எழுத்துகளை எழுதும் இந்த கலையில் பல நாடுகளில் பல முறைகள் உள்ளன என்றாலும் ஜப்பானில் இது மிகப் பிரபலமானது. ஷோடோ (shodō) என்று அறியப்படும் இந்த முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேள் பழமையானது. இதில் ஜப்பானிய எழுத்துக்கள் தூரிகை, மையை பயன்படுத்தி காகிதத்தில் அல்லது மற்ற ஊடகங்களில் எழுதப்படுகிறது. ஷோடோ என்ற சொல்லின் பொருள் அழகு அல்லது மதிப்புமிக்கது. இது போல எழுத்துகளின் அழகுக்கும் இந்த முறையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

உயிர் தரும் எழுத்துக்கலை

பல்வேறு கணக்குகளில், வடிவத்தில், நீளத்தில், நெளிவுசுளிவுகளில் எழுதப்படும் எழுத்துக்களுக்கு இந்த முறை உயிரோட்டத்தையும் தனித்துவத்தையும் கொடுக்கிறது. இப்போதும் நடைமுறையில் இருக்கும் இந்த முறையை பயன்படுத்தி சின்னங்கள், திசை காட்டும் அறிவிப்புகள், சான்றிதழ்கள், அதிகாரப்பூர்வ ஆவனங்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் அவர்களின் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கலையை பயில்கின்றனர்.

உறுதியான வழிமுறைகள், விதிமுறைகளை பயன்படுத்தி ஜப்பானில் பல காலிகிராஃபி முறைகள் உள்ளன. சாதாரணமாக எழுதும் முறையை பயன்படுத்தும் கைஷோ, சிறிது சரிவாக எழுதும் க்யோஷோ, நன்றாக சரித்து எழுதும் முறையான ஸோஷோ போன்றவை இவற்றில் ஒரு சில. வெவ்வேறு ரீதிகள், தனித்திறமைகள் தேவையான இக்கலைகள் ஒவ்வொன்றிலும் சிறப்பாக செயல்பட பல ஆண்டு கால கற்றலும் பயிற்சியும் அவசியம்.

Shodo Calligrapgyஜப்பானிய காலிகிராஃபி முறையில் எழுதப் பயன்படும் மையை தயாரிப்பது கடினன். அதற்கு அதிக நிபுணத்துவம் தேவை.

மிகவும் புகழ்பெற்ற சுமி (Sumie) என்ற மை ஜப்பானில் நார (Nara) என்ற இடத்தில் கோபயன் (kobaien) என்ற நிறுவனத்தால் 450 ஆண்டுகளாக தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க நுணுக்கமான திறமையும் அறிவும் அவசியம். சிறிய சோப்பு கட்டி போல கிடைக்கும் 200 கிராம் எடையுள்ள ஒரு துண்டின் விலை ஆயிரம் டாலர்களுக்கும் மேல்.

ஆனால் இதே அளவுள்ள இந்திய மையின் விலை 5 டாலர் மட்டுமே. மை கட்டி நீருடன் சேர்த்து அரைக்கப்பட்டு மையாக மாற்றப்படுகிறது. கரி, விலங்கு கொழுப்பு, சிறிதளவு வாசனைப்பொருள் ஆகியவை மட்டுமே சுமி மை கட்டிகளை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள். சொல்வது எளிது என்றாலும் இதை உண்டாக்கும் முறை கடினமானது. இதனால் இதன் விலை மிக அதிகம்.

இந்த மை தயாரிக்க ஒவ்வொன்றிலும் நூறு என்ற கணக்கில் எண்ணைத் திரிகள் கொளுத்தி வைக்கப்படுகின்றன. விளக்கின் திரியில் உண்டாகும் கரி, மை தயாரிக்க சேகரிக்கப்படுகிறது. இரண்டு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு விளக்கிலும் தாவர எண்ணை ஊற்றப்படுகிறது. எரியும் திரியின் மேற்பகுதியில் கரி படிய கொட்டாங்குச்சி போல இருக்கும் ஒரு பாத்திரம் கவிழ்த்து வைக்கப்படுகிறது.

முழுநேரமும் இதில் இருந்து கரி சேகரிக்கப்படுகிறது. வெப்பம் அதிகரித்தால் கரியின் உற்பத்தி பாதிக்கும் என்பதால் சூடு அதிகமாகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளப்படுகிறது. பாத்திரத்தின் மையத்தில் சுடர் படிவதில்லை. அதனால் பாத்திரம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படாமல் ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அது மீண்டும் விளக்கில் பயன்படுத்தப்படுகிறது. கரி சேகரிக்கப்படுவதுடன் எண்ணை நிரப்பப்படுகிறது.

ஒரு பாத்திரத்தில் இருந்து தினம் ஐந்து முறை கரி சேகரிக்கப்படுகிறது. திரியை எரிக்க பொதுவாக கடுகு எண்ணையே பயன்படுத்தப்படுகிறது. மற்ற எண்ணைகளை பயன்படுத்தி நான்கு மடங்கு விலை அதிகமுள்ள மையும் தயாரிக்கப்படுகிறது. மை தயாரிக்கும் முறை போலவே திரி மற்றும் அது எரிய பயன்படும் பாத்திரம் சிறப்புக்குரியது. தனித்துவம் வாய்ந்த மண் பாத்திரங்களே இதற்காக பயன்படுகின்றன.

ஜப்பானில் ஏழாம் நூற்றாண்டு முதல் சுமி மை தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பில் விளக்கில் இருந்து கிடைக்கும் கரியை குழைத்து எடுக்க ஊடகமாக பயன்படுத்தப்படும் விலங்கு கொழுப்பு முக்கியமானது. சாதாரணமாக கால்நடை கொழுப்பே கரி உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விலை அதிகமுடைய கரி தயாரிக்க கழுதை, மான் அல்லது ஆட்டின் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது.

மாவில் இருந்து மை

மை தயாரிக்க தனித்தன்மையான முறையில் உண்டாக்கிய விலங்கு கொழுப்பு கட்டிகள் 70 டிகிரி செல்சியர்ஸ் சூடுள்ள நீரில் போடப்படுகிறது. தரமான மை கிடைக்க ஒன்றரை மணி நேரம் லேசான சூட்டில் இளக்கப்படுகிறது. விலங்கு கொழுப்பு அருவருக்கத்தக்க வாசனை உடையது என்பதால் இதை சமாளிக்க மை தயாரிப்பவர்கள் போரொனல் (Boronal), கஸ்தூரி போன்ற நறுமணப்பொருட்களை சேர்ப்பதுண்டு.

கரியுடன் பசையை சேர்த்து மிதித்து குழைத்துமிருதுவான மாவை சரியான பக்குவத்தில் தயார் செய்வதே அடுத்த கட்ட வேலை. தினமும் ஊழியர்கள் கை கால்களை பயன்படுத்தி மிதித்து குழைத்து இதை தயாரிக்கின்றனர். இந்த மாவு அச்சுகளில் இடப்பட்டு அழுத்தி சோப்பு கட்டி வடிவத்தில் மை கட்டிகள் உருவாக்கப்படுகின்றன. மிகக் குறைந்த அளவு ஊழியர்களை வைத்தே கோபயன் நிறுவனம் ஆண்டுதோறும் 60,000 கட்டிகளை உற்பத்தி செய்கிறது. பல வித வேலைகள் நடந்தாலும் மாவை மிதித்து குழைப்பவருக்கே அதிக திறமை இருக்கவேண்டும்.

ஐந்தாண்டு பயிற்சி பெற்றவரே இந்த வேலையை செய்கிறார். தரம் மிக்க மை தயாரிக்கும் இடங்களில் பத்து ஆண்டு பயிற்சி பெற்றவர்களே பணியில் அமர்த்தப்படுகின்றனர். பனிகாலத்தில் குளீர்ச்சியான தட்பவெப்பநிலையில் மை கட்டிகளில் பசை நன்றாக ஒட்டிக்கொள்ளும் என்பதால் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலத்தில் இந்நிறுவனம் 40,000 கட்டிகளை உற்பத்தி செய்கிறது. இதனுடன் வேலை முடிந்துவிடவில்லை.

மை கட்டிகளை உடனே உலர அனுமதித்தால் அதில் துவாரங்கள் உண்டாகும். இது மையின் தரத்தை பாதிக்கும். அதனால் ஒவ்வொரு மை கட்டியும் ஓக் மர சாம்பலில் பொதிந்து வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாள் இருந்ததை விட ஈரப்பசை குறைந்த சாம்பலில் பொதிந்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நாற்பது நாட்கள் வரை சாம்பல் மாற்றப்படுகிறது. கட்டிகள் அப்போது 70% உலர்ந்திருக்கும். காற்றில் உலர்த்துவதற்காக தொடர்ந்து வைக்கோலைத் திரித்து உண்டாக்கிய கயிறுகளில் இவை கட்டித் தொங்கவிடப்படும்.

சரியான முறையில் பக்குவப்பட இவ்வாறு கட்டிகள் குறைந்தது நான்கு ஆண்டுகள் உலரவேண்டும். ஆண்டுகள் அதிகமாக அதிகமாக எழுதப்படும் எழுத்துகளின் தரமும் அழகும் அதிகரிக்கும். மை கட்டிகளின் விலையும் உயரும். கோபயன் நிறுவனத்தின் சேகரத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மை கட்டிகள் உள்ளன. இவை வயது அதிகமாகும்போது அறிவும் அனுபவமும் அதிகமாக இருக்கும் மனித வாழ்வுடன் ஒப்பிட்டு கூறப்படுகிறது.

வரலாறு பேசும் மை

சுமி மையை பயன்படுத்தி எழுதப்படும் எழுத்துகள் சுமி (Sumie) என்று அழைக்கப்படுகின்றன. சீனாவில் இருந்து இந்த மை உற்பத்தி முறை துறவிகள் மூலம் ஜப்பானுக்கு வந்த ஏழாம் நூற்றாண்டு முதல் சுமி மையின் உற்பத்தி அங்கு நடக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு முதல் இந்த தொழில் ஜப்பானில் பல இடங்களில் பரவியது. எழுத்துகள் தவிர படங்கள் வரையவும் இந்த மை பயன்படுத்தப்படுகிறது.

நல்ல விலை கிடைக்கும் என்றாலும் கோபயன் நிறுவனம் மையின் உற்பத்தியை அதிகரிக்க விரும்பவில்லை. மாறாக முன் காலத்தில் இருந்ந்த அதே தரத்தை பாதுகாப்பதையே அந்நிறுவனம் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. சாதாரண மைக்கும் மகத்துவமான வரலாறு உள்ளது. எழுத்துக் கலையை உயிரோட்டத்துடன் பாதுகாக்க முக்கியப்பங்கு ஆற்றும் ஜப்பான் மை போல உலகில் உள்ள ஒவ்வொரு மையும் பெருமை மிகுந்த வரலாற்றை பெற்றவை. அவை நமக்குச் சொல்லும் ஒவ்வொரு கதையும் அற்புதம் நிறைந்தது!

** ** **

மேற்கோள்கள்

https://www.mathrubhumi.com/environment/columns/about-all-you-need-to-know-about-japan-calligraphy-eco-story-1.8549070

&

https://en.m.wikipedia.org/wiki/Japanese_calligraphy

&

https://www.invaluable.com/blog/japanese-calligraphy/

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It