருதாணி வாசம் பொங்க... சட்டென இல்லையே கை சரியாதான் வெச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடும். அப்புறம் பாரு செவப்ப என மீண்டும் நெஞ்சோடு பவ்யமாக வைத்து கொள்வேன். நினைப்பும் தூக்கத்துக்கும் இடையே மருதாணிச்செடி பச்சை பற்களில் சிரிக்கும்.

விடிந்ததும்... பாரத்தால் பாதி உதிர்ந்து பாதி ஒட்டி.... 10வது ரிசல்ட்க்கு காத்திருக்கும் படபடப்போடு கைகளை கழுவ செல்வேன். மெல்ல மெல்ல கழுவி... வேகமாய் தேய்த்து கலர் போய்விட்டால் என்ன செய்வது... அந்த பதட்டம் வேற. கழுவி ஒரு வழியாக துடைத்து பார்த்தல்... ஒரு விரல் திக்காக சிவந்திருக்கும். ஒரு விரல் கொஞ்சம் கம்மியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கவனமா தூங்கி இருக்கலாமோ.... ஐயோ என்றிருக்கும். எனக்கு நல்லா சிவந்திருக்கு. உனக்கு.. உனக்கு அவ்ளோ சிவக்கலயே... என்று ஆளாளுக்கு ஜோடி வெச்சு அளவு பார்த்துக் கொண்டிருப்போம். அக்கா நீ குட்டிக்கு மட்டும் நல்லா வெச்சி விட்ருக்க. எனக்கு பாரு ஒண்ணுமே சிவக்கல... என்று பாண்டி கண்கள் முட்ட முறையிடுவான். படுத்ததும் அவன் கைகள் புரண்டு எல்லாவற்றையும் உதிர விட்டிருப்பதை ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

சில விரலில் எத்தனை கழுவினாலும் போகாது. பிசிர் நன்றாக ஒட்டி சதையோடு ஜீவன் ஆகி இருக்கும். அப்போது கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைத்து அப்படியே நீவி நீவியே உரித்தெடுப்போம்.

மருதாணி விடியலில் வயது குறைந்து விடும். வானவில் மலர்ந்து விடும். மருதாணி இலைகளில் பூத்து குலுங்கும் சிறு பிள்ளை இதயங்கள். அவை சீனி சக்கரை வளையங்கள்.

நீ என்ன புள்ளையா.. மருதாணி வெச்சிருக்க என்று மணிராஜா கேங் வம்பிழுக்கும்.

பசங்களும் வைக்கலாம்.. உனக்கு தெரியல என்று நான் டியூசன் எடுப்பேன்.

எப்படியிருந்தாலும் மருதாணி கையை ஆட்டி ஆட்டி பேசி மற்றவர் கவனத்தை திருப்புவதில் ஒரு திருப்தி. மாநிற கைக்கு மருதாணி சிவப்பு மணக்கும் செய்தி தானே. நினைத்து பார்க்கிறேன். கடைசியாக எப்போது மருதாணி வைத்தேன். நினைப்பில் இல்லை. வெகு தூரத்திலேயே அந்த வாசம் நின்று விட்டது. இப்போதும் கல்யாண கச்சேரிகளில்... மருதாணிக்கு பதிலாக கோன் கொண்டு மெகந்தி என்று இப்படி அப்படி என இழுப்பதை பார்க்கவே என்னவோ போல இருக்கும். ஒதுங்கி கொள்வேன். எத்தனை டிசைன் போட்டாலும்... ஆற அமர உட்கார்ந்து... பார்த்து பார்த்து விரல்களில் பதிந்த முன்னொரு காலத்து மருதாணி வாசத்துக்கு ஈடு இல்லை. இலை பறித்து இசை கூட்டுவது போல வரக் வரக் என்றரைத்து தத்ரூபம் உண்டாக்கி பச்சையில் சிவப்பு உருவாக்கிய சித்து சிந்தனையில் அப்பி இருக்கிறது.

மனம் சிவக்க தட்டச்சு செய்கிறேன். ஒவ்வொரு விரலிலும் மருதாணி வைத்துக் கொண்டிருக்கிறது வாசமுள்ள வார்த்தைகள்.

- கவிஜி

Pin It