"என்னுடைய வாழ்க்கையின் கடைசி மூச்சு உள்ளவரை நான் ஓய்வு பெற முடியாது - ஓய்வு பெற விரும்பாத ஒருதுறை உள்ளது. அதுதான் எழுத்துத்துறை. அது என்னுடைய உயிருடன் கலந்து விட்ட ஒன்று. என் உடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக் கொண்டே இருப்பேன். எழுத முடியாத ஒரு நிலை வந்தால், மற்றவர்களை எழுதச் சொல்லி நான் கூறிக் கொண்டே இருப்பேன்" என்று அறிவித்து, தன் விருப்பத்தை அறிவித்தார் ஒரு தமிழ்ப் பேராசிரியர்! ஆம். சமுதாயச் சீர்திருத்தவாதியாய், மிகச் சிறந்த தமிழ் இலக்கியவாதியாய், மொழிநூல் ஆய்வாளராய், பல்கலைக் கழகத் துணை வேந்தராய் - பல துறைகளில் சிறந்து விளங்கினார்! அவரே டாக்டர் மு.வ.! கடைசி வரை தாம் ஒரு எழுத்தாளராகவே வாழ விரும்பினார் அம்மேதை.

 வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகில் 'வேலம்' என்னும் சிற்றூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதியருக்கு 25.04.1912ல் மு.வ. பிறந்தார்.

 மு.வ. தொடக்கக் கல்வியை வேலம், வாலாசாபேட்டை பள்ளிகளில் பெற்றார். உயர்நிலைக் கல்வியை திருப்பத்தூரில் கற்றார். கணக்கிலும், இலக்கணத்திலும் பள்ளி இறுதித் தேர்வில் 98 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவராய் விளங்கினார்.

 திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு அந்நாளில் வெளிவந்த 'நவசக்தி' வார இதழை மு.வ. தொடர்ந்து படித்தார். அதன் நடை மு.வ.வைப் பெரிதும் ஈர்த்தது. தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் சான்றோர்களிடத்திலும் மேலும், மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

 பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி அடைந்த மு.வ. வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். மிகுந்த பணிச் சுமையிலும், ஆஸ்துமா நோயினாலும் வேலையை விட்டு விலகினார். தமது கிராமத்திற்குச் சென்று சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது முருகைய்ய முதலியார் மு.வ.வை, 'தமிழ் வித்துவான் ' வகுப்பில் சேர்ந்து படிக்கும்படித் தூண்டினார்.

 வருமானவரித்துறை அலுவலகத்தில் எழுத்தராகவும் சில காலம் பணியாற்றினார். அங்கு கையூட்டு (இலஞ்சம்) மிகுந்திருந்ததைக் கண்டார். இவரோ நேர்மையான மனம் கொண்டவர். தவறான வழியில் வரும் வருமானத்தை விரும்பாத நல்ல எழுத்தர்! விளைவு? வேலையை விட்டார்.

 திருப்பனத்தாள் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தார். தமிழ் வித்துவான் படிப்பில் 1935ல் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அவரைப் பாராட்டி கல்லூரி நிர்வாகம் ரூ. 1000 பரிசளித்தது. அதே ஆண்டிலேயே தம் மாமன் மகள் இராதா அம்மையாரை மணந்து கொண்டார்.

 பின்னர் திருப்பத்தூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுபவராக விளங்கினார். அப்பள்ளியில் மாணவர் தமிழ்ச் சங்கம் அமைத்து மாணவர்கள் மனதில் தாய்மொழிப் பற்றை ஊட்டினார்.

 சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறையில் சேர்ந்து 1939ஆம் ஆண்டு தமிழாசிரியரானார். பச்சையப்பன் கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும், மாணவர்களும் மு.வ.வின் தமிழ் உணர்வுகளுக்கு ஆதரவாக விளங்கினர். அந்தச் சூழலில், பலருக்கும் பயன்படும் மறுமலர்ச்சி இலக்கிய வடிவம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

 பச்சையப்பன் கல்லூரியில் 'பி..ஓ.எல்' பட்டத்தோடு விரிவுரையாளராகச் சேர்ந்தவர், தன் முயற்சியால் எம்.ஓ.எல். பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். நாடு போற்றும் நல்ல தமிழ் அறிஞராகவும், மக்கள் பாராட்டும் மகத்தான தமிழ் எழுத்தாளராகவும் வளர்ந்தார்.

 சென்னையில் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழர் மாநாட்டில், 'சங்க இலக்கியம்' பற்றிய மு.வ. எழுச்சியூட்டும் சொற்பொழிவை நிகழ்த்தினார். உலகப் பேரறிஞர்கள் உவந்து பாராட்டினார்கள். தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் நடேசபிள்ளை, இலக்கியத்துக்குரிய நோபல் பரிசைத் தமிழகத்தில் பெறத் தகுதி வாய்ந்தவர் அறிஞர் மு.வ. என்று தம் உரையில் பாராட்டினார். தமிழக அரசு 1957ஆம் ஆண்டு இயற்றமிழுக்கு மு.வ. ஆற்றிய பணிக்காக அவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர்.ரா.பி.சேதுப்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று, தம்மை வாழ்வித்து வளர்த்த பச்சையப்பன் கல்லூரியை விட்டு ஏக்கத்தோடு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். அங்கு முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவதிலும், அவர்களுக்குரிய நூல்களைக் கற்பிப்பதிலும், பல்கலைக் கழகத் தமிழ்த்துறையை பல நோக்கில் வளர்ப்பதிலும் பெரிதும் பாடுபட்டார். ஆராய்ச்சி அறிஞர்கள் பலரை உருவாக்கினார்.

 மு.வ.வின் சிறந்த படைப்பிலக்கியமான 'அகல் விளக்கு' என்னும் புதினத்திற்கு, 1961ஆம் ஆண்டுக்கான அகாதெமியின் இலக்கிய விருதினை தில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கிப் பாராட்டினார். விருதுத் தொகையின் ஒரு பகுதியை புதினத்தை அச்சிட்ட தொழிலாளர்களுக்கு மு.வ. அளித்து மகிழ்ந்தார்.

 மு.வ.வின் 'கள்ளோ? காவியமோ?' நாவலுக்கும், அரசியல் சிந்தனைகள் கொண்ட 'அரசியல் அலைகள்' நூலுக்கும் அவரது மொழிப்புலமையைப் பாராட்டி தமிழக அரசு பரிசுகள் வழங்கியது.

 மு.வ. எழுதிய 'திருவள்ளுவர்', 'மொழிநூல் அல்லது வாழ்க்கை விளக்கம்' ஆகிய இரு இலக்கிய ஆராய்ச்சி நூல்களுக்கும் 'கள்ளோ? காவியமோ?' என்னும் நாவலுக்கும், 'விடுதலையா?' என்னும் சிறுகதை நூலுக்கும், 'அரசியல் அலைகள்', 'ஓவச்செய்தி' ஆகிய கட்டுரை நூல்களுக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் கிடைத்தன. மு.வ.வின் நூல்கள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ருஷ்யா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன.

 மதுரைப் பல்கலைக்கழக துணை வேந்தராக மு.வ. 1971 பிப்ரவரியில் பணி ஏற்றார். பணி ஏற்ற நாளிலிருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். மொழி ஆசிரியராய் இருந்தும் பல்கலைக்கழக அறிவியல் துறை, மைய நல்கைக் குழுவின் சிறப்புத்துறையாக உயர்வுபெற உழைத்தார். மதுரைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வித்துறையைத் முதன் முதல் தோற்றுவித்தவர் இவரே! கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பில்லாப் பலர், பல துறைக்கல்வி கற்று வாழ்வில் உயர உதவினார். பாலைவனம் போல் காட்சியளித்த பல்கலைக் கழகச் சூழலை மரங்களை நடச் செய்து பசுஞ்சோலையாக மாற்றினார்.

 மு.வ. தமிழுக்கு ஆற்றிய பல துறைப்பணிகளைக் கருத்தில் கொண்டு, 1972ஆம் ஆண்டு அமெரிக்கா ஊஸ்டர் கல்லூரி அவருக்கு டி.லிட் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

 மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சிறப்புடன் பணியாற்றிய மு.வ.வை தமிழக அரசு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு துணை வேந்தர் பதவியில் நீடித்திருக்கச் செய்தது.
 
 இதயவலி ஏற்பட்டு சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் மு.வ. சிகிச்சை பலனின்றி 10.10.1974 அன்று மறைந்தார்.

 மு.வ. இயற்கை நெறியில் வாழ்ந்தவர். நன்றி மாறாதவர். திரு.வி.க. பெயரில் ஓர் உயர்நிலைப்பள்ளி தோற்றுவித்து, அதற்கு தம் நான்கு நூல்களை உரிமைப்படுத்தி அதன்வழி வரும் வருமானம் முழுவதையும் வழங்கினார்.

 தம்மைப் புகழ்ந்து போற்றுவதற்கென பிறர் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மறுத்தார். மாலை மரியாதைகளை தடுத்தார்; மாலை மரியாதைகளை மறுத்தார். அவர் எச்செயலையும் எண்ணி, திட்டமிட்டு உரிய காலத்தில் முடிப்பதை வாழ்வியல் அறமாகக் கொண்டிருந்தார்.

 ஒரு தலைவனுக்குப் பூமாலை போடுவதைவிட, அவனைப் போற்றிப் புகழ்வதை விட, அவன் உள்ளம் அறிந்து, நெறி உணர்ந்து, அந்த நெறியில் வாழ்பவனே, தலைவன் எண்ணத்தை ஈடேற்றுகிற உண்மைத் தொண்டன் ஆவான் - என தொண்டனுக்கான இலக்கணம் வகுத்தார் மு.வ.

 உருவ வழிபாட்டைவிட, உண்மையை வழிபடுவது மேலானது என்றார். சமயங்களின் பெயரால் சண்டையிடுவோர் கடவுள் நெறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றார். கடமையைச் செய்யத் தவறுகிறவர்களுக்கு உரிமை கிடையாது என்பதைக் கட்டளையாக அறிவுறுத்தினார்

 “பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும்" என்று கூறுமளவிற்கு மு.வ. முதலான தமிழாசிரியர்கள் குழுவின் முயற்சியால், அங்கு மாணவர்கள் இலக்கிய உலகில் சிறந்து விளங்கினார்கள்.

 “நாவல்கள் என்று சொல்லப்படும் நெடுங்கதைகளைத் தூய தமிழில் எழுத முடியும்; அதில், நல்ல கருத்துக்களைச் சொல்லவும், நாவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று செய்து காட்டிய பேரறிஞர் அவர்" - என்று கி.வா.ஜகனாதன் மு.வ.வின் நாவல்கள் குறித்துப் போற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்.

 மு.வ.வின் நாவல்கள், இளைஞர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியது, கல்விக் கழகங்களில் பாடமாக வைத்துப் பயிலப்பெறும் தகுதியையும் பெற்றன. அனைவரும் விரும்பி கைக்கொள்ளும் புதிய தமிழ் மொழிநடையை அவை உருவாக்கின.

 புதினங்கள், புனைக்கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கடித இலக்கிம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, இலக்கிய ஆராய்ச்சி, திறனாய்வு, கட்டுரை நூல்கள், உரை நூல்கள், சிறுவர்கள் நூல்கள் என எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு வளம் சேர்த்தார் மு.வ.

 பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த பிறகு 1949ஆம் ஆண்டு 'திருக்குறள் தெளிவுரை' என்னும் உரைநூலை எழுதினார். அது கையடக்கப் பதிப்பாகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பெற்றது. 'திருக்குறள் தெளிவுரை' என்னும் அந்நூல் 1999 வரை 490 பதிப்புகளைக் கண்டுள்ளது! தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் பல இலட்சம் மக்களால் வாங்கிக் கற்கப் பெறும் உரைநூல் இது ஒன்றே ஆகும்.

 'தமிழ் இலக்கிய வரலாறு' - என்னும் நூல் சாகித்திய அகாதமி வேண்டுகோளுக்கிணங்க மு.வ. 1972ல் எழுதினார். அந்நூல் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழர், இந்தியர், உலகர் அனைவரும் பண்டைய, இடைக்கால, தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறியும் வண்ணம் காய்த்தல் உவத்தல் இன்றி மிக விரிவுபடாமலும், மிகச் சுருங்காமலும் இதனை அளவாக எழுதி வடிவமைத்துள்ளார்.

 மு.வ. சிறந்த படைப்பிலக்கிய மேதை! சிந்தனை பொதிந்த சீரிய கட்டுரையாளர்! புதுமையைப் புலப்படுத்தும் ஆராய்ச்சியாளர்! எப்போதும் படித்துக் கொண்டும், உலகியலைப் பார்த்துக் கொண்டும், இறுதிவரை எழுதிக் கொண்டே இருந்த ஏந்தல்!

 'மு.வ.' - என உலகத் தமிழர்களால் அன்போடு அழைக்கப் பெற்ற டாக்டர். மு.வரதராசனார், 1950ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஒரு விண்மீனாக மிளிர்ந்தார். தேசம் போற்றும் அறிஞராகத் திகழ்ந்தார்!!

 இலக்கியச் சிறப்பை இழக்காதவாறு எளிய, இனிய, தெளிந்த தமிழ்நடையில் கைதேர்ந்தவராய் விளங்கினார்! பிரஞ்சு இலக்கிய மேதை பெர்னாட்ஷாவைப் போல, தமிழ் இலக்கிய பண்பாட்டைத் தரணிக்கு உணர்த்திய அறிஞர் மு.வ.! அவரது பெருமையை முன்கூட்டியே உணர்ந்த 'தமிழ்த் தென்றல்' திரு.வி.க., மு.வ.வை ”தமிழ் பெர்னாட்ஷா” எனத் தன் அமுதவாக்கால் அழைத்தார்.

- பி.தயாளன்

Pin It