சமூகத்தில் விளிம்பு நிலை மாந்தர்களையும், இது வரை திரையில் காண்பிக்கப்படாத மனிதர்கள் வாழ்வையும் சினிமாவில் எடுத்தியம்பும் இயக்குனர்கள் மிகக் குறைவு. ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கியுள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சோதனை விலங்குகளாக மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஏழை மனிதர்கள் பரிசோதிக்கப்படும் அவலத்தை தனது ‘ஈ’ படம் மூலம் காட்டினார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். நடுத்தர மக்களின் நுகர்வு மையங்களாக விளங்கும் வணிக தளங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு விளிம்பு நிலை மக்களின் வேதனை மையங்களாக உள்ளது என்பதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டினார் ‘அங்காடிதெரு’ வசந்தபாலன். இவர்களைப் போன்று கடைசி நிலை மனிதர்களின் வாழ்வியல் அவலத்தை காட்சிப்படுத்தியவர்கள் சிலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால், சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.

avan_ivan_300மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன் என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட சோகமும், வக்கிரம் பிடித்த வன்முறைக் காட்சிகளும் தவறாமல் இடம் பிடிக்கும். அந்த வகையில், அவன் - இவன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அபத்தத்தின் உச்சம்.

ஒரு ஊர்ல ஒரு சமீன்தார், அவர் மீது பாசம் வைத்திருக்கும் கதாநாயகர்கள். அவர்கள் இருவருக்கும் அப்பா ஒன்று அம்மா வேறு வேறு. தாயும், மகனும் சேர்ந்து ‘தண்ணியடிக்கிறார்கள்” (தண்ணி என்றால் குடத்து தண்ணீர் அல்ல) கதாநாயகர்கள் இருவர் குடும்பத்தின் உறுப்பினர்களுமே விரசமான மொழியில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் அதை விட கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு குடும்பமும் ஊரும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிறதாம்.

அந்த காமெடி பீஸ் சமீன்தாரை, வில்லன் கொன்று விடுகிறான். அதற்காக நமது கதாநாயகர்கள் இருவரும் சேர்த்து அந்த வில்லனை கொன்று விடுகிறார்கள். அதோடு “a film by Bala” என்று டைட்டில் போட்டு விடுகிறார்கள். படத்தில் “பாலா’வின் பெயரைச் சொல்லும் விதமான காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது ‘சமீன்தாரை” நிர்வாணமாக ஓடவிடச் செய்யும் காட்சி. 55 வயது மதிக்கத் தக்க ஒருவரை அம்மணமாக ஓடவிடுவதன் மூலம் பார்வையாளர்களை ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்பதே இயக்குனரின் எண்ணம். அதை விட கொடுமை என்னவென்றால், வில்லன் பேசும் வசனம். “குர்பானி” என்கிற பெயரில் ஒட்டக்கறியை கொண்டு வந்து சாப்பிடுறான்களே? அவங்களை மட்டும் நீங்க ஒன்னும் சொல்லமாட்டிறீங்க? என்று ஆதங்கப்படுகிறான் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் வில்லன். மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உடையவர்களும், ஒட்டக இறைச்சி சாப்பிடக் கூடிய தோழர்களும் இந்துத்துவ எதிர் அரசியலும், பண்பாடும் உடையவர்கள். சமூக நீதி களத்தில் இருவரும் ஒத்த சிந்தனையில் இருப்பவர்கள் என்கின்ற அரசியல் பார்வை கூட பாலாவுக்கு இல்லை.

ஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ, ஒட்டக இறைச்சி சாப்பிடுபவனை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறவன் தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இராமகோபாலனுக்கே ஒரு படி மேலே போய் ‘இந்துத்துவ’ வகுப்பு எடுக்கிறார் நமது பாலா. இந்த இடத்தில் ‘பாலா’வின் முந்தைய படைப்பான “நான் கடவுள்” திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் ஒரு வசனம் பேசுவான். அந்த வசனத்திற்கு முழுமுதற்பொறுப்பு செயமோகன் என்னும் எழுத்தாளர். மேற்கூறிய வசனத்தில் இரண்டு செய்திகள் நாம் கவனிக்க வேண்டும்

(1) மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு புத்தி கிடையாது.

(2) மலையாளிகள் புத்திசாலி

செயமோகன் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்லும்போது, அவரின் இந்துத்துவ அரசியல் மனநிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதே சமயம், தன்னுடைய மலையாளி இன பாசத்தையும் விட்டுக் கொடுக்காமல், மலையாளிகள் புத்திசாலிகள் என்று ஒரு கருத்தினை பதிவு செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன்தான் அவன் - இவன் படத்திற்கு செயமோகன் பாணியில் ஒரு வசனத்தை எழுதியிருக்கிறார்.

சரி, படத்தில் பாலாவின் கதாபாத்திர உருவாக்கம் எப்படி இருக்கிறது? விஷால் மாறுகண் இருப்பது போல் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறாரா? ஆம். நன்றாக நடித்திருக்கிறார். இந்த நடிப்பிற்காக விஷாலுக்கு “தேசிய விருது” கூட வழங்கலாம். ஆனால், அந்த விருதினை 1000 முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டு சாதனை, பல்லி, பாம்புடன் சாப்பிட்டு சாதனை என்று நேரத்தை பயனில்லாமல் செலவழித்து, உழைப்பை வீணடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் வாங்கிகொள்வார்களே, அதோடு தான் ஒப்பிடவேண்டும். ஏனென்றால், இந்த நடிப்பினால் சமூகத்திற்கு ஒரு பயனும் இல்லை. காசி படத்தில் விக்ரம் பார்வையற்றவராக அக்கதைக்கு மிகப் பொருத்தமாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக அவருடைய மகத்தான உழைப்பு மதிக்கத்தக்கது. காசி படத்திற்கு விக்ரமின் அர்ப்பணிப்பு அப்படத்திற்கு வலுசேர்த்தது. ஆனால் அவன் - இவன் படத்திற்கு விஷால் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் என்பது மட்டுமே கதை. அதைத் தவிர இப்படத்தில் வேறு ஒன்றுமே இல்லை.

படத்தில் ஒரு காட்சியில் இராசபட்சே இராஜா கிடையாது அவன் மட்டி என்று ஒரு வசனம் வரும். இந்த இடத்தில் மட்டுமே பாலாவை நம்மால் இரசிக்க முடிகிறது. விஜய், அஜீத் போன்ற மிகப்பெரிய கதாநாயக பிம்பங்களை ஒரே நொடியில் காலி பண்ணும்போது பாலா பளிச்சிடுகிறார். அதே சமயம், செயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஆங்காங்கே பல்லிளிக்கும் காட்சிகளில் பாலா நம்மில் இருந்து அந்நியமாகி விடுகிறார்.

பாலாவின் படைப்புகள் சமூகத்திடம் இருந்து எடுத்த எதார்த்தமான பதிவாக இல்லை. பாலா அவர்களே, உங்களைச் சுற்றிய வெளி (மக்கள், சமூகம், இயற்கை) உங்களிடையே ஒரு பாதிப்பு ஏற்படுத்தும்போது நீங்கள் அதனை படைப்பாக்க வேண்டும். ஆனால் உங்களுடைய படைப்புகளை பார்த்த பிறகு மக்கள் தான் பாதிப்படைகிறார்கள்.
- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It