இந்தியாவின் அரசியல் சரித்திரத்திலேயே இதுவரையும் யாரும் கேட்டிராத அளவுக்கு ராஜி மலிந்து போய் ராஜி - ஓ - ஓ - ஓ ராஜி! ராஜி-ஓ - ஓ - ஓ ராஜி!! என்று வெகு கவலையுடன் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு விதத்தில் உடும்பு கையைவிட்டால் போதுமென்ற காரியத்தில் வெற்றி பெற்றதைக் குறித்து தேசியவாதிகள் பாராட்டத்தக்கவர்களே யாவார்கள்.

Periyarr 450பொதுவாகவே ராஜியின் தத்துவமானது இதுவரை வெளியாயிருக் கும் விஷயங்களைக்கொண்டு பார்த்ததில் எது போல இருக்கின்றது என்றால் தற்காலம் இந்திய ஜனங்கள் ஒரு விவகாரத்திற்கு செல்லும்போது அவர்க ளுடைய விவகாரத்திற்குக் காரணமான காரியங்களும் எண்ணங்களும் வேறு ஒன்றாக இருந்தாலும் வேறு பல அசௌகரியங்களும் பாத்தியங்களும் லட்சியமாகக் கருதப்பட்டிருந்தாலும் வியாஜ்யம் தொடர்ந்து விவகாரத்தை மும்மரமாய் நடத்தினபிறகு அது முடிவு பெறுவதற்குள் ஏற்பட்ட களைப்பும், சலிப்பும், கஷ்டமும், நஷ்டமும் மேலும் மேலும் தொடர்ந்து நடத்தப்போதிய சாதனங்களற்ற தன்மையும் ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடைசியில் எப்படியாவது வியாஜ்யம் ஒழிந்தால் போதுமென்று கருதுவதும், வியாஜ்யம் தொடர்ந்தபோது அதற்குக் காரணமாயிருந்த லக்ஷியம் எந்த கதியாவது அடையட்டும் என்று கருதி விவகார லக்ஷியத்தின் பிரதானத்தையும், அவசியத்தையும் மறந்து அல்லது மனதார அலக்ஷியமாய்க் கருதி எப்படியாவது தங்களுடைய சொந்த கௌரவத்திற்கும் வீம்பு பேசிய வீராப்புக் கும் மாத்திரம் ஏதாவது ஒரு வழியில் பாமர மக்களால் குறைவு சொல்லப் படாமல் இருப்பதற்கும் மொத்தத்தில் தோல்வி ஏற்பட்டு விட்டதாக பிறர் மதிப்பதற்கு இடமில்லாமலும் ஏதோ ஒரு வகையில் தொல்லை ஒழிந்தால் போதும் என்று எப்படி நினைத்து விடுகின்றார்களோ அதுபோலவே தான் இந்த 1930 வருஷத்திய “தேசியக் கிளர்ச்சி” விவகாரத்தின் முடிவும் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவேண்டியிருக்கின்றது. என்றாலும் எப்படியோ ஒரு வழியில் இனி மேலாவது பொது ஜனங்களுக்குத் தொல்லையில்லாமல் இருக்கும்படியாக போராட்டத்தை நிறுத்த ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டு முடிவுபெற்றதைக் குறித்து “தேசியவாதி”களையும் “தேச பக்தர்”களையும் மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றோம்.

இந்தப் போராட்டமானது இன்னும் கொஞ்சகாலமாவது நடைபெறுவதின் மூலம் யார் யார் வெற்றி பெற்றாலும், யார் யார் தோல்வியுற்றாலும் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று ஆரம்ப முதலே கருதி வந்திருக்கின்ற நாம் இப்போது இந்த ராஜியினால் ஏதாவது லாபமோ நஷ்டமோ உண்டாய் விட்டதாக சொல்லக்கூடுமென்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

ஏனெனில் இந்த நாட்டு மக்கள் பொதுவாகவும், சிறப்பாகப் பெரும் பாலோர் தனிப்பட்ட முறையிலும் அடைந்துவருகின்ற கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும், இழிவுகளுக்கும், சமத்துவமும்,மனிதத்தன்மையும் சுதந்திரமும் அடைய முடியாமல் - முற்போக்கடைய முடியாமல் தடுக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதற்கும் ஒரு சிறு பரிகாரமும், இக்கிளர்ச்சியின் காரணத்தினாலாவது, ராஜி நிபந்தனையிலாவது சிறிதும் இல்லை யென்று கருதுகின்றோம். ஆதலால் அவற்றைப்பற்றி நாம் கவலையோ, மகிழ்ச்சியோ அடையவில்லை.

பொதுவாகவே நமது நாட்டு மக்களுக்கு இரண்டு வகையான கூட்டத்தாரிடத்தில் வெகுகாலமாகவே மரியாதையும், பக்தியும் மதிப்பும் இருந்து வருகின்றது. அதாவது ஒன்று, உலக வாழ்க்கையை - சுகபோக போக்கியங்களைத் துறந்த துறவிகள், சன்யாசிகள் என்றால் அவர்களிடம் காரணா காரியமில்லாமல் மரியாதை செலுத்துவதும், பக்தி செலுத்துவதுமாகும்.

இரண்டாவது, அதிகாரமும் ஆட்சியும் செல்வமும் உடையவர் என்றால் அவர்களிடம் மதிப்பு வைத்து அவர்களை பிரமாதமாய் கருதுவது.

ஆகவே இந்த இரண்டு விதமான காரியங்களால் இன்று இந்தியர்கள் கண்ணுக்கும், மனதிற்கும் திருவாளர்கள் காந்தியும், இர்வினும் பிரமாதமாய்த் தோன்றி மக்களின் மனதைக் கவர்ந்து இருந்தார்கள் என்று சொல்ல வேண்டி யிருக்கின்றது. போதாக்குறைக்கு இரண்டு கனவான்கள் நிழலிலும் பேராலும் பயனடையக் காத்திருந்த மக்களின் ஆர்ப்பாட்டமும், விளம்பர மும் மேலும் மேலும் கவனிக்கத்தக்கவர்களாகச் செய்து அவ்விரு கனவான்களின் பெயர்களும் பெருமையாய் அடிபட்டு அவர்களது சந்திப்புகளும், சம்பாஷணைகளும் மிக மிகப் பெரிதாக மதிக்கப்பட்டு நடந்த முடிவும் அர்த்தமில்லாமல் கொண்டாடப்படவும் ஏற்பட்டு விட்டது. இது பெரும் பாலும் உண்மைச் சுதந்திரமின்னதென்பதை வெகு காலமாகவே அறிய முடியாமல் வைத்திருந்த மக்களையும் மூடபக்தியில் அழுத்தி வைத்திருந்த மக்களையும் கொண்ட நாட்டுக்கு இயற்கையேயாதலால் இதைப் பற்றி நாம் குற்றம் சொல்ல வரவில்லை.

ஆனால் இப்படிப்பட்ட பெரியோர்கள் செய்துகொண்ட ராஜியில் நாட்டுக்கு மக்களுக்கு விளைந்த பயன் என்ன என்பதே இப்போது கவனிக் கப்படத்தக்கதாகும்.

ராஜி நிபந்தனைகளின் சுருக்கமாவது:-

 1. காங்கிரஸ்காரர்கள் சட்டமறுப்பை நிறுத்திவிட வேண்டியது. சர்க்காரார் அடக்கு முறையை நிறுத்தி விட வேண்டியது.
 1. வட்டமேஜை மகாநாட்டில் நடந்த இந்திய அரசியல் திட்ட விஷயங்களைப் பற்றி மேலே தொடர்ந்து ஆலோசிப்பது. இதில் முன் பேசிய விஷயங்கள் முக்கிய விஷயங்களாக இருக்கத்தக்கது.
 1. இனியும் நடக்கப் போகும் அரசியல் திட்ட ஆலோசனைகளில் பிரிட்டிஷ் மந்திரி அறிக்கையை ஒட்டி காங்கிரஸ் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வார்கள்.
 1. இந்த சமரசம் சட்டமறுப்பு சம்பந்தமான விஷயத்தைக் கொண்டு ஏற்பட்டதாகும்.
 1. சட்ட மறுப்பு அடியோடு நிறுத்தப்பட்டு விடும்.
 1. பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரம் என்பது கூடாது. பொதுவாக அன்னிய நாட்டு துணி விஷயத்தில் சட்டம், சமாதானம், தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் ஆகியவை பாதிக்கப்படாமல் இந்தியாவின் கைத் தொழில் பொருளாதாரம் ஆகியவைகளை உத்தேசித்து பிரசாரம் செய்வதும், விளம்பரம் செய்வதும் ஆnக்ஷபிக்கப்படுவதாகாது.
 1. சுதேசி சாமான்களை உபயோகிக்கும்படியும் லாகிரி வஸ்துக் களின் உபயோகத்தை விலக்கும்படிக்கும் யாருக்காவது தீங்கு விளைவிக்கும் முறையில் செய்யுங்காரியங்களால் சட்டத்திற்கு மீறின மறியல்கள் செய்யக்கூடாது. யாராவது செய்தால் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்.
 1. போலீஸ் அக்கிரமங்களைப் பற்றி விசாரணை செய்வதில்லை.

9, 10. காங்கிரஸ்காரரால் சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டால் சர்க்காராரும் தாங்கள் பிரயோகித்த அடக்கு முறை சம்பந்தமான சட்டங்களை திருப்பி வாங்கிக் கொள்ளுவார்கள்.

 1. பர்மாவில் பிறப்புவித்த கிரிமினல் திருத்த சட்டம் வாப்பீஸ் வாங்கப்படமாட்டாது.
 1. சட்டமறுப்பு சம்மந்தமாய் இப்போது நடை பெறும் வழக்குகளில் பலாத்காரம் சம்மந்தப்பட்டவை தவிர மற்றவைகள் நிறுத்தப் பட்டுவிடும்.
 1. பட்டாள சிப்பாய்களும் போலீசாரும் சட்ட மறுப்பில் சேர்ந்து எந்தக்குற்றம் செய்திருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது.
 1. வசூல் செய்த அபராதத் துகைகளையும் பரிமுதல் செய்த ஜாமீன் துகைகளையும் திருப்பிக்கொடுக்க முடியாது. ஆனால் வசூலாகாமல் இருப்பவைகள் தள்ளப்பட்டு விடும்.
 1. தண்டப்போலீசை எடுத்து விடும் விஷயம் மாகாண கவர்ன் மெண்டுகள் இஷ்டத்தைப்பொறுத்தது. வசூலித்த தண்ட வரியையும் செலவு போக மீதி இருந்தால் தான் வாப்பீஸ் செய்யப்படும்.
 1. அடக்குமுறை சட்டப்படி பரிமுதல் செய்து ஜப்தி செய்த அசையும் பொருள்கள் ஏலமிடாமல் விற்பனை செய்யாமல் இருந்தால் மாத்திரம் அவைகள் திருப்பிக் கொடுத்து விடப்படும். வரி பாக்கிக்காக ஜப்தி செய்யப்பட்ட அசையும் பொருள்களையும் பாக்கி வரியைக் கொடுத்து விடுவதாயிருந்தால் திருப்பிக் கொடுத்துவிடப் படும். இந்த விஷயங்களைப் பற்றி எடுத்துக் கொண்ட நடவடிக்கை களின் பயனாய் சொத்துக்கள் ஏதாவது சேதமாயிருந்தால் அவைகளுக்கு சர்க்காரார் பரிகாரம் செய்து கொடுக்க மாட்டார்கள். இந்த வகை ஜங்கம சொத்துக்கள் விற்கப்பட்டிருந்தால் அல்லது யாருக்காவது கொடுக்கப்பட்டு இருந்தால் திருப்பிக் கொடுக்க முடியாது. வரித்துகை போகமீதி இருந்தால் கொடுக்கப்படும்.
 1. அவசரச் சட்டபடி பரிமுதல் செய்த சொத்துக்கள் அவசரச்சட்ட நிபந்தனைப்படி தான் திருப்பிக்கொடுக்கப்படும். வரிவசூலுக்காக ஜப்தி செய்யப்பட்ட பூமிகள் விற்கப்படாமலிருந்தால் திரும்பக் கொடுக்கப்படும். பூமிகள் மூன்றாதவருக்கு விற்கப்பட்டிருந்தால் அவ்விஷயங்களில் சர்க்காரால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தப்படி ஜப்தி செய்யப்பட்டவைகளில் சில கேசுகள் அக்கிரமமாக செய்யப்பட்டிருப்பதாக திரு. காந்தியவர்கள் தெரிவித்ததைப் பற்றி கவனித்ததில், அவர் சொல்லுவதை ஒப்புக்கொள்ளக் கூடவில்லை. ஆகையால் சர்க்காரார் அவ் விஷயமாயும் ஒன்றும் செய்ய முடியாது.
 1. சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்டது என்று யாராவது தெரிவித்துக் கொண்டால் மாகாண அதிகாரிகளால் ஜில்லா அதிகாரி கள் உடனே உண்மையை விசாரித்து அறிந்து பரிகாரம் செய்ய உத்திரவிடப் படுவார்கள்.
 1. ராஜீனாமா கொடுத்துவிட்ட உத்தியோக ஸ்தானங்கள் காயமாய் பூர்த்திசெய்யப்பட்டிருந்தால் ராஜீனாமா கொடுத்தவர் களுக்கு மறுபடி உத்தியோகம் கொடுக்கப்படமாட்டாது ராஜீனாமா கொடுத்த உத்யோகங்களில் ஏதாவது இன்னமும் பூர்த்தி செய்யப்படாதது எதுவாவதுகாலியாயிருந்தாலும் அது அவர்கள் மறுபடியும் விண்ணப்பம் செய்து தங்களுக்கு அந்த வேலை வேண்டும் என்று கேட்டுக்கொள்வதின் மீது மாகாண கவர்ன்மெண்டுகள் யோசித்து தங்கள் யுக்திப்படி நடப்பார்கள். ஆனாலும் இவ்விஷயத்தில் தாராள நோக்கம் காட்டுவார்கள்.
 1. உப்புச்சட்டத்தை யாரும் மீறக்கூடாது. உப்புச்சட்டத்தில் மாறுதல் செய்யவும் முடியாது. ஆனால் சில ஏழைகளுக்கு உதவி யளிக்க என்று ஏற்கனவே சர்க்கார் அனுமதித்துக் கொண்டுவருகிற படிக்கு ஏழைகளுக்கு தங்கள் செலவுக்கு என்று உப்பளங்களில் உப்புச் சேகரித்து தங்கள் செலவுக்குப்போக மீதிஇருந்தால் அதை அந்த கிராமத்திலேயே விற்று விடவும் ஆnக்ஷபணை இல்லை. வெளி யிடங்களில் விற்கக்கூடாது. அதுவும் சமுத்திரக்கரை ஓரம் உள்ள ஏழைகளைத்தான் அனுமதிக்கமுடியும்.
 1. இதுதான் சமாதான நிபந்தனை. இதை அறிந்து காங்கிரஸ் வாதிகள் தங்கள் கடமைகளைச் செலுத்தி விஷயங்களை அமுலுக்கு கொண்டுவரத் தவறுவார்களேயாயின் சர்க்காரார் பழையபடி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவார்கள்

( ஒப்பம் ) H.W. எமர்சன்.

இந்திய சர்க்கார் காரியதரிசி.

காரியக் கமிட்டி, மாகாணக் கமிட்டிகளுக்கு அனுப்பிய தாக்கீதின் சாராம்சம்

இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் சட்ட மறுப்பை நிறுத்தி அடியிற்கண்ட அறிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதன் சாரம்:-

சர்க்காராருக்கும் காங்கிரஸ் சார்பாக திரு. காந்தியவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ராஜி ஒப்பந்தத்தை காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொண்டு அதன் படி நடக்க மற்ற காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் தாக்கீது அனுப்புகின்றது.

காரியக்கமிட்டிக்கும் சர்க்காருக்கும் தற்காலீகமாக ராஜி ஏற்பட்டு விட்டது.

சட்டமறுப்பு இயக்கத்தையும் வரி கொடா இயக்கத்தையும், பிரிட்டிஷ் சரக்கு பஹிஷ்காரத்தையும் நிறுத்தி விடவேண்டியது. மதுபானக் கடைகளையும் அன்னிய ஜவுளிக்கடைகளையும் அவசியம் நேர்ந்தால் பஹிஷ்காரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஆனால் அதில், பலவந்தம் வற்புறுத்தல், வீணான ஆர்ப்பாட்டம் தடையான ஆடம்பரம், சட்டவிரோதம் ஆகியவைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

வீட்டு உபயோகத்திற்கு உப்பு சேகரித்துக் கொள்ளலாம் என்பதாகும்.

இதை ராஜி என்று சொல்லுவதா வேறு ஏதாவது சொல்லுவதா என்பதை வாசகர்களையே முடிவு கட்டிக்கொள்ள விட்டுவிடுகின்றோம். இந்த ஒரு வருஷகாலமாக மக்கள் அடைந்த துன்பம், அதனால் இனியும் கொஞ்ச காலத்திற்கு அனுபவிக்கத்தக்கதாய் நாட்டில் ஏற்பட்ட வியாபாரக் குறைவு, சொத்து நஷ்டம், பொதுஜன அசௌகரியம் ஆகியவைகளுக்காக சட்ட மறுப்பு இயக்கம் சிறிது நாள் எதிர்பார்த்ததற்கு மேல் வளர்ந்து வந்தது என்பதைத் தவிர ராஜி நிபந்தனைப்படி பார்த்தால் சட்ட மறுப்பு இயக்கம் பொஸ்ஸ் என்று போனது விளங்காமல் போகாது.

மேலும் சட்ட மறுப்புக்காக காங்கிரஸ் கைகொண்டு செய்த வேலை கள் எல்லாம் அரசியல் தத்துவத்தைக் கொண்டதே ஒழிய உண்மையாக அந்தந்தத் தனிப்பட்ட வேலையின் பயனை உத்தேசித்தல்ல என்று நாம் அடிக்கடி சொல்லி வந்ததும் இப்போது வெட்ட வெளிச்சமாய் விட்டது.

அதாவது இதுவரை செய்துவந்த கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும், உப்புக்காய்ச்சும், சட்ட மறுப்பும் வேறு ஒரு காரி யத்திற்காக செய்ததே யொழிய கள்ளு நிறுத்தவும், ஜவுளி நிறுத்தவும், உப்புச் சட்டம் உடைக்கவும் செய்ததல்ல என்பதை யாவரும் உணரும்படியாக ராஜி நிபந்தனைகள் வற்புறுத்திக் காட்டி விட்டன.

ஆதலால் இந்தக் கிளர்ச்சியில் கள்ளு நின்றுவிடுமென்றும், ஜவுளி நின்றுவிடும் என்றும், உப்பு தெருக்களில் விலையில்லாமல் கொட்டிக் கிடக்கு மென்றும் கருதினவர்கள் நன்றாய் ஏமாற்ற மடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும், இந்த ராஜியைப் பற்றி தேசியப் பத்திரிகை என்பவைகளில் ஒன்றான சுதேசமித்திரன் பத்திரிகையானது ராஜியைப்பற்றி எழுதுகையில், “இவ்வளவு கஷ்டப்படாமலே இந்த பலனை அடைந்திருக்க முடியாதா என்று சிலர் கேட்கலாம். இது வீண் கேள்வி. ஏனெனில் நடந்தது, நடந்து விட்டது; தேச மகா ஜனங்கள் அஹிம்சா தர்ம போராட்டத்தில் இறங்கி விடுவதன் பலன் ஒரு வருஷத்திற்குள் இவ்வளவு தெளிவாக விளங்கி இருக்காது” என்று சொல்லியிருப்பதில் இருந்தே இதன் பிரயோஜனமற்ற தன்மையும், ஏமாந்துபோன தன்மையும் நன்றாய் விளங்கும். மற்றும் அப்பத்திரிகை எழுதியிருப்பதில் சட்ட மறுப்பு ஆரம்பிக்கப்பட்டதின் “முக்கியமான லட்சியம் ராஜி நிபந்தனைகளில் குறிப்பிட்டிருக்கும் காரியங்கள் அல்ல வென்பதை மறந்து விடக்கூடாது” என்றும் எழுதிவிட்டு “எதற்காக சட்ட மறுப்பு ஆரம்பிக்கப்பட்டதோ அதுவே நமது முக்கிய லட்சியம். மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு சர்வகட்சி மகாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் இப்போது சம்மதித்து விட்டது” என்றும் எழுதி இருக்கின்றது. அந்த மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுவதிலும்,

 1. சமஷ்ட்டி அரசாங்கம் ஏற்படுத்துவது.
 1. இந்திய ஜனங்களின் பிரதிநிதிகளுக்கு ஜாவாப்தாரியாக அரசியல் நடத்த ஏற்பாடு செய்வது.
 1. இந்தியாவின் நன்மையை உத்தேசித்து சில பந்தோபஸ்துக்கள் செய்யப்பட வேண்டியது என்று கண்டிருக்கிறது.

இவை நல்லதா? கெடுதலா? என்பது ஒருபுறமிருந்தாலும், இந்த மூன்று கொள்கைகளையேதான் வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதிகளும் முக்கியமாய் வைத்து தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆதலால் இது புதிய லக்ஷியம் என்றோ இனிச் செய்ய வேண்டிய வேலை என்றோ சொல்லி விடுவதற்கில்லை. இதன் யோக்கியதையை பார்க்கும் போது ஒரு சிறுகதை ஞாபகத்திற்கு வருகின்றது.

அதாவது ஒரு மாமியார் தான் வீட்டில் இல்லாத போது வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டதில் வீட்டிலிருந்த மருமகள் பிச்சை இல்லையென்று சொல்லி பிச்சைக்காரனை அனுப்பிவிட்டாள். அது சமயம் மாமியார் எங்கோ வெளியில் சென்று வந்து கொண்டிருந்தவள் பிச்சைக் காரனை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க அவன் உங்கள் வீட்டு மருமகள் பிச்சை இல்லை என்று சொல்லிவிட்டாள் என்று சொன்னான். அதற்கு அந்த மாமியார் “அவள் கிடக்கின்றாள் அதிகப் பிரசங்கி” என்று சொல்லி பிச்சைக்காரனை அழைத்துப் போய் தான் வீட்டு வாயிலில் நின்று கொண்டு பிச்சைக்காரனை பிச்சை கேட்கும்படி சொன்னாள். பிச்சைக் காரனும் மாமியார் சொன்னபடி வெகு ஆவலாக புதிதாய் “அம்மா பிச்சை போடுங்கள்” என்று கேட்டான். மாமியார் எஜமானி போல் நின்று கொண்டு இருந்தவள் வெகு கம்பீரமாக “பிச்சை இல்லை போ” என்று சொன்னாள். உடனே பிச்சைக்காரன் “இந்தச் சங்கதி உங்கள் மருமகளே சொல்லி விட்டார்களே. இதற்கு நீங்கள் ஏன் என்னைக் கூப்பிட்டு இந்த மாதிரி சொல்ல வேண்டும்” என்று கேட்டான். அதற்கு மாமியார் கோபித்து “பிச்சை உண்டு இல்லை என்று சொல்லும் உரிமை எனக்குத்தான் உண்டே யொழிய என் மருமகளுக்கு இல்லை. ஆதலால் தான் உன்னை கூட்டி வந்து என் உரிமையை நிலை நிறுத்திக் கொண்டேன்” என்று சொன்னாளாம். அதுபோல வட்ட மேஜை மகாநாட்டில் முடிவான விஷயங்களையே மறுபடியும் காங்கிரஸ் காரர்கள் போய் உட்கார்ந்து அந்த மூன்று விஷயங்களையும் பற்றி பேசி முடிவு செய்யவேண்டும் என்று சொல்வதின் கருத்து இருக்கின்றது.

எனவே சுதேசமித்திரன் எழுதியிருக்கின்றபடி சட்டமறுப்பு இயக்கத் தின் இலக்ஷியம் இதுவாகவே இருந்திருக்குமானால் சட்ட மறுப்புக்கு வெற்றி என்பதில் ஆnக்ஷபணையில்லை. ஆனால் எலியைப் பிடிப்பதற்கு மலையை வெட்டித் தோண்டியிருக்க வேண்டியதில்லை. மற்ற விஷயங்களைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 08.03.1931)

Pin It