கேரளா கண்ணூரில் செயல்படும் மார்க் (மலபார் வன விலங்குகள் நலம் மற்றும் மீட்பு மையம் - Malabar Awareness and Rescue Centre for wildlife MARC) என்ற சூழல் பாதுகாப்பு இயக்கம் ஏழு ஆண்டுகளுக்கு முன் இயற்கையையும், உயிரினங்களையும் நேசிக்கும் ஒத்த கருத்துள்ள சில நண்பர்களால் தொடங்கப்பட்டது.

அங்காடிக் குருவிகளுக்கு கூடு கட்டிக்கொடுத்து இவ்வியக்கம் தன் பணிகளை தொடங்கியது. மார்க்கின் பல திட்டங்களில் ஒன்று மட்டுமே இது. சூழல் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள மூன்று பேர் சேர்ந்து ஆரம்பித்த இவ்வியக்கம் இன்று 75 பேர் உள்ள பேரியக்கமாக மாறியுள்ளது. அங்காடிக் குருவிகள், கொக்குகள், ஆமை, பாம்புகள் போன்ற உயிரினங்களைக் காப்பது, கோடையில் உயிர் நீர் அளிக்கும் திட்டம் போன்றவற்றை மார்க் செய்து வருகிறது.Malabar Awareness and Rescue Centre for wildlifeசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் பரப்ப, அதன் மூலம் சூழலிற்கு நட்புடையவர்களாக வாழ குழந்தைகளையும், பலதரப்பட்ட தொழில்புரிவோரையும் ஒன்றிணைந்து செயல்பட வைப்பதே மார்க்கின் இலட்சியம். வனத்துறையின் ஒத்துழைப்பும் மார்க்கிற்குக் கிடைக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், புகைப்படக் கலைஞர்கள், மீட்புக் குழுவினர் என்று மார்க்கில் பல பிரிவுகள் செயல்படுகின்றன. இதில் செயல்படுபவர் அனைவருமே தன்னார்வ நோக்குடனேயே பணியாற்றுகின்றனர்.

தீயணைப்பு, காவல் படையினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் (குடும்பஸ்ரீ), இளைஞர் நல அமைப்புகள் போன்றவர்களுக்கு மார்க் விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்துகிறது. சமூகத்தில் நிலவும் இயற்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்ற மார்க் ஆர்வலர்கள் பாடுபடுகின்றனர்.

தன் சேவைகளை குருவிக் கூடுகள் வைத்துத் தொடங்கிய மார்க் வெறுமனே கூடுகளை வாங்கி மரங்களில் கட்டவில்லை. இதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு தெளிவான ஆராய்ச்சிகள் செய்து நூறு கூடுகளை உருவாக்கி குருவிகளுக்குக் கொடுத்துள்ளனர். முதல் திட்டம் வெற்றி பெற்றதுடன் ஊர்க்காரர்களும், வனத்துறையினரும் மார்க்கிற்கு ஃபுல் மார்க் கொடுத்தனர்.

இதன் பிறகு வனவிலங்கு நல வாரம், கோடைகாலத்தில் பறவைகளுக்காக உயிர் நீர் அளிக்கும் திட்டம், பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு, யானைகள் பாதுகாப்பு போன்ற பல செயல்கள் நடந்தேறின. ரோஷ் நாத் ரமேஷ், ஆஷ்லி ஜோஸ், ரியாஸ் மாங்காடு ஆகியோரே மார்க்கின் தோற்றுநர்கள்.

மார்க்கிற்கு ஏன் ஃபுல் மார்க்?

வன விலங்குகளின் வாழிடம், அவற்றின் குணநலன்கள், மனிதருடன் உள்ள உறவு போன்றவற்றை அறிவியல்பூர்வமாகப் புரிந்து கொள்ள, விழிப்புணர்வு பெற மார்க் மக்களுக்கு உதவுகிறது. ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் விலங்குகளை மீட்பதுடன் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வன விலங்குகளைப் பிடிக்க மார்க் முன்னின்று செயல்படுகிறது.

கண்ணூர் காவல் நிலையத்தை முள் முனையில் (அல்லது முள்முனையில்) நிறுத்திய முள்ளம்பன்றியையும், ஊரையே நடுங்கவைத்த புலியையும் பிடித்த பெருமை மார்க்கிற்கு உண்டு. இந்த அமைப்பே கேரளாவிற்கு முதல்முறையாக வந்த யுரேசியன் கழுகை காப்பாற்றி அதற்கு சிகிச்சையளித்து மீண்டும் அதை சுதந்திரமாக்கி காட்டிற்கு திருப்பி அனுப்பியது.

அந்நியரல்ல சொந்தங்கள்

இயற்கையும், விலங்குகளும் அந்நியமாகாமல் உடன் இணைந்து மனிதன் வாழ வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள். சூழல் மண்டலங்களின் பாதுகாப்பிற்காக ஊர்க்காடுகள், வண்ணத்துப்பூச்சிப் பூந்தோட்டங்கள், ஈர நிலங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரோஷ் நாத் ரமேஷ். இவரே இந்த அமைப்பின் இப்போதைய தலைவர். அடிப்படை தளத்தில் செயல்பட்டால் மட்டுமே சரியான பலன் கிடைக்கும். அறிவியலுடன் பொதுமக்களை இணைக்க வேண்டியது அவசியம். இதற்காக உள்ள தளமாகவே மார்க் தொடங்கப்பட்டது என்று ஆய்வாளரான இவர் கூறுகிறார். ரியாஸ் மாங்காடு மார்க்கின் தோற்றுநர்களில் ஒருவர். உயிரினங்களை மீட்க 12 பேர் அடங்கிய மீட்புக்குழு மார்க்கில் செயல்படுகிறது. பாம்புகளைக் காப்பாற்றவே பலரும் தங்களை அழைக்கின்றனர் என்று ரியாஸ் கூறுகிறார்.

கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்த விவரங்கள் மார்க் அமைப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுவருகிறது. தேசிய பாதை விரிவாக்கத்திற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. அப்போது பல பறவைகளுக்குக் காயம் பட்டது. மார்க்கின் மூலம் இவை பாதுகாக்கப்பட்டன. ஆஷ்லி ஜோஸ் ஒரு புகைப்படக்கலைஞர். அதிக மக்களிடம் சூழல் பாதுகாப்பு பற்றிய செய்திகளைச் சென்று சேரும்படி செய்தால் மட்டுமே நாம் விரும்பும் பலன் கிடைக்கும் என்கிறார் இவர்.

சூழல் பணிகளில் ஈடுபட்டுவரும் மார்க்கின் கிரீடத்தில் மேலும் ஒரு பொன்சிறகு. சூழல் பாதுகாப்புப் பணிகளில் மிகச் சிறந்த வகையில் பலதரப்பட்ட செயல்கள் நடத்தியதற்காக வழங்கப்படும் கேரள அரசின் மாவட்ட அளவிலான வனமித்ரா விருது 2022ல் மார்க்கிற்குக் கிடைத்துள்ளது. இது மார்க்கிற்குக் கிடைத்துள்ள ஃபுல் மார்க்! மகத்தான மனிதப்பிறவியை நல்வழியில் பயன்படுத்தி வாழ வைக்கும் பூமியைக் காக்கும் அரும்பணியில் ஈடுபடும் மார்க் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

(Image courtesy: Malayala Manorama)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.