அமிர்தா ப்ரீதம், அறியப்பட வேண்டிய ஒரு இந்தியப் பெண். கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பெண்ணியவாதி என்ற பன்முகப் பரிமானங்களைக் கொண்டவர் இவர். சாகித்ய அகாதமி விருதும், ஞானபீட விருதும், பத்ம விருதுகளும் இவரது இலக்கிய ஆற்றலைப் பறைசாற்றுகின்றன .

amirtha pritamபிளவுபடாத /ஒருங்கிணைந்த இந்தியாவில், பஞ்சாபில் உள்ள குஜன்வாலா என்ற இடத்தில், 1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 இல் பிறந்தார். (இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் குஜன்வாலா பாகிஸ்தான் வசமானது.)

பெற்றோருக்கு ஒரே குழந்தையாக விளங்கிய அவர், 11ஆவது வயதிலேயே தம் தாயை இழந்தார். அது முதல் அவர் கடவுள் வழிபாட்டை விட்டு விலகினார். தாயின் இறப்புக்குப் பின் தந்தையுடன் லாகூர்க்குக் குடிபெயர்ந்தார். தாயை இழந்த வருத்தத்திலும், தனிமைத் துயரிலும் அவதிப்பட்ட அமிர்தா, அதிலிருந்து வெளிவர எழுத்தை நாடினார். பஞ்சாபியிலும், இந்தியிலும் எழுதும் திறம் பெற்ற அமிர்தா, இளமையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் பெற்று விளங்கினார். அவருடைய முதற் கவிதை தொகுதி 1936 இல் வெளியான போது, அவருக்கு வயது 16. 1943க்குள் ஆறு கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

அமிர்தாவிற்கு, 16ஆவது வயதில் திருமணம் நடந்தது. கணவர் ப்ரீதம் சிங் லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில் மிகச் சிறந்து விளங்கிய வணிகரின் மகன் ஆவார். அமிர்தா, தன் திருமணத்தை ஒரு விபத்தாகவே கருதினார். இருவருக்கும் ஒத்து வராத நிலையில் இரு குழந்தைகளுக்குத் தாயானார்.

அமிர்தா தம் 28 ஆவது வயதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த விபரீதங்களைத் தன் கண்ணால் கண்டவர் ஆவார். அப்பிரிவினையின் போது நடந்த தீவிரவாத செயல்களைக் கண்டு திடுக்கிட்டார். சுமார் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் – இஸ்லாமியர், சீக்கியர், இந்து என்று பல மதத்தைச் சார்ந்தவர்களும் அக்கலவரத்தில் இறந்தார்கள். அவர், அவ் அனுபவங்களை ‘ஆஜ் ஆகான் வாரிஸ் ஷர நூ’ என்று தொடங்கும் கவிதையில் பிரதிபலித்தார். நம்பிக்கையின்மையை அக்கவிதையின் ஊடாக வெளிப்படுத்தினார். அக் கவிதையின் மூலம் மிகச் சிறந்த கவிஞராக அவர் அடையாளம் காணப்பட்டார்.

பின்பு அதே தீவிரவாதத்தை மையமாக வைத்துப் ‘பின்ஜார்’ (எலும்புக்கூடு) என்ற நாவலை எழுதினார். பிரிவினையின் போது நடந்த மதக்கலவரத்தில் பெண்கள் அனுபவித்த சொல்ல முடியாத துயரங்களையும், கொடுமைகளையும் இந்நாவலில் காட்சிப்படுத்துயுள்ளார். பாலியல் வன்முறைகள், கருக்கலைப்பு, குடும்ப நிராகரிப்பு, தந்தை யார் என்று தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுத்து அதை வளர்க்க இயலாது போராடும் நிலை, கணவர் ஒரு புறம், பெற்றோர்கள் மறுபுறம் என்று பிரிந்து நின்ற பொழுது எந்நாட்டுக்குச் சென்று யாருடன் வாழ்வது என்று முடிவு எடுக்க இயலாது தவித்த தவிப்பு என்று பெண்களின் அடுக்கடுகான துயரங்களை எடுத்துரைத்துள்ளார். ஆணாதிக்கச் சமுகத்தில் பெண்கள் பாலியல் நுகர்பொருளே என்பதை எடுத்துக்காட்டி, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளார் . பின் நாட்களில் இந்நாவல் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, பல விருதுகளைப் பெற்றது.

1940களில், அமிர்தா அரசியல் மற்றும் பெண்ணிய எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டார். முதலில் பஞ்சாபி மொழியிலும், பின்பு இந்தி மொழியிலும் சிறந்த எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட அவர், அதன் பின்பு உருது மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டார்.

1950களில் பிரெஞ்சு மொழியில் சைமன் -தி- பெளவாயர் எழுதிய ‘இரண்டாம் பால்’( The second sex) என்ற நூலும்,1960களில் அமெரிக்காவில் பெட்டி ப்ரைடன் எழுதிய ’பெண்ணியல்பு புதிர் நிலை ’(Feminist Mystique) என்ற நூலும் அந்நாடுகளில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று, அமிர்தாவின் தன்வரலாற்று நூல்களும் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அமிர்தா ஒரு பெண்ணாகத் தம் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவை ஏராளம். அவற்றைத் தம் வாழ்க்கை வரலாற்று நூல்களில் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். விடுதலைத் தேடலையும், பெண் என்ற சுய அடையாளத்தை வெளிப்படுத்துவதிலும், தன் பாலியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் தீவிரம் காட்டத் தொடங்கினார்.

அமிர்தா மனதுக்குப் பிடிக்காத கணவனுடன் வாழ விரும்பாது, 1960இல், சட்டரீதியாக அவரை விட்டுப் பிரிந்தார். உருதுக் கவிஞரும், புகழ் பெற்ற இந்தி திரைப்படப் பாடலாசிரியருமான சாகிர் லுதினவி மீது அமிர்தா தீராக் காதல் கொண்டார். அக்காதல் பற்றி ‘ ரெவன்யூ ஸ்டாம்ப்’ (Revenue Stamp) என்ற தன்வரலாற்று நூலில் விரிவாக எழுதியள்ளார். அமிர்தா- சாகிர் காதல் ஒருதலைக் காதலாகும். சாகிர்க்குப் பெண்கள் சகவாசம் அதிகம். சுதா மல்கோத்ரா என்ற பெண் பாடகியின் மீது அவருக்குத் தீவிர விருப்பம் உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருந்தபோதும். அமிர்தா அவரைத் தீவிரமாக விரும்பினார். சாகிர் குடித்துப் போட்ட சிகெரட் துண்டினை எடுத்துப் புகைப்பதில் அமிர்தா இன்பம் கண்டார். அச்சிகெரட்டைத் தொடும் போது தான் அவரையே தொடுவதாக உணர்ந்தாக எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் வெள்ளைத் தாளும் பேனாவுமாகத் தான் எழுத உட்கார்ந்தால், அத்தாள் முழுவதும் அவரை அறியாமலேயே’ சாகிர்’,’சாகிர்’ என்று எழுதியதாகத் தன்வரலாற்று நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.

அவரோடு இணைந்து வாழ இயலாத நிலையில், அமிர்தாவிற்குப் புகழ் பெற்ற கலைஞர் இம்ரோஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இம்ரோஸ், அமிர்தாவின் நூல்கள் பலவற்றிற்கு அட்டைப் படங்களை வரைந்து தந்துள்ளார். இம்ரோஸ் அமிர்தாவைத் தீவிரமாகக் காதலித்தார். இப்படியான முக்கோணக் காதல் இவர்களுடையது. அமிர்தா இம்ரோஸுடன் இணைந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே 40 ஆண்டு காலம் தம் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்தார். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் ‘அமிர்தா-இம்ரோஸ் காதல் கதை’ என்ற பெயரில் பின்பு நூலாக வெளி வந்தது.

அமிர்தா, தன்வரலாற்று நூலில் தன் கணவரைப் பற்றி ஒரு வரி கூடப் பேசவில்லை. தன் திருமணத்தை எந்த அளவு வெறுத்திருக்கிறார் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. திருமணத்தை அவர் ஒரு சமூக இணைப்பாக மட்டுமே கருதிள்ளார். மேலும் அவர் தனக்கும் ப்ரீதம் சிங்கிற்கும் பிறந்த இரு குழந்தைகளைப் பற்றியும் அந்நூலில் பேசவில்லை. ஆனால் அமிர்தா இயல்பாகத் தாய்மையை வரவேற்றுள்ளார். அது அவர் கனவாகக் கூட இருந்துள்ளது. தன் குழந்தையின் முகம் காதலை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதாவது அக்குழந்தையின் முகம் சாகிரைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

மொத்தத்தில், அமிர்தாவின் வாழ்க்கை வரலாறு ஒரு திறந்த புத்தகமாக, அவரின் விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலிக்கும் ஒளிவு மறைவு அற்ற பிரதியாகக் காட்சியளிக்கிறது. அந்நூலில் அவர் ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் சமுக நிலை பற்றியும் நிறைய பேசியுள்ளார். பொருளாதாரம் ஆண்களின் வசம் இருப்பதால் அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்களாகவும், அது இல்லாததால் பெண்கள் அடிமைகளாகவும் இருக்கின்றனர் என்று கூறும் அவர், பெண்ணடிமைத்தனத்தைப் பாலினம்(Gender) சார்ந்து பார்க்க விரும்பவில்லை. மற்றொரு இடத்தில், ’ஆணும் பெண்ணும் எல்லாவிதத்திலும் சமமானவர்கள். இரு பாலினருக்குமிடையே உள்ள வேறுபாடு முகத்தில் தான் உள்ளதே ஒழிய அவர்கள் மனதில் இல்லை ‘ என்று உரைத்துள்ளார்.

அமிர்தா தன்னைக் கட்டுப்படுத்தும் எந்த தடைகளிலும் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை. அவர் வாகாவின் இருபுறமும் உள்ள பஞ்சாபியர்களுக்காக மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்காகவும் குரல் ஒலித்துள்ளார்.

- இரா.பிரேமா

Pin It