(இந்த விமர்சனம் கடந்தகாலத்தில் எழுத தொடங்கி தற்காலத்தில் முடிவடைகிறது. அகில கேலக்சியிலும் ப்ளாஷ் பேக் லேங்குவேஜ் கொண்ட முதல் விமர்சனம் இதுவே)

7 ஆம் அறிவு

surya_7m_arivuதமிழன் பண்டிகைக் காலமென்றால் செய்த, செய்கிற, செய்யவேண்டிய தலையாய, உடலாய, வாலாய செயல் எதுவென்றால் சற்றும் சிந்திக்காமல் நாமொரு முடிவுக்கு வந்துவிடமுடியும்; அது சினிமா தியேட்டரை நோக்கிச்செல்வது தான். எது எதுவானாலும் ஒரு பண்டிகை தினத்தை விழி விரிய இமைக்காமல் படம் பார்க்கிறது தான் அவனுக்குப் பிடித்தமான செயல். நல்ல கதை நல்லதொரு காமிக், மதுரசம் கொட்டுகிற கானாம்ருதம், அபிநயஸ்ரீக்களின் யௌவனம், புருஷர்களின் மேதா விலாசம், சகலகலா பாண்டித்யம் இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக ஒலிக்கிற கதையொன்று. இவ்வளவு இருந்தால் போதுமானது செட்டுக்களுக்குள்ளே போய்ப் படமெடுத்து வெளியில் விட்டால் அடர்கானக மழை போல் வசூல் இத்யாதிகள் கொட்டத்தான் செய்யும். கொட்டகைகள் ஜனக்கூட்டத்தால் நிரம்பி வழியாமல் இருக்க வழியேதும் உண்டா என்ன..?

ரெட்ஜயண்ட் கம்பெனியார் தயாரித்து பெரும் பணத்தை செலவழித்து எடுத்து வெளியே விட்டிருக்கிற படம் ஏழாம் அறிவு. அதாகப்பட்டது இந்தப் படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்னால் இது ஒரு வம்சாவளிப்படமென்று நம்மால் சொல்லி ஆனந்தித்துக் கொள்ள முடிகிறது. சென்னை ராஜதானியில் பல பதவிகளை வஹித்து இருக்கிற ஸ்ரீமான் ஸ்டாலின் உடைய புத்ரர் உதயநிதி, தன் நவரச பரிமளத்தால் நாற்திசைகளிலும் தம் புகழ்க்கொடியை நாட்டியவரான சிவக்குமாரரின் புத்ரர் சூர்யா இதன் மெயின்பார்ட்டாக அதுவும் பண்டிகைக்குள் பண்டிகை என்று சொல்வார்களே அதுபோல ரெட்டை வேஷம் கட்டி நடித்திருக்கிறார் என்றால், ஈரேழு பதினாலு லோஹத்திலிருக்கிற புருஷர்களும் பொறாமைகொள்ளும் பெரியதொரு சம்பத்தையும் ராஜதானிகளுடைய சம்பாவனைஹள், மெடல் இத்யாதிஹளையும் வென்று குவித்த மஹாநடிகருமாகிய சீமான் கமல்ஹாசன் உடைய புத்ரி குமாரி ஷ்ருதி அவர்கள் இச்சித்திரத்திலே பிரதான நாயகியாக வேஷம்கட்டி அபிநயங்களும் பண்ணி, அழவும் சிரிக்கவுமாய்த் தன் பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறதும், வித்யாபதி கவிராஜ் ஸ்ரீமான் வைரமுத்துவின் குமாரர் கவியுவராஜ் ஸ்ரீமான் மதன் கார்க்கி அவர்கள் இப்படத்திலே சீனபாஷையிலொரு பாடலை இயற்றியுமிருக்கிறபடியால், இந்த மூவியை நம்மால் முன்பே குறிப்பிட்டாற்போல் ஒரு குமாரர்களுடைய கைங்கர்யம் என்று கருதவும் போஷிக்கவும் இயலுகிறது.

இந்தத் திரைச்சித்திரத்தை ஒளிகொண்டு பதிவாக்கி நம் மனங்களை கொள்ளை கொள்கிற ரவி கே சந்திரன் உடைய காரிய விசாலம் நம் விழிகளிரண்டை நிறைக்கிறது என்று சொன்னால் அது தான் மெய்யே. இப்படத்துக்கு சங்கீதத்தை ஏற்பாடு செய்திருக்கிறவர் சங்கீதமேதை ஹாரிஸ் ஜெயராஜ் தன் பார்ட்டியாருடன். தனக்கு வழங்கப்பட்டிருக்கிற காரியத்தை கிஞ்சித்தும் பிழையும் சறுக்கலும் இன்றி கையெடுத்து நிறைவேற்றியுமிருக்கிற இவ்விருவருக்கும் நாம் சொல்வதற்கு இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை சபாஷ், பலே.

இனி இந்த திரைச்சித்திரத்தின் கதையைப் பார்ப்போம்.

களப்பிரர் காலமென்று அறியப்பட்ட காலகட்டத்தில் பல்லவ மன்னனின் வாரிசொருவர் போதிதர்மன் தன் குருமாதாவின் கட்டளைக்கிணங்க பல்லவத்தில் இருந்து கிளம்பி சீனம் செல்கிறார். முதலில் அவரை ஏற்க மறுக்கிற அவர் சென்றிறங்கிய கிராம மக்கள் மெல்ல அவரை ஏற்கின்றனர். கொள்ளை நோய்க்கு வைத்தியம் செய்கிற பாண்டித்யமும், மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படுகிற பாதுகாப்புக் கலை இத்யாதிகளில் அவர் கொண்ட தேர்ச்சியும் கண்டு அனைவருமே அவருக்கு மாணவர்களாகி அக்கலைகளை கற்றுக்கொள்கின்றனர்.

தாயகம் திரும்ப எண்ணுகிற போதிதர்மனுக்கு விஷங்கலந்த உணவைத் தர, அது தெரிந்தும் அம்மக்களின் விருப்புக்காக அம்மண்ணிலேயே உயிர்விடும் போதிதர்மனை குழியில் இட்டு அவர் கற்றுத்தந்த கலைகளை வளர்த்து, அவரை தாமோ என்ற பெயரில் புத்தருக்கு அடுத்தாற்போன்ற இடத்தில் வைத்து வணங்குகின்றனர்.

அதே சீனத்தில் இன்றைய 2011 காலத்தில் அந்த நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வைரசைக் கொண்டு வந்து பரப்பி இந்தியாவை நோய்மயமாக்கி இந்தியாவை அடிமைப்படுத்தவும், போதி தர்மனின் மரபணு சோதனை குறித்து ஆராய்ச்சி செய்யும் யுவதி ஷ்ருதியை கொன்றழிக்கவும் ஆகிய இரண்டு காரியங்களுக்கும் ஒரே கரம்பிய மண்டை சீனனை அனுப்பி வைக்கின்றனர்.

(SORRY FOR THE INTTERRUPTION...HERE AFTER THIS REVIEW WILL BE ONLY AVAILABLE IN PRESENT TAMIL. THANK YOU)

கொய்யால அந்த சீனாக்காரன் தான் அந்த ரெண்டு வேலைக்குமே ஏன் வர்றான்....? அதெல்லாம் கேட்டீங்கன்னா உங்களுக்கு ஆறாம் அறிவுதான். ஜாக்ரதை. அப்பிடி அந்த சீனாக்காரன் அப்டி என்ன கெட்டிக்காரன் என்றால்... அவனுக்கு நோக்குவர்மம் எனும் மனோவசியம் தெரியும். ஒருவரை கண் கொண்டு நோக்கிய உடன் எதிராளியை வசியப்படுத்தி தான் நினைத்த காரியத்தை செய்யவைக்கிறவன்... ஏக தமாஷான அறிவியல் இது... குழந்தை அறிவியல் என்று பேர் சூட்டினால் குழந்தைகள் சண்டைக்கு வருவர்.

அந்த நோக்குவர்மம் போதிதர்மர் இங்கே இருந்து அங்கே போய் அவிங்கியளுக்கு கத்துக்கொடுத்தது.

அந்த சீனன் இந்தியா வர்றான். அதே நேரம் போதி தர்மரோட வம்சாவளியான அரவிந்த் என்னும் இன்னொரு சூர்யாவை வைத்து மரபணு சோதனை நடத்தி அவருக்குள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற போதிதர்மரோட டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை தட்டியெழுப்பி.. அவர் மூலமா வில்லனை கொல்றாரு இயக்குநர்.

சூர்யா கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.. ஸ்ருதி நல்லதொரு அறிமுகம். தகப்பனை விஞ்சும். ஆனால் ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. தங்கள் பின் குரல்... (சொந்தக்குரலா அல்லது சிட்டிசன் நக்மாவுக்கு குரல் கொடுத்த அனுராதாவா தெரியவில்லை) தமிழுக்காக இன்னும் கொஞ்சம் கடுமையா உழைக்கணும்.... அதான் தமிழுக்கும் தாங்களுக்கும் நல்லது. (கண்ணை மூடி கேக்குறப்பல்லாம் பேசுறது ஒய்.விஜயாவோன்னு டவுட்டா வருது..) ஒளிப்பதிவு, நடனம் எல்லாம் நல்லா தான் இருக்கு...படம் அதையும் தாண்டி புனிதமானது...                  

இதுக்கு இடையில் எக்கக்ச்சக்க லூசுத்தனங்கள் நிரம்பிய இப்படத்தில் எனக்கு மிகவும் கவர்ந்தது எல்லோருமே செமை காமெடியான விஷயங்களை எல்லாம் சீரியசா லாஜிக்கே இல்லாம செய்துக்கிட்டே சொல்லிக்கிட்டே இருக்கிறது தான்.

1. ஒரு பாஸ்போர்ட்டும் விசாவும் வெச்சுக்கினு, வைரஸ் கிருமிகளை ஏதோ இங்கே இருக்கிற ரிலேசன்சுக்கெல்லாம் சாக்லேட் வாங்கியாரது கணக்கா கொண்டாந்து நடு ரோட்டில ஒரு நாய்க்கு ஊசி போடுறான் வில்லன் மொட்டை.... இது தமாஷ் சீரியஸ் அல்வா நம்பர் ஒண்ணு.

2. மாடர்னா இங்கிலீசெல்லாம் பேசிக்கினு அந்த அரவிந்த் பய்யன் சர்க்கஸ்ல வேலை பாக்குறான்.... அங்கே சைண்டிஸ்ட் ஸ்ருதி அவராண்டே அறிமுகமாகி அவரை ஏமாத்துது. லவ்வெல்லாம் இல்லை...வவ்..வவ்...நு...

3. அந்த கர்மாந்திரம் பிடிச்ச சோக சிச்சுவேஷனுக்கு அதே எஸ்.பீ.பீயை கூப்டு (உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே பாட்டு இல்லீங்க சத்தியமா வேற சாங்கு..) ஒரு சோலோ பேத்தாஸ் சாங்கு வேற....

4. 300கோடி ரூபா வயர் ட்ரான்ச்ஃபர் செஞ்சு விலைக்கு வாங்குன விஞ்ஞானி மாமாவையும் நோக்குவர்மத்தால ஏதோ பஸ் ஸ்டாப்புல இறக்கிவிடுற மினி பஸ் கண்டக்டர் போல கொன்னுர்றான் வில்ல மொட்டை... பபபபயம்மா இருந்தது.... படம் பாக்கிறவங்களை எதுவும்... நல்லவேளை பண்ணலை...

5. எதுக்கு கஸ்டப்பட்டுகினு வைரசெல்லாம் கொண்டாந்து அத்த நாய்க்கு ஏத்தி... அது ஊரெல்லாம் சுத்தி.... அந்த நோய் பரவி... அந்த நோயால நெறைய்ய பேரு செத்து... அதுக்கப்பால நம்ம நாடு கெஞ்சி கையேந்தி அந்த சிச்சுவேசன்ல இந்தியாவை தங்கிட்டே சரண்டர் ஆக்கணும்னு வர்றான் வில்லன்... அவன் தான் அட்டகாசமான நோக்குவர்மனாச்சே.... இந்த படத்துல முக்காவ்வாசி சீன்ல அவன் கண் பார்வையாலயே கலவரங்களை உண்டுபண்றான்... மக்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிறாங்க... நூத்துக்கணக்குல சாவுறாங்க... அது தானே எய்ம்... பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன்... ஏர்போர்ட் இங்கெல்லாம் நோக்குவர்மனை நிக்க வெச்சு நோக்கு நோக்குன்னு நோக்கினே இருந்தா போதுமே...

6. அப்பிடி அவன் நோக்கிகினே போனாலும் கூட சூர்யாவை மட்டும் அவனால நோக்க முடியாது... ஏன்னா சூர்யா நோக்குவர்மாவுக்கெல்லாம் நோக்குனோக்குவர்மா.. அதாவது போதிதர்மா. எங்களுக்கெல்லாம் ரத்தம் வர்மா... தூக்கம் வர்மா... அழுகை வர்மா... எதைப்பத்தியாச்சும் டைரக்டருக்கு கவலைவர்மா..? வராதூ..... ஏன்னா ஏழாம் அறிவு இருக்கிற யார்க்கும் இதெதும் வராது.

7. 12 நாள் ஏதோ விரதம் மாதிரி ஒரு குட்டி ஆராய்ச்சி.. அதுல இம்போர்ட் செஞ்ச அத்திப்பழமாட்டம் சூர்யாவை ஜாடி ஜீரால போட்டு ஊற எல்லாம் வெச்சு... ஒரு குழந்தைத்தனமான லேப்ல அதும் அரசாங்கத்தோட லேப்ல என்னென்னவோ ஏத்தி எறக்கி சூர்யாவை ரெடி பண்ணினே இருக்கறதுக்குள்ளே...

8. நம்மளை எல்லாம் காப்பாத்துறதுக்காக தன் இன்னுயிரை ஈந்த வர்றான் நம்ம செல்ல வில்லன் டோங்க்லீ... அவனைக் கொன்னதும் தமிழ்... தமிழறிஞர்கள்.. தமிழன் வரலாறு... புவியியல்... தமிழைப் பெருமைப்படுத்திட்டோம்... வாழ்க வாழ்கன்னு அவங்களே கையெல்லாம் தட்டிகினே படம் முடிஞ்சுதுன்னு லைட்ட போட்டு வெரட்டும் போது தான்... நமக்கு ஆறாவது அறிவே லைட்டா வொர்க் பண்ணுது.

9. திறமை இண்டூ ரிசர்வேஷன்... களப்பிரர் இண்டூ தமிழர்.... பல்லவம் இண்டூ சீனம்.. இந்தியர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறது.. நாட்டைக் காட்டிக்கொடுக்கிறது.. டி.என்.ஏ. ஆராய்ச்சி, தீசிஸ் பேப்பர் அம்ச்ச ஒரே காரணத்துக்காக ஒரு இளம் பெண் இந்திய விஞ்ஞானியை கொல்ல ஆள் அனுப்பும் சீனா... அதையும் அனுப்பும் போதே... "தம்பி போய்ட்டு வர்றப்ப ரெண்டு ஆம்லேட் வாங்கிவந்துரு" என்ற கணக்காக அந்த சீனனையே வைரஸ் பரப்ப அனுப்புதல்... நோயால் பாதிக்கப்பட்ட அதும் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களைப் பற்றி கவலைப்படாமல் நம்மையெல்லாம் வெளியே துரத்திவிடுவதிலேயே குறியாய் இருக்கிற இயக்குநர்... அகண்ட ஆரம்பம்.... சுண்டி சிறுத்த முடிவு...

10. இந்தப் படத்தில் மௌண்ட் ரோடில் யானை மேல் சூர்யாவும் ஸ்ருதியும் சவாரி செய்வது போல் ஒரு காட்சி வருகிறது. நல்ல கற்பனை. அழகியல் ததும்பும் காட்சி. பேசாமல் அந்த சீனை ஆரம்ப சீனாகக் கொண்டு தொடங்கி நல்லதொரு காதல் கதையை எடுத்திருக்கலாம்.. அதற்கும் ஆறாம் அறிவுகூட தேவையில்லை.

10.ஏ. மூட நம்பிக்கைகளையும், நம்பமுடியாத பயங்கர கற்பனைகளையும், வரலாற்றைத் திரித்தலையும், அறிவியலை இஷ்டத்துக்கு வளைத்தலையும் எத்தனை அழகான படமெடுத்து முயன்றாலும் ஏற்றுக்கொள்ள இயலாது...

11. ஏழாம் அறிவு = ரசிக தர்ப்பணம்

Pin It