'தமிழன்' என்று சொல்லாதே, இந்தியன் என்று சொல், பாரதமாதாவுக்கு ஜே! ஜெய்ஹிந்த் என்று இல்லாத 'தேசிய இனத்திற்கு' வந்தனம் செய்தே பழகிய வழமையான தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் 'இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லை' என்கிற உண்மையை வெளிக்காட்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு முதலில் எனது நன்றி கலந்த வணக்கம். உலக அரங்கில் தமிழ்த் தேசிய இனம் கேட்பாரற்ற (எவ்வளவு அடித்தாலும் தாங்குகின்ற) ஒரு இனம் என்கிற அடையாளத்துடன் தான் இருக்கிறது. தனக்கென்று ஒரு இறைமை பொருந்திய அரசு இல்லையென்றாலும் கூட குறைந்தபட்சம் மொழி வழி மாநில உரிமையைக்கூட பயன்படுத்திக் கொள்ள முடியாத வண்ணம்தான் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. தன் வரலாறு தெரியாமலும், வரலாறு குறித்த பார்வையும் இல்லாத இன்றைய நவநாகரிக தமிழ் இளைஞனின் ஆறாவது அறிவை முடுக்கிவிடும் பண்யினை 'ஏழாம் அறிவு' செய்திருக்கிறது.

'நாகரிகம்' என்கிற சொல் 'நாகர்கள்' என்கிற தொல்குடிகளின் வாழ்வியல் முறைகளிலிருந்து உருவானது. 'நாகரிகம்' (நாகர்+இயம்) பிறப்பதற்குக் காரணம் இந்த துணைக்கண்டம் முழுவதும் இருந்த தொல் தமிழ் நாகர்குடிகளே. நாகர்கோயில், நாகப்பட்டினம், நாக்பூர், நாகாலாந்து என இன்று வழக்கிலிருக்கும் இவ்வூர் பெயர்கள் அனைத்தும் தமிழனின் தொன்மை வரலாற்றையும், ஆண்ட நிலப்பரப்பையும் உலகிற்கு பறைசாட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. உடைமை சமூக அமைப்பை ஏற்றுக் கொண்டும், ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரித்துக் கொண்டும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தத்துவங்களையும் ஐரோப்பா உலகிற்கு வழங்கிக் கொண்டிருந்த பொழுது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று மானுட விடுதலை குறித்து குரல் கொடுத்தவன் நமது வள்ளுவன். தமிழனின் பழங்காலக் கட்டிடங்கள் பலவும், தமிழனின் இயற் கணித அறிவை விளக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய வரலாற்று பாரம்பரியம் உடைய தமிழ் இளைஞர்கள் இன்று பார்ப்பனியமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் ஏற்ற பண்டமாக மாறி வரும் அபாயத்தை நாம் உணர வேண்டும். ஒரு பண்டத்திற்கு இன உணர்ச்சி வராது; வரவும் கூடாது. இதுதான், வல்லாதிக்க சிந்தனை கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் விருப்பம். இப்படி ஒரு சூழலில், 'ஒன்பது நாடுகள் சேர்ந்து செய்தது துரோகம். தமிழனின் வீரம் என்றும் மறையாது' என்று கதாநாகன் பேசும் வசனம் இந்திய நடுவண் அரசுக்கும், சிங்கள இனவெறிக்கும் கிடைத்த பதிலடி. சீன விஞ்ஞானியை வில்லனாகவும், சீன அரசை மானுட விடுதலைக்கு எதிராகவும் இப்படத்தில் சித்தரித்திருக்கிறார் இயக்குனர். ஈழப்போரில் சீனா செய்த துரோகத்தை முருகதாசு பதிவு செய்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சீனா தொடுக்கும் Bio-Warக்கு Operation Red! என்று பெயர் வைத்திருக்கிறார். இதன் மூலம் ஈழப்போரில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்ட கம்யூனிச நாடுகளையும் மறைமுகமாக சாடுகிறார். வல்லாதிக்கம் என்றாலே அமெரிக்காவை மட்டும் சாடுகிற மனநிலையை உடைத்தெறித்து சீனாவை முதன்மைபடுத்தியிருக்கிறார். 'எல்லோரும் சேர்ந்து (இந்தியா உட்பட) எம்மக்களை கொன்னுட்டிங்களேடா?' என்று கோபப்படுகிறான் ஏ.ஆர்.முருகதாசு என்னும் தமிழ் கலைஞன். சரி, இனிமேல்தான் ஏ.ஆர்.முருகதாசுடன் சில கருத்துகளை விவாதிக்க வேண்டியுள்ளது.

கதைப்படி 1600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த 'போதிதர்மனின்' மரபணு மூலக்கூறுகள், இன்றைய காலகட்டத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த சூர்யாவுக்குப் பொருந்துகிறது. இன்றைய உயிர்-தொழில்நுட்ப (Bio-Technology) அறிவின்படி, போதிதர்மனின் மரபணு மூலக்கூறுகளை வைத்து, இன்னோரு போதிதர்மனையே செய்து விடலாம். அதற்கு இன்னொரு சூர்யா தேவையில்லை. மேலும், மரபபியல் மருத்துவம் என்கிற படிப்பின் படி கருவிலிருக்கும் குழந்தையின் குரோமோசோம்களை நன்கு ஆராய்ந்து அதற்கு வரப்போகும் பரம்பரை நோய்களை உடனே களைந்து விட முடியும். அதற்காக பல கோடி செலவில் (Human Geneme Project) என்கிற ஆராய்ச்சியை உலக நாடுகள் நடத்தி வருகின்றன. உயிரின் அடிப்படை வேதிப்பொருட்களாக A T G C(அடினைன், தையமின், குவானைன், சைட்டாசின்)ல் பொதிந்து இருக்கும் செய்திகளை வாசிப்பதுதான் அந்த ஆராய்ச்சியின் நோக்கம். சரி இப்போது, '7-ம் அறிவு' போத்தர்மனுக்கு வருவோம். இப்படத்தில், அறிவியலுக்கு முரணாக சில கருத்துக்ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதிதர்மனுக்கு அதீத சக்தி இருப்பதாகவும், அதற்குக் காரணம் அவனுடைய மரபணு என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, போதிதர்மருடைய பரம்பரையைச் சேர்ந்த சூர்யாவுக்கும் மரபணுவில் அத்தகைய சிறப்பு இருப்பதாகவும், அதனால், அவர் இரண்டாவது போதிதர்மனாக மாறுகிறார் என்கிற செய்தியோடு படம் நிறைவடைகிறது.

உலகின் முதன் முதலில் தோன்றிய ஆர்கியபாகட்ரீயாவிலிருந்து (Arche Bacteria) பரிணாம வளர்ச்சியின்படி உருவான மனிதன் வரை மரபணு அமைப்புகளால் அதிகமாக மற்றும் குறைவான அளவில் ஒத்ததன்மை இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. ஆனால், குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வீரமும், விவேகமும் உரித்தானது என்கிற கருத்து அறிவியலுக்கு முரணானது. ஏற்கனவே, தனிமனித துதி, சாதிய மேலாதிக்க உணர்வில் வாழ்ந்து பழகிப் போன நம் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இது பின்னடைவைத் தரும். அடுத்தப்படியாக, படத்தில் விமர்சனத்திற்குள்ளான வசனம் இடஒதுக்கீடு தொடர்பானது. இட ஒதுக்கீட்டினால்தான் தமிழன் இன்னும் முன்னேறவில்லை என்று ஏ.ஆர்.முருகதாசு கருதுகிறார். தமிழகத்தில் பெரியாரைப் படிக்காததன் விளைவு, முருகதாசு போன்ற தமிழ் உணர்வாளர்கள் 'அன்னா அசாரே' ஆதரவாளர்களாகிப் போனார்கள்.

இடஒதுக்கீடு என்பது அரசியமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய சலுகை அல்ல. சாதி மற்றும் மதத்தால் வேறுபட்டு இருக்கும் இம்மக்களுக்கு சரியான முறையில் அதிகாரத்தை வழங்க உருவாக்கப்பட்ட நிர்வாக முறையே இடஒதுக்கீடு. உலகம் முழுவதும் இடஒதுக்கீடு அந்தந்த நாட்டின் மக்களின் தன்மைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் நிர்வாக முறையான இடஒதுக்கீட்டை ஊழலுக்கு இணையாக முருகதாசு கருதுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article.25 என்ன சொல்கிறதென்றால் “Forbids Class Legislation, but does not forbid classification”. இதன் உண்மையான பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவமற்ற சமூகத்தில் அதிகாரப் பகிர்வினை மட்டுமே சமமாக வழங்குதல் என்பது சமூக அநீதி என்பதை உங்களைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாலச்சந்தர், மணிரத்னம், கமலஹாசன், சங்கர் வகையறாக்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான திரைப்படங்களை எடுப்பது வழமையான ஒன்று. திட்டமிட்டு அவர்கள் செய்யும் வேலை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உங்களைப் போன்ற உணர்வாளரை என்னால் அவர்களைப் போல்(அவாளைப் போல்) நினைந்து ஒதுக்க முடியவில்லை. சரியான தமிழ் உணர்விற்கும், அடிப்படைவாத சிந்தனைக்கும் நடுவில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் “இனமாற்றம், மொழிமாற்றம், மதமாற்றம்” இது மூன்றும் கூடாது என்கிற அறிவுரையுடன் உங்கள் படம் நிறைவடைகிறது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்று மார்க்ஸ் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே “மாற்றத்தை” வரவேற்றவன் தமிழன். ஆனால் நீங்களோ மதமாற்றம் உட்பட எந்த மாற்றத்தையும் ஏற்க மறுக்கிறீர்கள். மாற்றத்தை ஏற்க மறுக்கும் உங்கள் போக்கு இயங்கியலுக்கு எதிராகவும், மனுதர்மத்திற்கு ஆதரவாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆதித் தமிழனுக்கு 'மதம்' என்பதே கிடையாது.

தமிழனின் வளர்ச்சிக்கு மதமும், சாதியும் தான் தடை என்று சொல்ல வேண்டிய நீங்கள் 'மதமாற்றம்' கூடாது என்று சொல்வது இந்துத்துவா பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும். பெரியாரியவாதிகள் உங்களை அணுக வேண்டியதன் அவசியத்தை உங்களது படம் எங்களுக்கு உணர்த்துகிறது. சிங்களனுக்கு உங்கள் படம் தொந்தரவு செய்திருக்கிறது. அப்படியானால், தமிழர்கள் தோள் கொடுத்து தூக்கப்பட வேண்டியவர் நீங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழனின் இழிநிலைக்குக் காரணம் சாதியும், அதனைத் தாங்கி நிற்கும் 'இந்துத்துவ' சிந்தனையும் என்பதை நீங்கள் உணர வேண்டும். பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் படிப்பதன் மூலமும், நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே, நீங்கள் விரும்பும் 'இன எழுச்சி' இம்மண்ணில் சாத்தியம். இல்லாவிடில் கொடுங்கோலன் இட்லரின் ஆசான் மனுதர்மப்பிரியன் நியேட்சே (அதிமனிதன் கோட்பாட்டை கற்பித்தவன்) தனக்கு இருப்பதாக கூறிக்கொண்ட '7ம் அறிவாகவே' உங்கள் கருத்து மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசு அவர்களே தமிழனின் இன்னும் தொன்மையான வரலாற்றைத் தேடி பயணம் செய்யுங்கள். சாதி ஒழித்த போதிதர்மன்கள் பலபேர் உங்களுக்குக் கிடைப்பார்கள்.

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It