கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று உலகை அச்சுறுத்தி வரும் சூழலில் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு புதிதாக "கருப்பு பூஞ்சை" (Mucormycosis) என்ற நோய் தாக்குவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பார்வை பறிபோகிறது உயிரையும் இழக்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து, தற்போது வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என்று பல வர்ணங்களில் பூஞ்சை வருவதாக செய்திகளை கண்டு வருகிறோம். இந்த பூஞ்சைகள் பற்றிய கேள்விகளும் அச்சமும் மக்களிடம் பரவலாக பீதியை கிளப்பி வருகிறது. ஆகையால், இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கு சில மருத்துவ அறிவியல் விளக்கங்களை காண்போம்.
பூஞ்சை (Fungus) அல்லது காளான்கள் மனித குலத்திற்கு புதிதானது அல்ல. மனித குலம் தோன்றிய காலத்திற்கு முன்பே தோன்றி, மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை தொடரும் தாவரத்திற்கும் விலங்கிற்கும் இடையிலான உயிரினம் தான் இந்த பூஞ்சை(அ) காளான்கள்.
பொதுவாக, இந்த பூஞ்சைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இறந்த பிறகு அவற்றில் உள்ள சிதைவடையும் திசுக்களை கொண்டு தனக்கான உணவை உற்பத்தி செய்து கொள்ளும். மேலும், கரிம கழிவுகளை (Organic wastes) இயற்கைக்கு தீங்கு விளைவிக்காமல் செரிமானம் செய்திடும் ஒப்பில்லா "தூய்மைப் பணியாளர்களாக" செயல்படுகின்றன.
இந்த பூஞ்சைகள் ஈரப்பதம், வெப்பம் உள்ள அமிலத்தன்மை நிறைந்த இடங்களில் செழித்து வளரக் கூடியது.
நெடுங்காலமான வெட்டப்பட்ட மரங்கள், ஈரமான சுவர்கள் தொடங்கி சில நாட்களான ரொட்டிகள் (Bread) வரை பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் பூஞ்சை படர்ந்து வளரும். சுமார், 15 லட்சம் காளான் வகைகள் வரை உலகில் இருக்கக்கூடும்.
அவற்றில், மனிதன் அறிந்தவை வெறும் 1 லட்சம் தான் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒரு வகை தான் இந்த கருப்பு பூஞ்சை.
கொரோனாவை போன்று கருப்பு பூஞ்சை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் அல்ல. "சந்தர்ப்பவாத" நோய்த் தொற்றுகள் (Opportunistic infections) என அழைக்கப்படும் இவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சமரசம் அடைந்திருக்கும் வேளைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமான சமயங்களில் இந்த நோய் வீரியமாக தாக்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாத போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக காணப்படும்.
இந்த நோயாளிகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை வழங்க பயன்படுத்தப்படும் “ஸ்டெராய்டுகள்” (Steroids) இரத்தத்தில் சர்க்கரை அளவை மேலும் உயர்த்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் நொதி (Insulin enzyme) குறைவாக அல்லது சுரக்காமல் போவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களால் உறிஞ்சி சக்தியாக மாற்ற முடியாமல் இரத்தத்திலேயே சேர்ந்து கொண்டிருக்கும்.
இதன் விளைவாக இரத்தத்தின் அமிலத்தன்மை கூடும். இரத்தத்தின் அமிலத்தன்மை அதிகரித்தால் அதில் உள்ள சிவப்பணுக்கள் (RBC) பிரிந்து இரும்பு சத்து அதிகம் உள்ள "ஹீம்" (Heme) வெளியேறும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு; இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு காரணமாக உயரும் அமிலத்தன்மை, இந்த அமிலத்தன்மை மிகுதியால் இரத்த சிவப்பணுக்களில் இருந்து வெளியேறும் இரும்பு சத்து என்று இவை அனைத்தும் சேர்ந்து ஒரு செடி வளர தேவையான நிலம், நீர், காற்று, சூரிய ஒளி போன்று பூஞ்சை வளர ஏதுவான சூழலை உருவாக்கும்.
யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்தும்?
• கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு கொண்டுள்ள நீரிழிவு நோயாளிகள்.
• ஸ்டிராய்டு மாத்திரை மற்றும் ஊசி, இணை நோய்களுக்காக, தொடர்ந்து எடுப்பவர்கள்.
• உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மருந்துகளை (Immuno-suppression drugs) எடுப்பவர்கள்
• எய்ட்ஸ், காசநோய், புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சைக்காக கீமோதெரபி (Chemotherapy) எடுப்பவர்கள்
• இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஒரு வகையான நியுட்ரோபில்ஸ் (Neutrophils) குறைவாக காணப்படும் நியுட்ரோபீனியா (Neutropenia) உள்ளவர்கள்
• ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
என இணை நோயுள்ளவர்களை எளிதில் தாக்கிடும்.
கருப்பு பூஞ்சை எத்தனை வகைப்படும்? அவற்றின் அறிகுறிகள் என்ன?
கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுத்தும் உறுப்புகள் அடிப்படையில் அவை ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
( அ ) மூக்கு மற்றும் மூளையை பாதிக்கும் கருப்பு புஞ்சை (Rhinocerebral Mucormycosis).
இந்த வகை பூஞ்சை மூக்கு வழியாக சென்று "சைனஸ்" (Sinus) எனப்படும் காற்று செல்லும் பகுதிகளில் வளரக்கூடியது. பின்னர், அங்கிருந்து மேல் நோக்கி சென்று கண் பார்வைக்கு காரணமான நரம்பை பாதித்து இறுதியாக மூளையை பாதிக்கிறது.
அறிகுறிகள்:
• முகத்தில் குறிப்பாக ஒரு பக்கத்தில் வலி, வீக்கம், மரத்து போவது.
• கண்களின் பின் பகுதியில் தீவிர வலி ஏற்படுவது.
• ஒரு பக்கம் மூக்கடைப்பு, சளி, நீர் வடிவது.
• கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் மூக்கில் இருந்து சளி அல்லது நீர் வடிவது.
• கண்கள் சிவத்தல், நீர் வடிவது.
• பார்வை மங்கலாக தொடங்கி பார்வை இழப்பு ஏற்படுவது.
• கண் இமைகளில் வீக்கம் ஏற்படுவது.
( ஆ ) நுரையீரல் கருப்பு புஞ்சை (Pulmonary Mucormycosis).
இவ்வகை பூஞ்சை மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது.
அறிகுறிகள்:
• கடும் காய்ச்சல் இருப்பது.
• அதிக அளவில் இருமல் ஏற்படுவது.
• நெஞ்சு வலி ஏற்படுவது.
• சளியில் இரத்தம் வெளியேறுவது.
• மூச்சுவிடுவதில் சிரமம் தொடங்கி மூச்சுத்திணறல் ஏற்படுவது.
(இ) தோல் கருப்பு பூஞ்சை (Cutaneous Mucormycosis)
தோலில் உள்ள வெட்டுக்கள் மற்றும் காயங்கள் மூலம் கருப்பு பூஞ்சை தொற்று இரத்தத்தில் கலந்து நோயை உண்டாக்கும்.
அறிகுறிகள்:
• தோல் நிறம் கருப்பாக மாறுவது, வீக்கமடைவது, புண்கள் உருவாகுவது.
(ஈ) உணவுக்குழாய் மற்றும் குடல் கருப்பு பூஞ்சை (Gastro-Intestinal GI Mucormycosis).
நீண்ட நாட்களான ரொட்டி மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள கருப்பு பூஞ்சை குடலுக்குள் சென்று நோய்களை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்:
• கடுமையான வயிற்று வலி, வீக்கம் ஏற்படுவது.
• வாந்தி ஏற்படுவது.
• வயிற்றுப்போக்கு, சில நேரங்களில் இரத்தம் கலந்து, ஏற்படுவது.
(உ) உடல் முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை (Disseminated Mucormycosis).
நேரடியாக இரத்தத்தில் கலந்து அதன் மூலம் அனைத்து உறுப்புகளுக்கும் பரவி தீவிர நோயை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்:
• சிறுநீரகம், எலும்புகள், இருதயம், கல்லீரல் என அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தம் மூலம் பரவி மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை ஏற்படுத்தும்.
கருப்பு பூஞ்சை நோயை எவ்வாறு கண்டுபிடிப்பது?
• இரத்த பரிசோதனையில் CBC, ABG, Ferritin அளவுகளை அறிவது மூலம் நோயின் குறியீடுகளை கண்டறிய முடியும்.
• சளி, மூக்கில் வடியும் நீர் மாதிரிகள் எடுத்து நுண்ணோக்கியில் (Microscope) பார்ப்பது மூலம் “ஸ்போர்ஸ்” (Spores) கண்டறியலாம்.
• நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் சளி மாதிரி பரிசோதனை செய்யலாம்.
• தோல் பாதிப்பு ஏற்பட்டால் “பயாப்சி” (Biopsy) பரிசோதனை செய்யலாம்.
• சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
மருத்துவ சிகிச்சைகள்
பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே குறித்த காலம் அளவு பின்பற்றி உட்கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்துகளை உட்கொண்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயல் இழப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
அறுவை சிகிச்சைகள்
பூஞ்சை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் தடை ஏற்பட்டு அழுகிய திசுக்கள் கருப்பு நிறத்தில் காணப்படும். அவற்றை, மருத்துவர்கள் முறையே அறுவை சிகிச்சை மூலம் நீக்கி மேலும் அருகில் உள்ள திசுக்களுக்கு பரவாமல் தடுத்திட சிகிச்சை வழங்குவார்கள். மேலும், கண் பகுதிகள் பாதிக்கப்பட்டால் கண்களை அகற்றவும் வாய்ப்பு உள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
• நோய் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடனடியாக கண்டறியப்பட்டால் தீவிர நோய் பாதிப்பு மற்றும் பெருமளவு இழப்புகளை தவிர்த்திடலாம்.
• கொரோனா தொற்று இருப்பவர்கள் நீரிழிவு (சர்க்கரை) நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒருவேளை, சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
• எந்த மருந்தையும் குறிப்பாக “ஸ்டெராய்டு” மற்றும் “ஆண்டிபையோட்டிக்ஸ்” (Antibiotics) மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இன்றி எடுக்கக்கூடாது.
• சுகாதார மிக்க சூடான உணவு, உடலின் தேவைக்கேற்ப புரதம், வைட்டமின்கள், மினரல்கள் அடங்கிய சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.
• பழைய உணவு, ரொட்டிகளை உண்ணுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
• சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். குஜராத் மற்றும் சில வட மாநிலங்களில் கொரோனா தொற்றை தடுக்க வல்லது என்று மாட்டு சாணம் மற்றும் சிறுநீரை உடல் முழுக்க பூசி குளித்தவர்களில், நீரிழிவு (சர்க்கரை) நோய் உள்ளவர்கள் பலர் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
• வெப்பம் மற்றும் ஈரப்பதம் உள்ள சூழலில் பூஞ்சை நன்கு வளரும். அதேபோல், செடி கொடிகள் வளர ஏற்ற நிலத்தை போல நீரிழிவு நோய் பூஞ்சை வளர ஏற்ற களத்தை அமைத்துக் கொடுக்கும். இதில், மாட்டுச் சாணம் சிறுநீர் தடவி குளிப்பது கருப்பு பூஞ்சை வளர உரம் போடுவது போன்ற செயலாகும்.
• அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத மூடநம்பிக்கைகளை கைவிட்டு ஒழித்து அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து கருப்பு பூஞ்சை நோய் வருவதை முறியடிப்போம்.
- மே பதினேழு இயக்கம்