கர்ணன் படத்தில் இடம் பெற்ற 'மழை கொடுக்கும் கொடை' எனும் பாடலை அடிக்கடி விரும்பிக் கேட்பதுண்டு. அக்காலத்தின் பின்னணிப் பாடல் ஜாம்பவான்கள் டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் இருவரின் குரல்களும் அப்பாடலில் மிகுந்த கம்பீரத்துடன் ஒலிக்கும். இசையின் நடுவில் உறையும் மவுனத்தைப் போல அந்தக் வெண்கலக் குரல்களின் நடுவில் மென்மையாய் ஈர்க்கும் ஓர் ஆண் குரல். அது பி.பி.சீனிவாஸினுடையது.

P_B_Srinivas_43570களுக்கு முன்பு வரையிலான பாடல்களுக்கும் அதற்குப் பின்னதான பாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு. அக்காலத்திய பாடல்களைக் கேட்கும் போதே பாடலுக்கு வாயசைத்த நடிகர்களை ஓரளவுக்கு அனுமானித்து விடலாம். ஒரே பாடகர் வேறு வேறு நடிகர்களுக்குப் பாடியிருந்தாலும் கூட அப்பாடலுக்கு நடித்த நடிகரை நம்மால் ஊகித்துவிட முடியும். டி.எம்.சவுந்திரராஜன் சிவாஜிக்காகப் பாடும் போதும், எம்.ஜி.ஆருக்காகப் பாடும் போதும் தன்னுடைய குரலால் நுட்பமாக வேறுபடுத்தியிருப்பார்.

சீனிவாஸ் அவ்வாறான நுட்பங்களைச் செய்ததில்லை. அவருடைய குரல் சிவாஜி, எம்.ஜி.ஆர். தவிர்த்த மற்ற சில நடிகர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகக் கருதப்பட்டது. அவரின் குரலில் ஒலிக்கும் பாடல்களைக் கேட்டாலே அந்தப் பாடலில் நடித்தவராக ஜெமினி கணேசன், பாலாஜி, முத்துராமன் போன்ற நான்கைந்து நடிகர்களை எளிதாகப் பட்டியலிட்டுவிடலாம். இந்த நடிகர்களின் உடல் மொழியோடு அவரின் குரல் அந்தளவுக்கு ஒத்துப் போனது அவருடைய பலமா, பலவீனமா என்று தெரியவில்லை.

ஒலிப்பேழையில் பலமுறை விரும்பிக் கேட்ட 'பால் வண்ணம் பருவம் கண்டேன்' எனும் பாடலில் நடித்தவராக ஜெமினி கணேசனைத்தான் நீண்ட நாளாகக் கற்பனை செய்திருந்தேன். ஆனால் முதல் முறையாக அந்தப் பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது அதிர்ந்தேன். அதில் நடித்திருந்தவர் எம்.ஜி.ஆர்.

சீனிவாசின் குரலில் எல்லோரையும் ஈர்ப்பது அந்த மென்மை. அத்தனை மென்மையாய் ஒலித்த ஆண் குரல் வேறு உண்டா என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஆண்மைக்குரிய கம்பீரத்துடனும் தன் குரலை ஒலிக்கச் செய்ய முடியும் என்றும் அவர் நிரூபித்திருக்கிறார். எஸ்.ஜானகியுடன் இணைந்து அவர் பாடிய 'பொன் என்பேன் சிறு பூ என்பேன்' எனும் பாடலில் அவரின் குரல் அத்தனை கம்பீரமாய் ஒலிக்கும். அப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் டங் டங் என்று அதிர்வுடன் ஒலிக்கும் கோயில் மணியின் ஓசையைக் கேட்கும் உணர்வு எப்போதும் எனக்குள் எழுவதுண்டு. அதே போல் ஊமை விழிகள் படத்தில் வரும் 'தோல்வி நிலையென நினைத்தால்' எனும் பாடலுக்குத் தேவையான கம்பீரத்தைத் தன்னுடைய கணீர் குரலால் நிறைத்திருப்பார்.

கடைசியாக 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் அவர் பாடியிருந்தார். ஆனால் அப்பாடல்களில் எல்லாம் அவருடைய குரல் பெரிதும் தளர்ந்து போயிருந்தது. கடைசியாக அவருடைய குரல் ஓரளவுக்கேனும் பழைய இனிமையுடன் ஒலிக்கக் கேட்டது நாளைய செய்தி எனும் படத்தில் ஆதித்யன் இசையில் படத்தில் அவர் பாடிய 'உயிரே உன்னை' எனும் பாடலில்தான்.

தன்னுடைய அடையாளமாகச் சிலவற்றைத் தொடர்ந்து அவர் கடைபிடித்து வந்தார். தலையில் எப்போதும் ஒரு தலைப்பாகையும் தோளில் சால்வையும் சட்டைப் பையில் ஏராளமான பேனாக்களுமாகவே அவர் இறுதி வரை வலம் வந்தார். பாடகராக மட்டுமின்றி ஒரு கவிஞராகவும் தன்னை அடையாளப்படுத்த அவர் தொடர்ந்து முயன்றார். சித்திரக் கவி போன்ற காலாவதியாகிப் போன கவிதை முறையைப் படைப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டினார்.

'காலங்களில் அவள் வசந்தம்' எனும் கண்ணதாசனின் காவிய வரிகளை தமிழ்க் காதுகளுக்கு எடுத்துச் சென்ற சீனிவாசினுடைய குரல் அடங்கிவிட்டது. அவர் பாடிய பாடல்களை வசந்த கால நினைவுகளாக ரசிகர்களின் இதயங்களில் நிறைத்து விட்டு அவர் உதிர்ந்திருக்கிறார்.

Pin It