சரியாய்த்தான் எழுதினான்
மாணவன்
“பாழாறு” என்னுமொரு ஹைக்கூவை எழுதியவர் இராம.பிரபு (தற்போது யாழன் ஆதி), தொகுப்பு 'இசையுதிர் காலம்'. இதன் உள் பொருள் மிக ஆழமானது. சிந்திக்க சிந்திக்க கருத்தை விரிவடையச் செய்யும் வீரியமிக்கது. பாலாறு, பாழாறு ஆனதை மூன்று வரிகளில் உணர்த்தியுள்ளது. பாலாறு ஏன் பாழாறு ஆனது, எப்படி ஆனது, எவர் காரணம் என விரிவாக ஆய்ந்து எடுத்துக் காட்டிய ஆவணப்படம் 'என் பெயர் பாலாறு'. ஆய்வித்து எழுதி இயக்கி இருப்பவர் ஆர்.ஆர்.சீனிவாசன்.

பாலாற்றின் தொடக்கம் நந்தி துர்க்கம் என்னும் செய்தி முதல் இறுதி வரையிலான பல்வேறு தகவல்களை படம் மூலம் அறிய முடிகிறது. பாலாறு ஆந்திராவில் 30 மைல் நீளமும் கர்நாடகத்தில் 60 மைல் நீளமும் தமிழகத்தில் 140 மைல் நீளமும் ஓடுகிறது என்பதால் ஆந்திராவிற்கு 15 சதவீதம் நீரும் கர்நாடகாவிற்கு 25 சதவீதமும் தமிழகத்திற்கு 60 சதவீதமும் நீர்ப் பங்கீடு செய்ய வேண்டும் என ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துக் கூறியுள்ளது. ஆனால் பேஸ்த மங்கல், ராமசங்கர், புல்லூர் என பல்வேறு அணைகள் கட்டி நீரைத் தடுத்தாள்கின்றன என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அடிப்படை மொழி வெறி, இன வெறி என்னும் உண்மையையும் வெளிச்சப்படுத்தியுள்ளார்; பகிரங்கமாகப் பேசியுள்ளார். கல் தடுப்புகளும் கட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டில் பாலாறு நிலை மிகுந்த மோசமாயுள்ளது என பல சான்றுகளை ஆதாரத்துடன் காட்டியுள்ளார். குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் நதிநீரை நாசப்படுத்துவதை முக்கியப்படுத்தியுள்னார். வாணியம்பாடியில் மட்டும் அறுபது சதவீதம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளதாலே பாலாறு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதைக் கவலையுடன் தெரிவித்துள்ளார். இதனால் பாலாற்று நீரை விவசாயத்துக்கும் பயன்படுத்த முயடிவில்லை; குடிநீருக்கும் தகுதியற்றதாகி விடுகிறது. பாலாற்றில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீரும் வீணாகி விடுகிறது. கழிவில் இருக்கும் இரசாயனம் நீரில் கரையாத தன்மையுடையது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இரசாயனக் கலப்பினால் மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதி போன்றவைகள் உண்டாகின்றன என்றும் குறிப்பிடுகிறார்.

கழிவு நீரைச் சமாளிப்பது குறித்து முடிவு செய்ய ஏற்படுத்திய 'கூட்டு கழிவு நீர்த்திட்ட'த்தை ஒரு கூட்டு மோசடி என அம்பலப்படுத்தி உள்ளது இப்படம். கழிவு நீரை பாலாற்றில் விடக் கூடாது என்றும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் 1996ம் ஆண்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளதையும் நினைவுபடுத்துகிறது. மேலும் நதிநீர்ப் பங்கீடு சட்டம் அமல்படுத்தாதையும் படம் சுட்டுகிறது.

'என் பெயர் பாலாறு' என்னும் இந்த ஆவணப்படத்தில் இரண்டவதாக எடுத்துக்காட்டிய பிரச்சனை 'மணல் திருட்டு'. மணல் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது, எவருக்கெல்லாம் பொறுப்பு உள்ளது என வெளிப்படையாகப் பேசியுள்ளது. மணல் திருட்டினால் லாபம் அடைவது ஒரு பிரிவினர் என்றால் அதனால் பாதிக்கப்படுவது எனண்ணற்றோர். நேரிடையாக இல்லை எனினும் மறைமுகமாக பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மணல் திருட்டு தொடர்வதால் நிலத்தடி நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளது. மணல் திருட்டு குறித்து தனியாக ஓர் ஆவணப்படம் எடுக்கும் அளவிற்கு ஏராள செய்திகள் உள்ளன.

பாலாறு ஏன் பாழடைகிறது, எவர் காரணம், என்ன வழி, ஏற்படும் விளைவுகள் எவை என பழ.நெடுமாறன், யாழன் ஆதி, சுகிர்தராணி, அழகிய பெரியவன் உள்ளிட்ட அக்கறையுள்ள, ஆர்வமுள்ள, பாதிக்கப்பட்ட பலருடனான நேர்காணலை இணைத்து ஆவணப்படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார். “கடல் நீரைக் குடிநீராக்க வேண்டாம். இருப்பதைக் காக்க வேண்டும்” என்று பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருப்பது கவனத்திற்குரியது. கவிஞர் சுகிர்தராணியின் 'பாலாறு' என்னும் கவிதையும் பின்வருமாறு ஒலித்துள்ளது.

மகிழ்ச்சியின் நறுமணம் மிக்க
என் சின்னஞ்சிறு பிராயத்தில்
நீர் நத்தைகளையும் மட்டிகளையும்
சேகரித்து விளையாடிக் களித்த
உன் தெள்ளிய நீர்ப்பரப்பு
வெப்ப அலைகளைப் போர்த்தியபடி
உறங்கிக் கொண்டிருக்கிறது
நிலவின் ஒளியை
விரித்தாற் போன்றிருந்த உன்னுடல்
துன்பத்தால் சுழலும் பெண்ணின்
பருவ மேடுகளைப் போல்
தோண்டப்பட்டிருக்கிறது
என முத்தத்தால் நனைந்த
உன் கரையின் கைகளில்
தோல் தொழிற்சாலைகள் மிளிர்கின்றன
உன்னிருபுறமும் செம்பட்டை மயிர்களோடு
பயிர்கள் தேம்பி அழ
வெண்மையாய் நுரைத்துப் பொங்கி
உனக்குள்ளே நீராடி மகிழ்ந்த நீ
கழிவின் கருந்திரவத்தைப் பருகிய படி
நகர்ந்து செல்கிறன்றாய்
பாலத்தின் மீதேறி உன்னைக் கடக்கும்
என் பருத்த கருப்பையில்
உருள்கிறது ஒரு துளி விக்ஷம் ஆர்ஆர்.சீனிவாசன் காமிரா மு்லம் காட்சிப்படுத்தியுள்ளதை சுகிர்தராணி கவிதை வழி காட்சிப்படுத்தியுள்ளார். 'பாலாறு'டன் பாசமாய்ப் பேசியுள்ளார்.

'பாலாறு'ஐக் காக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் கோரிக்கை. இம்முயற்சியில் ஈடுபட்ட ஆர்.ஆர்.சீனிவாசனும் இப்படத்தின் நீளத்தை நீட்டியுள்ளார். ஒளிப்பதிவும் இவரே. இவரின் எண்ணத்தைச் சிறிதும் சிதறகடிக்காமல் படத்தைத் தொகுத்துத் தந்துள்ளனர் திரு.தங்கராஜ் மற்றும் தயாளன். இணை இயக்குநராகவும் புகைப்படக் கலைஞராகவும் கவிஞர் குட்டி ரேவதி செயல்பட்டுள்ளார்.

ஐம்பது வருடங்களாக ஜீவநதியாக பயணபட்ட நான் இன்று ஒரு நீரோடையாக மாறி பின் சாக்கடையாக உருமாற்றம் பெற்றுள்ளேன் என பெண் குரலில் தன் வரலாறு கூறுவதாக படம் தொடங்குகிறது. பின்னணியில் குரல் கொடுத்து இருப்பவர் பிரமிளா. நதியின் சோகத்தை முழுமையாக உள் வாங்கி ஒலித்துள்ளார்.

பாலாறைக் காக்க வேண்டும் என்று ஆர்.ஆர்.சீனிவாசன் ஆவணப்படம் வாயிலாக மாநில, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். இவரின் இம்முயற்சிக்கு பலர் ஒத்துழைத்துள்ளனர். இதுவொரு கூட்டு முயற்சியே. கூட்டு முயற்சி இருந்தால் பாலாறையும் மீட்க இயலும். மக்கள் மனத்தில் பாலாறு பாய்ந்தது போல் இருக்கும்.

‘ஒரு மண்ணு குடமெடுத்து தண்ணிக்கு போனியே இவ்வளவு நேரமென்ன?’ - ஆண்
‘பாலாற்று தண்ணி சுழன்று வருவதை வேடிக்கை பார்த்தய்யா் - பெண் என்னும் பாடல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கண்களிலும் காட்சியாக விரிகிறது.

'பாலகனைக் கொன்ற பாவம்
தீர்ந்தாலும் தீரும்
பாலாற்றைக் கொன்ற பாவம்
தீரவே தீராது் என்று 'தேவையல்ல பெண்கள்'இல் யாழினி முனுசாமி எழுதிய 'பாலாற்றுச் சாதம்' கவிதையே முடிவில் நினைவிற்கு வருகிறது. 

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It