ஒன்று

நாஞ்சில் நாட்டில் புகழ்பெற்ற ஊரான சுசீந்திரத்தில் ஓதுவார் ஒருவரின் வீட்டில் திருமுருகாற்றுப்படை நூல் ஏட்டைப் பெறுவதற்காகச் சென்றபோது, அகஸ்தமாய் பாபு ராமதாசைச் சந்தித்தேன். அவரது மகள் என் கல்லூரியில் படித்தவர். அப்போது சில உதவிகள் நான் அவருக்கு செய்திருந்தேன். அந்த நினைவில் அவர் என்னைப் பார்த்து மிக அன்போடு வீட்டுக்கு அழைத்தார். நான் அந்த ஊருக்கு வந்த காரணத்தைச் சொன்னபோது, அவர் என் வீட்டிலும் சில ஏடுகள் உள்ளன, பெரும்பாலும் வைத்திய ஏடுகள் என்று சொன்னார். நானும் ஏதாவது அபூர்வமாய் ஏடு அகப்படலாம் என்ற ஆசையோடு அவரது வீட்டுக்குப் போனேன்.

அவர் ஏடுகளை எல்லாம் காட்டிவிட்டு பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அந்த ஏடுகள், அவரிடம் வந்த நிகழ்வைக் கேட்ட போது அவர் தன் பூர்வீக கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அவருக்குக் கதை சொல்வதில் ஆர்வம் உண்டு என்பது முதலில் பேச ஆரம்பித்தபோதே அறிந்து கொண்டேன். அதைவிட தன் பூர்வீகத்தை என்னிடம் சொல்வதில் உள்ள ஆர்வம் அவரை அதிகம் பேச வைத்தது.

தம்பி, "நதிமூலம் ரிஷிமூலம் போன்றதுதான் ஜாதி மூலமும். நான் இப்போது அடையாளத்திற்காக ஒரு ஜாதியில் இருக்கிறேன். அந்த வழியில் உன்னை என் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளலாம். என்னுடைய கொள்ளுத்தாத்தா நம்பூதிரி, கொள்ளுப்பாட்டி சுசீந்திரம் கோவிலில் முதல் குடி தேவதாசி. இதைப் பற்றியெல்லாம் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

என் நம்பூதிரி தாத்தாவுக்கும் சுசீந்திரம் கோவிலின் கைமுக்கு சோதனைக்கும் தொடர்பு உண்டு. இதையெல்லாம் காலங்காலமாகச் சொல்லிச் சொல்லி கேட்டு வருகிறேன். ஒருவிதத்தில் இந்த விஷயங்களை ஓரளவு நான் அறிந்தவன். நான் என்ற அடையாளம்கூட எனக்கு உண்டு என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின் மீண்டும் பேச ஆரம்பித்தார்.kaimukkuதிருவிதாங்கூர் ராஜ்யத்தில் அப்போது சுவாதித் திருநாள் (1829-1844) என்ற மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் குற்றவாளிகள் என்று சந்தேகப்பட்ட மலபார் நம்பூதிரிகளைச் சோதனைக்காக அல்லது விசாரணைக்காக சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்கு அழைத்து வருவது என்ற ஒரு வழக்கம் இருந்தது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தன் சாதியிலிருந்து விலக்கப்படுவார். அப்படி விலக்கப்பட்ட நம்பூதிரி தான் என் தாத்தா என்று சொல்லிவிட்டு அமைதியானார். கொஞ்ச நேரம் மௌனம். மறுபடியும் பேசினார்.

என் கொள்ளுப்பாட்டி கிருஷ்ணம்மா சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் முதல் குடி தேவதாசியாக இருந்தாள். அவளுக்குப் பரம்பரையாக காராண்மைச் சொத்து நிறைய இருந்தது. நாஞ்சில் நாட்டு நிலச்சுவான்தார் ஒருவருக்கு வைப்பாகவும் இருந்தாள். அவளது அழகும் சொத்தும் எங்கள் குடும்பத்தில் இருந்து இன்னும் மாஞ்சு போகவில்லை. ஒரு சமயம் பாட்டியை வைத்திருந்த நிலச்சுவான்தார் அவளது வீட்டில் இருந்த சமயத்தில்தான் சுசீந்திரம் கோவிலில் கைமுக்கு சோதனை நடந்தது. அன்று காலை பூஜையும் ஸ்ரீபலியும் முடிந்தது. சுசீந்திரம் கீழரத வீதியில் மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கங்கே கும்பலாய் நின்று கொண்டிருந்தார்கள். அன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நம்பூதிரி குற்றவாளியின் முடிவை எதிர்பார்த்து நின்றார்கள். கோவில் சபையும் ஊர்ச் சபையும் வருவாய்த் துறையும் ஒரே துறையாக இருந்த காலகட்டம் அது. ஆகவே, மக்கள் கோவில் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் கட்டுப்பட்டு இருந்தார்கள் ஆகவே, தங்கள் ஆர்வத்தை வெளிப்படையாகக் காட்டாமல் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

கோவில் பணியாளரான பலவேலக்காரன் என்பவர் குற்றவாளி நம்பூதிரியுடன் கோவில் தெற்கு வாசல்வழி கீழரத வீதிக்கு வந்து கொண்டிருந்தான். அங்கே கூடி இருந்த பெரியவர்கள் அந்த இளைஞன் குற்றவாளி என முடிவாகி விட்டதை ஊகித்துக் கொண்டார்கள். பலவேலக்காரன் நம்பூதிரியை அழைத்துக் கொண்டு குலசேகர விநாயகர் கோவிலுக்கு முன்னே வந்தான். நம்பூதிரியைக் கோவிலின் முன் பக்கம் உள்ள ஒரு கல்லில் அமரச் சொன்னான். நம்பூதிரி மௌனமாக தலை, குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே நின்றான். பலவேலக்காரன் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு கிழக்கு வாசல் வழியாக கோவிலின் உள்ளே நுழைந்து விட்டான்.

நம்பூதிரி காலை முதல் எதுவுமே சாப்பிடவில்லை. குற்றவாளியைப் பட்டினி போட்டுத்தான் விசாரணை நடக்கும். இதைப் பிரத்தியாயம் என்பார்கள். இந்த நம்பூதிரி இளைஞன் தன்னை குற்றவாளியாகக் கடைசிவரை ஒத்துக் கொள்ளவில்லை. யோகக்காரர்களிடம் (கோவில் டிரஸ்ட்டிகள்) அறிவுப்பூர்வமாக விவாதித்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் அவனை விசாரித்த முறையும் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.

அந்த இளைஞனைச் சுற்றி இருந்த கூட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைய ஆரம்பித்தது. குலசேகர விநாயகர் கோவிலின் அருகே இருந்த முதல் குடி தேவதாசியின் கணவர் என்ற ஸ்தானத்தில் இருந்த நிலச்சுவான்தார் நம்பூதிரியைத் தன் வீட்டுக்கு அழைத்தார். கைமுக்கு நடைமுறை அந்த ஊர்க்காரர்களுக்கும் பெரியவர்களுக்கும் நன்றாகத் தெரியும். குற்றவாளியைப் பட்டினி போட்டு விசாரிப்பார்கள் என்பதை அறிவார்கள்; அதனால் அவனைத்தான் அவர் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தார். அது உணவு நேரமும் கூட. அவன் தலையை அசைத்தான்.

அவன் இப்போது நம்பூதிரி அல்லன்; அவன் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டவன். அவனுக்கு என்று இப்போது ஜாதி அடையாளம் கிடையாது, வழிபாட்டு அடையாளம் மட்டுமே உண்டு. அவன் தன் சாதியை இனம் காட்டி உரிமை கோர முடியாது. ஜாதியைச் சொல்லி தன் இடத்தை நிலைநாட்ட முடியாது. ஆனால், மற்றவர்கள் அவனை ஜாதி அடையாளத்தோடுதான் பார்த்தார்கள். முதல் குடி தேவதாசியும் தன் பணிப்பெண்வழி தன் வீட்டிற்கு அவனை அழைத்தபோது அவன் மறுக்கவில்லை.

நம்பூதிரி கொல்லம் அருகே இருந்த தன் சொந்த கிராமத்துக்குப் போக விரும்பவில்லை. சுசீந்திரம் ஊர்க்கோவிலில் விசாரிக்கப்பட்டு குற்றவாளியானவர்கள் அந்த ஊர் மண்ணிலேயே வாழ்ந்து மறைந்தார்கள். அவர்கள் வேறு சாதியுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அந்த இளைஞனுக்கு வைத்தியம் தெரியும். அதனால் தேவதாசியின் வீட்டோடு அவன் ஓட்டிக் கொண்டான். சில்லறை வேலைகளைச் செய்தான். அவளின் குடும்பத்தில் ஒருத்தியை முறைப்படியாக மணந்து கொண்டான். அவனுக்கு இப்போது ஓர் அடையாளம் வந்துவிட்டது. அவனுடைய வரலாற்றை அவன் எப்பவாவது உறவினரிடம் சொல்லியிருக்கிறான்.

அந்த இளைஞன் கொல்லம் நகரத்தின் அருகே உள்ள சிறு கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையாக வைத்தியத்தைத் தன் உறவினர் ஒருவரிடம் அறிந்திருந்தான். முறைப்படியாக சம்ஸ்கிருதம் படித்திருந்தான். அவனது உறவுப்பெண் ஒருத்தியிடம் காதல் கொண்டிருந்தான்; அடிக்கடி அவளைச் சந்தித்திருக்கிறான்.

அந்தக் காதலர்களின் சந்திப்பை அந்தப் பெண்ணின் வீட்டுத் தாசி (பணிப்பெண்) அறிந்து விட்டாள். அச்செய்தி மேலிடத்திற்குச் சென்றது. முதல்கட்ட விசாரணையில் அது உண்மை என்று தெரிந்தது. அவன் மேல் பாலியல் குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது. பின்னர் அவனை விசாரிக்க சுசீந்திரம் கோவிலுக்குக் கொண்டு வந்தனர்.

அவனது காதலியிடம் நடத்திய விசாரணையின்போது (இது ஸ்மார்த்த விசாரம் எனப்படும்) அவள் விஷப்பாம்பு இருந்த மண் பானைக்குள் கையைவிட்டு சோதிக்கப்பட்டாள்; அப்போது அவள் இறந்து விட்டாள்.

இந்தச் செய்திகளை எல்லாம் அந்த நம்பூதிரி பல சூழ்நிலைகளில் சொல்லி இருக்கிறான். பாபு ராமதாஸ் இந்தக் கதையை என்னிடம் சொல்லிவிட்டு அந்த நம்பூதிரியின் வம்சா வழியினர் நாங்கள் என்று சொன்னார்.

இந்தக் கதையை எண்பதுகளின் பாதியில் நான் கேட்டேன். ராமதாஸ் என்னிடம் இந்த நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லியிருக்கலாம் என்று அப்போதே தோன்றியது. இதைச் சொல்வதற்கும் இப்போது ஆட்கள் இல்லை.

ராமதாஸ் சொன்ன கதைக்குப் பின்னால் நீண்ட வரலாறு உண்டு. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் பற்றி விரிவாக ஆராய்ந்த டாக்டர் கே.கே.பிள்ளை ‘பிரத்தாயம்' என்னும் தலைப்பில் இதைச் சொல்லுகிறார்.

பிரத்யாயம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு நம்பிக்கையை நிலைநாட்டுதல் என்று பொருள் கொள்ளுகின்றனர். குற்றவாளியாய்க் கருதப்பட்ட ஒருவன் தனது ஒழுக்கத்தை நிரூபிக்க, கொதிக்கும் நெய்யில் கைவிடுதல் என்னும் பொருளில் இது கைமுக்கு எனவும் வழங்கப்பட்டது.

கேரளத்தில் நம்பூதிரிகள் தங்கள் தூய்மையை நிரூபிக்க ‘காளி கோவிலைத் தெரிந்தெடுப்பது’ என்ற வழக்கம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்தது என்கின்றனர். கொடூரமான தெய்வம் என்னும் நிலையில் காளி இதற்குப் பயன்பட்டு இருக்கிறாள்.

சுசீந்திரம் சிவன் கோயிலை இந்தச் சோதனைக்குத் தெரிவு செய்யக் காரணம்; இது தொடர்பான தலபுராணம்தான். கவுதமரின் மனைவி அகலிகையிடம் தன் ஆசையைத் தீர்த்த இந்திரன் சாபம் பெற்று விமோசனம் அடைந்த தலம் "எந்தப் பாவத்தையும் தொலைக்கும் தலம்" என்ற கதைகள் இக்கோவில் தொடர்பானவை. இன்னொரு காரணம், நம்பூதிரிகளின் தனிப்பெரும் ஆளுமைக்கு உட்பட்ட பெரும் சொத்துக்கள் இருக்கும் கோவில் என்பதும் ஒரு காரணம்.

இந்தக் கோவிலில் நிலைபெற்ற சிவன், ருத்ர மூர்த்தியாகக் கருதப்பட்டது ஒரு காரணம். இதுபோன்ற சோதனை நிகழ்வுகள் செங்கனூர், கார்த்திகை பள்ளி போன்ற இடங்களில் உள்ள கோயில்களிலும் நடந்திருக்கின்றன.

தகாத பாலுறவு, வன்புணர்ச்சி, கொலை தொடர்பான குற்றங்கள் ஆகியன சுசீந்திரம் கோவிலில் விசாரிக்கப்பட்டன. இது நம்பூதிரி சாதிகளுக்கு மட்டுமே உரியது. இந்தச் சோதனை பிரத்தியாயம் அல்லது கைமுக்கு எனப்பட்டது. இந்தச் சோதனை குறித்த செய்திகள் தனிப்பட்ட முறையில் கோவிலில் பதிவு செய்யப்படவில்லை. கோவில் கணக்கு அச்சார கணக்கு போன்றவை எழுதி வைக்கப்பட்ட ஓலைகளிலிருந்தே கே.கே.பிள்ளை இவற்றைத் தொகுத்திருக்கிறார்.

இரண்டு

இந்தத் தண்டனைகள் நமக்குப் புதியதல்ல. இது குறித்த செய்திகள் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் கதைப்பாடல்களிலும் உள்ளன. இந்தத் தண்டனை முறையின் வழிமுறை பற்றி அறியு முன்பு பிரத்தியாயம் பற்றி பார்க்கலாம்.

நாட்டார் தெய்வ வழிபாட்டுத் தலங்களில் பெண்களின் புனிதத்தை நிலை நிறுத்த அல்லது சோதனை செய்யும் வழக்கம் உண்டு. இப்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. இது நிறுவன சமயம் சார்பான கோவில்களிலும் இருந்தது. சோரம் போனதாகக் கருதப்பட்ட பெண், திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆண், ஒரு குறிப்பிட்ட கோவிலில் மூல தெய்வத்தின் முன்னே சென்று கையில் சூடத்தை ஏற்றி சத்தியம் செய்து, தன்னை நிரபராதி என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இன்றும் உள்ளது.

குற்றவாளிகளைச் சோதனை செய்யும் இடமாகவும் தண்டனை கொடுக்கும் இடமாகவும் கோவில்களும் மதக்கூடங்களும் இருந்திருக்கின்றன. இது உலகளாவிய நிலை. குற்றவாளிகளைத் தெய்வமே தண்டிக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை. நீண்ட பாரம்பரியம் உடைய வழிபாட்டு மரபுடைய எல்லா நாடுகளுக்கும் இது பொருந்தும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நெருப்பில் கையைவிட்டு நிரூபித்த நிகழ்ச்சியை கிரேக்க நாடக ஆசிரியரான சொபோகிளிஸ் கூறுகிறார். வட ஆப்பிரிக்காவில் ஷாம்பசி நீக்ரோ இனத்தவரிடம் இப்படி ஒரு வழக்கம் இருந்தது. கத்தோலிக்கத் துறவிகள் தங்கள் தூய்மையை நிரூபிக்க நெருப்பு சோதனையை மேற்கொண்டனர். இதற்கு புனித பிரான்சிஸ் பாலின் வாழ்க்கை உதாரணம். ஐரோப்பிய கிறிஸ்தவ ஆலயங்களில் நடந்த இந்த சோதனை முறைக்கு இடைக்காலத்தில் பெரும் எதிர்ப்பு வந்தது. பின்னர் இந்த முறை நிறுத்தப்பட்டது. எகிப்தில் இது போன்று நடந்த நிகழ்ச்சிகள் ஏராளம்.

தமிழகத்தில் ஒருவன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க நடந்த சோதனைகள் பற்றிய செய்திகள் வட்டார இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் கதைப்பாடல்களிலும் உள்ளன நெருப்பில் மூழ்கி நிரூபித்த நிகழ்வுகள் காவிய காலத்தில் நடந்திருக்கின்றன. ஓடும் ஆற்று நீரில் குதிப்பது, விஷத்தைக் குடிப்பது, விஷப்பாம்பு இருக்கும் மண் குடத்தில் கையை விடுவது, கொதிக்கும் நெய் அல்லது எண்ணெயில் கையை விடுவது, பிளம்பாய் ஜொலிக்கும் இரும்புத் துண்டைக் கையில் எடுப்பது, சூரியன் அல்லது ஒரு தெய்வத்தைப் பார்த்து சத்தியம் செய்வது, உள்ளங்கையில் சூடத்தைப் பொருத்தி சத்தியம் செய்வது என இப்படியாக நடைமுறையில் இருந்த முப்பதுக்கு மேற்பட்ட சோதனை முறைகளைப் பழம் இலக்கியங்களிலிருந்து சேகரித்துள்ளனர்.

தமிழகத்தில் சோழர் காலத்து இலக்கியங்களில் இதற்கு சான்று உண்டு. மிகப்பெரிய அறிவாளிகளும் படைப்பாளிகளும்கூட இதிலிருந்து தப்பவில்லை. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதிய திருத்தக்க தேவர் சிற்றின்பத்தை அனுபவித்தே சிந்தாமணிக்கு உரை எழுதினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது; அதைத் தாங்க முடியாமல் கொதிக்கும் இரும்புத் துண்டைக் கையில் எடுத்து தன் தூய்மையை நிரூபித்தார் என்பது ஒரு கதை.

வைணவ பூசகர் ஒருவர் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு பாம்பு இருந்த குடத்தில் கையை விடச் சென்றபோது, அவரைத் தடுத்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் தன் கையைக் குடத்தில் விட்டு பூசகரின் தூய்மையை நிரூபித்தார் என்ற வைணவ மரபுக் கதையுண்டு.

தென்னிந்திய கல்வெட்டுக்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நிறைய சான்றுகள் உண்டு. திருநாக்குன்றமுடையார் கோவிலில் அணிகலன்கள் திருட்டு போனபோது அர்ச்சகர் ஒருவரை நிர்வாகம் சந்தேகித்தது. அந்த அர்ச்சகர் கொதிக்கும் இரும்பைப் பிடித்து, தான் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டும் என்று நிர்வாகம் ஆணையிட்டது. இது 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறும் செய்தி.

புகழேந்திப் புலவரின் பெயரிலுள்ள ‘அல்லி அரசாணி மாலை’ என்னும் அம்மானைப் பாடலில் ஒரு நிகழ்ச்சி: அல்லி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டி விடுகிறான். மறுநாள் தன் கழுத்தில் தாலி தொங்குவதைப் பார்த்த அல்லி, தன் நாட்டிலுள்ள எல்லா அரசர்களையும் வரவழைக்கிறாள். கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு, அல்லிக்கு தான் தாலி கட்டவில்லை என்று சத்தியம் பண்ணும்படி ஆணையிடுகிறாள். இந்தக் கதைப்பாடலின் காலம் கி.பி.18 அல்லது 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

கேரளத்தில் குற்றவாளிகளைச் சோதனை செய்யும் வழக்கத்தை நேரில் பார்த்த லோமியோ என்பவர் பதிவு செய்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவரை முதலை இருக்கும் நீர் நிலையில் தள்ளுதல், கொதிக்கும் ஈயக் குழம்பில் கைவிடுதல், பாம்பு இருக்கும் குடத்தில் கை விடுதல், கொதிக்கும் நெய்யில் கைவிடுதல் என்பன போன்ற சோதனைகள் 19 ஆம் நூற்றாண்டு வரை மலபாரில் வழக்கத்தில் இருந்தன.

கௌரி இலட்சுமிபாய் ராணி என்பவர் திருவிதாங்கூரின் பகர அரசியாக இருந்த காலத்தில்; கிழக்கிந்திய கம்பெனி ரெசிடென்ட் ஆக இருந்த கர்ணல் ஜான் மன்றோ (1819-1822)விடம் யூதர் ஒருவர் திருவிதாங்கூரில் குற்றவாளிகளைச் சோதிக்கும் கொடுமையான வழக்கத்தை நிறுத்தும்படி முறையிட்டு இருக்கிறார். மன்றோ, இந்த சோதனை வழக்கத்தை ஒழிப்பதற்கு முயற்சி எடுத்தார். ஆனால், வைதீக சார்புள்ள பண்டிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அரசியும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

மூன்று

சுசீந்திரம் வட்டப்பள்ளி மடம் காப்பகத்தில் கைமுக்கு தொடர்பாக உள்ள 12 ஓலைகளில் ஒன்று மட்டும்தான் கொலைக்குற்றம் தொடர்பானது பிற எல்லாம் பாலியல் குற்றம் தொடர்பானவை. கை முக்கு சோதனைகள் பல நடந்திருக்கலாம். ஆனால் கிடைத்த ஆதாரங்கள் குறைவு.

இப்படியான பாலியல் குற்றங்கள் நம்பூதிரிகளிடம் உருவாகக் காரணம் என்ன? இதற்கு ஒரு பின்னணி உண்டு; நம்பூதிரிகளின் குடும்பத்தில் மூத்தவன் மட்டுமே சொந்த ஜாதியில் திருமணம் செய்து கொள்ள முடியும். மற்ற சகோதரர்கள் வேறு ஜாதிப் பெண்களை சம்பந்தம் செய்து கொள்ளலாம். இதனால் நம்பூதிரிகளின் ஜாதியில் திருமணம் ஆகாத முதிர் கன்னிகளின் எண்ணிக்கை அதிகமானது. இந்தச் சூழ்நிலை நம்பூதிரிப் பெண்கள் ஆண்களின் பாலியல் தொடர்பை உருவாக்கக் காரணமானது என்கின்றனர்.

சுசீந்திரம் கோவிலில் நடந்த பிரத்தியாயம் என்னும் வழக்கம் எப்போது ஏற்பட்டது? இப்படி ஒரு வழக்கம் உருவாகக் காரணம் என்ன என்பதையெல்லாம் அறிவதற்கு முன்னால் சுசீந்திரம் கோவிலுக்கும் நம்பூதிரிகளுக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டியதிருக்கிறது. நாஞ்சில் நாட்டில் நம்பூதிரிகளின் செல்வாக்கு எப்போது ஏற்பட்டது. இதற்கான சில தகவல்களை டி.கே வேலுப்பிள்ளை திவான் நாகம் அய்யா, பேராசிரியர் இளங்குளம் குஞ்சம் பிள்ளை போன்றோர் கூறுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைதீக கோவில்களில் நம்பூதிரிகளின் செல்வாக்கு உருவான காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு ஆகயிருக்கலாம். இதற்கு சுசீந்திரம் அருகே உள்ள துவாரகை கிருஷ்ணன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் சான்று உண்டு. இந்தக் கோவிலின் கருவறை தென்மேற்கு மூலையில் கி.பி. 1229 ஆம் ஆண்டுக் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலில் வட திருவிதாங்கூர் வேத விற்பன்னரான ஸ்ரீ கோவிந்த ப்ரக்ஞ படரார் ஸ்ரீகான கிராம பகவான் என்ற ஞானி இருந்தார். இவருடன் வேதவித்துகள் சிலரும் இந்தக் கோவிலில் இருந்தனர், 1230-இல் உள்ள இந்தக் கோவில் கல்வெட்டு கோவிந்தப் ப்ரக்ஞ படரார் முன்னிலையில் தாணுமாலயன் கோவில் சபை கூடியதைக் கூறும் துவாரகை கோவிலில் கோவிந்தம் படரார் மேல்சாந்தியாக இருந்திருக்கிறார்.

கோவிந்தர் என்னும் பெயருடைய வேதம் படித்த நம்பூதிரி, நாஞ்சில் நாட்டு கோயில் ஒன்றில் பூசகர் ஆகவும் சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல வேறு நம்பூதிரிகளும் கோவில் பூசகர்களாகவும் யோகக்காரர்களாகவும் கோவில் நிர்வாகியான ஸ்ரீ காரியம் ஆகவும் இருந்திருக்கின்றனர். இது 14ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்வு.

இந்தக் காலத்தில் வேறு கோவில்களிலும் நம்பூதிரிகள் கோவில் நிர்வாகிகளாகவும் பூசகர்கள் ஆகவும் இருந்திருக்கின்றனர். சான்று, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில், வாள் வச்ச கோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோவில் போன்றவை வேணாட்டு அரசர்கள் நம்பூதிரிகளின் வைதீக மரபில் தலையிடவில்லை.

நாஞ்சில் நாட்டுக் கோவில்களின் தாந்திரீகம் ஆகமம் போன்றவை நம்பூதிரிகளால் சீரமைக்கப்பட்டது. இந்தக் காலத்தில்தான் திருவட்டாறு ஊரில் மலையாளம் பேசிய நம்பூதிரிகள் மண்ணின் மைந்தர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டனர். நம்பூதிரிகள் அந்த ஊரில் வாழ்ந்த தமிழ் பேசிய பிராமணர்களைப் பரதேசிகள் என்று அழைத்தனர். இன்றுகூட அது நடைமுறையில் உள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் சுசீந்திரம் கோவில் நம்பூதிரிகளின் சோதனைக் கூடமாக ஆனது.

சுசீந்திரம் கோவிலில் பிரத்தியாயம் அல்லது கைமுக்கு வழக்கம் அறிமுகமான காலகட்டத்தை சரியாகக் கணிக்க முடியவில்லை என்று கூறுகிறார் டாக்டர் கே.கே.பிள்ளை. நாஞ்சில் நாட்டில் நம்பூதிரிகள் அறிமுகமான 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இந்த வழக்கம் வந்திருக்கலாம் என்பது ஒரு ஊகம். கே.கே.பிள்ளைக்கு கிடைத்த ஆவணங்கள் எல்லாமே 18 ஆம் 19ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை ஆகும். இது குறித்த முதல் செய்தி கி.பி.1627 ஆம் ஆண்டு ஆவணத்தில் தான் வருகிறது என்கிறார் அவர்.

கருநாகப்பள்ளி லட்சுமிதாசன் நம்பூதிரி எழுதிய ‘சுக சந்தேச என்னும் மலையாள சிற்றிலக்கியத்தில் வரும் "உன் கண்களை சுசீந்திரம் ஊரின் மேல் பதித்துவிடு. அங்குள்ள சிவனிடம் இந்திரனே புனிதம் பெற்று இருக்கிறான்; இப்போதும்கூட மனிதனின் சோதனைக் கூடமாகவும் இத்தலம் விளங்குகிறது" என்னும் வரிகள் கைமுக்கு நிகழ்வின் காலத்தை ஓரளவு உறுதி செய்ய உதவுகிறது.

சுக சந்தேசம் நூலின் காலம் கி.பி.14ஆம் நூற்றாண்டு. எனவே கைமுக்கு வழக்கம் 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று ஊகிக்கிறார் கே.கே.பிள்ளை. கோவிலில் வட திருவிதாங்கூரில் இருந்து தென் திருவிதாங்கூர் கோவில்களுக்கு தாந்திரீக ஆகமங்களை நடத்த வந்த நம்பூதிரிகள் கி.பி.14-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

நான்கு

கைமுக்கு நிகழ்வை ஸ்மார்த்த விசாரம், பிரத்யாயம் என்னும் இரண்டு கட்டங்களாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் கே.கே.பிள்ளை. ஸ்மார்த்த விசாரம் என்பது குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி ஜாதிப் பெண்ணை விசாரிப்பது. இது, அவளது வீட்டில் நடக்கும். குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி இளைஞனை விசாரித்து சோதனை செய்வது பிரத்தியாயம். இது குறிப்பிட்ட கோவிலில் நடக்கும்.

ஸ்மார்த்த விசாரம் என்பதில் உள்ள ஸ்மார்த்தம் என்ற சொல்லுக்கு மேலாண்மைக் காரர் மீமாம்சைக் காரர் கிராமத்து நீதிபதி என்னும் அர்த்தங்களைக் கொள்கின்றனர். ஒரு பெண் சோரம் போய் விட்டாள் என்ற செய்தி கிடைத்ததும் அது அந்த வீட்டுத் தலைவரிடம் தெரிவிக்கப்படும். இதன் பின் விசாரணை ஆரம்பமாகும். இதன் முதல் கட்டமாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை வேலைக்காரியான தாசி (பணிப்பெண் என்ற அர்த்தத்தில்) விசாரிப்பாள். இது, தாசி விசாரம் எனப்படும்.

பணிப்பெண்ணின் முதல் கட்ட விசாரணைக்கு வீட்டில் உள்ள உறவினர்கள் உதவுவார்கள். தாசியின் விசாரணையில் அந்தப் பெண் தவறு செய்தவள் என்று ஊகிக்கப்பட்டால், அவள் அஞ்சு புரை என்னும் தனி அறையில் அடைக்கப்படுவாள். இந்த அறை அவளது வீட்டு வளாகத்தில் தாய் வீட்டுக்கு தொடர்பற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அறையில் இருப்பவள் வீட்டில் இருப்பவருடன் தொடர்பு கொள்ள முடியாது.

தாசியின் விசாரணைக்கும் பின்னர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் நாட்டுத் தலைவருக்கும் இதைத் தெரிவிப்பார். அவர் குற்றவாளியை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பார். அந்தக் குழுவின் தலைவராக நிரம்பப் படித்தவர் ஒருவர் இருப்பார். இவரைத் தவிர இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மீமாம்சைக் காரர்கள் (ஸ்மார்த்தர்) நம்பூதிரிகளின் சாதி நடைமுறை அறிந்த ஒருவர் வட்டாரத் தலைவர் ஆகியோர் இருப்பார்கள்.

இரண்டாவது கட்ட விசாரணையில் விசாரணைக்குழு பணிப்பெண்ணை விசாரிக்கும். இந்த விசாரணை சமயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரிப் பெண் வீட்டு வளாகத்தில் பனை ஓலைக் குடிசையில் தனியாக இருக்க வேண்டும்; வெளியே வருதல் கூடாது. பணிப்பெண்ணான தாசியை விசாரித்த பின்பு விசாரணைக் குழுவினர் தங்களுக்குள் கலந்து ஆலோசிப்பார்கள். இதன்பிறகு ஒரு வருஷமோ அதற்கும் அதிகமாகவோ விசாரணை தொடர்ந்து நடக்கலாம். விசாரணையின்போது ஏற்படும் செலவை அந்த வீட்டுக்காரர்களே கொடுக்க வேண்டும்.

விசாரணை செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடம் கண்ணியமான வார்த்தைகளால் உரையாட வேண்டும் என்பது நடைமுறை. விசாரணைக்காரர்கள் குற்றவாளியைப் பார்த்து பேசுவதைவிட வேலைக்காரியைப் பார்த்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். விசாரணை முடிவில் அந்தப் பெண் குற்றம் உடையவள் என்று நிரூபிக்கப்பட்டால், அவளைப் பார்த்து மற்றவர்கள் இரண்டு கைகளையும் கொட்டி அவமானப் படுத்துவார்கள். அவள் அடிமையைப் போன்று நடத்தப்படுவாள். இதன்பின்னர் பெரும்பாலும் அவள் சொந்த ஜாதியிலிருந்து விலக்கப்படுவாள்.

அந்தப் பெண் நம்பூதிரி சாதியிலிருந்து பகிஷ்கரிக்கப்பட்ட பின்பு வீட்டை விட்டு வெளியேற வேண்டும். பிறகு, அவள் தன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஸ்மார்த்த விசாரணை முடிவின்போது ஊரின் எல்லையில் மலபார் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் காத்திருப்பார்கள். குற்றவாளியாக முடிவு செய்யப்பட்ட நம்பூதிரிப் பெண் தான் விரும்பியவருடன் சென்று விடலாம். இதுவே பெரும்பாலும் நடைமுறையில் இருந்தது. இதன் பின்னர் அவளுக்கும் அவள் ஜாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆகிவிடும்.

நம்பூதிரி ஆண் குற்றம் உடையவன் என்று கருதப்பட்டால், அவனது நேர்மையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். இது, கைமுக்கு அல்லது பிரத்யாயம் எனப்படும். குற்றம் சுமத்தப்பட்ட ஆணின் தெய்வ சோதனை குறித்த செய்திகள் முதலில் நாட்டு அரசருக்கு அனுப்பப்படும். இதற்கு அறுபத்தி ஆறு பணம் அபராதம் கொடுக்கப்பட வேண்டும். இது கைமுக்கு நிகழ்ச்சியின் முதல்கட்டம்.

இதன்பிறகு குற்றவாளியைப் பற்றிய செய்திகள் அடங்கிய ஓலையை தேவாரி எனப்படும் பூசகர் ஒருவர் சுசீந்திரம் கோவில் காவலாளியிடம் ஒப்படைப்பார். இந்தக் காவலாளி வைராவி சாதியைச் சார்ந்தவராய் இருப்பார்.

வைராவி, அந்த ஓலையை கோவில் நிர்வாகிகள் ஆன யோகக்காரர்களில் மூத்தவரிடம் கொடுப்பார். அவர் மற்றவர்களுக்கு இந்த செய்தியைத் தெரிவிப்பார். பின்னர் யோகக்காரர்களும் ஸ்ரீகாரிய நம்பூதிரியும் தேவாரியும் கோவில் இளைய நயினார் மண்டபத்தில் கூடுவர்.

அந்தக் கூட்டத்தில் தேவாரி பிரத்தியாயம் நடத்த வேண்டிய கட்டாயத்தைச் சொல்லுவார். மறுப்பு இருந்தால் அதை அரசரிடம் தெரிவிப்பதாகவும் சொல்லுவார். எல்லோரும் மறுப்பு இல்லை என்று சொல்லுவார்கள். இது ஒரு சடங்கு நாடகம்தான் சோதனைக்கும் மறுப்பு தெரிவிப்பதில்லை.

இதன் பின்னர் அடுத்த நாள் கோவில் சபையினர் உதயமார்த்தாண்டம் மண்டபத்தில் கூடுவார்கள். அப்போது பிரத்தியாயம் நடத்த வேண்டிய நாள் நிச்சயிக்கப்படும். கைமுக்கு சடங்கில் கோவில் பூசகரான நம்பூதிரிக்கு முக்கிய இடம் உண்டு. இவரும் யோகக்காரர்களும் விவாதிப்பார்கள். கைமுக்கு சோதனை நடத்த வேண்டிய நாள் நிச்சயிக்கப்பட்டதும் அது ஓலையில் பதிவு செய்யப்படும் பின்னர் அரசருக்கும் தெரிவிக்கப்படும்.

ஐந்து

கோவில் சபை கைமுக்கு நடத்த முடிவுசெய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி அவனது சொந்த ஊரில் இருந்து சுசீந்திரத்திற்கு அழைத்து வரப்படுவான். அவனுடன் அவனது நண்பனும் உறவினர் ஒருவரும் வருவார்கள். குற்றவாளியின் மேல் உள்ள குற்றத் தகவல்கள் எழுதப்பட்ட ஓலை அவனது உறவினரிடம் கொடுக்கப்பட்டிருக்கும். கூடவே, இது தொடர்பான அரசு நீட்டும் இருக்கும். இந்த இரு ஓலைகளைக் கொண்டுவரும் குற்றவாளியையும், உறவினர்களையும் வட்டப்பள்ளி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இதன்பின் கைமுக்கு நிகழ்வின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகும்.

குற்றம் சாட்டப்பட்டவர் வட்டப்பள்ளி மடம் வளாகத்தில் மூலையில் ஒரு குடிசையில் இருப்பான். இவனது முதல் விசாரணை தொடங்கும் முன்பு குற்றவாளி 22 பணம் அபராதம் செலுத்த வேண்டும். யோகக்காரர்களின் அனுமதியுடன் குற்றவாளி கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் செல்வான். அவனுடன் வந்தவர்கள் மேற்கு வாசல் வழி செல்வார்கள். இந்த நிகழ்ச்சி சூரியன் மறைவதற்கு முன்பே நடந்துவிடும். இந்த நாளில் குற்றவாளி முழுப் பட்டினியுடன் இருப்பான்.

அன்று கோவில் சபை. இளைய நயினார் மண்டபத்தில் கூடும் கோவில் சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் அமர வேண்டிய இடத்திலே இருப்பார்கள். ஸ்ரீ காரியம் நம்பூதிரி கன்னி மூலையில் இருப்பார். இவரது வலதுகை பக்கம் உள்ள விசுப்பலகையில் அரசரின் நீட்டு வைக்கப்பட்டிருக்கும். ஸ்ரீ காரிய நம்பூதிரியின் வலதுபுற பகுதியில் முல்லை மங்கலமும் புதுமடமும் இதே வரிசையில் "தெற்கு மண் ஊராண்மை காரரும் தென்பகுதியில்" கொட்டம்பள்ளியும் தென் மூலையில் புத்தில்லமும் இருப்பார்கள். சபை கூடிய பிறகு சபையின் அருகே இருக்கும் விளக்குகளை அகற்றி விடுவார்.

கோவில் கணக்கன் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு சபையில் நிற்பான். பாரிசைவன் சங்கு ஊதுவான். அப்போது கொட்டு முழங்கும். குற்றவாளி சபையின் முன்னே அபராத பணத்தை வைப்பான். இந்த நிகழ்ச்சியில் கோவில் காணியாட்சி உரிமை உடைய இலைவாணியனுக்கு உரிமை உண்டு. அவன் கைமுக்கு நிகழ்ச்சி நடக்கும்போது வெற்றிலை பாக்கு கொடுக்க வேண்டும்.

அபராதத் தொகையை ஸ்ரீகாரிய நம்பூதிரி எடுத்துக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிடுவார். இப்போது விசாரணை வெறும் சடங்காகத்தான் நடக்கும். ஏற்கனவே உள்ள முடிவை இந்த சபை ஏற்றுக் கொள்ளும். விசாரணை முடிந்ததும் குற்றவாளியும் அவனுடன் வந்தவனும் கோவில் கிழக்கு வாசல்வழி சென்று வட்டப்பள்ளி மடத்திற்கு வந்துவிடுவார். அன்று குற்றவாளி, அவனுக்கு உரிய இடத்தில் தங்குவான்.

அடுத்தநாள் காலையில் குற்றவாளியும் அவர் ஊரிலிருந்து வந்தவனும் கிழக்கு வெளிப்பிரகாரத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். அப்போது கோவில் சபையார் செண்பகராமன் மண்டபத்தில் கூடுவர். பட்ட திரி ஒருவர் குற்றவாளி பற்றிய செய்திகளை ஓலையிலிருந்து படிப்பார். இதன்பின் குற்றவாளி வடக்கு இடம் கொடிமரத்தின் அருகே நிறுத்தப்படுவான். அவனுக்குக் காவலாக கோவில் பலவேலைக்காரன் நிற்பான்.

செண்பகராமன் மண்டபத்தில் இரண்டு தங்கக் குடங்கள், தங்கக் கெண்டி, வெள்ளி விளக்கு, நெய் காய்ச்சுவதற்குரிய வெண்கலப்பானை, வெள்ளித் தட்டுகளில் மலர்கள், வெள்ளிக்கும்பா ஆகியன இருக்கும். குற்றவாளி இறுதி முறையாக சபைக்கு 26 பணம், இருபத்தி ஒருகட்டு வெற்றிலை 316 பாக்கு ஆகியவற்றை அபராதமாகக் கொடுப்பான். ஸ்ரீ காரியம் நம்பூதிரி இவற்றைச் சரிபார்த்துவிட்டு சோதனையை ஆரம்பிக்கலாம் என்பார்.

சோதனை நிகழ்ச்சியை வட்டப்பள்ளி ஸ்தானிகர் ஆரம்பித்து வைப்பார். இதன் முதல் கட்டமாக கோவில் ஸ்ரீ பலிப்புரையில் சிறிய மர வாகனத்தில் தங்க ரிஷபம் எடுத்துச் செல்லப்படும். இந்த வாகனம் ஸ்ரீபலிப்புரையிலிருந்து புறப்படும். இதன்பின் பட்டுக்கொடை பிடிக்கப்படும் வெஞ்சாமரை வீசிக்கொண்டு ஒருவர் செல்வார். பாரசைவர்கள் இருவர் சங்கு ஊதிக் கொண்டே செல்வார்கள். வட்டப்பள்ளி தலைமையில் செல்லும் இந்த வாகனம் கோவிலை ஒருமுறை சுற்றிவிட்டு செண்பகராமன் மண்டபத்திற்கு முன்னே வந்து நிற்கும்.

இந்தச் சமயத்தில், குற்றவாளி இந்திர விநாயகர் கோவிலின் அருகே உள்ள நீராழியிலிருந்து தண்ணீரை எடுத்து மறைவிடத்தில் நின்று குளிப்பான். பின் புதிய ஆடையை உடுத்துக் கொள்வான். இதன் பிறகு அவன் யாரிடமும் பேசக்கூடாது. யோகக் காரர்களில் ஒருவர் தன் கையில் இருக்கும் ஓலையில் உள்ள ஸ்லோகத்தை மெதுவாகப் படிப்பார். குற்றவாளி மௌனத்தைக் கலைத்து விட்டு அந்த ஸ்லோகத்தை திரும்பிச் சொல்வான்.

சூரியன், சந்திரன், வாயு, அக்னி, பூமி, ஆகாயம், சொர்க்கம், தண்ணீர், காலை, மாலை, இரவு, பகல், தர்மம், இதயம் ஆகியவற்றை சாட்சியாக வைத்து சொல்கிறேன்.

துவஜஸ்தம்பத்தின் அருகே கணபதியின் பாதங்களில் இந்த கைமுக்கு (பிரத்தியாயம்) சோதனை நடக்கிறது, கணபதியைச் சாட்சியாக வைத்து சொல்கிறேன்.

இங்கு நடைபெறும் எல்லா விதிகளுக்கும் கட்டுப்பட்டு எந்த இடையூறும் செய்யாமல் நான் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

குற்றவாளி இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது ஒருவர் சிறிய வாகனத்திலிருந்து தங்க ரிஷபத்தை எடுத்து செண்பகராமன் மண்டபத்திலுள்ள விசைப்பலகையில் வைப்பார். அருகே தீ மூட்டப்பட்ட அடுப்பில் வெங்கலப் பானை இருக்கும். 3 ஆழாக்கு நெய்யும் ஆழாக்கு நல்லெண்ணெயும் அதில் விடப்படும் நெய் கொதித்து விட்டதா என்று அறிய மகிழ இலை அல்லது தர்ப்ப இலையை நெய்யிலே போட்டுப் பார்ப்பார்கள். நெய் கொதித்து விட்டால் தங்க ரிஷபம் அதில் போடப்படும்.

கொடிமரத்தின் அருகில் தலைகுனிந்தபடி நிற்கும் குற்றவாளியை நெருப்பின் அருகே வரும்படி சமிக்கை செய்வார். ஸ்ரீகாரியம் நம்பூதிரி அவனும் வருவான். அவனது வலதுகையை சுத்தமான வெள்ளைத் துணியால் சுற்றிக் கட்டுவான். பல வேலைக்காரன் அதன் மேல் மூன்று கட்டு வெற்றிலையை வைத்து பொதிந்து கட்டுவான்.

குற்றவாளி சாட்சி, கணபதியை வணங்குவான் சபையோரை வணங்குவான். பின் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு தங்க ரிஷபத்தை எடுத்து விசுப்பலகையில் வைப்பான். மறுபடியும் அவனது கை வெள்ளைத் துணியால் கட்டப்படும். உடனே சபை கலைந்துவிடும். குற்றவாளி வட்டப் பள்ளி மடத்திற்குச் செல்லுவான்.

அடுத்த நாள் காலையில் யோகக்காரர்கள் தெற்கிடம் எதிரே வீரபாண்டியன் மண்டபத்தில் கூடுவார்கள். வழக்கமான பூஜையும் ஸ்ரீ பலியும் முடியும் வரை யோகக்காரகர்கள் காத்திருப்பர். சிலர் மந்திரம் ஓதிக் கொண்டிருப்பார்கள்

ஸ்ரீ பலி ஊர்வலம் கருவறைக்குள் சென்றதும் பல வேலைக்காரன் குற்றவாளியைத் தெற்குவாசல் வழி கோயிலுக்குள் அழைத்து வருவான், அவன் சபை முன் நிறுத்தப்பட்டதும் சபை அமைதியாகும்.

சபையோரில் ஒருவன் அவன் கையில் கட்டப்பட்ட துணியை அவிழ்ப்பான் கையில் காயம் இல்லை என்றால் அவன் அதை உரக்கச் சொல்லுவார். அது ஓலையில் பதிவு செய்யப்படும். அவன் குற்றமற்றவன் என்ற ஓலைப் பதிவு கையில் கொடுக்கப்படும். இந்த ஓலையில் மூத்த நம்பூதிரியும் கணக்கனும் ஒப்பமிட்டு இருப்பர்.

சோதனையில் வெற்றிபெற்ற நம்பூதிரி சாட்சி வினாயகரை வணங்குவான். பின்னர் கோவில் கிழக்கு வாசல்வழி வந்து வடக்குத் தெருவில் இருக்கும் தெப்பக்குளத்தின் அருகே வருவான். அங்கு நம்பூதிரி களுக்கு உரிய குளப்புரையில் குளிப்பான். அவனுக்கு புதிய ஆடை கொடுக்கப்படும் அதை அணிந்து மறுபடியும் கோவிலுக்கு வருவான்.

அந்த நம்பூதிரி இளைஞன் இப்போது மாசுமறுவற்றவன், அவன் கோவில் வெளிப் பிராகாரத்தை ஒருமுறை சுற்றிவிட்டு ரிஷப மண்டபத்தில் நின்று தாணுமாலயனை வணங்குவான். மேல்சாந்தி அவனுக்கு பலவகை கறிகளுடன் கோவில் பிரசாதத்தைக் கொடுப்பார். அவன் சாப்பிட்ட பின் யோகக்காரர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வான். அங்கு இரண்டு நாட்கள் தங்கிவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்.

குற்றவாளியின் கையில் காயம் இருந்தால் அவன் பாவம் செய்தவனாகக் கருதப்படுவான். அவனது குற்றம் பதிவு செய்யப்படும் இதன்பிறகு பலவேலைக்காரன் குற்றவாளியைத் தெற்கு வாசல் வழியே அழைத்துச் சென்று கிழக்குத் தெருவில் உள்ள குலசேகர பிள்ளையார் கோவிலின் முன்னே கொண்டு விட்டு விடுவான். அது அவன் ஜாதி விலக்கு செய்யப்பட்டதற்கு அடையாளம். இதன் பிறகு பிற நம்பூதிரிகள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

கைமுக்கு தொடர்பான ஓலை ஆவணங்களைப் பரிசோதித்த கே.கே.பிள்ளை அவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்

கி.பி.1 755 புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி காயம் இல்லை

கி.பி. 1804 பங்குனி 23 வேறு குறிப்பில்லை

1812 ஐப்பசி மாதம் 12 வேறு குறிப்பில்லை

1815 ஐப்பசி 27 காயம் இல்லை

1816 ஐப்பசி 20 காயம் உண்டு

1833 பங்குனி 23 வேறு குறிப்பில்லை

ஆண்டு இல்லை. ஆனி மாதம் 20. காயமில்லை

சாதி விலக்கு செய்யப்பட்ட நம்பூதிரி சுசீந்திரம் ஊரிலுள்ள மலையாள பாதமங்கலம் பிரிவு தேவரடியாருடனும் தமிழ்த் தேவதாசிகளுடனும் கலந்து விடுவான். தான்பெற்ற உரிமையையும் சமூக மதிப்பையும் அதே பிறவியில் இழந்து விடுவதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனை. கைமுக்கு தொடர்பாக நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை கே.கே.பிள்ளை எழுதியிருக்கிறார்

கொல்லம் நகரத்தைச் சார்ந்த நம்பூதிரி இளைஞன் ஒருவன் உறவுப் பெண்ணுடன் தகாத உறவு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைமுக்கு சோதனைக்குச் சுசீந்திரம் வந்தான். அவனிடம் விசாரணை முடிந்தது. முறைப்படி சோதனைச் சடங்கு தொடங்கியதுபோது அவன் நான் குளிர்ந்த நீரில்தான் கையை விடுவேன், உண்மையிலேயே இந்தக் கோவிலில் தாணுமாலயன் சக்தி உடையவனாக இருந்தால் என் கை சுட்டுப் பொசுங்கட்டும் என்றான்.

அவனது வேண்டுகோளைக் கேட்ட யோகக்காரர்கள் யோசிக்கவில்லை. அவன் விருப்பப்படியே நடக்கட்டும் என்றனர். ரிஷபம் குளிர்ந்த நெய்யில் போடப்பட்டது; கையில் முறைப்படி கட்டுகளும் போடப்பட்டன. அவன் எளிதாக எடுத்து விட்டான். அடுத்தநாள் அவன் கை கட்டை அவிழ்த்தபோது தீக் காயத்தின் அடையாளம் இருந்தது. இந்த நிகழ்ச்சி 1810 ஆம் ஆண்டு வைகாசி எட்டாம் தேதி நடந்ததாக ஓலையில் குறிப்பு உள்ளது. இதுபோன்று இன்னொரு நிகழ்ச்சியும் உண்டு.

கொச்சி நகரத்தின் பக்கத்து கிராமத்தில் உள்ள இளைஞன், தகாத உறவின் காரணமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சுசீந்திரம் கோவிலுக்கு வந்தான்; அவனிடம் விசாரணை நடந்தது. தன் பேரில் குற்றமில்லை என்று அவன் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். யோகக்காரர்களோ சடங்குகள் முறைப்படி நடந்த பின்பு உன் புனிதம் நிரூபிக்கப்படும் என்றார்கள். சடங்குகள் முறைப்படி நடந்தன. அவன் கொதிக்கும் நெய்யில் விருப்பமில்லாமல் கையை விட்டான். மறுநாள் அவன் கையின் கட்டு அவிழ்க்கப்பட்டது. அதில் காயம் இருந்தது. கோவில் நிர்வாகம் அவனைக் குற்றவாளி எனத் தீர்மானித்தது.

அந்த இளைஞன் கண்ணிமைக்கும் நேரத்தில் கோவிலின் கைமுக்கு மண்டபத்திலிருந்து (இப்போது செண்பகராமன் மண்டபம்) ஓடி கோபுர வாசலுக்குச் சென்றான்; படிக்கட்டில் ஏறி கோபுர அழிஸ்தானத்திற்குச் சென்றான் (அப்போது கோபுரம் கட்டப்படவில்லை) அதிலிருந்து தரையிலேயே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போனான். அப்போது அசரீரி ஒலி கேட்டது; அது, பிரிங்கி முனிவரின் குரல் என்று சொல்லிக் கொண்டது. அது அவனைக் காப்பாற்றியது. அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினான்.

திருவிதாங்கூர் அரசர்களில் கருணை உள்ளவரான சுவாதித் திருநாள் காலத்தில் (1829 - 1845) நடந்த நிகழ்ச்சி கைமுக்கு வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் காரணமானது.

மத்திய கேரள இளைஞன் ஒருவனுக்கு கைமுக்கு சோதனை முடிந்தது. அடுத்த நாள் அவனது கட்டு அவிழ்க்கப்பட்டது. அதில் காயம் இருந்ததன் அடையாளம் வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. உடனே அந்த நம்பூதிரி இளைஞன், கோவில் வடக்கு வாசல்வழி வடக்குத் தெருவிற்கு வந்தான். தெப்பக்குளத்தின் மண்டபத்தின் மேலே ஏறி குளத்தில் சாடி விட்டான். அவன் நீரில் மூழ்கி இறந்து போனான். அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த நிகழ்ச்சி 1830 - 1834 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது. இதன் பிறகு வடக்கு வாசல் கதவை அடைத்து விட்டனர். நம்பூதிரி இளைஞன் சாதி விலக்கு அளிக்கும் முன்பே தற்கொலை செய்து கொண்டது பாவமாகக் கருதப்பட்டது. இதனால் இந்தக் கைமுக்கு வழக்கத்தை நிறுத்துமாறு அரசர் ஆணையிட்டார்.

ஆறு

நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் ஆரம்பித்த காலகட்டத்தில், பழம்பெரும் நடிகரான எஸ்.எம்.குமரேசன் என்பவரை சந்திக்க சுசீந்திரம் ஊருக்குச் சென்றேன், அவர் நிரந்தரமாகவே அந்த ஊரில் இருந்தார். இந்த ஊரைச் சார்ந்த பேராசிரியர் பத்மநாபன் என்பவரும் சிற்பி சக்தி கணபதி என்பவரும் என்னுடன் இருந்தனர். இவர்கள் இருவரும் சுநீந்திரம் ஊரினர். இந்திய வானொலிப் பணியாளர் ஆகியோரும் இருந்தனர். ஊர் மக்களில் வயதான சிலரும் இருந்தனர்.

இந்தப் பேட்டியின்போது கைமுக்கு பற்றி பொதுவான பேச்சு வந்தது. அப்போது முதியவர்கள் சிலர் கே.கே.பிள்ளையின் புத்தகத்தைப் படிக்காதவர்கள்; தாங்கள் செவிவழியாகக் கேட்ட சில தகவல்களைச் சொன்னார்கள். அவர்கள் ஜாதி விலக்கு ஆன நம்பூதிரி நாயர் அல்லது வேளாளர் சாதியுடன் இணைந்து விட்டார்கள். அப்படி இணைந்த குடும்பத்தினர் சிலரின் பரம்பரையினர் இப்போதும் உள்ளனர் என்றனர்.

சுசீந்திரம் கைமுக்கு நிறுத்தப்பட்டது. ஆனால் நம்பூதிரிப் பெண்களுக்காக நடந்த ஸ்மார்த்தவிசாரம் என்னும் விசாரணை 1905 வரை நடந்திருக்கிறது. இறுதியாக நடந்த விசாரணை தாத்திக் குட்டி என்ற பெண்ணிடம் நடத்தப்பட்டது. "இவளை அழகி என்று சொல்வது பொருத்தம் இல்லை. பேரழகி என்று சொன்னால் சரியாக இருக்கும்" என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இவள் சிறுவயதில் சொந்த உறவினர்களுடன் தொடர்பு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவள்/ அதனால் ஜாதி விலக்கு ஆளானவள்.

தாத்திக்குட்டியிடம் 50 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. 49 நாட்கள் அவள் பதில் பேசவில்லையாம். கடைசி நாளில் தன்னைக் கெடுத்த அறுபத்திநான்கு ஆண்களின் பெயர்களை ஆதாரத்துடன் சொன்னாளாம். அதற்கு மேல் அவளைப் பேசவிடவில்லை. அவளுக்கு ஜாதி விலக்குத் தண்டனை கிடைத்தது. அவளால் குற்றம் சாட்டப்பட்ட அறுபத்தி நான்கு பேர்களும் ஜாதி விலக்குத் தண்டனையைப் பெற்றார்கள். அவள் சொந்த ஊரில் இருந்து வெளியேற்றப்பட்டாள். பின்னர் சென்னைக்குப் போனாள். அங்கே ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாள். அவளது பேத்திகளில் ஒருத்தி ‘செம்மீன்' மலையாளப் படத்தில் நடித்த நடிகை ஷீலா என்பது ஒரு செய்தி.

முற்போக்கு எண்ணம் கொண்ட கேரளத்து விமர்சகர் ஒருவர், இந்த தாத்திக்குட்டி ஒருவகையில் பெண்களுக்காகக் குரல் கொடுத்த முதல் மலையாளிப் பெண் என்கிறார்கள். இவளால் ஸ்மார்த்த விசாரம் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. நம்பூதிரி குடும்பத்தில் எல்லோருமே ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு சூழ்நிலை உருவானதற்கும் இதுவே காரணம். சுப்பிரமணிய பாரதி ‘சக்கரவர்த்தினி' இதழில் (செப் 1906) நம்பூதிரியின் திருமணத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி குறிப்பிடுகிறார்; பாராட்டவும் செய்கிறார்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It