தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தவர்கள் மிகச் சிலரே. அச்சிலருள் ஒருவரே தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், மொழிஞாயிறின் முதல் மாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் என்னும் சிற்றூரில் 10.03.1933 ஆம் நாள் பிறந்தார். இவர்தம் தந்தை துரைசாமி, தாய் குஞ்சம்மாள். ஆகவே, துரைமாணிக்கம் என்றானார்.

மனிதர்கள் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். அவர்களுள் இறந்தும் உயிர் வாழும் மாமனிதர்கள் மிகமிகச் சிலரே. அவர்களில் ஒருவரே பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்பிப்பது மொழித் துய்மை தான், தூய்மையான ஒன்றுதான் பிரிதொன்றைப் படைக்க முடியும். எனவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும்; கற்பிக்கும் மொழி, தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். மொழி, தூய்மை இழந்தால் அம்மொழி இன மக்கள் தூய்மை இழப்பர்; சீர்கெடுவர்; இறுதியில் அழிவர். சிலர் தமிழ் மொழியில் தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைக் கலந்து, தமிழை அழிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டனர். மணிப்பிரவாள நடையை உருவாக்கி தமிழ்; மொழியைச் சிதைத்தனர். திட்டமிட்ட இந்தியச் செயலைத் தடுத்து நிறுத்தவும், தமிழ் மொழியின் தூய்மையைக் காக்கவும் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. அதனைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டு அவ்வியக்கத்தவரை தமிழ் மொழி வெறியர்கள் என்று குற்றஞ்சாட்டி இகழ்ந்து புறக்கணித்தனர்.

 தனித்தமிழ் இயக்கம் தமிழகத்தில் ஒரு தற்காப்புப் பேரியக்கமாகத் தலை தூக்கியது; வளர்ச்சி பெற்றது; தமிழர்களின் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டியது. தனித்தமிழ் இயக்க ஆலமரத்தின் ஓரு விழுதாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் விளங்கினார். இவர் குழந்தைப் பருவத்திலேயே கூர்ந்த மதியும். சுட்டிதனமும் நிரம்பப் பெற்று விளங்கினார். சேலம் கோட்டை மாநகராட்சிப் பள்ளியிலும், ஆத்தூர் உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.

 இவரதுத் தமிழ்ப்பற்று வளரவும் சிறக்கவும் காரணியாக இருந்தவர்கள் சேலம் நடேசனார், தமிழ் மறவர் புலவர் பொன்னம்பலனார் ஆகியோர். மேலும், மறைமலை அடிகளின் தனித்தமிழ்வழியைப் பற்றி நடந்த, பொன்னம்பலனார், புரட்சிக் கவி பாவேந்தர் பாரதிதாசனார்- ஆகியோரின் தனித்தமிழ் உணர்வில் ஊறி வளர்ந்தார்.

 தமிழர் நெஞ்சங்களில் பெருமிதமாக நிறைந்து வாழும் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ் மொழி, இலக்கிய இலக்கண வரலாற்றில் புதியதொரு உத்தியைத் கையாண்டார், தாழ்ந்த தேசிய இனவரலாற்றில் என்றென்றும் அழிக்க முடியாத கல்வெட்டாகத் திகழ்ந்தார்; தமிழ் நில வரலாற்றில் எழுச்சிமிக்க திருப்புமுனையை ஏற்படுத்திட முனைந்தார்... அவர்தனி முத்திரை பதித்துச் சென்றிருக்கும் வரலாற்றுப் பதிவுகள் பலப்பல.
 
“இன்பத் தமிழ் மொழிக்கு என்றுமென் மூச்சும்
இனிய தமிழ்நாட்டைப் பற்றியென் பேச்சும்
அன்பின் பிணைப்பினுக்கு என்றன்கை வீச்சும்
என்றுமித் தரையில் நின்றோச்சும் ” - என்னும் அவரது கவிதை வரிகள், அவர் தமிழ் மொழியை தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்டார் என்பதை உரத்துப்பாடும்... சாதிமதச் சழக்குரைகளை வேரறுத்து வினையாற்ற, அரசியல் கட்சிகளுக்கும் அப்பால் நின்று தமிழ் - தமிழர்-தமிழ்நாடு என்னும் உணர்வோடு வாழ்ந்து வழிகாட்டியவர் பாவலரேறு.

 ஆசியர் பயிற்சி முடித்துக் தொடக்கப்பள்ளியொன்றில் பணி புரிந்த போது கமலம் என்ற நங்கையைத் தம் வாழ்விணையாக ஏற்றுக் கொண்டார்.

 சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமது கல்லூரிக் கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரியில் பேராசிரியாரகப் பணியாற்றிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் மாணவரானர். அவர்களின் தொடர்பு வாழ்நாள் இறுதிவரை தொடர்;ந்தது.

“உழைப்போர் உலகம் வரல் வேண்டும்- ஒவ்
  வொருவர் நலமும் பெறல் வேண்டும்
  பொதுமை உலகம் வரல் வேண்டும் - ஓரு
  புதுமை விளைவு பெறல் வேண்டும்”
 என்று, பொதுவுடைமைச் சிந்தனைகளை தனது நெஞ்சத்தில் ஏந்தி பாடுபட்டார்.

 மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும். இனிய உலகம் மலர வேண்டும். உழைப்பவர் வாழ்வு உயர வேண்டும் - என்பதற்காக குரல் கொடுத்தார்.

தீண்டாமைக் கொடுமைகளை பலமுனைகளிலும் பாலூற்றி வளர்த்தனர் இந்து மத அடிப்படைவாதிகள். அவர்களின் எதிர்ப்பு தனித்தமிழ் இயக்கத்தையும் தாக்கிற்று. அத்தாக்குதலை முறியடித்து நின்ற தனித்தமிழ்ப் போராளிகளை நடுவண் அரசும், மாநில அரசும் நேர்மையற்ற, நெறி பிறழ்ந்த அதிகாரங்களைச் செலுத்தி தகர்க்கவும், நசுக்கவும் துணிந்தது. “தமிழ், தமிழ் இனம்” என்று குரல் கொடுத்தவர்களின் ஆட்சியிலும் இக் கொடுமை அரங்கேறியது கவனத்தில் இருத்தப்பட வேண்டியதாகும். இந்தக் கொடுமைகள் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கியது. காரணம் ஏதுமின்றி இருள் சிறையில் தள்ளி அவரை அடைத்தது அரசு.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் அரசியல், அறவியல், பொருளியல், சமுதாயவியல், கல்வி, பண்பாடு, ஒழுக்கம், பொழுது போக்கு முதலிய அனைத்துத் துறைகளிலும் மதம் குறிப்பாக இந்து மதம் தன் வளர்ந்த கொடிய, நச்சுத் தன்மை கொண்ட இறகுகளைப் போர்த்திக் கொண்டு இருப்பதை பெருஞ்சித்திரனார் அம்பலப்படுத்தினார். மேலும் “இருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக் காலத்தில், எந்த ஒரு தனிப்பட்ட மாந்தனுக்கும் மதம் என்ற ஓர் இன உறுப்பு தேவையே இல்லை” என்றார்.

 “இந்து மதம் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களிலும் மிகவும் கேடான மதம். இழிவான மதம். இதில் தான் பல கோடிக் கடவுள்கள் கற்பிக்கப் பெற்றிருக்கின்றன. இந்து மதத்தில் எந்த வகையான மாந்த உயர்ச்சிக்கும் ஓர் எள்ளின் மூக்களவும் வழியில்லை. மக்களை பல நூறு சாதிகளாக வேறுபிரித்து, அவர்களுக்குள் இழிவு தாழ்வு கற்பிக்கின்ற ‘வருணாசிரமக்’ கொள்கையே இந்து மதத்திற்கு அடிப்படையானது”.

 “உலகில் மிகவும் மூத்ததும், முதலானதும், நாகரிகம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் சிறந்ததுமான தமிழினம்;, இந்து மதத்தாலேயே நலிவுற்றது, மெலிவுற்றது, அடிமையுற்றது. பல ஆயிரக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து வலிவு இழந்து, இன்று அழியும் நிலையில் உள்ளது. இந்த இழிநிலையை தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் எதிர்த்து போராடியதால் தமிழர்கள் ஓரளவு விழிப்புநிலை அடைந்தனர் ”.

 “மதம் மக்களுக்கு நஞ்சு... அது ஒரு பேரிருள் மடமைகளின் கலவைச் சேறு... அது மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையற்ற ஒன்று. அன்பு, அறிவு, பண்பு, ஒழுக்கம், ஒப்புரவு, பொதுமை, அற உணர்வு போன்ற எந்த ஒரு நல்லியல்புகளுக்கும் ஓர் இம்மியளவும் கூட உதவுவது இல்லை”- என பெருஞ்சித்திரனார் இந்து மதக் கொடுமையைச் சாடுகிறார்.

தனித்தமிழ் இயக்கத்துக்காக “தென்மொழி’ எனும் இதழ், மொழி ஞாயிறு அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு, 1959 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச் சிட்டு, தமிழ் நிலம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.

 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்திலிருந்த காலம். “தென்மொழி” யில் சிவப்பு மையினால் ஓர் ஆசிரியர் உரை, அட்டை முகப்பில் வாளால் குத்துண்டு ஓடும் ஒரு காட்டெருமையின் படம்.

 இப்படிப் படம் போட்டதற்காகவும், ஆசிரியவுரை எழுதியதற்காகவும் பெருஞ்சித்திரனார். ம.இலெ. தங்கப்பா, தமிழ்க் குடிமகன் ஆகியோர் மீது இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு முடிவில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது. தண்டம் கட்ட மறுத்துச் சிறை சென்றார்.

 தென்மொழி இதழின் தமிழ்த் தொண்டு தமிழ்மொழி இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. தனித்தமிழ் இயக்கம் காண வேண்டும் என்பதை உணர்ந்த பெருஞ்சித்திரனார். தென் மொழிக் கழகம் ஆரம்பித்தார். பின்னர் அது 1968 ஆம் ஆண்டு, ‘தமிழ் மறுமலர்ச்சிக் கழகம் ’- எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 “கலப்புத் தமிழே அழுக்குத் தமிழ்.
 அக்கலப்புச் சொற்களை நீக்கிய
 மூல முதல் தமிழே தூய தமிழ்”
எனத் தூய தமிழை வரையறுக்கிறார் பெருஞ்சித்திரனார்.

 தமிழைப் பிற மொழிப் பிணைப்பினின்றும் விடுவிப்பதும், தமிழை அனைத்துத் துறைகளிலும் வளர்த்து வளப்படுத்துவதும் பாவாணாரின் வாழ்க்கை நோக்கமாக இருந்தமையால், அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து உலகத் தமிழர் கழகம் தொடங்கப்பட்டது. அதன் செயலாளராகப் பெருஞ்சித்திரனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அக்கழகத்துடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பொறுப்பிலிருந்து விலகினார். பொறுப்பிலிருந்து விலகினாலும் அதன் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொள்ள தவறவில்லை. பாவலரேறு தனது வாழ்நாள் முழுதும் தமிழர்-தமிழ்-தமிழ்நாடு ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தி வாழ்ந்தார். தன்னை நினையாமல், தன் குடும்பத்தை நினையாமல், எப்பொழுதும் தமிழையும், தமிழனையும், தமிழ்நாட்டையும் உயர்த்த உழைத்தவர். அதற்காகத் தன்னையே தியாகம் செய்தவர்.

 தந்தைப் பெரியாரைப் போன்ற கொள்கைத் துணிவும், பாவேந்தர் பாரதிதாசனையுப் போன்ற இலக்கிய ஏற்றமும், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றவர்களின் தனித்தமிழ் நடையும். மொழி ஞாயிறு பாவாணர் அடியொற்றிய மொழியறிவும் கொண்டு தமிழ் விடுதலைக்கும், தமிழர் விடுதலைக்கும் பாடுபட்ட தன்னல மறுப்பாளர் பெருஞ்சித்திரனார்.

பாவலரேறு தமிழுக்கு அளித்த நூல்களின் பட்டியல் வருமாறு

1 கொய்யாக்கனி
2 பாவியக் கொத்து
3 ஐயை
4 எண் சுவை எண்பது
5 கற்பனை ஊற்று
6 பள்ளிப் பறவைகள்
7 மகபு[கு வஞ்சி
8 கனிச்சாறு
9 நூறாசிரியம்
10 தன்னுணர்வு
11 இளமை உணர்வுகள்
12 பாவேந்தர் பாரதிதாசன்
13 இலக்கியத் துறையில் பணி வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்
14 வாழ்வியல் முப்பது
15 ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
16 சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
17 இனம் ஒன்று பட வேண்டும் என்பது எதற்கு?
18 செயலும் செயற்திறனும்
19 தமிழீழம்
20 ஓ... ஓ... தமிழர்களே...
21 தனித் தமிழ் வளர்ச்சி வலராறு
22 நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
23 இளமை விடியல்
24 இட்ட சாவம் முட்டியது
25 நமக்குள் நாம்
26 கழுதை அழுத கதை
27 சாதி ஒழிப்பு
28 மொழி ஞாயிறு பாவாணர்
29 அறுபருவத் திருக்கூத்து
30 திருக்குறள் மெய்ப் பொருளுரை
31 வேண்டும் விடுதலை
32 பாவலரேறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகள்
33 உலகியல் நூறு
 
  தமிழ் - தமிழர் - தமிழ் நாடு என்றும் மூன்றும் பெருஞ்சித்திரனார் நினைவில் இருந்து அழிந்த நாள் 15.06.1995. அதுவே அவர் தமிழனைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட இறுதி நாளும் ஆகும்.

- பி.தயாளன்

Pin It