அப்படி நடக்கும் என்று வாகன் எதிர்பார்க்கவில்லை. துப்பாக்கி சுடுவதில் நிபுணனான நண்பன் மார்கஸ்ம் நினைக்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் நாமும் அப்படி ஒரு திருப்பத்துக்கு காத்திருக்கவில்லை.
ஆனால் அந்த சம்பவம் தான் ஒவ்வொருவர் வாழ்விலும் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாத சுவாரஷ்யம் தான் இந்த வாழ்வின் ஒவ்வொரு வளைவிலும் இருக்கும் அனுபவம்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் சூழல். ஆனாலும் சிறு வயதிலிருந்து கூட இருக்கும் நண்பன் அழைக்கிறான் என்று மார்கஸோடு வீக் எண்ட் கொண்டாட்டத்துக்காக வேட்டைக்கு கிளம்புகிறான் வாகன். வாகன் பள்ளி நாட்களில் பயிற்சியில் சுட்டது. இப்போது சுடுவதில் பெரிதாக பயிற்சியும் இல்லை. ஈடுபாடும் இல்லை. வேட்டையாடுதலில் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் நண்பனுக்கு அதில் விருப்பம் இருப்பதால் கூட செல்கிறான். நண்பன் லைசன்ஸ் துப்பாக்கி வைத்திருப்பவன். துப்பாக்கியில் துர்பாக்கியமும் சேர்ந்தே வருகிறது என்று இருவருக்குமே அப்போதும் தெரியாது.
மாலைவரை எதுவும் கிடைக்காத சலிப்பில் சோர்ந்திருந்த போது கண்ணுக்கு லட்சணமாய்...... கொழு கொழுவென ஒரு மான்...... கொம்பிலும் அசைவின்று மேய்ந்து கொண்டிருக்கிறது. காட்சியில் பேரமைதி. வேட்டைக்காரனின் கண்களில் வேறமைதி.
"இது உன் ஷாட்...... அடி" என்கிறான் நண்பன் மார்கஸ். வாகன் முதலில் மறுத்தாலும்.... பிறகு குறி பார்க்கிறான். குறி பார்க்கப்படுகிறது. குறி பார்க்கப்படுகிறது. ஒற்றைக்கண்ணில் ஆதி மனிதனின் அரூவம். விரல் சுண்டி இழுக்கிறது. பட் என சப்தம். மான் ஓடி விடுகிறது.
மானுக்கு பின்னால் நின்று மானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனின் நெற்றியில் புல்லட் பாய்கிறது. எல்லாமே நொடிக்கும் குறைவாக நடந்து முடிந்து விடுகிறது. என்ன நடந்தது என்று கூட உணர முடியவில்லை.
உறைந்து போகிறார்கள்.
வேட்டை உலகத்தில் வேகம் குறைந்து நின்றே போகிறது. வேர்க்க விறுக்க...... உள்ளே தறிகெட்டு சுழலும் காட்டை வேடிக்கை பார்க்கிறான் வாகன். வார்த்தை இல்லை. வாக்கியத்தில் மறந்து போன சொற்றொடர் மொழியற்று பிதற்றுகிறது. அந்த சிறுவனின் அருகே சென்று பார்க்கிறான். அவன் செத்து விட்டான். வாகனுக்கு மூச்சு இல்லை. முகம் முட்டுகிறது.
திடும்மென "சம்மி...... சம்மி...... ?" என்று புதருக்கு பின்னிருந்து ஒரு குரல். இருவரும் பதறுகிறார்கள். அதே கணத்தில்.... சிறுவனை தேடிக்கொண்டு வரும் அப்பா...... மகன் சுடப்பட்டு கிடப்பதைப் பார்க்கிறார். உறைந்து நடுங்குகிறார். துடிக்கிறார்.
"என்னடா பண்ணுனீங்க என் பையன....!" என்று இருவரையும் மாறி மாறி பார்த்தபடியே கதறுகிறார்.
"சாரி... ஐம் சாரி.. ஐம் சாரி... தெரியாம.. தெரியாம.... சாரி.. சாரி..." வாய்க்குள்ளாகவே முனங்குகிறான் வாகன். குற்ற உணர்ச்சி காடுகளின் நெடியாய் அவனைக் குடைகிறது.
வெறித்து மகனை தொட்டு தொட்டு பார்த்து பரிதவிக்கிறார் அப்பா.
பட்டென்று இன்னொரு சத்தம். வாகன் இன்னும் மூர்ச்சையாகிறான். காடு ஸ்தம்பித்து தவம் கலைகிறது.
அந்த அப்பாவை சுட்டு விடுகிறான் மார்கஸ். ஏன்டா என்பது போல இயலாமையில் கண்கள் அழுந்த பார்க்கிறான் வாகன்.
"வேறு வழி இல்லை. விஷயம் வெளிய தெரிஞ்சா ரெண்டு பேருமே காலத்துக்கும் உள்ளதான்... அதான் சுட்டேன்" என்கிறான் மார்கஸ்.
ஒரு வீக் எண்ட் விளையாட்டு...... வீதி சுற்றி...... வாசலில் குழி தோண்டி வைத்திருக்கிறது. சரி தப்பு நியாயம் அநியாயம் அறம் துரோகம் என்று எல்லாமும் கண் முன்னே ரத்தம் கொப்பளிக்கிறது வாகனுக்கு.
"வேற வழி இல்லடா..... உன்ன காப்பாத்த வேற வழி தெரியல...... முதல்ல இங்கிருந்து கிளம்புவோம் வா" ன்னு நண்பன் வாகனைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்கிறான் மார்கஸ்.
காரில் இருவருக்கும் பேச்சில்லை. மூச்சிருக்கிறதா என்று...... .பார்த்துக் கொண்டிருக்கும் நாம் ஆராய்ச்சி செய்கிறோம்.
அன்றிரவு மீண்டும் அதே இடத்துக்கு வருகிறார்கள். குழி தோண்டுகிறார்கள். இரவும் நிலவும் பனியும் துளியும் சாட்சி. காட்டு பூச்சிகள் சலசலக்க.. பேரமைதியின் குறுக்கே குழி தோண்டுகிறார்கள். காட்டிக் கொடுக்காத மூச்சிரைத்தலை காட்டுக்குள் நடுகிறார்கள். காடு தவங்களின் பிள்ளை. தவழ மறந்து இரவு கொண்டிருக்கிறது. மானுட சமுகத்தின் மறதிக்கு மிஞ்சிய இரவை கெட்டியாக பிடித்துக் கொண்டு வியர்த்து விக்கித்து மாற்றி மாற்றி தோண்டுகிறார்கள்.
கத்தி கொண்டு சிறுவன் நெற்றியில் இருக்கும் புல்லட்டை எடுக்கும் போது வாகன் மறுதலிக்கிறான்.
"ஒருவேளை பாடி கண்டு பிடிக்கப்பட்டால் போஸ்ட் மார்ட்டத்தில் புல்லட் தெரிந்து விடும். ஈசியாக மாட்டிக் கொள்வோம்..."என்கிறான் மார்கஸ்.
வேறு வழி இல்லாத வழியில் வந்து விட்டோம். வேறு வழியே இல்லை. வழி கடந்து தான் ஆக வேண்டும். மார்கஸின் செயல் நடுக்கத்தோடு முணங்குகிறது.
ஒரு விபத்தோடு நின்றிருக்க வேண்டிய சம்பவம்...... இன்னொரு கொலையோடு தொடர ஆரம்பிக்கிறது. இயல்பிலிருந்து விலகுதல் அத்தனை சுலபமல்ல. இருவருக்குள்ளும் நெருப்பு துளிர்க்கிறது. இருவருக்குள்ளும் வெறுப்பு சுழல்கிறது. அச்சம் அமைதியின்மை என்று தவிக்கிறார்கள். கிளம்பி அறைக்கு சென்ற பிறகும் குழப்பம் கழுத்தில் அமர்ந்திருக்கிறது.
வாகனுக்கு என்னென்னவோ யோசனை. இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியவில்லை. உள்ளும் புறமும் உருக்குலைக்கும் உவமையை மௌனம் முணுமுணுத்துக் கொண்டே விடிகிறது.
அதன் பிறகு நடக்கும் நர்த்தனங்கள் மானுடத்தின் சந்து பொந்துகளில் சதா கொறித்துக் கொண்டிருக்கும் பெருச்சாளிகளின் கீச்சொலி தான். நித்தமும் தூக்கி சுமக்கும் கிரீடத்தில் முற்கள் தலைக்குள்ளும். சம்மியையும் அவன் அப்பாவையும் தேடும் ஊர்காரர்களோடு சேர்ந்து வாகனும் மார்கஸ்ம் தேடி செல்லும் காட்சி பர பர பயம் திரையில். அவர்களோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பிடி இறுக்கம்...கூடிக் கொண்டே இருக்கிறது.
அன்று நடக்கும் சம்பவங்களின் வழியே அந்த பிணங்கள் கண்டெடுக்கப்பட்டனவா. இவர்கள் என்னானார்கள். வஞ்சத்தின் முன் பழி எடுக்கும் எண்ணத்தின் முன் நண்பர்கள்.... நம்பிக்கைக்கும் நானுக்கும் இடையே சிக்கி தவிப்பதை நடுக்கத்தோடு தான் காண்கிறோம். ஒரு குடும்பத்தின் தவிப்பும்...... நண்பர்களின் தவிப்பும் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதில்... அச்சத்தை மிக அருகே உணர்கிறோம். தவறுகள் சிறியதாக இருக்கும் போதே திருத்திக் கொள் என்பது முன்னோர்களின் வேத வாக்கு. அது தான் இங்கும் அடிக்கோடிடப்படுகிறது. ஒன்றின் நீட்சியில் இன்னொன்று மீசை முறுக்கி தாடி வளர்ந்து முகத்தை சிதைத்து விடும் சம்பவங்கள் தான் நம்மை சுற்றியும். சூதானம் மிக முக்கியம்.
இந்த உலகின் கண்களைத் தாண்டி எதையும்...... எதையும் எப்போதும் மறைக்கவே முடியாது. பறவைகள் கூட்டின் ரகசியங்களை தூக்கி பறந்தாலும்.....கூடு காட்டிக் கொடுத்து விடுகிறது. மனிதனின் கண்கள்.... மானுடத்தின் மிக நீண்ட வடிவத்தில் மெருகேறியவை. அதற்கு பொய்கள் சொல்ல தெரியாது. தன் மனதின் சுயம்..... சாயம் போகும் இடத்துக்கெல்லாம் சென்று விடவே கூடாது. அது காலத்துக்கும் குருதி தோய்ந்த சுய கழிவிரக்க துயரம்.
Film: Calibre
Director: Matt Palmer
Language: English
Year: 2018
- கவிஜி