paalai_620

தமிழில் அபூர்வமாகவே அறிவுப்பூர்வமான, மனசுக்கு நெருக்கமாகும் படங்கள் எடுக்கப்படுகின்றன. சமீபகாலமாக கோடம்பாக்கத்தின் வழக்கமான பாதையில் இருந்து சற்றே விலகி நடக்கத் தொடங்கும் படங்களை வேறு வழியில்லாமல்தான் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. அவை பெரும்பாலும் பொழுதுபோக்கு என்ற ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன.

திரைப்படம் என்பது மற்ற எல்லா கலைப்படைப்புகளையும் போலவே உணர்வுப்பூர்வமான கலைப்படைப்புதான், அது சரியான அர்த்தத்துடன் எடுக்கப்படும்போது. கையில் கிடைத்த கரிக்கட்டை, மண்ணைக் கொண்டு குகைச் சுவர்களில் ஓவியம் வரையப் பழக ஆரம்பித்த காலத்தில் இருந்து, மக்களின் கலையாக வெளிப்பட்ட அனைத்தும் காலங்களைக் கடந்து மனிதனின் மனசையும், அவனது படைப்பாற்றலையும், கலைத்தாகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட வரிசையில் வைத்து பேச வேண்டிய தகுதியை “பாலை” முதல் பார்வையிலேயே பெற்றுவிடுகிறது.

தங்கள் வாழ்க்கையையும் அதோடு இரண்டறக் கலந்திருக்கும் சூழலையும், பருவகாலத்தையும், இன்னும் பல பண்பாட்டுக் கூறுகளையும் திணையாக வகுத்து நெடுங்காலத்துக்கு முன்பே பின்பற்றியது நமது பண்டை தமிழ்ச் சமூகம். உலகின் வேறு சமூகங்களில் இதுபோன்ற அறிவியல்பூர்வமான, மானிடவியல் பண்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நமது துரதிருஷ்டம் அதையெல்லாம் பள்ளி பாடப்புத்தகங்களில் மனனம் செய்யும் பாடங்களாக மட்டும் குறுக்கிவிட்டோம். அது மட்டுமில்லாமல் நம் கண் முன்னாலேயே ஐந்திணைகளும் பேராசை வெறியுடன் சுரண்டப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் நம்முடைய நிலம், நமது இயற்கைச் சூழல், நமது மூதாதைகள், அவர்களது அன்றைய பண்பாடு போன்றவை எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி இவ்வளவு காலம் மனக் கற்பனையில்தான் சினிமா ஓட்டி வந்திருப்போம். அந்த மனக்காட்சிகளை சினிமாத்தனம் பூசாமல் அசலாகக் காட்டியுள்ளது “பாலை”.

வெளிநாடுகளில் இதுபோன்ற விஷயங்களை மானிடவியல் துறைகளும், அருங்காட்சியகங்களும் ஆவணப் படமாகவும், கற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்துகின்றன. ஆனால் “பாலை” ஆவணப் படத் தன்மையுடன் இல்லாமல் நாயகி காயாம்பூவின் (ஷம்மு) ஓலைச்சுவடி வழியாக அந்தக் காலக் கதையை நமக்குக் கடத்துகிறது. பொதுவாகவே, தமிழில் மாற்று முயற்சிகளாக எடுக்கப்படும் சில படங்கள் ஆவணப் படத் தன்மையுடன் தங்கிவிடுகின்றன. அந்த துரதிருஷ்டம் பாலையில் நேரவில்லை.

முல்லை நிலத்தில் இருக்கும் இரண்டு குடிகளுக்கு இடையிலான போர்தான் கதை. மேலும் இது வரலாற்றில் மீண்டும் மீண்டும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அரசர்களின் கதையல்ல, சாதாரண மக்களின் கதை. அந்த வகையில் இந்தப் படம் மக்களின் வாழ்க்கையை, வரலாற்றை பேசுகிறது. “தமிழின் முதல் சமூகம் ஆயர் சமூகமாகவே இருந்திருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக நமது தாயை, தாயின் அம்மாவை ஆயி என்றும் அல்லது ஆயா என்றும் அழைக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சியை” படம் பார்த்த மூத்த பத்திரிகையாளரான நண்பர் திரு.மோகனரூபன் சுட்டிக்காட்டினார். இந்தப் படத்தில் 2300 ஆண்டுக்கு முற்பட்ட நமது சமூகத்தின் வாழ்க்கை, காட்சிக் கவிதையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வயசுப்பிள்ளைகளிடையே மூளும் காதல், அவர்களது கூடல், அதை அறிந்து அவர்களது இணைப்பை சமூகம் அங்கீகரிக்கும் திருமணம், கொண்டாட்டம் போன்ற விஷயங்கள் நம் பண்பாட்டின் வலுவான அடையாளங்கள். இப்படி நடைமுறை வாழ்க்கையில் எளிமை மட்டுமின்றி, அண்டை குழுக்களுடன் நேர்மையாகவும் இருக்க முயற்சிக்கிறார்கள் முல்லைக்குடி மக்கள். ஆனால் அதற்கு நேரெதிராக அந்த நேர்மையை தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு வஞ்சம் செய்கிறது ஆயக்குடி சமூகம். எதிர் சமூகத்துக்கு அடிபணிந்து, அடிமையாக இருக்கிறேன் என்று ஒத்துக்கொள்பவன், அவர்கள் இடும் அத்தனை வேலைகளையும் செய்தாக வேண்டும். இந்த இடத்தில்தான், மாடுகளை வெட்டும் அடிமைப் பணியும், அதன் காரணமாக மனதில் எழும் அவமான உணர்வும் 2000 ஆண்டுகளைத் தாண்டியும் நீண்டு கொண்டிருப்பது மனதில் முள்ளாகத் தைக்கிறது. இன்னமும் நம்மில் பெருமளவு மக்கள் சாதிய அடிமைத்தன சுருக்குக் கயிறுகள் இறுக்க குற்றுயிருடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோல அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனதில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

இரு குடிகளுக்கான போர் என்பதிலும்கூட மிகை எட்டிப்பார்க்கவில்லை. யானைகளை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட “கவண்கல் முறை” உட்பட அந்த காலத்தின் பல்வேறு போர் முறைகள் ஆச்சரியம் தருகின்றன. போரில் வெற்றி பெறுவதற்கு எவையெல்லாம் தேவை என்று முல்லைக்குடியைச் சேர்ந்த முதுவன் சுட்டிக்காட்டுவது அனைத்தும் சத்திய வார்த்தைகள். "முல்லைக்கொடிக்கு அடிமைகள் தேவையில்லை, முல்லைக்கொடி யாருக்கும் அடிமையும் இல்லை" என்ற வார்த்தைகள் உட்பட.

paalai_621
ரோமப் பேரரசர்கள் போல உடையணிந்து கொண்டு கட்டபொம்மன்கள் வீரவசனம் முழங்குபவர்களாகவும், ஔவை(யார்)கள் திருமணம் செய்துகொள்ளாமல் கூன் முதுகுடன் அறநெறி கற்பிப்பவர்களாகவும் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட அவலம் தமிழகத்தில் நடந்துள்ளது. வரலாற்றில் எத்தனை ஔவைகள் இருந்தார்கள், அவர்கள் எதைப் பற்றியெல்லாம் பாடினார்கள், அவர்களது கற்பனையும், தைரியமும் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றியெல்லாம் ஆர்வம் உள்ளவர்களுக்கும்கூட அதிகம் தெரிந்திருப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் ஔவையின் வரிகள் மூலமாக பெண்ணின் மனக்குரலாக, அவளது மனதில் இயல்பாகத் தோன்றும் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது “பாலை”. அத்துடன் அன்றைய வாழ்வில், உறவுகளில் இருந்த வெளிப்படைத்தன்மை, எளிமை போன்றவற்றவை படத்தில் பிரதிபலிக்கின்றன.

நடிகர், நடிகைகளின் நடிப்பு, ஆடைகள், ஒப்பனை, அலங்காரம் என எதிலும் மிகையில்லை. மிகைகளையே பார்த்து பழகிப் போன நமது கண்களுக்கு, இந்த மிகையில்லாத நிஜம் சற்று உறுத்தலாக இருக்கக் கூடும். ஆனால், ஒரு படைப்புக்கான நியாயத்துடன் இந்தப் படத்தை நோக்க வேண்டும். முதுவன் என்ற பெயர், உடலில் இயற்கை கூறுகளை பச்சை குத்திக் கொள்ளுதல், மலர் அலங்காரம், நடன அசைவுகள், ஆடை அணியும் முறை என பலவற்றிலும் பண்டைத் தமிழ் பண்பாடும், பழங்குடிகளிடையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் பண்பாடும் பிரதிபலிக்கின்றன. (வலன், அகி, விருத்திரன் போன்ற கதாபாத்திர பெயர்கள் ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன). தீவிர ஆராய்ச்சி, கடுமையான உழைப்பு, படைப்பின் மீதான பிடிப்பு போன்றவை இன்றி இது போன்றதொரு திரைப்படம் சாத்தியமில்லை. செந்தமிழன், அவரது குழுவினரின் உழைப்பை படத்தைப் பார்ப்பதன் மூலமே அங்கீகரிக்க முடியும்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அபிநந்தன் நிஜமாகவே ஒளிஓவியத்தை படைத்தளித்துள்ளார். வேத்பிரகாஷ் சுகவனத்தின் இசை நவீன ஆர்ப்பாட்டங்களை ஒதுக்கிவைத்து, தன் இனிமையால் வசீகரிக்கிறது. மூன்று பாடல்களும் அருமை. இவர்களது உழைப்பை திரைப்படம் பார்க்கும்போது, சரியாக உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைக்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பணம் படைத்த அரசியல்வாதிகள் எதை எதையோ "தமிழர் பண்பாடு" என்ற பெயரில் சினிமா சந்தையில் ஏகபோக வியாபாரம் செய்து வருகிறார்கள். அந்த பின்னணியில் “பாலை” மனப்பூர்வமான ஒரு முயற்சி.

பண்பாட்டு ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன், சூழலியலாளர் பாமயன் உள்ளிட்டோரது எழுத்திலும், கற்பனை ஓவியங்களிலும் நமது பண்டை சமூகங்கள் பற்றி நமக்குக் கிடைத்த சித்திரங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்துள்ள முதல் முயற்சியான பாலை, எதிர்பார்ப்பைத் தாண்டி சுயமான கலைத்தன்மையுடன் கம்பீரமாக நிற்கிறது.

பாலை படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்?

1. நமது பண்டைய பண்பாட்டை மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தியதற்காக
2. இதுவரை எழுத்துகளிலும், கற்பனையுமாக பார்த்து வந்த நமது மூதாதைகளின் நிஜக்கதையை காட்டியதற்காக
3. சூழல், ஆடை, அலங்காரம், ஒப்பனை ஆகிய அனைத்திலும் மானிடவியல் கூறுகளை பிரதிபலித்ததற்காக
4. யதார்த்தமான நடிப்பு (குறிப்பாக முதுவன்), நறுக்கென்ற வசனங்களுக்காக
5. மாற்று முயற்சிகளில் சில நேரம் எட்டிப் பார்த்து விடும் சலிப்புக்கு இடம் தராமல் இருந்ததற்காக

எல்லா படைப்புகளிலும் சில குறைகளை சுட்டிக்காட்ட முடியும், ஆனால் “பாலை” போன்ற திரைப்படங்களுக்கு அது அவசியமில்லை.

- ஆதி வள்ளியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It