இனி எதுவும் முடியாது....
 
எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும் நினைவுகளால் சூழப்படுகிறது. அவன் கனத்த உடலோடு கிடக்கிறான். அதுவரை.... எல்லாமாக இருந்த  அந்த அப்பனை என்ன செய்வதென்று தெரியாமல் அந்த சிறுவன் பார்க்கிறான். ஏதோதோ வசனங்கள் மெல்ல ஓர் ஆழ்கடலின் நிதானத்தைப் போல உள்ளே உள்ளே செல்கிறது. எதுவும் அற்ற முக பாவனையில் அச்சிறுவன்... வெறித்த சித்திரமென தன் அப்பனின் நெஞ்சில் தலை சாய்த்து படுக்கிறான். இயலாமையின் நுனியில்....தலை சாய்ப்பதே நிம்மதி என்பது பொது விதி. விடிகிறது....இடி விழுந்தாற் போல். அப்பன் மரித்துக் கிடக்கிறான். எழுப்பி பார்க்கிறான். காலம் விரைத்துக் கிடக்கிறது. தெரிந்தும் தெரியாத மரணத்தை மெல்ல அசைத்துப் பார்க்கிறான். அசைவற்றுக் கிடக்கையில்... காணும் நாமும் சற்று நேரம் அசைவற்றே கிடக்கிறோம். அசைந்தாலும் அது அதுவல்ல என்பது தான் காட்சி பிழை. காணும் பிழையென நம்பும் நமக்கும் திரைக்குள் மணல்வெளியில்..... குளிராவது.... குறுகுறுக்கும் உள்நெடு தாகம்.
the road
 
போர்த்தியிருக்கும் போர்வை கொண்டு கால் தலை என்று இழுத்து இழுத்து மரணத்தை சமன் படுத்துகிறான் சிறுவன். பின்னால் சாம்பல் பூத்து விரிந்து கிடக்கிறது கடல்வெளி யும் காணும் வெளியும். அதுவரை ஒற்றை தோட்டாவோடு அப்பாவிடம் இருந்த துப்பாக்கியும் பைனாகுலரும் பையனிடம் போகிறது. அது காலத்தின் கட்டாயம். வேறு வழியில்லாத சமன்படுத்தல்......இப்படித்தான் தானாகவே நிகழும். தேவையே சக்தியை நிர்ணயிக்கிறது. அதுவரை சிறுவனாக இருந்த அச்சிறுவன் அப்பா மரித்த நொடியில்... தான் ஆக மாறுகிறான். தொடர்ந்து செல்ல யோசிக்கிறான். அச்சமயம் ஒரு குடும்பம் அவனை அழைத்து செல்ல முன் வருகிறது. அக் குடும்பம் அவர்களிருவரையும் பின் தொடர்ந்து வந்ததாக கூறுகிறது. அவர்களோடு ஒரு நாயும் உயிரை வாலில் பிடித்துக் கொண்டு மிரண்டு நிற்கிறது. யாருமற்று நிற்கும் அச்சிறுவன் அக்குடும்பத்தோடு செல்ல முடிவெடுக்கிறான்.
 
சட்டென படம் முடிந்து விடுகிறது.....! 
 
அதன் பின் இவ்வுலகில் தனித்து விடப்பட்ட அச்சிறுவன் என்ன ஆவான் என்று திரையையே வெறித்து பார்த்துக் கிடக்கும் கண்களில் இப்படம் மீண்டும் ஒரு முறை வேக வேகமாய் கடந்து செல்கிறது. வாழ்வின் முரணை கடத்தி செல்கிறது. உலகம் சந்தித்த பேரழிவுக்கு பின் ஓர் அப்பனும் ஒரு மகனும் நடந்து நடந்தே இப்பூமியை கடக்கிறார்கள். மிச்சம் இருக்கும் உயிரின் சுவாசத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றெண்ணும் இயற்க்கையின் இன்முக சுவடுகள் அவை. இரு தோட்டாக்கள் மட்டுமே இருக்கும் ஒரு துப்பாக்கியோடு அவர்கள் இந்த பாழடைந்த பூமியை கடக்கையில் மானுடத்தின் பாவங்களை நாமும் சுமக்கிறோம்.
 
கீழே கிடக்கும் எதுவும் எதற்காவது உதவும் என்று சேகரிக்கும் பாங்கு... சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடும் பசியின் தீவிரம்.. உள்ளொடுங்கிய கன்னத்தில் மிரண்ட கண்களோடு அப்பாவின் பயம்...நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று உணர உணரவே அதைக் கடந்து செல்ல வேண்டிய தவிப்பின் பார்வையில் அச்சிறுவன்......பூமியின் பாரம் தாங்காமல் சோர்ந்து சோர்ந்து நடக்கையில்... தேடி தேடி அலைகையில்... தாங்கொணா துயரம் நம்மை சூழ்கிறது. ஏதேதோ செய்து இந்த பூமி அழிய இம் மானுட குலமே காரணமாகி இருக்கிறது. எதையாவது செய்து மீண்டும் இப்பெரும் வாழ்வினை பெற்று விட முடியுமா என்ற ஏக்கம் ஒரு துளி கனவைப் போல பின் தொடர்கிறது. ஒருவரை ஒருவர் சாராமல் இவ்வாழ்வு சாத்தியமே இல்லை என்று புரிகையில்........எல்லாம் முடிந்திருக்கிறது. காரணங்கள் அன்றி காரியம் இல்லை என்று கிழிந்த ஓசோன் ஓட்டை கூட முதலில் நம்ப மறுத்து பின்புதான் தன் நிறமாற்றி கிழிந்து கொண்டே சென்றிருக்கும். 
 
நீண்ட நடைக்கு பின் நீண்ட தேடலுக்கு பின் ஒரு கோக் டின் கிடைக்கையில் இருவருக்கும் வரும் புன்னகையும் தெம்பும்... நம்பிக்கையும் இப்பெரு வாழ்வு என்பது ஒரு கூட்டு முயற்சி.. தனி மனிதனால் நிகழ்த்த முடியாத சம்பவங்களின் கோர்வை.....என காணும் ஒவ்வொருவரும் உணர முடிகிறது. அலாதி ஞாபகப் பிறழலென ஒரு சிறுவன் ஓடும் காட்சி கடைசி வரை அச்சிறுவனுக்கு மட்டுமல்ல நமக்கும் அது நிஜமா பிரமையா என்றே தெரிவதில்லை. 
 
கனவுகள் அற்ற தூரத்தில் வெறுமையும்... மிரட்சியும் கொண்ட அடுத்த நொடி பயங்கரங்களை சுமந்து கொண்டு திரிவது அத்தனை சுலபமல்ல மிச்ச உயிர்களுக்கு. மரணம் எவ்வளோ சுலபமென்று யோசிக்க வைக்க கூடிய காட்சி அமைப்புகளின் நிஜம் தோட்டாக்களற்று சுடுகிறது. தோட்டாக்களோடு அலைந்து திரியும் தான் என்பதின் நியதியை கண் முன்னே காணுகையில்.... சுயநலம் பொதுநலம் என்ற வாக்கியங்களின் தகுதி மதிப்பு இழப்பதாக நம்புகிறேன். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட் என்பது காட்டுக்குள் மிருகங்களுக்கு சொன்னது..... மனிதர்களும் மிருகங்களின் வழி வந்தவர்கள் என்றாலும்.... மெய்மறந்து கொல்லும் எலும்பின் சிறு கடிக்கும் எதிர்வினையென இருக்கத்தான் மானுடம் மூளைக்குள் சுருங்கிக் கிடக்கிறது.
 
மனிதர்களை கொன்று தின்னும் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் போது........தப்பிக்க வேறு வழியே இல்லை என்றால் பையனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பையனின் நெற்றியில் அந்த அப்பா துப்பாக்கியை வைக்கும் போது.... நிர்வாணமாய் எலும்பும் தோலுமாக அறைக்குள் கிடக்கும் உயிர் மட்டுமே இருக்கும் பிண்டங்கள் நம்மை மிரட்டுகின்றன. 'மனிதனை மனிதன் சாப்பிடும் காலம் வெகு விரைவில் வரும்' என்று விவிலியம் கூறுவதை சற்று யோசித்துப் பார்க்கிறேன். இங்கிருப்பது எல்லாமே கட்டமைப்பா.. கடந்த அமைப்பா... அது தானாகவே நடக்கிறதா.. அப்படி நடப்பது போல நமக்கு தெரிகிறதா... 
 
காட்சிக்கு காட்சி... உயிர் வாழும் தகுதியை உடைத்துக் கொண்டே செல்லும் அவர்களின் பயணம் மிக கொடியது. கனத்த மௌனம்....ஒரு பிசாசைப் போல அவர்களை பின் தொடர்வதை எழுத்துக்களின் வழியே எட்டிப் பார்க்கிறேன். கொம்பு முளைத்த வெற்றிடங்கள் கை வீசி உடல் வீசி பெரும் பூதமென பரவி விரவிக் கொண்டே இருக்கிறது. பூமியின் முதுகில்  நீண்டு தொங்கும் பற்களில் கொட்டுவது மானுட குருதியும்...மாயங்களின் நிழலும். 
 
சிறுவனிடம் திருடிய அவர்களை போலவே இக்கடைசி பெரு உலகில் மாட்டிக் கொண்ட இன்னொருவனிடம் இருக்கும் அத்தனையையும்..துப்பாக்கியைக் காட்டி அவனின் ஆடைகள் உள்பட பிடுங்கிக் கொண்டு அவனை விரட்டி விடும் காட்சி... இங்கே கடவுளும் சாத்தானும் இடம் மாறும் தர்க்கத்தின் முடிச்சை யார் யாருக்காக போடுகிறார்கள் என்று நீண்ட நேரம் யோசித்தேன். பிறகு அச்சிறுவனின் பிடிவாதத்தால் அதே இடம் வந்து அவனைத் தேடி... அவன் கிடைக்காததால் அவனிடம் பிடுங்கிய அத்தனையையும் அதே இடத்தில் வைத்து விட்டு கூட ஒரு டின் உணவினையும் வைத்து விட்டு போகையில்.. கடைசி தருவாயில் மரிக்க இருந்து பிழைத்துக் கொண்ட மானுடத்தை எக்கோணத்தில் சித்தரிப்பது என்று கண் கொட்ட பசித்திருந்தது இதயத்தின் தவிப்புகள். 
 
மண்ணுக்குள் ஒரு பாதுகாப்பான இடம் போல பதுங்கு குழி ஒன்றை கண்டு பிடிக்கிறார்கள். டின்களில் அடைத்த உணவுக் கிடங்கு போல அது வயிறு புடைத்து கிடக்கிறது. ஆசை தீர சாப்பிடுகிறார்கள். குளிக்கிறார்கள். முடி வெட்டிக் கொள்கிறார்கள். அப்பா குடிக்க கூட செய்கிறார். சில நாட்கள் அப்பாவும் மகனும் பயம் இருந்தாலும்... சற்று நிதானத்தோடு... இயல்பு வாழ்வை கொள்ளும் காட்சியில்...நமக்கும் சற்று ஆசுவாசம். ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் வெளியேறும் சூழல். முடிந்தவரை உணவுகளை..... குளிருக்கு போர்த்தும் ஆடைகளை.......எடுத்துக் கொண்டு மீண்டும் குளிர்ந்த யாத்திரையில்... எதை நோக்கி எது விரட்ட எதை கொண்டு எதை சரி செய்ய என்று எதுவும் அறியாவண்ணம் இருவரும் நடக்கிறார்கள். 
 
சுமையெல்லாம் அவர்கள்.. அவர்களே சுமையின் பெரும் சுமை.
 
வாழும்வரை சக மனிதர்களை நாம் கண்டு கொள்வதேயில்லை. இப்பூமியின் அரவணைப்பை அறிந்து கொள்வதேயில்லை. எவ்வ்ளோ முடியுமோ அவ்வ்ளோ குற்றங்களை பூமிக்கு எதிராக நிகழ்த்துகிறோம். எல்லாம் கை மீறும் வேளையில் அழியாத மானுடர்கள் பாவத்தை சேகரிக்கிறார்கள். மொத்த உலகத்துக்கான பாவங்களை தப்பித்து உயிர் வாழும் சில நூறு பேர் சுமக்க வேண்டி வருகிறது. கோடி முள்கிரீடம் சுமக்கும் ஒற்றை பறவையின் தூர தேச மறதி அது. ஞாபகங்களில் வந்து வந்து போகும் மனைவியும்.. அவள் காணாமல் போன அந்த காடும் மூளை மடிப்பில் இடம் மாறிக் கொண்டே இருக்கும் நாட் குறிப்புகள் இக்கதை நாயகனுக்கு.
 
நீர் காற்று... வெளி.... என்று எல்லாவற்றையும் மாசு படுத்தி விட்ட இச்சூழலில் இப்படம் என்னை உலுக்கி போட்டது. மரணம் ஒரு நொடியில் வந்து விடக் கூடியது. வாழ்வு.. நொடிக்கு நொடி வராமலே இழுபட்டுக் கொண்டிருப்பது. எது நிஜம் எது கற்பனை என்ற கட்டுக்குள் மானுடம் சிக்கிக் கொள்ளும் போது... தன் சமநிலை தவறி மனிதனை மனிதன் தின்னவும் தொடங்குகிறான். அது உலகத்தின் கடைசி சில நாட்களாகவும் பதியப்படுகிறது. மிஞ்சியோரின் நிகழ்வுக்குள் இருத்தல் என்பது நரம்பறுந்து தறிகெட்டு சுற்றும் பூமியை போன்றது. 
 
காற்றுவெளி மங்கும் மிச்சத்தில் தான் என்பதை தானே தான் என்று நம்பும் கணத்தை கடைசி வரை கை விடாதவன் தன்னையே சுமக்கிறான். அதுதான் இந்த பயணத்தின் தூரத்தை நிச்சயப்படுத்துகிறது.
      
FILM: THE ROAD
YEAR : 2009
DIRECTOR : JOHN HILLCOAT
LANGUAGE : ENGLISH
 
- கவிஜி
 
Pin It