சரி.பார்த்து வைப்போமே என்று சீடன், முத்துக்கு முத்தாக, சிங்கம் புலி ஆகிய மூன்று படங்களைப் பார்த்தோம்.ஒண்ணும் தேறாது.சீடன் படம் குறித்து  கதாநாயகன் தனுஷ் கோபப்பட கதைப்படி அவர் கதாபாத்திரம் பாதிப்படத்துக்கு மேலேதான் வருகிறது. ஆகவே கதைப்படிதான் நான் படம் எடுக்க முடியும் என்று இயக்குநர் சுப்பிரமணியம் சிவா கதைக்காக வாதிட்டதாக பத்திரிகைகளில் படித்ததை நம்ம்ம்பி இப்படத்துக்குப் போனது நம்ம  தப்பு.பழனி முருகனே தனுஷாக வந்து தன் பக்தை அனன்யாவின் காதலை நிறைவேற்றி(கொட்டாவி வருது சார்) வைப்பதுதான் கதை. சாண்டோ சின்னப்பாத்தேவர் மறைந்தாலும் அவருடைய ஆவியாக சிலர் வந்து முருகன் புகழ் பாட படம் எடுத்து விடுகிறார்கள்.மக்களின் பக்தியைக் காசாக்கப் பலரும் பல விதங்களில் முயற்சிக்கிறார்கள். இவர்கள் படம் எடுத்துப்பார்த்திருக்கிறார்கள்.எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க சாமி!இது நந்தனம் என்கிற மலையாளப்படத்தின் தழுவலாம்.அது வேறயா?படம் முழுக்க பிழியப்பிழிய அழுதிருக்கும் அனன்யாவுக்கு அழுதகூலி அதிகமாகத் தரவேண்டும்.

சாய் ரமணி இயக்கியுள்ள சிங்கம்புலி படத்தில் ஜீவா இரட்டை வேடத்தில் நல்ல அண்ணன் கெட்ட தம்பியாக வந்து நல்லதும் கெட்டதும் மோதி கடைசியில் கெட்டது அழிந்து நல்லது மீள்வது கதை.எத்தனை வருசத்துக்கு இப்பிடிக்கதையாக எடுத்துக்கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.

மாயாண்டி குடும்பத்தாரை  எடுத்த ராசு மதுரவன் கோரிப்பாளையம் போய் மறுபடி ஒரு குடும்பக்கண்ணீர்க் காவியம் எடுத்தே தீருவது என்கிற  சங்கற்பத்துடன் களம் இறங்கிய படம் முத்துக்கு முத்தாக. நமக்கு சின்ன வயசாக இருக்கையில் 1973இல் லஷ்மி தீபக் இயக்கத்தில் எஸ்.வி.ரங்காராவ் மூத்த அண்ணனாகவும் ஏ.வி.எம்.ராஜன்,ஜெய்ஷங்கர் உள்ளிட்டோர் அன்புச்சகோதரர்களாகவும் நடித்து அன்புச்சகோதரர்கள் என்றொரு படம் வந்தது.அதில் வரும் பாடல்தான் ’முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக’ அதிலிருந்து தலைப்பை வைத்து படம் பார்க்க வருபவர்கள் அரைவாளிக் கண்ணீராவது சிந்தாமல் போய்விடக்கூடாது என்கிற முடிவோடு எடுக்கப்பட்ட படம் இது.நல்லவேளையாக கைமறதியாக சிங்கம்ம்புலியின் வேன் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்துவிட்டார்கள். இல்லாவிட்டால் அழுது அழுது  ரசிகர்கள் பாதி உடம்பாகத்தான் படம் முடிந்து வெளியே வரவேண்டும். ஒரே நல்ல விசயம் இப்படத்தில் அத்தனை பாத்திரங்களும் புதிய இளைஞர்கள் வளரும் கலைஞர்கள் என்பதுதான்.அது சரி.இந்த சரண்யா மேடம் அந்தக்காலத்து பண்டரிபாய் மாதிரி எல்லாப்படத்திலேயும் அம்மாவாக வந்து நாம் எந்தப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார். படத்தில் எல்லாமே எந்த தர்க்கமும் இல்லாமல் அழ வைப்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் செயற்கையாக இருக்கிறது படம்.

இப்படியாகச் சிலபல கோடிகளைத்  தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தார் வெட்டியாகச் செலவு பண்ணிக்கொண்டே போகிறார்கள். தமிழ் வாழ்க்கையிலிருந்து கதையை எடுக்கத்தான் துப்பில்லாமல் போகிறது இவர்களுக்கு.

(செம்மலர் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Pin It