தேவை விருப்பம் ஆனது... விருப்பம் ஆசை ஆனது... ஆசை பேராசை ஆனது... பேராசை... பெரிய பெரிய ஆசைகளைக் கூட்டி வந்தது... ஒரு வீடு இருப்பவனுக்கு ரெண்டு கார் மேல் ஆசை வந்தது.
ரெண்டு கார் வைத்திருப்பவனுக்கு மூன்று பங்களா மேல் ஆசை வந்தது.... மூன்று, ஐந்தாகி, ஐந்து, பத்தாகி... ஒரு கூட்டம் பணத்தோடு சேர்த்து, தாங்கள் மட்டும் வாழ, அதிகாரத்தையும் சம்பாரித்துக் கொண்டது... கொண்டிருக்கிறது.
அதற்கு எதிர் நிலையில் நியூட்டனின் மூன்றாம் விதியாக ஒரு கூட்டம்... காய்ந்த வயிறோடு... முகவரி அற்று.. அடையாளமற்று... உறவுகளற்று... வெறும் உயிர்களாய் இந்த பூமியில் தனக்கென்று ஓர் இடம் இல்லாமல் ஒரு ஆத்மாவைப் போல அலைந்து திரிகிறது.
உன் பசி என் பசி தாண்டி உலகப் பசி என்று ஒன்று உண்டு... அதன் தீவிரத்தை, அதி தீவிரமாக யோசிக்க வைத்தது ஒரு படம்... சினிமாக்கள் வெறும் பொழுது போக்கல்ல என்பதை மீண்டும் மீண்டும் நான் உணர்ந்து கொண்டிருக்கும் தருணங்களை நான் ஒவ்வொரு முறையும் என்னை சரி செய்துக் கொள்ளவே உபயோகித்துக் கொள்கிறேன்... செய்தபடியேதான் கடக்கிறேன்.
இன்று பார்த்த "Beautiful Country" என்ற படம்... வெறும் படம் மட்டுல்ல. கூனி குறுகி… அடி மட்டத்திலேயே வாழ்ந்து விட்ட ஒரு மனிதனின் கதை. அவன் அவனைச் சுற்றி இருக்கும் முள் வேலியை அகற்ற போராடும் இறுக்கத்தின் பிடியில் இருப்பவன்.
அவனின் சுதந்திர தாகத்தின் வடுக்கள், புழுக்கள் நெளியும் கோபங்களின் கொப்புளங்கள்... வெறும் நெகிழ்வுகளாலும்... உறவுகளாலும் மட்டுமே இந்த வாழ்க்கை பின்னப்படுவதில்லை.
அதற்குள் எதிர்பாராத முடிச்சுக்களை தெரிந்தும் தெரியாமலும் போட்டுக் கொண்டே போய் விடுகிறது காலம். காலத்தின் கைகள் பெரும்பாலும். துப்பாக்கி கொண்ட அதிகார வர்க்கத்திடமே இருக்கிறது. அல்லது பணத்தை மூட்டை மூட்டையாகக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் மண்ணுக்குள் புதைத்து வைக்கும் முட்டாள்களிடமே இருக்கிறது.
உலகத்தில் ஒரு வயிறு கூட பசியோடு இருக்கக் கூடாது... ஓர் உயிர் கூட துப்பாக்கி முனையில் நிற்கக் கூடாது. ஆயுதங்கள் பசி போக்கதானே தவிர பசியான வயிறுகள் படைக்க அல்ல.
மேற் சொன்ன படத்தில் தாகத்தில், நெரிசலில்.. அம்மாவைப் பிரிந்த துயரத்தில் செத்துப் போகும் குழந்தையின் மரணத்தைப் போல மிகப் பெரிய கேள்வி இந்த மானுடத்துக்கு வேறு ஒன்றும் இல்லை.
தனிமனிதப் பேராசையின் விளைவுக்குப் பலியான, போபாலின் மண்ணில் புதைத்து கிடக்கும் கண்ணில்லா முகம் கொண்ட குழந்தை... பொருளாதார அதிகாரத்தின் மிருக வேட்டைக்கு பலியான வியட்நாமில், நிர்வாணமாய் ஓடி வரும் சிறுமி.
பத்தும் செய்த பசியின் கீறலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், மரணத்திற்காகக் காத்து மயங்கிக் கிடங்கும்... ஆப்ரிகா குழந்தை... உயிர் காத்துக் கொள்ள அகதியாய் பயணித்த தவிப்புகளின் சாட்சியாய், கரை ஒதுங்கிய சிரியா குழந்தையின் மரணம்.
வெறும் புகைப்படங்களோ.. தகவல் பரிமாற்றங்களோ... ஏதோ ஓர் ஊரில் நிகழ்ந்த தொடர்பற்ற கொலைகளோ அல்ல. அது மனித இனத்தின் மிகப் பெரிய துயரம். அது மானுட அத்து மீறலின் சாட்சியங்கள்.
அதிகாரத் தோட்டாக்களின் வலிமை. உறவுச் சிக்கல்களை கொண்ட நகருதலின் கதவுகள் அடைபட்டே கிடக்கும் உயிர்களுக்குள் பூட்டுக்கள் இல்லாத சாவிகளால் மனம் அலை பாய்கிறது.
மனதின் தீரா நடையில் பசியும் சேர்ந்து கொள்ளும் மாயக் கலைகளின் மௌனமாக சில போது அழுகையும் சிரிப்பும்... ஒன்றுக்கொன்று முகம் திருப்பிக் கொண்டுக் கிடக்கின்றன... குழந்தைகளின் மரணம் போல.
மனித உயிர்களின் அதிக பட்ச உச்சம் வெறும் அழுகை மட்டும்தான். அதுகூட இறுகி, கனத்து, வெறுத்துப் போக செய்வதில்... இந்த வாழ்க்கையின் திசை தன்னைத் தானே அடித்துக் கொல்லப்பட்ட ஒரு சிலுவைக் கொலையாகவே நிரூபணம் ஆகிறது.
ஓட்டைக் கூட நினைத்தது ஒன்றும், போட்டது ஒன்றுமாய், மாற்றிப் போட்டு விட்டு சிரிக்கும் மனிதர்களுக்கும் இந்த பூமி சொந்தம் தானே...!
- கவிஜி