விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஒமாந்தூர் கிராமத்தில் 01.02.1895 அன்று முத்து இராமசாமி ரெட்டியர்- அரங்கிநாயகி அம்மாள் வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார் ஓமாந்தூர் இராமசாமி!.
ஓமாந்தூர் தொடக்கப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் கல்வி பயின்றார். பின்பு திண்டிவனம் ஆற்காடு மிஷனைச் சேர்ந்த வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். அவரது தந்தையார் திடீரென்று மறைந்து விட்டார். அதனால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியிருந்ததால் கல்வி தடைப்பட்டது. தந்தையார் செய்து வந்த விவசாயத்தில் ஈடுபட்டார்.
கிளியனூர் சின்னச்சாமி ரெட்டியார் மூலம் மீண்டும் கல்வி பயில சென்னை சென்று, திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர் நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஓராண்டு கல்வி முடித்தவுடன் குடும்பத்தையும், விவசாயத்தையும் பார்த்திட வேண்டுமெனக்கூறி அவரது தாயார் அவரை தமது கிராமத்துக்கு அழைத்து வந்துவிட்டார்.
ஓமாந்தூராருக்கு 1910 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் சிங்காரத்தமாள். அவர்களுக்கு 1916ஆம் ஆண்டு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சுந்தரம் என்று பெயர் சூட்டினார். 1920 ஆம் ஆண்டு அவரது மனைவி சிங்காரத்தமாள் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
மனைவி இறந்த பின், அவர் தமது தென்னந்தோப்பில் ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு அங்கேயே வசித்து வந்தார்.
தனது மகன் சுந்தரத்தை திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் வ.வே.சு ஐயர் நடத்திய குருகுலத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார். அந்தக் குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், மற்ற சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு வழங்கப்பட்டது. இந்த சமூகக் கொடுமைக்கு எதிராகத் தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார் என்பது வரலாறு.
இதை அறிந்த ஓமாந்தூரார் இனி அந்த குருகுலத்தில் தமது மகன் படிக்கக் கூடாது என முடிவு செய்து, உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். பின்னர் பெங்க@ருக்கு அருகில் உள்ள கெங்கேரி என்னும் கிராமத்தில் பிரம்மச்சாரி ராமச்சந்திரன் என்பவர் நடத்திய குருகுலத்தில் தமது மகன் சுந்திரத்தைச் சேர்த்தார். அவரது மகன் பள்ளி மூலம் நந்திமலைக்கு சுற்றுலாச் சென்றபோது காய்ச்சல் கண்டு இறந்துவிட்டான். அவனது மறைவிற்குக் கூட ஓமாந்தூரார் சென்று கலந்து கொள்ள இயலாத சூழல். மகனின் அஸ்தியை மட்டும் தமது கிராமத்திற்கு கொண்டு வந்தார். அவரது மகன் சுந்திரத்தின் மறைவு அவருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஆங்கிலேய அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து வெளியேற்றியே தீருவது என்று விடுதலைப் போராட்ட வீரர்கள் தீவிரமாகப் போராடிய காலம் அது. விடுதலைப் போராட்;டத் தலைவர்களின் உரைகளும், எழுத்துகளும் ஓமாந்தூராரின் உள்ளத்தில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
ஓமாந்தூரார் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் 1919 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. அதன் ஒரு பகுதியாக அன்றைய சென்னை ராஜதானியின் சட்டமன்ற மேலவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியர்களுக்குச் சாதகமற்ற அந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் பணியில் களமிறங்கி தீவிரமாகச் செயற்பட்டார் ஓமாந்தூரார்.
ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டங்கள் இந்தியர்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை எடுத்துரைத்தார்.
திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளை இந்திய விடுதலை இயக்கத்தின் இரும்புக் கோட்டைகளாக மாற்றினார். கிராமங்களில் தமுக்குப் போட்டு காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். கதர்த்துணி மூட்டைகளைச் சுமந்தவாறு ஊர் ஊராகச் சென்று கதர் விற்பனை செய்து வந்தார். மது ஒழிப்புக்காக கள்ளுக்கடை, சாராயக்கடைகள் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தினார்.
ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பில் விளைவிக்கப்பட்ட கிராம்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்தனர். அதை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டினர். 1920 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து, அன்னியப் பொருள்களை புறக்கணிக்கும்படி அறைகூவல் விடுத்தார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கிராம்பு ஏற்றி வந்த கப்பல்கள் சென்னை, மும்பை முதலியத் துறைமுகங்களில் வரிசையாக கடலில் மிதந்து கொண்டிருந்தன. மும்பைக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ‘நிறவெறி கொண்ட ஆங்கிலேயர்களின் கிராம்புக் கப்பல்கள் திரும்ப போகட்டும்’ என்று கண்டன முழக்கமிட்டனர். மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த கப்பல்களிலிருந்தும் தொழிலாளர்கள் கிராம்பு மூட்டைகளை இறக்காமல் விரட்டியடித்தனர்.
பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இருந்த புதுவை துறைமுகத்தில் கிராம்பு மூட்டைகளை இறக்கிட திட்டமிட்டு ஆங்கிலேயர்களின் கப்பல்கள் சென்னையிலிருந்து புதுவையை நோக்கி விரைந்தன.
புதுவைத் துறைமுகத்தில், “இறக்காதே! இறக்காதே!! கிராதகர்களின் கிராம்பு மூட்டைகளை ஏற்க மாட்டோம்!!!” என்று மிகுந்த துணிச்சலோடு இருபத்து ஐந்து வயது இளைஞன் முழங்கினான். அவர் தான் ஓமாந்தூரர் இராமசாமி!.
ஓமாந்தூரார், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு பாதயாத்திரையாகச் சென்று மது ஒழிப்பு பிரச்சாரத்திலும், அன்னிய பொருள்கள் புறக்கணிப்பிலும், கதர் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டார்.
மகாத்மா காந்தியின் கிராமப் புனருத்தாரணத் திட்டத்தின்படி சொர்ணாவூரில் ஓமாந்தூரார் ஒரு மாநாடு நடத்திட ஏற்பாடு செய்தார். அம்மாநாட்டை தடை செய்து நடத்தவிடாமல் காவல்துறை பல்வேறு இடையூறுகளைச் செய்தது தேசியக் கொடி கட்ட கொடி மரம் நடக்கூடாது எனத் தடை விதித்தது காவல்துறை. தடையை மீறிக் கொடிமரம் நட்டவர்களை காவல்துறை கைது செய்தது. அப்போது மாநாட்டுக்கு வந்த ஓமாந்தூரார் கோபம் கொண்டு, கொடி கட்ட மரம் நடத்தானே தடை விதித்திருக்கிறார்கள். ஏற்கனவெ உள்ள மரத்தில் கொடி கட்ட எந்தத் தடையும் இல்லையே! ஊரைச் சுற்றி உள்ள பனை மரங்களின் உச்சிகளில் தேசியக் கொடிகளைக் கட்டுங்கள் என்று அறிவித்தார்!!
அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பனைமரத்தில் ஏறி உச்சியில் மூவர்ணக் கொடியைக் கட்டி பறக்க விட்டனர். அந்த மாநாட்டில் ப.ஜீவானந்தம், கு.காமராஜர், எஸ்.என். சோமயாஜூலு, வை.மு.கோதை நாயகியம்மாள், ஜனகசங்கர கண்ணப்பன் முதலிய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்கள்.
“ஏழைகளின் முக்கிய உணவுப் பொருள் உப்பு. யார் வேண்டுமானாலும் கடலில் உப்புக் காய்ச்சிக் கொள்ளலாம். அதைத் தடுக்கும் சட்டங்களை மீறுவோம்!” என்று முழக்கமிட்டார் காந்தியடிகள்.
வேதாரண்யத்திற்கு 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டது. வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சும் போராட்டம் ஒரு ஆண்டு நீடித்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இயக்கத்தில் பங்கு பெற்ற ஓமாந்தூரார் முதல் முறையாகச் சிறை சென்றார். வேதாரண்யம் உப்பு காய்ச்சும் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் தொண்டர்களை அழைத்துச் செல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, ஆறுமாதம் சிறைத் தண்;டனை அவருக்கு வழங்கப்பட்டது,
பின்னர், 05.03.1931 ஆம் நாள் உப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. உப்பு விதிகள் தளர்த்தப்பட்டது. இந்தப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக ஆறுமாத காலம் சிறையிலடைக்கப்பட்டார்.
“பேசுவதும், கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதும் மக்களின் பிறப்புரிமை” என்னும் முழக்கத்தை முன்வைத்து காந்தியடிகள் 1940 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஓமாந்தூரார், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் 38 ஆவது பிரிவின் 5 ஆவது உட்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 08.08.1942 ஆம் நாள் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தியடிகள் அறிவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஓமாந்தூராரால் தென்ஆற்காடு மாவட்டத்தில் தீவிரமடையும் என அச்சம் அடைந்த ஆங்கிலேய அரசு, தடுப்புச் காவல் சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்து 15 மாதங்கள் கடலூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களின் சிறைகளில் அடைத்தது.
ஓமாந்தூரார் 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஓமாந்தூரார் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் முதல் வேலையாக பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் என்ற அரசியல் ஆரவாரங்களுக்கு தடை விதித்தார்.
'மக்களுடைய நன்மைக்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய மனிதர்களுக்கும், நமக்கு வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டுவதற்கு அல்ல”என்னும் கருத்தை அமைச்சர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வலியுறுத்தினார்.
;இந்து’நாளிதழ் ஓமாந்தூராரை சாதி உணர்வுடன் செயல்படுகிறார் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரையைப் படித்த ஓமாந்தூரார் இந்து நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனை உடனடியாகத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார். 'உங்கள் பத்திரிக்கையில் மொத்தம் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? அதில் பிராமணர்கள் எத்தனை பேர்? மற்ற சாதியினர் எத்தனை பேர்?” என நேருக்கு நேர் கேட்டார். அக்கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனார் கஸ்தூரி சீனிவாசன்.
“ஒரு பத்திரிக்கை ஆசிரியரான நீங்கள், அப்பட்டமாக ஒரு சாதி சார்ந்து இயங்கும் போது, அநியாயமாக என்னை எப்படிச் சாதி ரீதியானவன் என எழுதலாம்?” என மீண்டும் ஓமாந்தூரார் கேள்வி கேட்டார்.
“ஒவ்வொருவரும் தங்கள் திறமையால் முறைப்படி, யாருடைய தயவும் இன்றியே முன்னேற வேண்டும். உண்மையும், நேர்மையும் நெருப்பைப் போல் தான். நொருப்பின் குணம் சுடத்தானே செய்யும், தனிமனித ஒழுக்கமும் உயர்வுமே ஒரு மாநிலத்தின் மாண்பை உயர்த்தும். எல்லா மாநிலமும் செம்மையானால் தான் நம் நாடு இழந்த பெருமிதங்களைத் திரும்பப் பெற முடியும்!” என்பது ஓமாந்தூராரின் உயர்ந்த சீரிய சிந்தனையாகும்.
ஓமாந்தூராருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமுலில் இருந்தது. ஓமாந்தூரார் முதலமைச்சரானதும் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமுல் படுத்தினார். இதனால் சென்னை மாநிலம் முழுவதும் ஒரே நாளில் கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.
காந்தியடிகள் 1934 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவில் நுழைவுப் போராட்டத்துக்குச் சென்ற போது, உள்ளே இருந்தவர்கள் வெளியே வருமுன் கதவுகளைப் பிராமணர்கள் பூட்டினர். அதை கண்டித்து, பிராமணர்களின் கொட்டத்தை ஒடுக்கினார் ஓமாந்தூரார். ஓமாந்தூரார் தலைமையில் இராமமேஸ்வரம் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. முதல்வரானதும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் தாழ்த்தப்பட்டாரை அனுமதிக்காதவரை குடமுழக்கு விழாவில் கலந்து கொள்ள முடியாது என அறிவித்தார் ஓமாந்தூரார்!.
ஒரு விவசாயியாகச் சட்டமன்றத்துக்குள் சென்று, முதலமைச்சராகத் திறம்பட ஆட்சி செய்து, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி மீண்டும் ஒரு சாதாரண விவசாயியாகவே வாழ்ந்தார் எனத் தமிழக வரலாறு ஓமாந்தூராரை பதிவு செய்துள்ளது.
விவசாயத் தொழிலில் காலந்தோறும் ஏற்பட்ட பிரச்சனைகளை தமது அனுபவம் மூலம் அலசி ஆராய்ந்தவர் அவரைப் போல் வேறு யாருமில்லை என்பதால் தான் ‘விவசாய முதலமைச்சர்’ என்றே அழைக்கப்பட்டார்.
தில்லியில் 1948 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் வேளாண்மைத் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தவர் ஓமாந்தூரார்.
கால்நடை மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, ஊராட்சித்துறை ஆகிய மூன்றையும் கிராம மட்டத்தில் ஒருங்கிணைத்தது அவர் செய்த சாதனைகளில் முக்கியமானது ஆகும்.
கிணறு வெட்ட மானியம், ஊற்று நீர்ப்பாசனம், நெல்லுக்குத் தரவாரியாக விலை நிர்ணயம், ஆற்றுப்பாசனம் இல்லாத பகுதிகளில் புன்செய் பயிர் உற்பத்தியைப் பெருக்க ஊக்குவித்தார்.
சாலையோரங்களில் புளியமரம், இலுப்பை மரம், அரச மரம்;, ஆலமரம் முதலிய மரங்களை நடச் செய்து ஊராட்சிக்கு நிதி வருவாயும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஏற்படச் செய்தார்.
பழைய ஏரி குளங்களைச் செப்பனிடுதல், புதிய ஏரி மற்றும் குளங்களை வெட்டுதல் முதலியப் பணிகளை தீவிரமாகச் செயற்படுத்தினார். மேலும், கீழு;பவானி அணைக்கட்டு. வீடூர் அணைக்கட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தவர் ஓமாந்தூரார்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை என தனித் துறையை ஏற்படுத்தினார். அரசு நிலங்களை பொது மக்களுக்கு வழங்கும் போது, ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமையும், முதலுரிமையும் வழங்கியவர் ஓமாந்தூரார்.
சென்னை கோட்டையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 15ஆம் நாள் முதல் சுதந்திரக் கோடியை ஏற்றியவர் ஓமாந்தூரார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் பதவி வகித்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட, அரசு பொது மருத்துவமணை மருத்துவர் ரத்தினவேலு சுப்பிரமணியம் அழைக்கப்பட்டார். மருத்துவர் உடலை பரிசோதிக்க ஆரம்பிக்க, தடுத்தார் முதல்வர். “இந்த ஒப்பந்தத்தில் முதலில் கையொப்பமிடுங்கள்” என்றார். மருத்துவர் அந்த ஒப்பந்தத்தைப் பார்த்து நிபந்தனைகளைப் படித்தார். அதில், எனக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ, உங்கள் உறவினர்களோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு வரக் கூடாது. பதவி உயர்வு போன்ற சலுகையை எதிர்பார்க்கக் கூடாது. என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசக் கூடாது” என்கிற மூன்று நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன. மருத்துவர்; சம்மதம் தந்த பிறகே சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார் முதல்வர் ஓமாந்தூரார்.
ஓமாந்தூரார் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியிலிருந்த போது, ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டமும், ஆலயப் பிரவேசச் சட்டமும் நிறைவேற்றப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டன. மேலும், இந்து சமய அறநிலையச் சட்டத்தையும் இயற்றினார். தேவதாசிப் பெண்களின் விடுதலைக்காக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டு வருவதற்கு முதல் நடவடிக்கையை மேற்கொண்டவர் ஓமாந்தூரார். தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியாக அமலுக்கு கொண்டு வந்தார். தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைத்தார். தமிழ் கலைக்களஞ்சியம் பத்துக் தொகுதிகள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் வெளிவந்தன. இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழ் மொழியில் தான் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
பள்ளிகளில் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கியவர் ஓமாந்தூரார். தமிழ்க் கவிதைகளையும், தமிழ்க் கவிஞர்களையும் பெருமை செய்யும் வண்ணம் சட்டமன்றத்தில் அரசவைக கவிஞர் என்ற பதவியை ஏற்படுத்தி ‘காந்தியக் கவிஞர்’ நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையை முதல் அரசவைக் கவிஞராக நியமித்தார்.
ஓமாந்தூரார் தமது ஆட்சியில், தமிழ் நாட்டுக் கோவில்களில் இறைவன் திருப்பெயர்கள் தமிழ்ப் பெயராக மாற்றப்பட வேண்டும். இறைவனின் பெயர் கோயில்களின் முன்வாசல்களில் தமிழில் பெரிய எழுத்துக்களில் எழுதி வைக்ககப்பட வேண்டும். ஆலயக் கோபுர முகப்பிலும், அறிவிப்பு பலகைகளிலும், திருவிழா விளம்பரங்களிலும் தமிழே இடம் பெற வேண்டும் என்று அறிவித்தார்.
ஓமாந்தூரார் தமது ஆட்சியில் மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடமையாக்கிட ஆணை பிறப்பித்தார். ஓமாந்தூரார் முதலமைச்சராக பதவியிலிருந்த போது ஸ்ரீவில்லபுத்தூர் கோயிலின் கோபுரம் தமிழக அரசு முத்திரையாக்கப்பட்டது. கோபுரம் என்பது சமயச் சின்னம் மட்டும் அன்று. அது தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். உலகம் போற்றும் திராவிடக் கட்டிடக் கலையின் அடையாளம் என்று கூறினார்.
கோபுரச் சின்னத்தின் கீழே ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற வாக்கியத்தை ஓமாந்தூரார் பொறிக்கச் செய்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக பதவி வகித்த பேரறிஞர் அண்ணா அதனை ‘வாய்மையே வெல்லும்’ எனத் தமிழில் மொழி மாற்றம் செய்தார்.
நேர்மையும், தூய்மையும் நிறைந்த அவரது ஆட்சியின் செயல்பாடுகள், காங்கிரஸ் கட்சியினருக்கு தனிப்பட்ட பலனை அளிக்கவில்லை. கட்சியைப் பலப்படுத்துவதற்கும், கட்சிக்காரர்கள் செல்வாக்குப் பெறுவதற்கும் வாய்ப்பில்லை எனக் கருதிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒமாந்தூராரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிட முடிவு செய்தனர். அதை அறிந்த ஓமாந்தூரார் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து தாமாகவே விலகினார்.
ஓமாந்தூரார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும், வடலூரில் வந்து தங்கினார். அங்கு குருகுலம் அமைத்து வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி, அப்பர் அநாதை ஏழை மாணவர் இல்லம், இராமலிங்கர் தொண்டர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
ஓமாந்தூரார் 25.08.1970 ஆம் நாள் மறைந்தார். ஓமாந்தூராருக்கு தமிழக அரசு ஓமாந்தூரில் மணி மண்டபம் அமைத்;துள்ளது. நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்காக, செல்வாக்கிற்காக, பட்டத்திற்காக, கைத்தட்டலுக்காக, புகழுக்காக எதையும் செய்யும் நாட்டில் ஓமாந்தூரார் ஒரு தனிப்பிறவியாகத் திகழ்ந்தார்.
'ஒமாந்தூரார் கள்ளங்கபடமற்ற கிராம வாசி. அரசியல் சூதாட்டத்திற்கு அப்பாற்பட்டவர். துறவு மனப்போக்கினர். உள்ளொன்று வெளியொன்று கொண்டுழலும் உலுத்தர் போலன்றி, ஊருக்குழைப்பேன், அதனால் வந்துறும் இன்னலைப் பொறுப்பேன் என்ற உறுதி படைத்த உள்ளத்தினர். எளிய வாழ்க்கையும் சீரிய குணங்களையும் கொண்டவர். இவரே நம் முதலமைச்சர் என்று சொன்னாலொழிய யாராலும் அவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்திருப்பவர் என்று கண்டதும் உணரக் கூடிய விதமான உருவமோ, உடையோ, நடையோ கொண்டவரல்லர். தன்னடக்கமுள்ள தமிழர்!” என்று பேரறிஞர் அண்ணா ஓமாந்தூராரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
- பி.தயாளன்