பண்டைத் தமிழர்கள், புதிய கற்காலத்தில் வேட்டையாடுவதற்குக் கற்கருவிகளையே பயன்படுத்தினர். இக்காலத்தில் ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகத் தங்கி வாழவும், பயிர் செய்யவும் கற்றுக் கொண்டனர். நீரைக் குடிப்பதற்கும், பொருட்களைச் சமைப்பதற்கும் மட்பாண்டங்களைச் செய்யத் தொடங்கினர். போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாள, சக்கரத்தைக் கண்டுபிடித்தது இந்தக் காலத்தில்தான். குறிப்பாக, வாழ்க்கைப் பயன்பாட்டிற்காக மட்பாண்டங்கள் செய்யவும் சக்கரத்தைப் பயன்படுத்தினர்.

நாகரீகம் வளர்ந்தபிறகு, வரலாற்றுக் காலத்தில் கருப்பு நிறப் பானைகள், சிவப்புப் பானைகள், கருப்பும் சிவப்பும் கலந்த பானைகளை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உருவாக்கினார்கள். மட்பாண்ட ஓடுகளைத் தரையில் இட்டால், உலோக ஓசை வரும் தொழில்நுட்பத்தில் மட்பாண்டங்களைத் தயார் செய்தார்கள். பொருட்களைச் சேமிக்கவும், உணவைச் சமைக்கவும், நீரினைப் பயன்படுத்தவும் தமிழர் வாழ்வில் மண்பாணடங்கள் சிறந்த பொருட்களாகக் கருதப்பட்டன.

மக்கள் பேசவும், தகவல் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்திய குறியீடுகளை மட்பாண்டங்களில் பொறித்தனர். மட்பாண்டங்கள் இன்னார், இன்னாருடையது என்பதை அறிந்து கொள்ள, தங்கள் பெயர்களை மட்பாண்டங்களில் பொறித்து வைத்தார்கள். பொருட்களின் மீது குறியீடு மற்றும் பெயர்களைப் பொறிக்கும் வழக்கம் வரலாற்றுக் காலம் தொடங்கி இன்றைய காலம் வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் இதுபோன்ற குறியீடுகள் குகைகளில் வரையப்பட்ட ஓவியங்களிலும், மட்பாண்டங்களிலும் காணப்படுகின்றன. மட்பாண்டங்களில் விளிம்புகளுக்குக் கீழே தோள்பட்டைகளில் குறியீடுகள் காணப்படுகின்றன. சில மட்கலன்களில் நடுப்பகுதியில் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, மட்கலன்களில் சுடுவதற்குமுன் போடப்படும் குறியீடுகள்; மற்றொன்று, மட்கலன்களில் சுட்டப் பின்பு போடப்படும் குறியீடுகள் ஆகும். சுட்டபின் போடப்பட்ட குறியீடுகள் தமிழகத்தில் அதிகம் கிடைக்கின்றன.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல், அழகன்குளம், பொருந்தல், மாங்குடி, கீழடி ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் மண்ணடுக்குகளில் முதலில் பண்டைத் தமிழ் எழுத்து (தமிழ் பிராமி) பொறித்த பானையோடுகளும், அதன்பின் ஆழமான பகுதியில் குறியீடுகள் பொறித்த பானையோடுகளும் கிடைத்தன. இக்குறியீடுகள் சிந்துவெளி எழுத்தை ஒத்தவையாக உள்ளன. தமிழகத்தில் நடந்த 169 அகழ்வாராய்ச்சிகளில் கொடுமணலில் மட்டுமே அதிகமான பண்டையெழுத்து (தமிழ் பிராமி) பொறித்த ஓடுகளும், குறியீடுகள் பொறித்த ஓடுகளும் கிடைக்கின்றன.

கொடுமணலில் அகழ்வாராய்ச்சி நடத்திய பேராசிரியர் முனைவர் கா. இராசன் அவர்கள், குறியீடுகளிலிருந்து பண்டைத் தமிழ் எழுத்து (தமிழ் பிராமி) தோன்றியது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

sindhu scriptsஇலங்கையில் அனைக்கோட்டை என்னுமிடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு முத்திரை ஒன்று கிடைத்தது. அந்த முத்திரையில் சிந்துவெளி எழுத்துகள் மூன்றும், அதற்குக் கீழே தமிழ் பிராமி எழுத்துகள் மூன்றும் பொறித்துக் காணப்பட்டன. இம்முத்திரையில் உள்ள எழுத்துகள் இரு வரிவடிவம் (Bi-lingual) கொண்டது எனப் பேராசிரியர் இந்திரபாலா கருதுகிறார்.

கீழ்வாளை என்னுமிடத்தில் மலைப்பகுதியில் கிடைத்த பாறை ஓவியத்தில் சிந்துவெளி எழுத்துகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக் குகைகளில் காணப்படும் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த குறியீடுகள் காணப்படுகின்றன. செம்பியன்கண்டியூரில் கிடைத்த புதிய கற்காலக் கருவியில் சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் காணப்படுகின்றன.

கொடுமணல், அழகன்குளம், சானூர், மாங்குடி ஆகிய இடங்களில் கிடைக்கும் பானையோடுகளில் உள்ள குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளை ஒத்திருப்பதால், இங்குள்ள குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளே என்பது திண்ணம். ஆகவே, சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் எழுத்துகளைப் பயன்படுத்திய அதே காலகட்டத்தில் தமிழகத்திலும், பண்டைத் தமிழர்கள் மட்பாண்டங்களிலும் குறியீடுகள் பொறித்துள்ளனர். பண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளையும், சிந்துவெளி எழுத்துகளையும் இங்கு ஒப்பீடு செய்யலாம்.

ஊர்   மட்பாண்டக் குறியீடு  சிந்துவெளி எழுத்துகள்
 கொடுமணல்  kodumanal tamil letter 1  indus script 1
 கொடுமணல்  kodumanal tamil letter 2  indus script 2
 கொடுமணல்  kodumanal tamil letter 3  indus script 3
 கீழடி  keezhadi script  indus script 4
 கோட்டமங்கலம்  kottamangalam script  indus script 5
 அழகன்குளம்  azhakankulam script 1  indus script 6
 அழகன்குளம்  azhakankulam script 2  indus script 7
 திருநறுங்கொன்றை  thirunarunkonrai script  indus script 8
 கோட்டமங்கலம்  kottamangalam script 2  indus script 9
 பரிக்கல்நத்தம்  parikkalnatham script  indus script 10
 ஆதிச்சநல்லூர்  athichanallur script 1  indus script 11
 ஆதிச்சநல்லூர்  athichanallur script 2  indus script 12

மேற்கண்ட ஒப்பீட்டு ஆய்வால், பண்டைத் தமிழரின் மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட குறியீடுகள் சிந்துவெளி எழுத்துகளே என்பதை உறுதி செய்ய முடிகிறது. இச்சிந்துவெளி எழுத்துகள் வளர்ச்சியடைந்து, பண்டைத் தமிழ் எழுத்து (தமிழ்பிராமி)களாக உருப் பெற்றன என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

நன்றி : பேரா.க. இராசன்

- முனைவர் ப.வெங்கடேசன், வாலாசாப்பேட்டை

(சிந்தனையாளன் பொங்கல் மலர் 2019-ல் வெளியான கட்டுரை)

Pin It