வட இந்தியாவில் மகதப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு (கி.மு.30) இந்திய வரலாற்றில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலை, படையெடுத்து வந்த அந்நிய ஆட்சியாளர்களும், உள்ளூர் பழங்குடி மக்களின் தலைவர்களும், இனக்குழு அரசுகளின் தலைவர்களும் முறையான ஆட்சியாளராக மாறுவதற்கு, அதாவது சத்திரியராக ஆவதற்கு வைதீகப் பார்ப்பனர்களின் சட்ட ஏற்பிசைவு தேவை என்ற நிலையை உருவாக்குவதை எளிதாக்கியது. இந்திய ஆட்சியாளர்களின் சட்டப்படியான ஆட்சிக்கு வைதீகப் பார்ப்பனர்களின் ஏற்பிசைவு தேவை என்ற நிலையை உருவாக்கியதுதான் வைதீகப் பார்ப்பனியத்தின் பெரும் வெற்றி எனலாம். இச்சூழ்நிலை வைதீகப் பார்ப்பனியமும் சமற்கிருதமயமாக்கலும் இந்தியா முழுவதும் பரவுவதற்கும், சாதியக் கட்டுமானத்தை இந்தியா முழுவதும் கொண்டு போவதற்கும் வைதீகப் பார்ப்பனர்களுக்கு வழிவகை செய்தது. இதற்கு மகதத்தை 150 ஆண்டுகள் ஆண்ட பார்ப்பன சுங்க, கன்வ வம்சங்களும், அதன் பின் 300 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த குப்தர்களின் 150 ஆண்டுகால ஆட்சியும் பெருந்துணையாக இருந்தன.

pandaiya kaala indiaவட இந்தியாவின் சுருக்கமான வரலாறு:

மௌரியப்பேரரசுக்குப் பின்பும் மகத அரசின் வீழ்ச்சிக்குப் பின்பும் வட இந்தியாவில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையை அறிந்து கொள்வதற்கு முன் வட இந்திய அரசுகளின் சுருக்கமான வரலாற்றை அறிந்து கொள்வோம்.

கி.மு, 7ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் 16 சனபதங்கள் எனப்படுகிற 16 இனக்குழு அரசுகள் வட இந்தியாவில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவில் அவற்றுக்கிடையே நடந்த போட்டிகளில் மகத அரசு வெற்றி பெற்று ஒரு பேரரசாக வளர்ச்சி பெற்றது. அரியங்கா(கி.மு. 600-413) வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரனும்(கி.மு. 543-493), அவனது மகன் அசாதசத்ருவும் (கி.மு. 493-461) மகதத்தைப் பேரரசாக ஆக்குகின்றனர். அரியங்கா வம்சத்திற்குப்பின் கி.மு. 413இல் சிசுநாகர் வம்சம்(கி.மு. 413-345) தோன்றுகிறது. அதன் அழிவில் நந்த வம்சம் (கி.மு. 345-323) உருவாகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தன் மகத அரசை இந்தியாவெங்கும் புகழ்பெற்ற ஒரு பேரரசாக ஆக்குகிறான். அதன்பின் மௌரிய வம்சம் ஆட்சிக்கு வருகிறது. அலெக்சாந்தர் கி.மு. 327இல் வடஇந்தியா மீது படையெடுக்கிறான். கி.மு. 325இல் வடஇந்தியாவை விட்டு வெளியேறி விடுகிறான். அவன் வெளியேறிய உடன் சந்திரகுப்த மௌரியன் நந்தர்களைத் தாக்கி வென்று கி.மு. 321வாக்கில் மகத அரசின் அரியணையில் அமருகிறான். 24 ஆண்டுகள் அவன் அரசாள்கிறான். அதன் பின் கி.மு. 297இல் அவனது மகன் பிந்துசாரன் அரசனாகிறான். அவனது ஆட்சிக்காலம் என்பது கி.மு. 297-272 வரையான 25 வருடங்கள். அதன்பின் அவனது மகன் அசோகர் கி.மு. 268இல் முடிசூடுகிறார். அவரது ஆட்சிக்காலம் கி.மு. 268-232 வரையான சுமார் 34 வருடங்கள். அசோகருக்குப் பின் வந்தவர்கள் வலிமையற்றவர்களாக இருந்தனர். அதன் கடைசி அரசனை, புசுயமித்திரன் என்கிற பார்ப்பனத்தளபதி கொன்றுவிட்டு சுங்க வம்சத்தைத் தொடங்குகிறான். சுங்க வம்சத்தின் காலம் கி.மு. 187-75. அதன்பின் கன்வ வம்சம் கி.மு. 75-30 வரை 45 வருடம் ஆள்கிறது. சுங்க வம்சம், கன்வ வம்சம் இரண்டும் பார்ப்பன வம்சங்கள். அதன்பின் மகத அரசு இல்லாது போகிறது. மகதத்தைச் சுற்றியிருந்த பல சிறு சிறு இனக்குழு அரசுகள் மகதத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றன.

மௌரியர்களுக்குப்பின் சுங்க வம்ச ஆட்சிக் காலத்தில் வடமேற்கிலிருந்து கிரேக்கர்கள் மகத அரசைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களுள் மினான் டர் (கி.மு. 150-135) என்பவன் பாடலிபுத்திரம் வரை படையெடுத்து வந்தான். இந்தோகிரேக்க மன்னர்களில் இவனே புகழ்பெற்றவன். இந்தோ கிரேக்கர் ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. சைத்தியர்கள் எனப்படும் சாகர்கள் இவர்களை கி.மு. முதல் நூற்றாண்டு முதல் வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளை வென்றனர். சாகர்கள் கிரேக்கர்களைவிட பலபகுதிகளை இந்தியாவில் ஆண்டனர். சாகர்களில் ஐந்து பிரிவினர், ஆப்கானிஸ்தான், தட்சசீலம், மதுரா, மேற்கு இந்தியா, மேல்தக்காணம் ஆகிய ஐந்து இடங்களில் ஆண்டனர். இதே காலகட்டத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டிலும் பல இனக்குழுக்கள் வடக்கிலிருந்து இந்தியாவைத் தாக்கின. மதுராவைத் தலைநகராகக் கொண்ட சாகர்கள் 200 ஆண்டுகள் ஆண்டனர். மேற்கு இந்தியாவில் இருந்த மேற்கு சத்ரப் எனப்படும் சாகர்களின் ஆட்சிதான் கி.பி. 400 வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்றவன் உருத்ரதாமன்(கி.பி. 130-150). அந்நிய அரசனான இவன்தான் முதன்முதலாக சமற்கிருதத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுப் பொறிப்பை உருவாக்கினான். மேற்கு சத்ரப் அல்லது சாகர்களின் ஆட்சி என்பது கி.பி. 35 முதல் கி.பி. 405 வரை நீடித்தது.

சாகர்கள் மேற்கு இந்தியாவில் ஆட்சியைத் தொடங்கியபோது குசாணர்கள் இந்தியாவின் வடக்கே தங்கள் ஆட்சியைத் தொடங்கினர். அவர்களது ஆட்சி கி.பி. 30 முதல் கி.பி. 230வரை இருந்தது. இதில் புகழ்பெற்றவர் கி.பி. 78இல் ஆட்சியைத் தொடங்கிய கனிசுகர் ஆவார். இவர் கி.பி. 78இல் தொடங்கியதுதான் சக சகாப்தம். இவர் கிழக்கில் பாடலிபுத்திரம் வரை படையெடுத்தார். கனிசுகர் ஆட்சிக் காலம் கி.பி. 78-101.

“கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டுவரையிலான இந்திய அரசியல் வரலாறு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்ரமிப்பாளர்கள் ஆகியோரைப்பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைதான் அளிக்கின்றன” என்கிறார் டி. என். சா (D.N. Jha) என்கிற வரலாற்று ஆசிரியர்.(1) கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் வட இந்தியாவில் இந்நிலைதான் இருந்து வந்தது. சுங்க கன்வ மகத அரச வம்சங்கள், சாதவாகனர்கள், சாகர்கள், குசாணர்கள் ஆகிய ஐந்து அரச வம்சங்கள் தான் இக்காலத்தில் வடக்கிலும் தக்காணத்திலும் ஆண்டவர்கள். சுமார் கி.மு. 230 - 220 முடிய 450 வருடம் சாதவாகனர்களும், இடையே கலிங்க மன்னன் காரவேலனும் ஆண்டனர்.

வட இந்திய அரசுகள் (கால அட்டவணை) கி.பி. 500 வரை:

வம்சம்        அரசன்             காலம்            ஆண்டுகள்

அரியங்கா வம்சம்                              கி.மு. 600-413        187

அரியங்கா வம்சம்          பிம்பிசாரன்    கி.மு. 543-493  50

அரியங்கா வம்சம்          அசாத்சத்ரு    கி.மு. 493-461       32

சிசுநாகர் வம்சம்                                       கி.மு. 413-345        68

நந்த வம்சம்                                    கி.மு. 345-325        20

கலவரங்களும் குழப்பங்களும்                     கி.மு. 325-322       04

சேரன் இமயவரம்பனின் வடநாட்டுபடையெடுப்பு கி.மு. 325-323  02

மௌரிய வம்சம்                                 கி.மு. 322-187       135

சந்திரகுப்த மௌரியன்                           கி.மு. 321-297       24

பிந்துசாரன்                                      கி.மு. 297-272       25

மௌரியப் படையெடுப்பின் தமிழகத் தோல்வி     கி.மு 297-288        09

அசோகர் ஆட்சிக்காலம்                          கி.மு. 268-232       36

சேரன்செங்குட்டுவனின் வடநாட்டுப்படையெடுப்பு கி.மு. 230-227  03

சாதவாகன வம்சம்                        கி.மு.230-கி.பி.220    450

சாதவாகன வம்சம்          சிமுகா       கி.மு. 230-207        23

இந்தோகிரேக்கர்                   டெமிட்ரியசு-&1 கி.மு. 200-180        34

சுங்க வம்சம்(மகதம்)                            கி.மு. 187-75          112

கலிங்கம்                         காரவேலன்   கி.மு. 180-165        15

சாதவாகன வம்சம்          சதகர்ணி            கி.மு. 180-124        56

இந்தோகிரேக்கர்                   மினான்டர்           கி.மு. 150-135        15

சோழன் நலங்கிள்ளியின் உச்சயனி படையெடுப்பு கி.மு. 80-78   02

சுங்க வம்சத்தின் இறுதி ஆண்டு                  கி.மு. 75    -

கன்வ வம்சம்(மகதம்)                           கி.மு. 75-30          45

சாதவாகன வம்சம்          புலுமாயி            கி.மு. 30-6                 24

புலுமாயி – மகதப்படையெடுப்பு     கி.மு. 30

குசாண வம்சம்                                        கி.பி. 30-230           200

மேற்குசத்ரப், சாகா வம்சம்                      கி.பி. 35-405           370

குசாண வம்சம்                    கனிசுகர்             கி.பி. 78-101                 23

சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு                கி.பி. 78    -

சாதவாகனர்         கௌதமிபுத்ர சதகர்ணி       கி.பி. 106-130       24

சாதவாகனர்         வசிட்டிபுத்ர புலுமாயி       கி.பி. 130-160                30

மேற்கு சத்ரப்        உருத்ரதாமன்        கி.பி. 130-150          20

சாதவாகனர்         யாசன சதகர்ணி             கி.பி. 170-199       29

குப்தர்கள்          கி.பி. 320–470   180

குப்தர்கள்  சமுத்திரகுப்தன்    கி.பி. 325-375   50

குப்தர்கள் இரண்டாம் சந்திரகுப்தன்   கி.பி. 375-415   40

குப்தர்கள்  குமாரகுப்தர்     கி.பி.415-454   39       

கி.பி. 150இல் இந்தியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் மூன்று அரச வம்சங்கள் இருந்தன. அவை குசாண வம்சம், மேற்கு சத்ரப் வம்சம், சாதவாகன வம்சம் ஆகியன. மகத அரசு கிமு.600-கி.மு.30 வரை இருந்து வந்தது. ஆனால் அது கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து டெமிட்ரியசு, மினான்டர் போன்ற இந்தோ கிரேக்கர்களாலும், காரவேலன், சதகர்ணி போன்றவர்களாலும் தாக்கப்பட்டு வலிமையற்றுதான் இருந்து வந்தது. அதன்பின் இறுதியாக ஆட்சிக்கு வந்த கன்வ வம்சம்(கி.மு.75-கி.மு.30), சாதவாகனர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் கி.மு. 30க்குப்பின் ஆட்சிக்கு வந்த சாதவாகன அரசன் புலுமாயி மகதம் வரை படையெடுத்து கன்வ வம்சத்து மகத அரசை வென்றான். அதன்பின் மகதத்தைச் சுற்றியிருந்த இனக்குழு அரசுகள் அதனைக் கைப்பற்றிக் கொண்டன. இந்தோ கிரேக்கர்கள் சாகர்களால் அழிக்கப்பட்டனர்.

ஆதலால் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகத அரசும், இந்தோ கிரேக்கர்களும் இல்லாது போய்விடுகின்றனர். கலிங்கமும் காரவேலனுக்குப் பின் வலிமையற்றதாக ஆகிவிடுகிறது. இதன் காரணமாக கி.பி. முதல் நூற்றாண்டு முதல் குசாண வம்சம், மேற்கு சத்ரப் வம்சம், சாதவாகன வம்சம் ஆகிய மூன்று வம்சங்கள் மட்டுமே இருந்து வந்தன. குசாணர்களின் கனிசுகர்(கி.பி.78-கி.பி.101), சாதவாகனர்களின் கௌதமிபுத்ர சதகர்ணி (கி.பி.106-கி.பி.130), மேற்கு சத்ரப் வம்சத்தின் உருத்ரதாமன் (கி.பி. 130-கி.பி.150), மீண்டும் சாதவாகனர்களின் யாசன சதகர்ணி (கி.பி.170-கி.பி.199) ஆகிய நால்வரும் இக்காலகட்டத்தில் புகழ் பெற்றவர்கள். மௌரியர்களுக்குப் பின் வந்த வடஇந்திய அரச வம்சங்களின் காலவரிசை ஒருபொழுதும் சரியானவாறு வரையறுக்கப்படவில்லை எனவும் கி.மு.327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை (வடஇந்தியாவுக்கு) உறுதி செய்தது எனவும் கூறுகிறார் டி.டி. கோசாம்பி.(2) மேலே தரப்பட்டுள்ள காலங்கள் பல இந்தியப் புராணங்கள் தரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பல ஊகங்களையும், கணிப்புகளையும் பயன்படுத்தித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் அதில் பல குழப்பங்கள் இன்றுவரை இருக்கவே செய்கின்றன.

இனக்குழு அரசுகளின் முக்கியத்துவம்:

இந்த வரலாற்றுத் தரவுகள் வட இந்தியா குறித்த ஒரு பகுதி வரலாற்றை மட்டுமே வழங்க வல்லவை. வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கி.மு. 600 முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டுவரை இனக்குழுச் சமூகங்கள் தான் இருந்து வந்தன. இந்த இனக்குழுச் சமூகங்களின் அரசுகள் குறித்து முன்பே ஓரளவு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மகதப் பேரரசு என்பது வட இந்தியாவில் கங்கைச் சமவெளியிலும், மேற்கு இந்தியாவிலும், உச்சயினிப் பகுதியிலும் இருந்த பிரதேசங்களையும் இவைபோக வட இந்தியாவின் பிற பிரதேசங்களில் இருந்த முக்கிய நகரங்களையும் மட்டுமே தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்த பேரரசு. பிற பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் இனக்குழு அரசுகளின் அல்லது அதன் சமூகங்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தன. மௌரியப் பேரரசுக்கு முன் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இனக்குழு அரசுகளால் தான் ஆளப்பட்டு வந்தன. அலெக்சாண்டரின் படையெடுப்பு வடமேற்கு இந்தியாவிலும், சிந்துவெளிப் பகுதியிலும் இருந்த பல இனக்குழு அரசுகளை அழித்து ஒழித்தது. அதனால் மௌரியப் பேரரசு ஒப்பீட்டளவில் மிக அதிக அளவான பரப்பில் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுபோக முடிந்தது. ஆனால் அசோகருக்குப்பின் மௌரியப் பேரரசு சிதறுண்டு போனது. அதனால் மௌரியப்பேரரசின் இறுதிக்காலத்திலும் அதன் வீழ்ச்சிக்குப் பின்னரும் உள்ளூர் அரசுகளும், இனக்குழு அரசுகளும் பேரரசின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டன. சுங்க வம்ச புசியமித்திரன் இந்தச் சூழ்நிலையில்தான் மகத அரசைக் கைப்பற்றிக் கொண்டான்.

மகதத்தில், சுங்க வம்சத்துக்குப்பின் வந்த கன்வ வம்சம் கி.மு. 30 இல் இல்லாது போனதிலிருந்து கி.பி. 320இல் குப்தப்பேரரசு உருவானது வரை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் கங்கைச் சமவெளிப்பகுதிப்பகுதி முழுவதும் இனக்குழு அரசுகளைக் கொண்டதாகவே இருந்தது. சமுத்திர குப்தன்(கி.பி.325-375) நிறைய இனக்குழு அரசுகளை வென்றதாக அலகாபாத் அசோகன் தூணின் கல்வெட்டு பட்டியலிடுகிறது. ஆனால் அவைகளில் பெரும்பாலானவை மீண்டும் ஆள அனுமதிக்கப்பட்டன. பஞ்சாப், இராசசுதான் தொடங்கி மத்திய இந்தியாவின் வன அரசுகள், எல்லையோர அரசுகள், தட்சிண அரசுகள் என பல்வேறு இனக்குழு அரசுகளை அவன் வென்றுள்ளான் என வரலாற்று ஆசிரியர் டி.என். சா கூறுகிறார்(3). பல கண சங்கங்கள், காட்டு இராச்சியங்கள், ஆரிய வர்த்த அரசர்கள் சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டது என இரோமிலா தாபர் குறிப்பிடுகிறார்(4). மேலும் அவர் வடமேற்கு இந்தியாவிலும், இராசசுதானிலும் இருந்த கண சங்கங்கள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சிக்கு மாற்றாக இருந்தன எனக் கூறுகிறார்(5). ஆகவே சமுத்திர குப்தன் காலம் வரை இந்தியாவின் பெரும்பகுதிகளில் இனக்குழு அரசுகள்தான் இருந்துள்ளன என்பதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

குப்தப்பேரரசும் வைதீக பார்ப்பனியமும்:

புசியமித்திரனுக்குப்பிறகு குப்த அரசன் சமுத்திர குப்தன் தான் அசுவமேத யாகம் நடத்தினான். அவனுக்குப்பின் வந்த இரண்டாம் சந்திர குப்தன் (கி.பி. 375-415) காலத்தில் தான் குப்தப்பேரரசு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது. அவன் சாகர்களை வென்று மேற்கு இந்தியாவை குப்தப் பேரரசுடன் இணைத்தான். இவனுக்குப்பின் வந்த குமாரகுப்தர் (கி.பி.415-454) கால ஆட்சியில் அமைதி நிலவியது. அதன்பின் ஊணர்கள் இந்தியா மீது படையெடுத்து குப்தப்பேரரசை தாக்கத் தொடங்கினர். கி.பி. 500க்குள் குப்தப்பேரரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின் ஊணர்கள் அரசன் தோராமானாவும் அவன் மகன் மிகரகுலாவும் இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.

குப்தர்கள் வைதீக பார்ப்பனியத்திற்கு முழு ஆதரவு வழங்கினர். அவர்களது காலத்தில்தான் அரசு நால் வருண சாதியை அங்கீகரித்து அதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தியது. குப்தர் காலத்தில் சமற்கிருதம் மறுமலர்ச்சி அடைந்து, பல நூற்றாண்டு கால பரிணாம வளர்ச்சியாலும், ஆட்சியாளர்களின் ஆதரவாலும் அம்மொழி ஒரு செவ்வியல் மொழி என்ற சிறப்பை அடைந்தது எனக் கூறுகிறார் டி.என். சா.(6). புகழ்பெற்ற கவி காளிதாசர் இக்காலத்தைச் சேர்ந்தவர். குப்தர்கள் காலம் வைதீக பார்ப்பனியத்திற்குப் பொற்காலமாக இருந்தது. ஆனால் பொது மக்களுக்கு அது பொற்காலமாக இருக்கவில்லை. வைதீக பார்ப்பனியம் குப்தர் காலத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டதோடு, வருணத்தை சாதியாக மாற்றியமைத்து, அரசும் சமூகமும் அதனை முழுமையாக ஏற்று அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வைத்தது. அதாவது கி.பி. 500க்குள் வைதீக பார்ப்பனியம் வட இந்தியா முழுவதும் தனது சாதியம் முதலான வைதீகக் கருத்தியல்களை உறுதியாக நடைமுறைப்படுத்தி, வலுப்படுத்தியதில் குப்த ஆட்சியின் பங்கு மிக மிக முக்கியமானது. அதன்பின் பார்ப்பனியம் இந்தியாவின் பிற பகுதிகளில் சாதியம் முதலான தனது வைதீகக் கருத்தியல்களைக் கொண்டு சென்றது.

பார்ப்பன வம்சங்களின் காலம்:

புசியமித்திரனின் இராச்சியம் கங்கைச்சமவெளியின் பெரும்பகுதியை மட்டும் கொண்டிருந்தது. அவன் வடமேற்கே உள்ளே நுழைந்த கிரேக்கர்களோடும், தென்கிழக்கே கலிங்கர்களை எதிர்த்தும் போரிட்டான். ஆனால் ஒரு நூற்றாண்டுக்குள் சுங்கர்களின் இராச்சியம் மகதத்தின் எல்லைப் பிரதேசங்களுக்குள் சுருங்கியது. இதே நிலைமை இதன்பின் வந்த கன்வ வம்சத்தின் காலத்திலும் நீடித்தது. இக்காலகட்டத்தில் பஞ்சாப், அரியான பகுதிகளில் ஆதிக்குடிகளின் அரசுகள் மீண்டும் தோன்றின. அவர்கள் வெளியிட்ட காசுகள் மூலம் இவர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வகை அரசுகள் இராசசுதானிலும் உருவாகின. இவர்களில் பல குலங்கள் புராணங்களில் வரும் சத்திரியத் தகுதிக்கு உரிமை கொண்டாடின. ஆனால் அவர்களுடைய காசுகள் கணம் அல்லது சனபதங்களின் பெயரில்தான் இருந்தன(7). கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெமிட்ரியசு என்ற இந்தோ, கிரேக்கன் தெற்கு ஆப்கானிசுதானத்தையும், பஞ்சாப், சிந்துவெளிப்பகுதிகளையும் கைப்பற்றி ஆளத்தொடங்கினான். அவன் ஒட்டுமொத்தமாக வடமேற்கு இந்தியாவில் தனது அதிகாரத்தை நிலைநாட்டி, கங்கைச்சமவெளியின் மையப்பகுதிவரை தாக்குதல் நடத்தினான். இதன்பின் வந்த இந்தோகிரேக்க அரசர்களில் புகழ்பெற்ற மினாண்டர் கி.மு. 150-135 வரை ஆண்டான். இவனுடைய காசுகள் வடக்கே காபுல் வரையிலும், தெற்கே மதுரா வரையிலும் காணப்படுகின்றன. இவன் பாடலிபுத்திரம் வரை அல்லது யமுனா நதிப்பகுதிவரை இருந்த சுங்க ஆட்சிப்பகுதிகளின் மீது தாக்குதல் தொடுத்தான் எனக் கருதப்படுகிறது. இந்தோ கிரேக்கர் வரலாறு அவர்கள் வெளியிட்ட காசுகளைக் கொண்டு அறியப்படுகிறது. இந்த யவன ஆட்சியாளர்கள் புத்த மதத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். பார்ப்பனர்களுக்கு இவர்களிடம் ஆதரவு இல்லை எனக் கூறுகிறார் இரோமிலாதாபர்(8).

கி.மு. 80 வாக்கில் தெற்கேயிருந்து படையெடுத்து வந்த நலங்கிள்ளி என்ற சோழ அரசன் சுங்கர்களின் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்த உச்சயினியைத் தாக்கி அழித்தான். இதனைச் சாதவாகனர்கள் செய்ததாக கோசாம்பி தவறாகக் கருதிக் கொண்டார்(9). அதன்பின் பலம் இழந்த சுங்க வம்ச ஆட்சியை கி.மு. 75இல் கன்வ வம்ச பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த கன்வ வம்ச பார்ப்பன ஆட்சி கங்கைச் சமவெளியில் உள்ள மகத ஆட்சிப் பரப்பை மட்டுமே ஆண்டது. கி.மு. 30இல் சாதவாகன அரசன் புலுமாயி அதனைக் கைப்பற்றி அழித்தான். அதன்பின் இப்பகுதியை இனக்குழு அரசுகள் கைப்பற்றிக்கொண்டன. இதன்பின் உத்திரப்பிரதேசத்தில் இருந்த அயோத்தி, கோசாம்பி, மதுரா, அகித்சாத்ரா ஆகிய பழங்குடி அரசுகள் சுதந்திர நாடுகளாக ஆகின. பஞ்சாபிலும் பல பழங்குடி அரசுகள் தோன்றின என்பதை நாணயச் சான்றுகள் உறுதி செய்கின்றன. ஆடும்பரர்கள், குனிந்தர்கள், யாதேயர்கள் போன்ற பழங்குடி அரசுகள் பல வட இந்தியா முழுவதும் தோன்றின(10). இக்காலகட்டத்தில் இராசசுதானிலும் பழங்குடி அரசுகள் உருவாகியிருந்தன. கி.மு. 30க்குப்பிறகு வடஇந்தியாவின் பெரும்பாலான இடங்களில் பழங்குடி அரசுகள் அல்லது இனக்குழு அரசுகள் இருந்தன என்பதை இச்செய்திகள் உறுதி செய்கின்றன. இந்த நிலைமைகளில்தான் வடக்கே குசாணர் ஆட்சி கி.பி. 30இலும், மேற்கு சாகர்களின் ஆட்சி கி.பி. 35இலும் தொடங்குகிறது. தெற்கே சாதவாகனர்கள் ஆண்டு வருகின்றனர். அன்று கங்கைச் சமவெளிகளிலும் யமுனைப் பகுதிகளிலும் இனக்குழு அரசுகளே இருந்தன..

பார்ப்பனிய ஆளும் வர்க்கமும் அதன் மேலாதிக்கமும்:

புசியமித்திரன் மகத ஆட்சியைக்கைப்பற்றி, அதன்மூலம், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதையே தனது முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தான் எனக் கூறுகிறார் அம்பேத்கர். ஆகவே அந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில் புசியமித்திரனின் ஆட்சி தொடங்கியதிலிருந்து பார்ப்பனர் குழுக்கள் ஒன்றிணைந்து வலிமை பெறத் தொடங்குகின்றன. 150 வருட கால பார்ப்பன வம்சங்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் பலவகையிலும் செல்வமும், சொத்தும், நிலபுலங்களும், ஆட்சியதிகாரமும் பெற்றவர்களாக, ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கமாக ஆகிறார்கள். வைதீக பார்ப்பனியத்தின் கருத்தியலை உருவாக்கிய அவர்கள் அதற்கான தத்துவார்த்த அடித்தளத்தை உருவாக்க முன்பு கூறியவாறு பல்வேறு வகையான பார்ப்பனிய இலக்கியங்களைப் படைத்தார்கள். பண்டைய இலக்கியங்களை வைதீக பார்ப்பனியத்திற்கான கருத்தியல்களைக் கொண்டதாக மாற்றி அமைத்தார்கள். தங்களுக்கு எதிராக இருந்த அனைத்துச் சித்தாந்த நூல்களையும் தேடிப்பிடித்து அழித்து ஒழித்தார்கள். பார்ப்பனக் குழுக்களை ஒருங்கிணைத்து திட்டமிட்டு செயலாற்றினார்கள். வருணத்தைச் சாதியாக மாற்றி அமைத்தார்கள். பார்ப்பன அரசர்களின் ஆதரவோடும் பார்ப்பன ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடும் வைதீக பார்ப்பனியத்தின் ஏற்பிசைவு இல்லாமல் ஒருவன் அரசனாக ஆவதோ, நாட்டை ஆள்வது என்பதோ இயலாது என்ற சூழ்நிலையை உருவாக்கினார்கள். இந்தக் கருத்தியலை வட இந்தியா முழுவதும் கொண்டுசென்று அதனை அனைவரும் ஏற்குமாறு செய்தார்கள்.

மௌரியர்காலம்வரை இருந்த, பார்ப்பனர் அரசராக ஆகக் கூடாது என்ற மரபுமுறையிலான கருத்தியலை மாற்றியமைத்து பார்ப்பன அரசர்கள் நாடாளும் தகுதியுடையவர்கள்; நால்வருண சாதியத்தைக் காப்பாற்றுவது அரசனின் கடமை; உலகம் அனைத்திற்கும் உடமையாளன் பார்ப்பனன்; பார்ப்பனன் அரசனுக்கும் மேலானவன் போன்ற மனு சுமிருதி கூறும் கருத்துக்களைப் பரப்பி அதனைச் சமூகம் முழுவதும் ஏற்குமாறு செய்தார்கள். கலிகாலத்தில் சத்திரியர்கள் இருக்கமுடியாது என்ற புனைவுக்கருத்தைப் பரப்பி மக்களை நம்ப வைத்ததோடு, இனக்குழுத் தலைவர்களையும், பழங்குடித் தலைவர்களையும், அந்நிய அரசர்களையும் பார்ப்பனர்கள் தங்கள் வைதீகச் சடங்குகளைக் கொண்டு சத்திரியர்களாக, ஏன் பார்ப்பனர்களாகக் கூட ஆக்கமுடியும் என்ற கருத்தை பெரும்பாலான மக்கள் சமூகத்திடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் ஆளும் வர்க்கமாக இருந்ததால் அரசனின் ஆதரவோடு, இவை போன்ற பல்வேறு பார்ப்பனியக் கருத்தியல்களை மக்களிடம் கொண்டு சென்று, வட இந்தியா முழுவதும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்.

கி.மு. 187 முதல் கி.மு. 30 வரையான பார்ப்பன வம்சங்கள் ஆண்டு கொண்டிருந்த காலமும், அதன்பின் உருவான அசாதாரணமான சூழ்நிலையும் வைதீக பார்ப்பனியத்துக்குச் சாதகமாக அமைந்தன. கி.மு. 30க்குப்பின் வட இந்தியா முழுவதிலும் இனக்குழு அரசுகள், பழங்குடி அரசுகள், அந்நிய அரசுகள் ஆகியவைகள்தான் இருந்தன. பாரம்பரிய அரசுகள் எதுவும் இருக்கவில்லை. அன்று பாரம்பரிய அரச வம்சங்கள் என்றால் அது பார்ப்பன சுங்க, கன்வ வம்சங்கள் மட்டுமே என்ற நிலைதான் இருந்து வந்தது. அன்று வைதீக பார்ப்பனர்கள் தான் ஆளும் வர்க்கமாகவும் செல்வமும், செல்வாக்கும் மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த அசாதாரணமான சூழ்நிலை இவர்களுடைய கருத்துகளைப் பரப்புவதையும் செயல்படுத்துவதையும் எளிதாக ஆக்கியது. இனக்குழு அரசுகள், பழங்குடி அரசுகள், அந்நிய அரசுகள் ஆகியன பரம்பரை அரச வம்சங்களிலிருந்து உருவாகாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு பாரம்பரிய மரபும், அதுவரை ஆளும் வர்க்கமாக இருந்த பார்ப்பனர்களின் ஏற்பிசைவும், வைதீக பார்ப்பனியத்தின் ஆதரவும் மிகமிக முக்கியமானதாகவும், தேவையானதாகவும் இருந்தது. அதனை இதுவரை ஆளும் வர்க்கப் பார்ப்பனர்களைக் கொண்டதாக இருந்த வைதீக பார்ப்பனியம் வழங்கியது. வைதீக பார்ப்பனியம் நாட்டின் அரசனை வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக ஆக்கியது. ஆகவே புதிதாக வந்த ஆளும் வர்க்கமும், ஏற்கனவே ஆளும் வர்க்கமாக இருந்த வைதீக பார்ப்பனியமும் இணைவது என்பது இருவருக்கும் பலன் தருவதாக இருந்தது. பார்ப்பனர்களின் நால்வருண சாதி அமைப்பும் மக்களை கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற கருவியாக அரசனுக்குப் பயன்பட்டது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை எந்த அரச வம்சமும், எந்தப் பழங்குடி அரசுகளின் தலைவர்களும் அல்லது எந்த இனக்குழு அரசுகளின் தலைவர்களும் தாம் சத்திரிய வம்சம் என்றோ, பார்ப்பன வம்சம் என்றோ உரிமை கொண்டாடவில்லை. அதற்கான தேவையும் அன்று இருக்கவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு பல்வேறு பழங்குடி அரசுகளின் தலைவர்களும், இனக்குழு அரசுகளின் தலைவர்களும், அந்நிய அரசர்களும், ஏன் சாதவாகனர், பல்லவர் போன்ற பெரிய அரசுகளும் தாம் சத்திரிய வம்சம் என்றோ, பார்ப்பன வம்சம் என்றோ உரிமை கொண்டாடின. பஞ்சாப், அரியானா, இராசசுதான் போன்ற பல இடங்களிலும் புதிய பழங்குடி அரசுகள் உருவாகின. இவர்களில் பல குலங்கள், புராணங்களில் வரும் சத்திரியத் தகுதிக்கு உரிமை கொண்டாடின என இரோமிலாதாபர் கூறுவதை முன்பே குறிப்பிட்டோம். சாதவாகனர்கள் தங்களை பார்ப்பனர்களாகவே ஆக்கிக் கொண்டார்கள். இது குறித்து ஆர்.எசு.சர்மா, ‘புதியதாகப் பார்ப்பனர்கள் ஆகியதால் இவர்கள் உற்சாகத்துடன் வர்ணாசிரம முறையை ஆதரித்தார்கள்; முழு மூச்சுடன் அதை நிலை நாட்டினர்’ எனக் கூறுகிறார்(11).

அது போன்றே மேற்கு ‘சாகா’ மன்னர்களில் ஒருவனான புகழ்பெற்ற உருத்ரதாமன் கி.பி. 150இல் முதல் முறையாக சமற்கிருத மொழியில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டினான். இதுவே இந்தியாவில் வெட்டப்பட்ட முதல் சமற்கிருத கல்வெட்டு. அக்கல்வெட்டில் இருந்த சமற்கிருதம் பிராமிய எழுத்தைக் கொண்டு எழுதப்பட்டதாக இருந்தது. அதன் மூலம் அவன் பார்ப்பனிய மதத்துக்கு ஆதரவு தருவதோடு அதன் கொள்கையோடு தன்னை அடையாளப் படுத்திக்கொண்டான் எனலாம் எனக் கூறுகிறார் இரோமிலா தாபர்(12). இவ்விதமாக பழங்குடி அரசுகளும், இனக்குழு அரசுகளும், அந்நிய அரசுகளும் வைதீக பார்ப்பனியத்தை ஆதரிக்கும், ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதில் தான் வைதீக பார்ப்பனியத்தின் வெற்றி அடங்கியிருந்தது. ஆனால் புசியமித்திரனின் ஆட்சிக்கு முந்தைய காலத்தில் வைதீக பார்ப்பனியம் என்ற கருத்தியலே உருவாகி இருக்கவில்லை. புசியமித்திரனின் ஆட்சிக்குப்பின் உருவான பார்ப்பனிய இலக்கியங்களும், அவர்களின் பரப்புரைகளும் வைதீக பார்ப்பனியக் கருத்தியல்களை இந்தியச் சமூகம் முழுவதும் பரப்பின. அரசனே பார்ப்பனனாக இருந்து, வைதீக பார்ப்பனியக் கருத்துகளை ஆதரித்ததும், பார்ப்பனர்கள் ஆளும் வர்க்கமாக இருந்து அக்கருத்தியலை முழுமூச்சுடன் பரப்பியதும், அக்கருத்தியல்கள் மிக எளிதாகப் பொது மக்களிடம் பரவி சமூக அங்கீகாரம் பெறக் காரணமாயின.

பண்டைய வரலாறு என்பது புனைகதை மூலமும் புராணங்கள் மூலமும், பல்வேறு கதையாடல்கள் மூலமும் வைதீக பார்ப்பனியத்துக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட்டு மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது. பண்டைய கால அரச வம்சங்கள் அனைத்தும் சத்திரியர்களாக அல்லது பார்ப்பனர்களாக இருந்தனர்; கலி காலத்தில் சத்திரியர்கள் இருக்கமாட்டார்கள் போன்ற கதைகள் கட்டிவிடப்பட்டது. வைதீக பார்ப்பனியத்தின் கருத்தியல்கள் அனைத்தும் சமூகத்தில் பல்வேறு வகைகளில் பரப்பப்பட்டன. கிட்டத்தட்ட 150 ஆண்டுகால பரப்புரையின் மூலமும் சமூகத்தில் தங்களுக்கு இருந்த அரசதிகாரம், செல்வாக்கு போன்ற பிற காரணங்களைக்கொண்டும் வைதீகப் பார்ப்பனியத்தின் கருத்தியல்களை சமூகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்றதோடு அதனை வட இந்திய மக்கள் சமூகம் ஏற்குமாறும் செய்தனர். அதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது என்பது அவர்களிடம் இருந்த அரசதிகாரமும் அவர்கள் ஆளும் வர்க்கமாக இருந்ததும்தான்.

இனக்குழுக்களும் பூசாரி வகுப்பும்:

வட இந்திய வரலாற்றில் நகரமயமான கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னரும் அதன் பின்னரும் வட இந்தியாவின் பெரும் பகுதியில் இனக்குழு அரசுகளோ, பழங்குடி அரசுகளோ தான் இருந்து வந்தன. மௌரியர் ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவின் பெரும்பகுதி அதன் ஆட்சிப் பரப்புக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும், பார்ப்பன அரச வம்சங்களுக்குப் பிறகும் இனக்குழு அரசுகளும், பழங்குடி அரசுகளும் வட இந்தியாவின் பெரும்பகுதியில் மீண்டும் உருவாகி விட்டன. வடக்குப் பகுதியிலும் மேற்கிலும் அந்நியர்களான குசாணர்களும், சாகர்களும் ஆண்டு வந்தனர். பெரும்பாலான உலக வரலாறுகளில் நகர அரசுகள் உருவாகி அவை நன்கு வளர்ச்சியடைந்த பின்னர் பேரரசுகள் உருவாகும். அல்லது நகர அரசுகளே மிக நீண்ட காலம் நீடிக்கும். வளர்ச்சியடைந்த நகர அரசுகள் புரோகித வகுப்பை அடியோடு அழித்து ஒழித்து விடும். இந்நிலைதான் சுமேரியாவிலும், கிரேக்கத்திலும், சீனாவிலும், தமிழகத்திலும் நடந்தது. அங்கு பூசாரி வகுப்புகள் இல்லாது ஒழிக்கப்பட்டன. ஆனால் வட இந்தியாவில் நகர அரசுகள் நன்கு வளர்ச்சியடைவதற்கு முன்பே பேரரசுகள் உருவாகி விட்டதும், இனக்குழு அரசுகள் தொடர்ந்து நீடித்து இருந்ததால் பார்ப்பன பூசாரி வகுப்பு ஒரு தனி வகுப்பாக உருவாகி மகத அரசைக் கைப்பற்றி வைதீக பார்ப்பனியத்தை உருவாக்கும் சூழ்நிலை தோன்றியது எனலாம். ஆகவே நகர அரசுகள் நன்கு வளர்ச்சியடையாததும், பெரும் பரப்பில் இனக்குழு அரசுகள் தொடர்ந்து இருந்து வந்ததும், பேரரசுகள் முன்பே உருவானதும்தான் பார்ப்பனப் பூசாரி வகுப்பு வட இந்தியாவில் வலிமை பெறக் காரணம்.

வருணம் சாதியாக மாற்றமடைதல்:

வைதீக பார்ப்பனியம் வருணத்தை சாதியாக மாற்றியது எனக் குறிப்பிட்டோம். புசியமித்திரன் மகதப்பேரரசைக் கைப்பற்றிய பிறகு பார்ப்பனர்கள் ஆளும் வர்க்கமாக ஆனார்கள். தங்களைப் பலவகையிலும் பலப்படுத்திக்கொண்ட பார்ப்பனர்கள் தங்களைத் தனிவகை இனமாக, தனிவகைச் சாதியாக மாற்ற முதலில் தங்களுக்குள் அகமணமுறையைக் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள். வகுப்புகளுக்கிடையே முன்பே சிறிய அளவில் அகமணமுறைத் திருமணங்கள் நடைமுறையில் இருந்த போதிலும் அவை விருப்பத்தின் பேரிலும், பல்வேறு வாழ்வியல் தொழில் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் நடைமுறையில் இருந்து வந்தன. வகுப்புகளுக்கிடையே கலப்புத் திருமணங்களுக்கோ, கலந்து உண்ணுதலுக்கோ அன்று சமூகத் தடைகளோ, சட்டத்தடைகளோ இருக்கவில்லை. இவற்றை மாற்றும் வகையில் பார்ப்பனர்கள் முதலில் தங்களுக்குள் அகமணமுறையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் கலப்புத் திருமணங்களைத் தடை செய்யவும் சமூகக் கட்டுப்பாடுகளைக்கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

அவர்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட சில சாதிப்பிரிவுகள் உருவாகுகின்றன. அவை அனைத்தையும் அகமணமுறைக்குள் கொண்டுவந்து அதனை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கச் சமூகக் கட்டுப்பாடுகளை விதித்து உறுதியோடு நடைமுறைப்படுத்தினார்கள். நாளடைவில் கலந்து உண்ணல் போன்றவைகளும் தடை செய்யப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. தாங்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள், தனித்துவமானவர்கள் என்பதைச் சிறிது சிறிதாகச் சமூகத்தின் அனைத்துச் நடவடிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் கொண்டு சென்றார்கள். அவர்கள் அரசின் ஆதரவைப் பெற்றிருப்பதாலும், ஆளும் வர்க்கமாக இருப்பதாலும் பலவகையிலும் செல்வமும் செல்வாக்கும் கொண்டவர்களாக இருப்பதாலும் இவற்றைச் செயல்படுத்துவது என்பது ஓரளவு எளிதானதாகவும், மதிப்பு தருவதாகவும், ஆகிவிடுகிறது. நாளடைவில் ஒவ்வொரு வருணமும் அதாவது ஒவ்வொரு வகுப்பும் இவ்வாறு தான் இருக்க வேண்டும் வாழவேண்டும் என்ற பரப்புரையையும் தொடங்குகிறார்கள்.

பார்ப்பனர்கள் முதலில் தங்களை அகமணமுறையில் ஒரு சாதியாக ஒழுங்கமைத்துக் கொண்டு அதன் பின்னர் வைதீக நால் வருணச் சாதியக் கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். சத்திரியர்கள், வைசியர்கள் போன்றவர்களிடம் இக்கருத்தியல் அடுத்ததாகக் கொண்டு போகப்படுகிறது. இறுதியாகத்தான் சூத்திரர்களிடம் இக்கருத்தியல் கொண்டு செல்லப்படுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த வருணத்தைச் சாதியாக மாற்றும் முறை என்பது கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குள் அனைத்துச் சமூகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக நிர்ப்பந்தமாக மாற்றப்படுகிறது. முதலில் 4 வருணங்களாக இருந்தவை சாதியாக ஆகும்பொழுது, மனுவின் நூலின்படி 61 சாதிகளாக ஆகிவிடுகிறது. அச்சாதிப்பட்டியல் குப்தர்காலத்தில் 100 ஆக மாறுகிறது. இப்படியாகத் தொடர்ந்து காலத்துக்குக்காலம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடக்கத்திலேயே சாதிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு எனப்படும் படிநிலை முறை ஏற்படுத்தப்படுகிறது.

தொடக்கத்திலேயே சாதிய முறை என்பதைப் பார்ப்பனியம் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் தான் நடைமுறைப்படுத்தியது. அதற்கேற்றவாறு வைதீக பார்ப்பனிய நூல்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இரிக் வேதத்தின் 10ஆம் மண்டலம் - 90ஆவது சூக்தம் சேர்க்கப்படுகிறது. எல்லா பார்ப்பனிய நூல்களும் வேதமும் கடவுளும் அதனை வலியுறுத்துவதாகப் பேசுகின்றன. மனு சுமிருதி தனது சட்ட நூலில் கடவுள் நம்பிக்கையை விட, வேதம் புனிதம் என்பதைவிட நால் வருண சாதி முறையை வலியுறுத்துகிறார். பார்ப்பனனைக் கடவுளுக்கும் மேலானவனாக அறிவிக்கிறார், அவனது பிறப்பு என்பது அதி உன்னதமான உயர்வான பிறப்பு எனப் பறை சாற்றுகிறார். அரசனே அவனுக்குக் கட்டுப்பட்டவன் தான் என அடித்துச் சொல்கிறார். அரசே பார்ப்பனன் முன் தலை வணங்க வேண்டும் எனக் கூறுகிறார். நால்வருண சாதி முறையை நடைமுறைப்படுத்துவது அரசனின் தலையாய கடமை என ஆணை இடுகிறார். பெண்களையும், சூத்திரர்களையும் மிக மிகத் தாழ்வான பிறவிகளாக ஆக்குகிறார். இப்படியாக அவரது சட்ட நூல் என்பது சாதிய முறையைச் சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

பார்ப்பனியக் கருத்தியலும் உளவியலும்:

பார்ப்பனனின் அதிகாரம் மன்னனின் அதிகாரத்தை விடப்பெரியது; பார்ப்பனன் ஒப்புயர்வற்ற நிலையைப் பெற்றவன்; உலகம் அனைத்திற்கும் உடமையாளன் பார்ப்பனன்; பார்ப்பனன் அரசனுக்கும் மேலானவன்; பார்ப்பனன் மிக உயர்ந்த பிறப்புக்குரியவன்; எந்தச் சூழ்நிலையிலும் பார்ப்பனன் மிக மிக உயர்வாக மதிக்கப்பட வேண்டியவன்; பார்ப்பனன் எல்லாவிதமான பாவங்களையும் செய்திருந்தாலும் அவன் கொல்லப்படக்கூடாது; பிராமணின் சொத்தை ஒரு போதும் மன்னன் எடுத்துக்கொள்ளக்கூடாது; அனைத்துச் சாதி மக்களுக்கும் பார்ப்பனனே அதிபதியாக இருக்கிறான்; பார்ப்பனனைப் பாதுகாக்க வேண்டியது அரசனின் கடமை போன்ற பல்வேறு கருத்துகளை மனு சுமிருதியும், பிரமணங்களும் இன்ன பிற பார்ப்பனிய இலக்கியங்களும் உறுதிபடக் கூறுவதன் மூலம் பார்ப்பனன் பிறப்பிலேயே மிக மிக உயர்ந்தவன் என்ற வலுவான நம்பிக்கை, ஒவ்வொரு பார்ப்பனனின் ஆழ் மனதிலும் விதைக்கப்படும் சூழ்நிலை உருவாகியதோடு அது உளவியல் அடிப்படையில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை அவர்களிடத்தில் உருவாக்கியது. வர்க்க சிந்தனை போன்று பார்ப்பன சமூகத்தின் சமூகச்சிந்தனையாக இச்சிந்தனைகள் மாறிப் போயின.

இக்கருத்தியல் உருவான காலத்தில் பார்ப்பன வம்சங்களே அரசர்களாக இருந்து வந்தனர். பார்ப்பனர்கள் ஆளும் வர்க்கமாகவும் இருந்து வந்தனர். சமூகத்தில் செல்வமும், செல்வாக்கும், அதிகாரமும், அறிவும் கொண்டவர்களாகவும், அனைத்து மக்களுக்கும் மேலானவர்களாகவும் உயர்வானவர்களாகவும் பார்ப்பனர்கள் இருந்து வந்தனர். காலங்காலமாக உலகம் தோன்றிய காலத்தில் இருந்து தாங்கள் இவ்வாறு உயர்வானவர்களாகவே இருந்து வந்தது போன்ற கருத்துக்களும் உருவாக்கப்பட்டிருந்தன. இவைகளின் காரணமாக ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை இயற்கையிலேயே உயர்வானவனாக, அனைவருக்கும் மேலானவனாகக் கருதும் சூழ்நிலை உருவாகியது. இச்சிந்தனை அவனுக்கு உளவியல் அடிப்படையில் மிகப்பெரிய தன்னம்பிகையை உருவாக்கியது. இறுதியில் இச்சிந்தனைகள் அனைத்தும் பார்ப்பனிய சமூகத்தின் சமூகச் சிந்தனையாக ஆகிப் போயின.

நாளடைவில் ஒவ்வொரு பார்ப்பனனும் அவனை அறியாமையிலேயே இது போன்ற சிந்தனைகளைக் கொண்டவனாக ஆகிப் போயிருந்தான். அவனது குடும்ப, சமூகச்சூழ்நிலைகளும், பழக்க வழக்கங்களும், இன்னபிறவும் இச்சிந்தனைகளை அவன் அறியாதபோதும் அவனிடத்தில் வளர்த்தெடுத்தன. இவைகளின் காரணமாக ஒவ்வொரு பார்ப்பனனும் தன்னை இயற்கையிலேயே உயர்வானவனாக, அனைவருக்கும் மேலானவனாக எதையும் சாதிக்கும் திறன் கொண்டவனாகக் கருதும் சூழ்நிலை உருவாகியது. இதன் காரணமாக பார்ப்பனக் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்கரிய செயல்களைச் செய்து முடித்தன. மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்குள் இந்தியச் சமூகம் முழுவதும் வைதீக பார்ப்பனியக் கருத்தியல்களை ஏற்கச்செய்து, இந்தியாமுழுவதும் சமற்கிருதமயமாக்கலையும் வருணத்தைச் சாதியாக மாற்றுவதையும் செய்து முடித்தன.

வைதீகப் பார்ப்பனியப் பரப்புரை:

மீமாம்சம், வேதாந்தம் போன்ற வைதீகப் பார்ப்பனியக் கருத்தியல்களையும், அளவுகடந்த சுயநம்பிக்கையையும், பார்ப்பனியச்சிந்தனைகளையும் கொண்ட சிறு சிறு பார்ப்பனக் குழுக்கள் இனக்குழுச் சமூகங்களிலும், பழங்குடிச் சமூகங்களிலும் சென்று பணியாற்றி, மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் சிறுகச் சிறுக அதன் தலைவர்களிடம் வைதீக பார்ப்பனியக் கருத்தியல்களில் நம்பிக்கை ஏற்படச் செய்தன. இப்பணிகள் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து தொடங்கி இடைவிடாது நடந்து வந்தன. சடங்குகளின் தேவை, சமற்கிருதம்தான் கடவுளின் மொழி போன்ற மீமாம்சக் கருத்தியல்கள் அனைத்துச் சமூகங்களிலும் பரப்பப்பட்டது. சடங்குகளின் தேவை பல மடங்கு வலியுறுத்தப்பட்டது. அதன் பலன்களில் முழு நம்பிக்கை உருவாக்கப்பட்டது. வளர்ச்சியடைந்த மக்களிடம் வேதாந்தக்கருத்துகள், உபநிடதக் கருத்துகள் கொண்டு செல்லப்பட்டன. பலவகையிலும் வைதீகப் பார்ப்பனியத்தின் உயர்வு எடுத்துச் சொல்லப்பட்டது.

பார்ப்பனிய இலக்கியங்கள் உருவாவதும், இப்பணிகளும் இணைந்தே சென்றன. தொடந்து இப்பணிகள் அனைத்தும் செலுமைப்படுத்தப்பட்டு வந்தன. தொடக்க காலத்தில் இப்பணிகள் சுங்க, கன்வ வம்ச மகத அரசின் ஆதரவோடு வட இந்தியா முழுவதும் நடந்து வந்தன. கிறித்துவச் சகாப்தத்துக்குப்பிறகு பார்ப்பனச் செல்வந்தர்கள், வைதீக ஆதரவாளர்கள் ஆகியவர்களின் ஆதரவோடு இப்பணிகள் இடைவிடாது நடந்து வந்தன. சில இடங்களில் இப்பரப்புரைகளில் நம்பிக்கை கொண்ட இனக்குழுத் தலைவர்கள், பழங்குடித்தலைவர்கள், அந்நிய ஆட்சியாளர்கள் ஆகியவர்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்தது. வைதீக பார்ப்பனியத்தின் இப்பரப்புரைகளின் காரணமாகத்தான் இனக்குழுத் தலைவர்களும், பழங்குடித் தலைவர்களும் அந்நிய ஆட்சியாளர்களும், சாதவாகனர் போன்ற பெரிய அரசுகளும் கூட தங்களைப் பார்ப்பன, சத்திரியப் பாரம்பரியம் கொண்டவர்கள் என்று உரிமை கொண்டாடும் சூழ்நிலை தோன்றியது. இந்தச் சூழ்நிலை செயற்கையாகத் திட்டமிட்டு வைதீக பார்ப்பனியத்தால் வட இந்தியா முழுவதும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்டது.

பார்வை:

1. பண்டைக்கால இந்தியா (Ancient India in Historical Outline), டி. என். சா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.
2. பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH, வெளியீடு, செப்டம்பர் -2006. பக்:386; பக்; 286
3. பண்டையக்கால இந்தியா, டி. என். சா (D.N. Jha), தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 184.
4. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 512.
5. பக்: 514.
6. பண்டையக்கால இந்தியா, டி. என். சா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 207.
7. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 385, 386.
8. பக்: 393 – 399.
9. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் - 2016, பக்: 656, 657.
10. பண்டையக்கால இந்தியா, டி. என். சா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 138.
11. பக்: 263.
12. முற்கால இந்தியா (Early India, - From The Origens to AD 1300), இரோமிலா தாப்பர், NCBH, தமிழில்: அ.முதுகுன்றன், சூலை-2016, பக்: 410, 412.

- கணியன் பாலன்

Pin It