நம்ம வாழ்க்கை எதை நோக்கி பயணமாக போய்க்கிட்ருக்குன்னே தெரியலையே, சரி எதுக்கும் ஒரு சினிமா பார்ப்போம் என்று திரைப்படங்கள் தேடிய போது, இட்லி கடை திரைப்படம் கண்ணில் பட்டது. ஆஹா இட்லி! நமக்கு மிகவும் பிடித்த உணவாயிற்றே, ஒருவேளை படத்தில் சுவை மிக்க, ரசனை மிக்க உணவுக் காட்சிகள் இருக்குமோ, சூப்பர் என்று நம்பி, இட்லி கடை திரைப்படத்தைப் பார்த்தேன். பிறகு என்ன, வழக்கம் போல தான், விடாது கருப்பு போல நமக்கென்று வந்து வாய்க்கிறது, நம் மண்டையில் வந்து தான் விடிகிறது...

படத்தில் நடிகர்கள் நடிப்பு பற்றி எல்லாம் எந்தக் குறையும் இல்லை. தனுஷ் எவ்வளவு சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல நடிகர் நித்யா அவர்களும் மிகச் சிறந்த நடிப்பை அனைத்துப் படங்களிலும் வெளிப்படுத்துபவர். திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடித்த நடிப்பு என்பது எவராலும் மறக்க முடியாதது. நடிகர் நித்யா அவர்களுக்கு சிறந்த நடிப்புக்கான தேசிய விருதும் அந்த திரைப்படத்துக்காக வழங்கப்பட்டது. எனவே, இட்லி கடை படத்திலும் lead actors மற்றும் பிற நடிகர்களின் பங்கு நன்றாகவே இருந்தது.

படத்தின் கருவில் தான் பிரச்சனை. அதாவது இவ்வளவு பிற்போக்கான ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு பிற்போக்காக, உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் சிறிதும் தொடர்பில்லாமல், இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தி விடுமோ என்று அச்சப்படுமளவுக்கு படத்தில் கூறப்படும் "தத்துவங்கள்" இருக்கின்றன.

நடிகர் தனுஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக மட்டுமே இருந்திருந்தால் படத்தில் கூறப்படும் கருத்துக்கள் பற்றி நாம் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால், படத்தின் எழுத்தாளர் (கருத்தாளர்) மற்றும் இயக்குனர் இரண்டும் தனுஷ் அவர்கள் தான் என்கிற பட்சத்தில் விமர்சனம் அவசியமாகின்றது. படத்தில் தனுஷின் முன்கதை, வெளிநாட்டுக் கதை பற்றியெல்லாம் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. முக்கியமான கதையின் கரு என்னவென்றால்,

அதாவது என்னவென்றால், என் அப்பா இட்லி சுட்டார், நானும் இட்லி சுட்டேன், என் பிள்ளைகளுக்கும் இட்லி சுட கற்றுக் கொடுப்பேன், என் பேரப் பிள்ளைகளுக்கும் இட்லி சுட சொல்லித் தருவேன் என்று கூறுவதெல்லாம் பயங்கர காமெடியாக இருக்கிறது. இட்லி சுடுவது மட்டுமல்ல, அந்த இட்லி சுடுவதற்கு அரிசியை அந்த ஆட்டுக்கல்லில் போட்டு, அதே இடத்தில் உட்கார்ந்து, பல மணி நேரம் மாவு ஆட்டுவேன் என்பதெல்லாம் உச்சபட்சம். இட்லி மாவு அரைக்கும் பக்குவம் கைவரப் பெறாமல் தனுஷ் தவிக்கும் போது அவருடைய தந்தை கனவில் வந்து, "அது எப்படி வராமல் போகும், அது என் அப்பத்தா எனக்கு சொல்லிக் கொடுத்தது. நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது, அது உன் இரத்தத்தில் இருக்கிறது" என்று கூறுவதெல்லாம், இட்லி சுடுவதைக் கூட குலத்தொழிலாக establish செய்வதாக இருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு காட்சியில் பொட்டல் காட்டில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தனுஷ் வழங்கியிருக்கும் சிறப்பான ஞான உபதேசம் என்னவென்றால் "ஆஹா எவ்வளவு நன்றாக இருக்கிறது, எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது, ஒன்றுமே இல்லாமல் இருப்பதும் எதுவும் நமக்கு சொந்தமாக இல்லாமல் இருப்பதும் எவ்வளவு சுகமாக இருக்கிறது, இவ்வளவு சுகத்தையும் நிம்மதியும் விட்டுவிட்டு எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம், ஆஹா ஓஹோ" என்று சிலாகிக்கிறார். அடடா என்று நமக்கே புல்லரிக்கிறது என்றால் பாருங்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் எதை நோக்கி தனுஷ் ஓடுகிறார் என்று தனுஷ் அவர்களுக்கு மிக நன்றாக, தெள்ளத் தெளிவாக தெரியும். அதனால் தான், போயஸ் கார்டனில் நிலம் வாங்கி, நூறு கோடி மதிப்புள்ள வீடு கட்டி, அவருடைய பெற்றோரை மிகப் பெருமையாக சீரும் சிறப்புமாக அந்த வீட்டில் குடியிருக்க வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவையெல்லாம் வெளிப்படையாக செய்திகளில் இருப்பவை. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு போலித்தனம். இவ்வளவு பொய், இவ்வளவு நடிப்பு?danush in idli kadaiபடம் முழுவதும் ஊர்க்காரர்கள், அவர்களுடன் அன்பு நட்பு பாசம், உறவுகளுடன் அன்பு நட்பு பாசம் ஆஹா ஓஹோ என்று அளவுக்கு மீறி சிலாகிக்கிறார் தனுஷ். ஆனால், நிஜத்தில் என்ன? இதே இட்லி கடை படம் வெளிவருவதற்கு முன்பு தனுஷ் தன் பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் உறவுகளுடன், அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்று அங்கே அவர்களுடைய குலதெய்வ வழிபாடு செய்து, அந்த ஊர்க்காரர்களுக்கு கிடா விருந்து வைத்துள்ளார். ஆனால் பாருங்கள், அது தொடர்பான காணொளி செய்தியில், அந்த ஊர் மக்களும், அந்த ஊரில் வசிக்கும் அவர்களுடைய சொந்த உறவுகள் கூறியது என்னவென்றால், "தனுஷ் ஊருக்குள் வரும்போது பௌன்சர்களுடன் வந்தார். யாரையும் அருகில் விடவில்லை. யாருடனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எங்கள் பிள்ளைகள் எல்லாம் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும், அவரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால், ஒருவருடன் கூட எதையும் செய்யாமல் சென்றுவிட்டார்" என்று மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இதுதான் நிஜம். நிஜம் இவ்வாறு இருக்கும்போது, சினிமாவில் மட்டும் எதற்கு இவ்வளவு போதனைகள், சிலிர்ப்புகள், சிலாகிப்புகள், தத்துவங்கள், வசனங்கள் - அன்பு பாசம் நேசம் ஊர்க்காரர்கள் உறவுகள் ஆஹா ஓஹோ என்று?

படத்தின் இறுதிக் காட்சி மிகவும் அபத்தமாக இருந்தது. எந்தப் படத்திலும் வில்லனும் கதாநாயகனும் sorry சொல்லி சமாதானம் செய்து கொள்வதை நான் பார்த்ததே இல்லை. அவரவர் நிஜ வாழ்க்கையில் குடும்ப சண்டையில் கூட இதெல்லாம் சாத்தியமில்லை. ஆனால் இந்தப் படத்தில், வில்லன் குடும்பம் காரில் வந்து இறங்குமாம். அப்பா மகனைப் பார்த்து "மகனே sorry சொல்லு" என்று கூறுவாராம். உடனே மகன் சாரி சொல்லுவாராம். உடனே எதுவும் நடக்காதது போல எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இட்லி கடையில் இட்லி சாப்பிடுவார்களாம். அடடா மீண்டும் புல்லரிக்கிறது. அதன் பிறகு வரும் இறுதிக் காட்சி தான் மிக முக்கியமானது. அது என்னவென்றால்,

இட்லி சுடுவது தான் தன் வாழ்க்கையின் தலையாய முக்கிய லட்சிய நோக்கம் என்று வாழ்ந்து வரும் தனுஷ், அது தொடர்பான வேலைகள், முக்கியமாக இட்லிக்கு ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுவது கூட (ஒரு கட்டத்துக்குப் பிறகு) மிகவும் விரும்பி, மிகவும் ஆசைப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியாக செய்வதாகக் காட்டப்படுகிறது. ஆனால் பாருங்கள், படத்தின் இறுதிக் காட்சியில் sorry எல்லாம் சொல்லி முடித்து வில்லன் குடும்பும் தனுஷ் உட்பட அனைவரும் இட்லி சாப்பிட்டு காப்பி கீப்பியெல்லாம் குடித்து முடித்த பிறகு, பாவம் நம்ம சத்யராஜுக்கு மனசு கேட்கவில்லை. அவர் சொல்கிறார், "என்ன இருந்தாலும் என் மகனுக்கு ஒரு தண்டனை கொடுத்துத் தான் ஆக வேண்டும், இல்லையென்றால் நான் ஒத்துக்க மாட்டேன்" என்று அடம்பிடிக்கிறார்.

சரி போய் தொலைங்க, தண்டனை கொடுக்கிறேன், என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்த தனுஷ், வில்லனுக்கு கொடுத்த அந்த தண்டனை என்பது, இரண்டரை மணி நேரம் தனுஷ் சிலாகித்து சிலாகித்து சிலிர்த்து சிலிர்த்து படம் பார்ப்பவர்கள் மண்டையில் அரைத்த மாவு மசாலா அத்தனையும் ஒரே நொடியில் தவிடு பொடியாகிவிட்டது. ஆமாம், இரண்டு மணி நேரமும், ஆஹா இட்லி சுடுவது எவ்வளவு சிறப்பு, அது தான் வாழ்க்கை, அது தான் லட்சியம் என்று பாடம் எடுத்தவர், தனக்கு அவ்வளவு கொடுமைகள் செய்து, தான் உயிர் என்று நேசித்த இட்லி கடையை தீயிட்டு கொளுத்தி, தன்னை ரத்தம் வர அடித்து, துப்பாக்கியால் சுட்ட வில்லனுக்கு தனுஷ் கொடுத்த தண்டனை, "நீ உக்காந்து ரெண்டு மணி நேரம் இட்லிக்கு மாவு ஆட்டுடா" என்பதுதான் நாட்டாமை கொடுத்த தண்டனை தீர்ப்பு. வில்லனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனை என்கிற அளவுக்கு தானே கருதுகிற ஒரு மாவு ஆட்டுகிற வேலையை, படம் முழுவதும் சுகமான வேலை போல, மகிழ்ச்சியான வேலை போல, சிறப்பான வேலை போல போலியாக சித்தரிப்பது, புனிதப்படுத்திக் காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று தான் கேட்கிறேன்.

உண்மையில் கூற வேண்டுமானால், அந்தக் காலத்திலிருந்து அனைத்து ஊர்களிலும், அனைத்துத் தெருக்களிலும் இதைவிட எளிமையாக, கடை கூட இல்லை, ரோட்டின் மேல் இட்லி கடை வைத்திருப்பவர்களிடம் அன்றாடம் இட்லி, தோசை, ஆப்பம் என்று விரும்பி சுவைத்தவர்கள் தான் நாமும். பெரிதாக எந்தப் பொருளும் சேர்க்காமலேயே அவர்கள் தயாரித்த உணவுகள் எல்லாம் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த இட்லி கடை வைத்திருந்தவர்களை எல்லாம் நாம் இன்றளவும் நினைத்துப் பார்க்கின்றோம், அந்த சுவையை நினைக்கின்றோம், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களை மிக மிக உளமார, உணர்வுடன் அவர்களின் உழைப்பை மதிக்கின்றோம். முக்கியமாக அப்போதெல்லாம் பெண்கள் தான் இட்லி கடைகளை வைத்து அவர்களின் மிகுதியான உழைப்பைச் செய்து வந்தார்கள். அந்த உழைப்புக்கும் மேல், அவர்கள் கொடுத்த எளிமையான சுவையான உணவுக்கும் மேல், அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் கனிவும் இன்றும் நம் நெஞ்சை நெகிழ வைக்கின்றன, கண்களை ஈரமாக்குகின்றன. எத்தனை நாள் எத்தனை பேர்களுக்கு காசு இல்லாமல் அவர்கள் அந்த இட்லிகளை கொடுத்திருப்பார்கள். அப்பேற்பட்ட இட்லி கடைகளையோ, அந்த உணவுத் தொழிலையோ அல்லது அப்பேற்பட்ட தொழிலாளர்களையோ நாம் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, அவற்றை புனிதப்படுத்தி, குலத்தொழில் போல் establish செய்ய நினைக்கும் போது தான் நாம் அதை கடுமையாக கண்டிக்க வேண்டியிருக்கிறது.

இதே நம்ம ஊரு இட்லி கடைக்காரர்கள் அவர்கள் பிள்ளைகளை எப்பாடுபட்டேனும் படிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளெல்லாம் இன்று மிகப்பெரிய படிப்புகள் படித்து அரசாங்க வேலைகளில், ஐடி வேலைகளில், வெளிநாடுகளில் என்று மிகச்சிறப்பான வேலைகளில் இருக்கின்றனர். அவர்களின் அம்மா இட்லி சுட்ட அதே தெருவில் மிகப் பெரிய மாடி வீடுகள் கட்டி அதே அம்மாவை பெருமையுடன் வாழ வைத்திருக்கிறார்கள். அதாவது, நிஜ வாழ்க்கையில் தனுஷ் தனது பெற்றோரை பெருமையுடன் வாழ வைத்திருப்பது போல. அப்படி முன்னேறி சென்று கொண்டிருக்கும் முற்போக்கு தமிழ்ச் சமூகத்தில் வந்து, "இல்லை இல்லை நீ எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை, ஒன்றுமே இல்லாதது தான் நிம்மதி, ஒன்றுமே சொந்தமாக இல்லாததுதான் சுகம், வெளிநாட்டு வேலை எல்லாம் விட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து இட்லி சுடுவது தான் வாழ்க்கை, இதுதான் சிறப்பு" என்று இட்லி சுடுவதை புனிதப்படுத்தி போலி பிம்பத்தைக் கட்டமைப்பது நியாயமா? என்றுதான் கேட்கிறோம்.

அதுமட்டுமல்ல, அப்படி புனிதப்படுத்துவதன் ஊடாகவே, கிராம், சாதி, சாதியை தூக்கிப் பிடிக்கின்ற ஊர், ஊர்க்காரர்கள் அதாவது சாதி வெறி பிடித்த சாதியவாதிகள், குலதெய்வம், குலசாமி என்றெல்லாம் மிக மோசமாக சாதியை உயர்த்திப் பிடிக்கும், அதாவது கிராம வாழ்க்கையின் பெருமையை சிறப்பை காட்டுகிறோம் என்ற பெயரில் சாதியை உயர்த்திப் பிடிப்பது தான் இதுபோன்ற படங்களின் நோக்கமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இட்லி கடை திரைப்படம், இதற்கு முன்பு பரோட்டா கடை திரைப்படம் (விஜய் சேதுபதியின் தலைவன் தலைவலி), சூரி தாய்மாமன் திரைப்படம் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. தாலி செண்டிமெண்ட், கடவுள்கள் சார்ந்த கொடூரமான படங்கள், கிராம வாழ்க்கை சாதிப் படங்கள், உட்சபட்ச சாதிவெறிப் படங்கள் என்று மிக மோசமான படங்கள் 90களை ஆக்கிரமித்திருந்தன. முப்பது வருடங்களுக்கு முந்தைய, மிகவும் பிற்போக்கான அந்த காலத்துக்கு நம்மையும், திரைப்படங்களையும் மீண்டும் பின்னோக்கி தள்ளி விட்டு விடுவார்கள் போலிருக்கிறது இன்றைய இயக்குனர்கள். அதனால் தான் இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கட்டாயம் நமக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது.

மிகச் சிறப்பான படங்களைத் தேர்தெடுத்து நடித்த தனுஷ், இவ்வளவு பிற்போக்கான கதையையும் கருத்துக்களையும் தானே எழுதி, இயக்கி, நடித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கிறது, மிகப்பெரிய ஆபத்தை உணர்த்துகிறது. இட்லிக்கடை வடிகட்டிய சாக்கடை!

- தேன்மொழி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.