1

எமது கட்டைவிரல்கள்
அதிகாரமாற்றம் படைக்கும்
சக்தி வாய்ந்ததென்பதை
யாமறியும் முன்னே
இலவச திண்பண்டங்களுக்கு  
எமது வாய்கள் திறந்துகொள்கின்றன.

எமது வாய்கள் மூலம்
இலவசங்கள் செலுத்தப்பட்டு
கட்டைவிரல்கள் மூலம்
எமதுரிமைகள் பறிக்கப்படுகின்றன.

ஒருபக்கம்
மீண்டும் மீண்டும்
எமது இளிச்ச வாய்
அகல திறந்துகொள்கிறது.
மறுபக்கம்
எமது கட்டை விரல்கள்
பல்லி வால் போல
வெட்டுப்படுகின்றன.

                             2

              பன்றிகள் சிந்தும் முத்துக்கள்

நச்சுப் பம்புகளும்
கொடிய மிருகங்களும்
என்னை சூழ்ந்துகொண்டன.

பன்றிகள் இலவசமாக
மாறி மாறி
முத்துக்களை சிந்துகின்றன.

இனி எனது விரலில்
மை தடவப்பட்டு விடும்
நான் தப்பிக்கயிருந்த 
வழிகள் அனைத்தும்
அடைபட்டு விட்டன.

Pin It