இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எத்தனையோ வீரர்களின் எழுச்சி மிக்க போராட்டங்கள் வரலாற்றில் மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் போனது. அப்படி மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் போனவர்தான் விருப்பாட்சி பாளையப்பட்டை 40 ஆண்டுகள் ஆட்சி செய்து, வெள்ளை ஏகாதிபத்திய‌த்தால் தூக்கிலிடப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் பேராட்ட வீரர் குப்பளப் பாட்சா என்று திப்புசுல்தானாலும் கோபால் நாயக்கர் என்று மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட திருமலை குப்பளசின்னப்ப நாயக்கர்.

1371-ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசன் குமாரகம்பனன் மதுரையைக் கைப்பற்றி விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மதுரையை சேர்த்துக் கொண்டான். மதுரையை சேர்த்துக் கொண்ட அவன் நிர்வாக வசதிக்காக தன் படைவீரர்களை மதுரையில் விட்டுச் சென்றான். அப்படை வீரர்கள் பல இடங்களுக்குச் சென்று ஊர்களை உருவாக்கினர். அப்படி வந்த ஒரு படைப் பிரிவின் படைத்தளபதி சின்னப்ப நாயக்கன் என்பவர் (1381-1425)  தன் குலதெய்வமான “விருப்பஷர்” பெயரில் விருப்பாட்சி என்ற ஊரை ஏற்படுத்தினார். விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய  உறவினர்களைக் கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார். பின்னர் இவை மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529-1564) ஆட்சிக்கு வந்த போது பல சிற்றரசுகள், ஜமீன்களாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட ஜமீன்களில் ஒன்று விருப்பாட்ஷி.

1 சின்னப்ப நாயக்கர்  1381-1425
 
2 கதிரி திருமலைசின்னப்ப நாயக்கர்  1426-1455
 
3 குப்பணச் சின்னப்ப நாயக்கர்  1456-1481
 
4 பாலபத்திர சின்னப்ப நாயக்கர்  1482-1513
 
5 திருமலை ஏறத்தம்பி சின்னப்ப நாயக்கர் 1514-1550
 
6 வராகிரி சின்னப்ப நாயக்கர்  1551-1580
 
7 திருமலை நைநாத்தி சின்னப்ப நாயக்கர் 1581-1601
 
8 திருமலை குப்பளச்சின்னப்ப நாயக்கர் 1602-1641
 
9  திருமலை தாசரி சின்னப்ப நாயக்கர்  1642-1666
 
10 திருமலை பாப்பனச் சின்னப்ப நாயக்கர் 1667-1677
 
11 திருமலை சின்னப்ப நாயக்கர்  1678-1684
 
12 திருமலை முத்துவேல் சின்னப்ப நாயக்கர் 1685-1699
 
13 திருமலை வெங்கிட்ட சின்னப்ப நாயக்கர் 1700-1709
 
14 திருமலை கதிர்ராமணணுஜகிரி சின்னப்ப நாயக்கர் 50‍நாட்கள்
 
15 திருமலைசப்பாணி சின்னப்ப நாயக்கர்  1719-1723
 
16 திருமலை வராகிரி சின்னப்ப நாயக்கர் 1724-1733
 
17 திருமலைதாசரி சின்னப்ப நாயக்கர்  1734-1754
 
18  குப்பள நாயக்கர்  1755-1762
 
19  திருமலைகுப்பளசின்னப்ப நாயக்கர்  1763-1801
 

விருப்பாட்ஷி ஜமீனின் 19-ஆம் பாளையக்காரராக திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் (1763-1801)  பட்டமேற்று, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். இவர் பதவிக்கு  வந்து பத்தாம் ஆட்சியாண்டில் இருந்தே வெள்ளைக் கும்பினி அரசுக்கும், இவருக்கும் பனிப்போர் ஆரம்பமாகியது. 1772-ல் முத்து வடுகநாதரை ஆங்கில அரசு படுகொலை செய்தது. ஆதரவிழந்த அவரது மனைவி வேலுநாச்சியாரையும் மகள் வெள்ளச்சி நாச்சியாரையும் விருப்பாட்சி அரண்மனையில் எட்டு ஆண்டுகள் அனைத்து வசதிகளையும் செய்து சொந்த சகோதரி போல பாதுகாத்து வந்தார்.

1800-ல் கோவையில் தென்னிந்தியப் புரட்சி நடைபெறுவதற்கு கோபால் நாயக்கர் தளகர்த்தராக விளங்கினார். திண்டுக்கல் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை நிறுவி அதன் தளகர்த்தராக விளங்கினார். துண்டாஜி வாக், கேரளவர்மா, தீரன் சின்னமலை, திண்டுக்கல் லக்கமநாயக்கர், தள எதுலப்ப நாயக்கர் ஆகியோர் இதன் மற்ற உறுப்பினர்களாவர்.

   மொகரம் பண்டிகையன்று கோவையில் உள்ள ஆங்கிலக் கோட்டையைத் தகர்த்து, அதை மீட்பது என்று திட்டம் தீட்டப்பட்டது. 03-06-1800 என்ற நாள் குறிக்கப்பட்டது. விருப்பாட்சியில் இருந்து படைகள் அனுப்பப்பட்டது. கோவையில் வழக்கத்தை விட வீரர்கள் அதிகமாக இருப்பதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள் மொகரம் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னர், புதிய ஆட்களை கைது செய்ய ஆரம்பித்தனர். இதனால் நிலை குலைந்த வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பு அவரது சகோதரர் ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோபால் நாயக்கர் அவரை மீட்பதற்கான திட்டத்தையும், பண உதவிகளையும் செய்து தன்னுடைய படை வீரன் பொட்டிப் பகடை தலைமையில் முந்நூறு வீரர்களை அனுப்பி, ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோரையும் அவருடன் இருந்த பதினைந்து வீரர்களையும் மீட்டனர். (1801 பிப்.12) இது வெள்ளையருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

கோபால்  நாயக்கரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்று  முனைப்புடன் செயல்பட்ட வெள்ளையர்கள், மற்ற பாளையக்காரர்களிடம் இருந்து உதவி வராதவாறு பிரித்தனர். ஊமைத்துரையையும், மருது பாண்டியர்களையும் திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற பகுதிக்கு விரட்டினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பெரும் படையைத் திரட்டினர். 1801 மார்ச் 17-ஆம் நாள் லெப்டினட் கின்னஸ் தலைமையில் ஆங்கிலப் படை விருப்பாட்சியைத் தாக்கியது. கோட்டை முழுமையாக முற்றுகை இடப்பட்டது.

சரணடையுமாறு வெள்ளைக் கும்பினி அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, 72 வயதான கோபால் நாயக்கர் சுரங்கப்பாதை வழியாக தன் நம்பிக்கைக்குரிய வீரர்களுடன் தப்பி கருமலைக் காட்டுக்குள் மறைந்து விட்டார். கோட்டையில்  இருந்த கோபால் நாயக்கர் மனைவி பாப்பம்மாள், ஊனமுற்ற 14 வயது மகன் பொன்னப்ப நாயக்கர், கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கரின் மகள்கள் பொன்னம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

போர்க்களத்தில் மறைந்து விட்ட கோபால் நாயக்கரின் தலைக்கு 2000 ரூபாயை விலையாக வைத்தனர். (இன்றைக்கு அதன் மதிப்பு சுமார் 4 கோடி)  கருமலைக் குன்றுகளில் தங்கியிருந்த கோபால் நாயக்கரை அவரது எதரிகள் காட்டிக் கொடுத்தனர். 1801-ம் ஆண்டு மே  மாதம் 4ஆம் நாள் கோபால் நாயக்கர் கைது செய்யப்பட்டார். 4 மாதம் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டார். 1801-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் நாள் விருப்பாட்சிக் கோட்டை முன்பு தூக்கிலிடப்பட்டார். கோட்டை முற்றிலும் அழிக்கப்பட்டு அங்கு ஆமணக்கு விதை விதைக்கப்பட்டு வருடாவருடம் கும்பினி அரசுக்கு ஆமணக்கு வருமானம் எவ்வளவு என்று கணக்கு காட்டப்பட்டது.

கோபால் நாயக்கர் இறந்து 10 வருடங்களுக்குப் பிறகு  மதுரையின் ஆட்சித் தலைவர் 1810ல் வெள்ளை அரசுக்கு இப்படி  எழுதினார். "கொல்லவாருகளின் இன்றைய நிலை பரிதாபத்திற்கு உரியது. இந்த குறுகிய  காலத்தில் சமூக கட்டமைப்பில்  இருந்து  ஒதுக்கப்பட்டு விட்டனர். மேய்ச்சல் மட்டுமே தெரிந்த இவர்கள் தற்போது உணவுக்கே திண்டாடி வருகின்றனர். இனி இவர்களால் நமது கும்பினி அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை."

- ஆ.நந்திவர்மன், தொல்லியல் ஆய்வாளர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழனி

Pin It