"நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி" பழனி பாரதி.

"உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு"- வைரமுத்து.

இரண்டு வரிகளும் தனி தனி கட்டுரைக்கானது. இது... இதில் சேராத விரல்களின் கோர பதிவு. கண்ணை மூடிக்கொண்டு எழுதுகிறேன். வாய் திறக்காமல் படித்து போங்கள்.

சாலையில் பயணிக்கையில்.... சிக்னலில் நிற்கையில்... உணவகங்களில்... கடைகளில்... நடைப்பயிற்சியில்... எனக்கு பாதங்கள் பார்க்கும் பழக்கம் இருக்கிறது.

பாதங்கள் சொல்லி விடும்... அந்த ஆளின் பாதி உணர்வுகளை. நகங்களின் பராமரிப்பு சொல்லி விடும்... அந்த ஆளின் வாழ்வின் புரிதல்களை.old man nail cuttingசில கால் நகங்கள்... வண்ணம் பூசி... வயதும் ஏறாமல் புன்னகைக்கும். அது வேறு. ஆனால் ..பெரும்பாலும் கால் விரல் நகங்கள் நீண்டு பட்டா கத்தி பருவம் வந்தது போல இருக்கும். சிலது சுருண்டு எருமை கொம்பென ஒருமையில் அழைக்கும்.. வாடா வந்து பாரு என்று. நான் அப்படியே ஆட்களின் முகம் பார்ப்பேன். நீட்டாக இருப்பார்கள். ஐயர்ன் கலையாத உடை. அமைதி பொங்கும் முகம். ஆதுரம் கலந்த சிகை என்று அக்மார்க்.... நேராக மாப்பிளை ஆக்கி விடலாம். அல்லது மணப்பெண்ணாக்கி விடலாம். ஆனால் கால் விரல் மட்டும்... அந்த நேர பயங்கரமாக இருக்கும். டக் இன் செய்து ஜம்மென்று இருப்பான். கால் விரலில் கத்தி சொருகி இருப்பான்.

செருப்பை தாண்டி நீண்டிருக்கும் விரலெல்லாம் வியர்க்க செய்து விடும். நக கீறல்கள் தாம்பத்தியத்தில் தரிசனங்கள். ஆனால் இதெல்லாம் கொலை கேசில் முடிந்து விடும்.

ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். தெரிந்தா தெரியாமலா.. ப்ச் பாத்துக்கலாம் என்பது போன்ற வழி வழி லெத்தாஜியா. எல்லாவற்றுக்கும் நேரம் தரும் மனிதர்கள்...இதற்கு ஏன் முக்கியத்துவம் தர மறுக்கிறார்கள். மொபைல் நோண்டுவதற்கு வாழ்நாளையே தரும் மனிதர்கள்.. கால் விரல் நகங்களை வெட்ட மட்டும் சோம்பேறித்தனம் படுவது எப்படி.

அது சோம்பேறித்தனமா... அல்லது கவனமின்மையா....அல்லது குனிய முடியாத அளவு தொப்பையா...அல்லது அது பற்றியே பிரக்ஞை இல்லாத தனமா...?
எந்த கேள்விக்கும் ஒரு விடை இருக்கிறதே. எந்த பயணத்துக்கும் ஒரு பாதை இருக்கிறதே. எந்த விரலுக்கும் ஓர் அழகிருக்கிறதே.

சிலர் கை விரல்களைக் கூட அழுக்கு குடோனுக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள். வருமே கோபம். வெறிக்க பார்த்து வெறுப்பேத்தி விடுவேன். என்னை சார்ந்தவர்கள் யாரேனும் கைவிரல் கால் விரல் நகம் கொண்டு சரியான பராமரிப்பு இல்லாமல் பக்கம் வந்தால் முதலில் முறைப்பு. பிறகு இருக்கு மணிக்கணக்காய் வகுப்பு.

நான் ஊருக்கு போன உடனேயே.... பிரவீன் கைகளை காட்டி..." மாமா பாத்துக்கோங்க... பாத்துக்கோங்க.. வெட்டிட்டேனே என்று கைகளை காட்டி சொல்வான். சிறுவயதில் அந்தளவு சுளுக்கெடுத்திருக்கிறேன். தம்பி அப்படியே காலை உள்ளிழுத்துக் கொண்டு ஓடி... கால் விரல்களை சுத்தம் செய்து கொண்டு தான் என் முன்னால் வருவான்.

பொதுவாகவே இந்த மாதிரி நக அழுக்குகளை கண்டால் பயங்கரமாக திட்டுவேன். "சோத்துல உப்பு போட்டு தான திங்கற" என்று ஆரம்பித்து.... எங்கு சென்று நிறுத்துவேன் என்றால்... முகம் சோர்ந்து கண்ணீர் மல்க என் முன்னால் நகம் வெட்டுவதை பார்த்த பின் தான். ஒவ்வொரு ஞாயிறும் முதல் வேலை நகம் வெட்டுவது. "சே" பழகி விட்டான். தைரியமாக கையை ஆட்டி பேசுகிறான் என்றால் நகங்கள் சுத்தம் என்று அர்த்தம். பம்முகிறான் என்றால்... அந்த வாரம் தாமதம் என்று அர்த்தம். முதல் முறைப்புக்கே புரிந்து கொண்டு ஓடி விடுவான். பிறகு டக் டக் என்று நெயில் கட்டர் கூவுவது கேட்கும்.

நான் எப்போதும் பிளேடில் தான் வெட்டுவேன். இருபது நகங்களுக்கும் மீறினால் 6 நிமிடங்கள். துக்கடா வேலைக்கு ஒன்றரை பக்கம் எழுத வேண்டி இருக்கிறது.

என்னை சார்ந்தவர்கள் பொதுவாக எப்போதும் இதில் கவனமாகவே இருப்பார்கள். ஆனால் பொதுவில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. கையில் நக கண்களில் அழுக்கோடு ஐ போனில் பேசிக்கொண்டிருக்கும் ஆபத்தானவர்களை என்ன செய்வது. தன் நகத்தை கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதவன் எப்படி வீட்டை சுத்தமாக வைத்திருப்பான். எப்படி வீதி... எப்படி சாலை... எப்படி ஊரு.... எப்படி நாடு. அதுவுமில்லாமல் நகத்தில் அழுக்கு என்பது சுய ஒழுக்கம் சார்ந்தது மட்டுமல்ல... சுயத்தையே தூக்கி போட்டு மிதிப்பது. கழிவறை வேலைகள் போல தான். நக அழுக்குகளும் நாசூக்காக அகற்றப்பட வேண்டும். இல்லையா...!

உண்ணும் போது நகத்தில் இருக்கும் அழுக்கு வயிற்றுக்குள் போவது அடுத்தது. முதலில் அழுக்கோடு எப்படி பைக் ஒட்டிக் கொண்டு போக முடிகிறது. அழுக்கோடு டீக்கு எங்கனம் கையை நீட்ட முடிகிறது. கை குலுக்கலுக்கு எப்படி... என்ன தைரியத்தில் முன் வர முடிகிறது. எப்படி வடையை கார சட்னியில் தொட்டு உசு உசுன்னு தின்ன முடிகிறது. பக்கத்தில் உள்ளோர் கண்களில் பட்ட பிறகும் நடுக்கம் வராத அந்த அழுக்கு நகங்களில் அப்படி என்ன வன்மம்.

ஆறு மணிக்கு மேல நகம் வெட்ட கூடாது. அர்த்தராத்திரில நகம் வெட்டினா நக்கிட்டு போகும் என்று சில வீணா போன மக்கு மட்டைகள் சொல்ல தான் செய்யும். அவரவர் அறையில் வெளிச்சம் இருக்க விவேகத்தோடு வெட்டி காகிதத்தில் எடுத்து குப்பையில் சேர்க்கலாம். 'Where there is a will there's a way.

அழகுக்கு நீட்டிய ஒற்றை விரல் நகம் பிரச்சனை இல்லை. அதில் அழுக்கு சேர்வது தான்... அகில உலக பிரச்சனை. சில விரல்கள் பிசாசு விரல்களை வித விதமான பராமரிப்பில் பூட்டி இருக்கும். அது தனிக் கலை. பெண்கள் பாலிஷ் அடிப்பது அடிக்காதது விஷயம் இல்லை. பவுடர் பூசி பள பளவென வருவதை போல கை கால் விரல் நகங்களை பாதி நிலவாக்கி பவனி வாருங்கள். வாவ் எனலாம். எல்லாம் சரி கொண்டையை மறந்துட்டேன் என்பது போல அம்சமான ஆடையில் எல்லாம் சரியாக கொண்டு கால் விரலில் ஒரு சென்டி மீட்டருக்கு அழுக்கு கூடையை தூக்கி கொண்டு சுற்றினால்.. ஒவ்வே தான்.

சிலர் கைகளை நன்றாக வைத்துக் கொண்டு கால்களை கோட்டை விட்டு விடுவார்கள். கால்களும் நமதே. அது தான் இந்த கோபுரத்துக்கு தூண்கள். வெட்டி மினுங்க விடுங்கள். கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு என்று யாராவது பாடலாம். விதவிதமான செருப்புகள் கால்களில் மிளிர... அதில் பல கால்கள் நகங்களில் நீண்டு.... தான் குரங்கன் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும். சொல்லவா முடியும். வாயை மெல்லத்தான் முடியும். பத்து கால்களுக்கு ஒன்று பளீர் என்று அழகியலின் அம்சம் சேர்க்கும். இத்தனை நேர தண்டனைக்கு இந்தா இந்தா தேன் துளி என்பது போல அவைகள்.

பல கால்கள் பாதாளம் காட்ட சில கால்கள் சித்திரம் பூட்டும். எல்லா கால்களையும் சித்திரத்துக்கு செல்ல சொல்லவில்லை. சுத்தத்துக்கு அருகே நிற்கையில்... தாறுமாறான கால்கள் கூட தகவமைப்பில் தாளம் சேர்க்கும் தானே.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முன்னோர் வரி
முகத்தின் அழகு நகத்தில் தெரியும். எனது இன்னொரு வரி

- கவிஜி

Pin It