ஜப்பானின் 126வது அரசராக 1989 முதல் 2019 வரை இருந்த அகிஹிடோ (Akihito), 1960 அக்டோபர் 3 அன்று தன் அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது ஷிகாகோவிற்கு விஜயம் செய்தார். இலினாய் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மீனான ப்ளூ கில் மீன்கள் உள்ள ஷெட் (Shedd) நீர்க்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அன்றைய ஷிகாகோ மேயர் ரிச்சார்டு ஜே டாலி (Richard J Daley) இளவரசரை மகிழ்வுடன் வரவேற்றார்.

தொட்டியில் இருந்து வலையில் வாரியெடுத்த மீன்களில் 18 மீன்களை பரிசாகக் கொடுத்தார். மீன் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த 26 வயதே ஆன வருங்கால ஜப்பான் அரசர், அவற்றை டோக்கியோவிற்குக் கொண்டு வந்தார். மீன் உணவை அதிகம் விரும்பும் தன் நாட்டு குடிமக்களுக்கு அவர்களின் தேவையை நிறைவு செய்ய, அவர்களுக்கு புதிய ஒரு சுவையை அறிமுகப்படுத்த, ஆய்வுகளுக்காக அந்த மீன்களை அவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

ஷிகாகோவில் இருந்து உயிருடன் வந்த 15 மீன்கள் ஜப்பானின் வரலாற்றில் ஒரு தீராத பிரச்சனைக்குரியதாக மாறும் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இளவரசரை மதிப்புடன் நினைவுகூர அவை இளவரசர் மீன்கள் என்று அழைக்கப்பட்டன. 1966ல் ஆய்வாளர்களால் வளர்க்கப்பட்ட இந்த மீன்கள் ஷிஷுஓக்கா (Shizuoka) மாகாணத்தில் உள்ள ஏரியில் விடப்பட்டன.

ஜப்பான் முழுவதும்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு இங்கு மீன்கள் வெற்றிகரமாக விடப்பட்டதன் நினைவாக ஏரிக்கரையில் ஒரு பலகையும் நிறுவப்பட்டது. தொடர்ந்து ஜப்பான் முழுவதும் நீர்நிலைகளில் இந்த மீன்கள் விடப்பட்டன. அந்த சமயத்தில் மீன்களின் உணவு முறை, வளரும் முறை எதுவும் பிரச்சனைக்குரியதாகத் தோன்றவில்லை. அவை வளர்க்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில் அவற்றின் வளர்ச்சி மிக மெதுவாக நடந்ததால் உணவிற்காக அவற்றை வளர்ப்பது சரியானதில்லை என்று புரிந்தது.blue gill fishஇதனால் அந்த ஆய்வுத்திட்டம் முடிவிற்கு வந்தது. இதனுடன் அந்த அத்தியாயம் முடிந்து விட்டது என்று கருதப்பட்டது. ஆனால் அது முடிவில்லை ஆரம்பம் மட்டுமே என்பது பிறகு தெரிய வந்தது. இந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் நதிகள், ஏரிகள், அருவிகளில் இந்த மீன்கள் வளர்ந்து பெருகின. விலங்குகள், நீர்த்தாவரங்கள், மற்ற மீன் குஞ்சுகள், உள்ளூர் மீன்களின் முட்டைகளை ப்ளூ கில் மீன்கள் உட்கொள்ள ஆரம்பித்தன.

இதனால் மற்ற மீன்களுக்குப் போதிய உணவு கிடைக்காமல் போனது. அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. தாயகமான அமெரிக்காவில் உடனுக்குடன் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த மீன்கள் நீண்ட காலம் வாழ்கின்றன. ஜப்பானில் நாட்டு மீன்கள் கில் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டைகளைத் தின்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வைத்திருந்தன. ஆனால் இதெல்லாம் சிறிது காலம் மட்டுமே நீடித்தது.

நாசமடைந்த உணவுச்சங்கிலி

ஆரம்பத்தில் அரசின் பேராதரவு இருந்ததால் இந்த மீன்கள் ஜப்பானின் நன்னீர் நிலைகள் எல்லாவற்றையும் அடக்கி ஆளத் தொடங்கின. காலனிகளை உண்டாக்கின. ஆனால் அதற்குள் காரியங்கள் கைவிட்டுப் போய்விட்டன. எந்த ஒரு சூழலிலும் விரைவாக வளர்ந்து பெருகும் இயல்புடைய அவை, உள்ளூர் மீன்களைத் தின்று தீர்த்தன. உணவுச் சங்கிலியில் பெருத்த நாசத்தை ஏற்படுத்தின.

இந்த மீன்களின் மூலம் ஒரே இடமா என்பது பற்றி ஜப்பானிய விஞ்ஞானிகள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோது மீன்களின் மரபியல் மற்றும் பரிணாமத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானி சைட்டோ (Saitoh) இது பற்றி ஆராய 2000ல் அமெரிக்கா சென்றார். ஜப்பானில் உள்ள இந்த மீன்கள் அமெரிக்காவில் இருந்து வந்தவைதானா என்பதை அவர் அறிய விரும்பினார்.

அமெரிக்காவில் 13 மற்றும் ஜப்பானில் 56 இடங்களில் இருந்து உள்ள மாதிரிகளைப் பரிசோதித்தபோது ராஜகுமாரன் கொண்டு வந்த 15 மீன்களின் வாரிசுகள்தான் ஜப்பானில் உள்ளவை என்பதை அவர் உறுதி செய்தார். ஜப்பானில் இருந்த மீன்கள் குறைவான மரபணு உயிர்ப் பன்மயத் தன்மை கொண்டவை என்றாலும் அவற்றின் இனப்பெருக்கத்தில் குறைவு எதுவும் ஏற்படவில்லை.

ஒரு கிலோ மீன் பிடித்துக் கொடுத்தால் மூன்று டாலர் பரிசு

ஜப்பானின் பல முக்கிய உள்ளூர் மீனினங்களுக்கு இவை அச்சுறுத்தலாக மாறின. அங்கு மிகப் பெரிய, பழமையான பிவா (Biwa) தடாகத்தில் வாழ்ந்த அந்நாட்டின் மிகப் புகழ் பெற்ற இனங்களில் ஒன்றான க்ரூசியன் கெண்டை (Crucian carp) மீனினம் இதனால் அழிந்தது. இதைத் தொடர்ந்து யார் பிடித்துக் கொண்டு வந்தாலும் ஒவ்வொரு கிலோ ப்ளூ கில் மீன்களுக்கு ஜப்பான் அரசு 3 டாலர்களைப் பரிசாக அளித்தது. அவற்றைப் பிடிக்க மீனவர்களை ஊக்குவித்தது.

இல்லாத இடங்களில் யாரேனும் இந்த மீன்களைக் கொண்டு வந்தால் ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் பிடிக்க விஞ்ஞானிகள் புதிய பொறிகளைக் கண்டுபிடித்தனர். 2002ல் ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சரகம் இந்த மீன்களை ஒரு ஆக்கிரமிப்பு உயிரினமாக அறிவித்தது. இந்த மீன்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பல உணவு வகைகளை பிரபலப்படுத்த அரசு முயற்சித்தது. ஆனால் இது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை

சட்டவிரோதமாக்கப்பட்ட மீன் வளர்ப்பு

தொடக்கத்தில் இத்தகைய உணவுகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாலும் இது ஆக்கிரமிப்பு உயிரினம் என்ற கருத்து மக்கள் ஆர்வத்தை வெகுவாகக் குறைத்தது. 2005ல் இந்த மீனினம் உட்பட 97 மீனினங்களைக் கைவசம் வைத்திருப்பது, இறக்குமதி செய்வது, வளர்ப்பது சட்ட விரோதமாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேரரசர் அகிஹிடோ, முன்பு தான் இந்த மீன்களை ஜப்பானுக்குக் கொண்டு வந்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

2007 ஆனபோது அந்நாட்டில் இந்த மீன்களின் எண்ணிக்கை இரண்டரை கோடியானது. ஒரு காலத்தில் உள்ளூரைச் சேர்ந்த முப்பது இன மீன்கள் பிவா தடாகத்தில் வாழ்ந்தன. ஆனால் காலப்போக்கில் அங்கு வாழ்ந்தவற்றில் 90% ப்ளூ கில் மீன்கள் மற்றும் 1970களில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ் இன மீன்களுமாக தடாகம் மாறியது. அங்கிருந்து 420 டன் ஆக்ரமிப்பு மீன்களை அகற்ற அரசு 12 இலட்சம் டாலர் செலவழித்தது.

வலைகளில் சிக்காத மீன்கள்

தொடர்ச்சியான செயல்பாடுகள், மீன் பிடித்தல் மூலம் ப்ளூ கில்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க முடிந்தது. என்றாலும் பாரம்பரிய ரீதியில் உள்ள வலைகளில் இவற்றின் குஞ்சுகள் சிக்கிக் கொள்ளாததால் இவற்றின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. தொடர்ந்து வந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இவற்றை அகற்ற 270,000 டாலர்களை அரசு செலவழித்தது.

எப்போது மீன் பிடித்தல் நிற்கிறதோ அப்போதெல்லாம் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. இவற்றை உரமாகவும் கோழித்தீவனமாகவும் மாற்ற இலட்சங்கள் முடக்கி நடத்தப்பட்ட திட்டங்களுக்கு மிகக் குறைந்த வெற்றியே கிடைத்தது. இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க க்றிஸ்பர் மரபணு எடிட்டிங் (Crispr gene editing) என்ற முறை மட்டுமே இப்போது உள்ள ஒரே நம்பிக்கை. பாக்டீரியாக்களின் தனிச்சிறப்புமிக்க பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.

மலட்டுத்தன்மை ஏற்படுத்தப்பட்ட மீன்களை நீர்நிலைகளில் விட்டு முட்டை உருவாகாமல் இருக்க நடத்தப்படும் ஆய்வுக்கூட ஆய்வுகள் ஆறாவது ஆண்டாகத் தொடர்கிறது. இத்தகைய ஆய்வுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்னவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தால் இத்திட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

தீர்வு எப்போது?

இது பிராந்திய உயிரினங்களில் எத்தகைய விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அமெரிக்காவில் இருந்து அன்றைய இளவரசர் கொண்டு வந்த ப்ளூ கில் உண்டாக்கிய பிரச்சனைகள் இப்போதும் ஜப்பானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

** ** **

மேற்கோள்கள்:https://www.mathrubhumi.com/environment/columns/eco-story-column-on-blue-gill-fish-invasion-in-japan-1.8624926

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It