மதுரையைச் சேர்ந்த 1913 ஆம் ஆண்டு மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்த முகமது சாதிக் மகனாகப் பிறந்தவர் முஹையதீன் பாட்சா.               

                பண்டைக் காலத்தில் குழந்தைகளை அடகு வைக்கும் முறை இருந்தது. அப்படி முஹையதீன் பாட்சாவையும நகைக்கடையில் அடமானம் வைத்து அவரை மீட்க முடியாமல் விட்டு விட்டனர். நகைக்கடையில் எடுபிடி வேலை செய்து வந்தபோது சித்த வைத்தியர் ஒருவர் இவர் மீது இரக்கம் கொண்டு பல சித்து வேலைகளையும், சித்த வேலைகளையும் சொல்லிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அந்தமான் இப்ராஹிம் என்பவர் மூலம் சிலம்பாட்டம், குஸ்தி மற்றும் பல வித வித்தைகளை கற்றுக் கொண்டார். அதன் பின்னர் மதுரையிலிருந்து போடிக்கு பிழைப்பதற்காக சென்று விட்டார்.

                உறவினர் ஒருவர் ஆதரவின் பேரில் போடிப்பகுதியில் இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுத்தார். கலையுலகில் வல்லவர் என அப்பகுதியினர் மத்தியில் பிரபலமானார். அப்பொழுது 'மகாத்மா காந்திஜிக்கு ஜே' எனக்கூறியவாறு விடுதலை வேட்கையைப் பற்றி சிவானந்தசாமி மற்றும் பழனியாண்டி என்பவர்கள் கொட்டு அடித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றார்கள். அதனைக் காண நேர்ந்த மல்யுத்த வீரர் முகையதீனுக்கு சுதந்திரப் போராட்டத்தில்  இணைந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை எழவே, சிவானந்த சுவாமியின் ஆலோசனைப்படி விடுதலைப் போராட்டத்தில் குதித்தார்.

                1934 ஆம் ஆண்டு சின்னாளபட்டி, அம்மையநாயக்கனூர் பகுதிகளில் காந்தியடிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரைக் காண முகையதீனும்  சென்றுள்ளார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டபோது போலிஸ் தடியடி நடத்தியது. அந்த தடியடியில் முகையதீன் மேலும் பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்காயம் பின்னால் மாறாத தழும்பாக மாறியது. அதன் பின்னர் 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தின் பேரில் கொடிபிடித்து போடியிலிருந்து சென்னை வரை நடந்தே சென்று சுதந்திரத்தைப்பற்றி எடுத்துக்கூறினார். சென்னையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

                சிறையில் இருந்து விடுதலை பெற்று போடிக்கு திரும்பி வந்த முகையதீன் சுதந்திர போராட்டத்தைப் பற்றியும், ஆங்கிலேயனை இந்நாட்டை விட்டு அகலும் வரை போராட வேண்டும் என்றும் காண்போர்களிடம் எல்லாம் சுதந்திர தாகத்தை எடுத்துரைத்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு போடியில் நாவிதர் கடையில் முடியை திருத்தம் செய்யச் சென்றபோது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் தேநீரும், இனிப்புகளையும் வாங்கிக் கொடுத்தவாறு நாளை எங்கள் வீட்டிற்கு வாருங்கள், எங்கள் வீட்டிற்கு வாருங்கள் எனக்கூறிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் அவருடைய வீட்டிற்குச்சென்று பார்த்தபோது இவ்வுலகை விட்டு பிரிந்து செல்லத் தயாராக இருந்த கபன் துணியில் உடலைப் போர்த்தும் வேலை நடைபெற்றதைக் கண்டு ஆச்சரியத்துடனும், அழுகையுடனும் அவரைப் பார்த்தார்களாம்.

- வைகை அனிஷ்

Pin It