அது ஏன்? லத்திகா படத்தை பார்க்‍கும்போது மட்டும் நக்‍கலாக சிரிப்பு வருகிறது. நோக்‍கு வர்மத்தை பார்த்தால் சிரிக்‍காமல், 2 பவுன் தங்கச் சங்கிலியை தொலைத்தவன் போல மூஞ்சியை வைத்துக்‍ கொண்டிருக்‍கிறாய்..... நகைச்சுவை என்று வந்துவிட்டால் எல்லாவற்றிற்கும் சிரிக்‍க வேண்டியதுதானே, உனக்‍கு ஏதோ உளக்‍கோளாறு ஏற்பட்டுள்ளது. நல்ல சைக்‍காலஜிஸ்டை பார்க்‍க வேண்டும் என்று கூறியபோது அவன் கூறுகிறான்........ ஒரு ​டிக்‍கெட்டின் விலை 250 ரூபாய் என்று.

surya_7m_arivuகருணைக்‍ கடலான டோங்லீ....... என் நண்பனை உற்றுப் பார்த்து அவனது 250 ரூபாய் துன்பத்தை மறக்‍கச்செய்து சிரிக்‍கச்செய்வாயாக என்று வேண்டிக்‍கொள்வதைத் தவிர ​வேறு என்ன செய்வது? ஆபரேஷன் ரெட் என்று ஆரம்பித்தபோதே உஷாராகியிருக்‍க வேண்டும். பாதாளச் சாக்‍கடை சுத்தம்செய்யும் தொழிலாளி டோங்லீயின் பார்வை பட்டதும், குங்ஃபூ ஸ்டைலில் ஸ்டெப் போட்டு ஒரு தாக்‍கு தாக்‍குவாறே, அதுவரை நம்பிக்‍கையோடு உட்கார்ந்ததை, கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் என்கிற பழமொழிக்‍குத்தான் ஒப்பிட வேண்டும்.

ஜீன் கொள்கை

முருகதாசின் ஜூன் கொள்கைப்படி பார்த்தால் அடிமையின் மகன் அடிமையாக இருக்‍கவும், தோட்டியின் மகன் தோட்டியாக இருக்‍கவும், பணக்‍காரனின் மகன் பணக்‍காரனாகவே இருப்பதற்கும் உரிய திறமைகளை தனது ஜீன்களிலேயே கொண்டிருப்பதாக அல்லவா ஆகிவிடும். போன ஜென்மத்தில் என் கொள்ளுத்தாத்தா ஒரு பேராசிரியராக இருந்தால் போதும். இந்த ஜென்மத்தில் நான் படிக்‍க வேண்டிய அவசியமே இல்லை. 12 நாட்கள் விடுமுறை எடுத்துக்‍ கொண்டு ஸ்ருதிஹாசனிடம் சென்றுவிட வேண்டியதுதான். அவர் என்னை தண்ணிக்‍குள் போட்டு அமுக்‍குவாரோ, இல்லை உடலில் வோல்ட் கணக்‍கில் மின்சாரத்தை செலுத்துவாரோ அதெல்லாம் எனக்‍குத் தெரியாது, போன ஜென்மத்தில் என் தாத்தா படித்ததெல்லாம் நியாபகத்தில் வரவேண்டும். அவ்வளவுதான் விஷயம், எவ்வளவு வேண்டுமானாலும் டியூசன் பீஸ் கொடுக்‍கத் தயார்.

2 ஆயிரம் ஆண்டுக்‍கு முன் எகிப்து பாரோ மன்னன் காலை உணவாக என்ன சாப்பிட்டான் என்று தெரிய​வேண்டுமா? கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாளா, இல்லையா என்று தெரிய வேண்டுமா? எகிப்து தேசத்திலிருந்து ரத்தப் பரிசோதனை மூலமாக இருவரை தேடிப்பிடித்து, சென்னை ஐஐடியில் வைத்து தண்ணீருக்‍குள் அமுக்‍கி 12 நாட்கள் வைத்திருக்‍க வேண்டும் அவ்வளவுதான். பாரோ மன்னன் தினசரி பல் துலக்‍கினானா இல்லையா என்பதைக்‍ கூட ஆதாரப்பூர்வமாக நிரூபித்து விடலாம். ஆனால் காந்தியின் மகன் மட்டும் ஏன் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடந்தார் என்று சந்தேகத்துடன் எடக்‍கு மடக்‍கான கேள்விகளையெல்லாம் கேட்கக்‍கூடாது. ஜீன் மூலம் போதிதர்மனின் மருத்துவ மற்றும் மார்ஷியல் ஆர்ட் திறமைகளையெல்லாம் மீட்டெடுப்பது என்பது பள்ளிக்‍ குழந்தையின் புரிதலுடன் கூடிய அபத்தமான கற்பனை.

அதுமட்டும் சாத்தியம் என்றால் வரலாற்று ஆசிரியர்கள் ஊர் ஊராக சென்று பூமியை தோண்டிக்‍கொண்டிருக்‍க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் மனிதர்கள் ஜீனை தூண்டி விட்டு அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் பெற்று விடலாம் அல்லவா? ஜெனிடிக்‍கான சில விஷயங்கள் மட்டுமே குரோமசோம்களில் பண்புகளாக கடத்தப்படுகின்றன என்கிற சாதாரண விஷயம் 10ம் வகுப்பு படிக்‍கும் மாணவனுக்‍கு கூட தெளிவாக புரியுமே? போதிதர்மன் இமயமலைப் பகுதிகளில் தேடி எடுத்த வெட்டிவேர்கள் எல்லாம் ஜீனில் நியாபகங்களாக பதிந்து கிடக்‍கிறது என்று கூறுவது அறிவியலை பகடி செய்வதற்கு ஒப்பானதாகும்.

போதிதர்மனின் கொடை மார்ஷியல் ஆர்ட் மட்டுமல்ல. ஜென் தியானமே அவரின் அற்புதம், ஓஷோவின் மாஸ்டர் ஆஃப் ஜென் புத்தகத்தில் அவரது தியானத் தன்மையை பற்றி விரிவாக எடுத்துக்‍ கூற்பபட்டுள்ளது. இன்றைய சீனத் திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்டையே பிரமாதமாக எடுத்துக்‍ கூறுவதால், "மார்ஷியல் ஆர்ட்டை உருவாக்‍கியவர் போதி தர்மன்" என்று கூறுவதன் மூலம், படத்திற்கு (அ) போதிதர்மனுக்‍கு ரீச் இருக்‍கும் என இயக்‍குனர் நம்பியிருக்‍கலாம். போதிதர்மன் என்ன விஜயகாந்தா? பறந்து பறந்து அடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்‍கிய இடத்தை தக்‍க வைத்துக்‍ கொள்வதற்கு. உண்மையில் போதிதர்மன் ஜென் மதப்பிரிவை உருவாக்‍கியவர் என்கிற ரீதியிலேயே உலகம் முழுவதும் அறியப்படுகிறார். போதிதர்மன் சீனாவுக்‍கு செல்லும் முன் ஒரு பெண்ணை காதலுடன் பார்ப்பது எல்லாம் தமிழ் சினிமாவுக்‍கே உரிய அபத்தங்கள்.

நோக்‍கு வர்மம்:

இந்த இடத்தில் தான் தன்னுடைய மனசாட்சியை எப்படித் தொலைத்தார் என்று தெரியவில்லை. தவறு செய்யும்பொழுது மனசாட்சி முன்னின்று உறுத்தலை கொடுக்‍கும் என்கிற அனுபவம் அனைவருக்‍கும் இருக்‍கும். பரீட்சையில் கூட கதையடிக்‍கும்போது ஒரு அளவுக்‍கு மேல் மனசாட்சி உறுத்த, மதிப்பெண் கிடைக்‍காவிட்டாலும் பரவாயில்லை என்று கதையடிப்பதை நிறுத்தி விடுவோமே.. ஏன்? அதுபோன்று உறுத்தல் எல்லோருக்‍கும் ஏற்பட மாட்டேன் என்கிறது.

படத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் நோக்‍குவர்மம் உண்மையென்றால்

1. பிரதமரை உற்றுப் பார்த்து தமிழக மீனவர்களுக்‍கு மீன்பிடிக்‍கும் பொழுது இலங்கை ராணுவத்திடமிருந்து பாதுகாப்பளிக்‍க வேண்டும் என்று கேட்டுக்‍ கொள்ளலாம்.

2. தமிழக முதலமைச்சரை உற்றுப் பார்த்து சென்னை கோட்டூர்புர அண்ணா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்‍ கொள்ளலாம்.

3. ஸ்பெக்‍ட்ரம் வழக்‍கை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குள் முடித்து விடலாம்.

4. வெளிநாடுகளில் பதுக்‍கி வைக்‍கப்பட்டிருக்‍கும் கருப்பு பணத்தையெல்லாம் பைசா பாக்‍கியில்லாமல் கண்டுபிடித்து விடலாம்

5. ஒவ்வொரு அரசியல் கட்சித் தொண்டனையும் உற்றுப் பார்த்து 10 ஓட்டெல்லாம் போடக்‍கூடாது என்று சத்தியம் வாங்கி விடலாம்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்‍கெல்லாம் நோக்‍கு வர்மத்தை பயிற்றுவிக்‍கலாம். நோக்‍குவர்ம பரீட்சையில் பாஸ் ஆனால் மட்டுமே நீதிபதி பதவிக்கு உயர முடியும் என்று கட்டுப்பாடு விதிக்‍கலாம். எல்லா வழக்‍குகளையும் ஒரே சிட்டிங்கில் முடித்து விடலாம்.

இவ்வாறான நோக்‍குவர்மத்தை பயன்படுத்தி குழந்தைகள் நாடகம் போட்டால் கூட அது நகைச்சுவை நாடகமாகவே கருதப்படும். இதில் ஏற்றுக்‍கொள்ள முடியாத விஷயம் என்னவெனில் 'உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த தமிழ்த் திரைப்படம்' என்கிற வார்த்தைகள் தான். உலகத் தமிழர்கள் வேறு எதற்குத்தான் இருக்‍கிறார்கள் வெட்டியாக, அவர்கள் இதுபோன்ற சமயங்களிலாவது (அமைதி காப்பதன் மூலம்) பயன்படட்டும். நானும் இனிமேல் இதுபோல் சொல்லிக்‍ கொள்ளப் போகிறேன். யாரும் வாயைத் திறக்‍கக்‍ கூடாது....... மூச்சு விடக்‍கூடாது....... வாயில் விரலை வைத்துக்‍ கொண்டு அமைதியாக இருக்‍க வேண்டும்..

"இது உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த விமர்சனம்"

உலகத் தமிழர்கள் யாரும் ஒரு வார்த்தை பேசக்‍கூடாது. ஜாக்‍கிரதை. நான் மட்டும் என்ன ​இளிச்சவாயனா?, உலகத் தமிழர்களை சொந்தம் கொண்டாட, பயன்படுத்திக்‍ கொள்ள எனக்‍கு மட்டும் உரிமை இல்லையா? 

Pin It