இரா.பார்த்திபன் இயக்கியதில் புதிய பாதை, ஹவுஸ்புல் என்ற இரண்டு படங்கள் என் மனம் கவர்ந்தவை. உள்ளேவெளியே, சிரிகமபதநி என்ற இரண்டும் வணிகரீதியாக வெற்றி பெற்றாலும் கூட அவற்றோடு நான் ஒத்துப்போனதில்லை. இவன், குடைக்குள் மழை ஆகியன சொல்லவந்ததை சரியாய்ச் சொல்லாத காரணத்தால் தோல்வியடைந்தவை. சுகமான சுமைகள், புள்ளகுட்டிக்காரன், பொண்டாட்டி தேவை, பச்சக்குதிர போன்ற படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவை கொஞ்சமாக ஆதரிக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் இருந்திருக்கின்றன.

parthipan_370இப்போது 2011 ஆமாண்டு இறுதியில் வித்தகன் என்ற படத்தை பாடல்கள், வசனம் எழுதி, கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்துமிருக்கிறார் பார்த்திபன். படத்தின் கதை என்னவெனில் ரௌத்ரன் என்ற நேர்மையான காவலதிகாரி தன் குடும்பப் பின்னணி குறித்த தகவல்களை மறைத்து விட்டு பணியில் சேர்ந்திருக்கிறார். காரணம் ஒரு ஃப்ளேஷ் பேக். அதில் ஒரு வில்லன் இவரது தந்தையான எஸ்.ஐ.யை பணிய வைக்க இவரது தங்கையை ப்ளாக் அண்ட் வொயிட் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றதே. (இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த மாதிரி எழுதி எடுப்பீங்க தலைவா...?)

உள்ளே வெளியே வையே உல்டா செய்து..கவனிக்கவும்...உள்ளே ரௌத்திரனாக ரௌடிகளோடு ரௌத்ரதாண்டவனாக ரௌங்கரிக்கும் ரார்த்திபன்..ச்சீ...பார்த்திபன்... இடைவேளையில் வேலை போய் ஜெயிலுக்கு போய் இன்னொரு வில்லன் கூடாரத்துக்குப் போய் ரௌடியாக மாறுகிறார். இனி செகண்ட் ஆப்... (ஆனாலும் ரௌத்ரன் ரௌடி....ரௌ விடாதுங்கோ)

எனக்குத் தான் நம்பர் ஒன் இடம் வேணும் என அழுதுபுலம்பும் வில்லனைக் கொல்வதே இரண்டாவது பகுதி. வரிசையாக துப்பாக்கி சத்தமும் எல்லா சமூகவிரோத செயல்களையும் குறிப்பிட்ட சிலரே செய்வதும் அவர்கள் அனைவருமே ஒற்றை நாயகனை ஒண்ணுஞ்செய்ய வியலாது திரிவதும் ஒரு வில்லனுக்குப் பிடிக்காதவனை உடனே இன்னொரு வில்லன் கூப்பிட்டு வேலை கொடுப்பதும் அவனையே கடைசியில் இந்த நாயகன் அழிப்பதும்...ஸ்....அப்பா....ஜெய்சங்கர் காலத்தில் வரவேற்கப்பட்ட கதையம்சங்களை இன்றைக்கு எப்படி வரவேற்பார்கள்..? என்ன நியாயம் சார் இது..? ஒரு அளவு வேணாம்...?

நாலுபேரைக் கொல்றதுன்னு முடிவு பண்ணிட்டா அதை நாலுபேர் கிட்டே டிஸ்கஸ் கூட பண்ணாம படமெடுத்து இப்பிடித்தான் கொல்லணும் போல... என்னுடன் நேற்றைக்குப் படம் பார்த்த ஒரு நண்பன் இனி என்னுடன் எந்தக் காரணம் கொண்டும் பேசமுடியாது என்று உண்மையாகவே என்னோடு சண்டையிட்டுச்சென்றதற்கு வித்-த-கன் தான் காரணம்

சில புள்ளிவிவரங்கள்:

1.மொத்தம் நான் பார்த்த ஷோ தியேட்டரில் இருந்த ஆடியன்ஸ் எண்ணிக்கை 136பேர். படத்தில் மொத்தம் கொல்லப்படுகிறவர்கள் எண்ணிக்கை 316 பேர்.

2 ஹெலிகாப்டர் பொம்மை எரித்துக்கொளுத்தப்படும் க்ளைமாக்சில் நமக்கெல்லாம் ரத்தம் வருகிறது, சகல துவாரங்களிலும்...

3.நேர்மையான அதிகாரி என்று யாரும் இனி படமே எடுக்க கூடாது என்று தியேட்டர் வாசலில் 70 வயது பெரியவர் ஒருவர் அழுதுகொண்டே இருந்தது காண்பவர் நெஞ்சைக் கலங்க வைத்தது.

4.பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் புதுமைப்பெண்ணாக இந்தப் படத்தில் வருகிற ஒரே பெண் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறவர் பூர்ணா. அவரது பாத்திரம் அறிவுப்பூர்வமானது. அவரது வசனங்கள் அனல் தெறிக்கிறவை. அவரது தோற்றம் கண்ணியமானது. படத்தில் அவரது தியாகம் மெய்சிலிர்க்கச்செய்வதாக இருக்கிறது. ஆகவே அவரை இரண்டாம் கண்ணாம்பா என்ற பட்டம் கொடுத்து கௌரவிக்கிறேன்.

5.இப்படத்தில் வரக்கூடிய வில்லன்கள் மானம் ரோஷம் இவற்றுக்காகவே சண்டையிட்டு வீரமரணம் அடைகிற வீரர்கள். அவர்களது புரட்சி வாழ்வை அட்டகாசமாய்ப் படமெடுத்திருக்கிறார் இயக்குநர்.

6.இப்படம் ஆரம்பித்த சீனில் இருந்து எப்போது முடியும் என்ற எதிர்ப்பார்ப்பை எல்லோருக்கும் ஏகமாய்க் கிளப்பி விடுவதால் அனைவரின் கவனமுமே க்ளைமாக்சிலேயே இருக்குமாறு படமெடுக்கப்பட்டு உள்ளது.

7.ரத்தவெறி, மூடத்தனம், படாடோபம், வன்முறை, வாழ்வியலுக்கு சற்றும் சம்மந்தமில்லாத காட்சிகள், அடிப்படையில் மிகப் பலவீனமான கதை, அடுத்தடுத்த நம்பகத்தன்மை இழந்த திரைக்கதை நகர்வு, மனிதத் தன்மையற்ற வெறிமிகுந்த காட்சிகள் இன்னபிறவற்றுக்காக இப்படத்தை நிராகரிக்கிற வேலையை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்... அவர்களுக்குத் தெரியும்...

Pin It