டாக்டர் டி.எம். நாயர் என்று அழைக்கப்படும் தாரவார்த் மாதவன் நாயர். நீதிக் கட்சி என்று அழைக்கப்படும் தென் இந்திய நலவுரிமைச் சங்க நிறுவனர்களில் ஒருவராவார்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இவர் விளங்கினார். 1904 முதல் 1916 வரை சென்னை நகராட்சியின் உறுப்பினராகவும் 1912 முதல் 1916 வரை சென்னை மாகாண சட்ட மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

tmnair_338டி.எம்.நாயர் அவர்கள் 1868 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் (தற்போதைய கேரளம்) சங்கரன் நாயர். கமினி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

நாயர் தனது தொடக்கக் கல்வியைப் பாலக்காடு உயர் நிலைப் பள்ளியிலும், பட்டப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்றார். மருத்துவப் பட்டப் படிப்பை இங்கிலாந்தில் எடின்பர்க் பல்கலைக் கழகத்திலும், காது, மூக்கு, தொண்டை (ENT) நோய் தொடர்பான ஆய்வுப் பட்டத்தை பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசிலும் பெற்றார்.

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் நாயர் தன்னைக் காங்கிரசுக் கட்சியில் இணைத்துக் கொண்டு பாடுபட்டார். காங்கிரசுக் கட்சி பேச்சாளர்களில் தலைசிறந்த ஒருவராகத் திகழ்ந்தார்.

1908 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு டாக்டர் நாயர் அவர்களை இந்தியத் தொழிலாளர் ஆணைய உறுப்பினராக நியமித்தது. நாயர் இந்தியத் தொழிலாளர்களின் அவலநிலையைப் பட்டியல் போட்டுத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்திடப் பரிந்துரைத்தார்.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் (Imperial legislative of India) நாயர் தோல்வி அடைந்தார். அதற்கு முழு முதற்காரணம் காங்கிரசு கட்சியில் இருந்த சாதி வெறியர்களே எனக் குற்றம் சுமத்தினார். இதனால் காங்கிரசுக் கட்சியில் அவருடைய தீவிர ஈடுபாடு குறைந்து வந்தது.

டாக்டர் டி.எம். நாயரும் சர்.பி. தியாகநாயரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தபோது பார்ப்பனரல்லாத மக்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களின் மனபோக்கை நன்கு அறிந்த டாக்டர் சி. நடேசனார், அவர்களை அணுகித் தாம் நிறுவிய திராவிடச் சங்கத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை விளக்கி அவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களும் காங்கிரசுக் கட்சியை விட்டுவிலகி. 1917 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்'' என்னும் நீதிக்கட்சியைத் தொடங்கினர். நீதிக் கட்சியைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்தவர் டாகர்டர் சி. நடேசனார் என்றாலும், நீதிக் கட்சியை வழிநடத்தியவர் டாக்டர் டி.எம். நாயர் அவர்களே.

1917 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் நடைபெற்ற தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் டி.எம். நாயர் அவர்களைப் பற்றி தியாகராயர் தனது தலைமை உரையில்

“அவர் காட்டிய வழியிலேயே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம். நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்'' என்றார். நாயர் நீதிக்கட்சியில் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளாமல் 24 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வழி நடத்தினார் என்பது வரலாறு. நீதி (Justice) என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.

“நீதிக் கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்பதல்ல. எங்களுக்குச் சமூக நீதி வேண்டும். அதனை நிறைவேற்றுதற்குரிய அரசியல் உரிமை வேண்டும். பிரிட்டீசு அரசு அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தர வேண்டும். நீதிக் கட்சி இருந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக்கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும். அதுவே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டும், எழுதியும் வருவதற்காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்து சென்று வருகிறேன்'' என்று கூறினார் டாக்டர் நாயர்.

டாக்டர் நாயர் அவர்களின் பேச்சும், எழுத்தும் காங்கிரசுக் கட்சிக்காரர்களையும், அன்னிபெசன்ட் அம்மையாரின் “ஹோம் ரூல்'' கூட்டத்தாரையும் கதி கலங்க வைத்தது. அதோடு காந்தி, ராஜாஜி, பாரதியார் போன்றோர் அவருடைய தாக்குதலுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.

டாக்டர் நாயர் நீதிக்கட்சிக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவைத் திரட்டி தந்ததில் நிகரற்றவராக விளங்கினார்.

1917 அக்டோபர் திங்கள் 7 ஆம் நாள் சென்னை எழும்பூர் ஸ்பர்டாங் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்குத் திரு. ரெட்டை மலை சீனிவாசன் தலைமை தாங்கினார். சர். பி.டி. தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

டி.எம். நாயர் அவர்களின் உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க, வீரஞ்செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சிவூட்டக்கூடியதொரு சொற்பொழிவு எனப் பலராலும் புகழ்ந்து பாராட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பார்ப்பன இளைஞர்கள் சிலர் கலந்துகொண்டு தகராறு செய்ய பின்னர் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகப் பாரதியார் தனது கட்டுரையில்.

“சென்னைப் பட்டினத்தில் நாயர் “சாதிக் கூட்டமொன்றில் பறையரைவிட்டு இரண்டு மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்'' என்றும்

என்னடா இது ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும் வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?

அடே, பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடந்த கொள்கிறார்கள் எல்லோரையும் அடிக்கப் பறையரால் முடியுமா?

என்று பாரதியார் தனது இந்து மத வெறியையும் சாதி விசுவாசத்தையும் இனப்பற்றையும் வெளிக்காட்டியதோடு நீதிக்கட்சியின் ஒப்புற்ற தலைவர் டி.எம். நாயரை "இந்த மத விரோதி' என அடையாளப்படுத்துவதோடு, பிராமணர்களைக் காப்பாற்ற இந்துக்கள் ஏன் முன்வரவில்லை என்ற இந்து மதத்தில் பார்ப்பனரல்லாதாரைத் தூண்டி விடுகிறார். அதோடு பறையர்களே நீங்கள் பார்ப்பனர்களைத்தான் அடிக்க முடியும். உங்களை அவமதிக்கும் ஜாதி இந்துக்களை அடிக்க முடியுமா? என்று பார்ப்பனரல்லாதார் இடையே மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்.

உண்மையிலேயே, இவர் ஒரு நடுநிலையாளராக இருந்திருந்தால் இவர் கூறுகிறபடி அந்தச் சாதிக் கூட்டத்தில் பார்ப்பன இளைஞர்களுக்கு என்ன வேலை? இவர்கள் ஏன் அங்குச் சென்றார்கள்? என்று கண்டித்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக, தான் ஒரு இந்து மதப் பற்றாளன்; இனத்துக்காக பாடுபடுபவன். சாதி வெறியன் என்பதைப் “பறையர்கள்'' என்று அழைப்பதன் மூலம் தன்னை அடையாளப்படுத்துகிறார்.

இந்த உண்மையை அறியாத நம்மில் பலர் அவரைத் “தேசியக் கவி'' என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்'' என்றும் தவறுதலாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனரல்லாதாருக்குத் தனி வாக்குரிமையுடன் கூடிய அரசியல் சீர்திருத்தம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிட நாயர் இங்கிலாந்து செல்ல விரும்பினார். அப்பேது அரசியல் தலைவர்கள் அங்குச் செல்வதற்குத் தடை இருந்ததால், மருத்துவ சிகிச்சை பெற லண்டன் செல்வதாக அரசிடம் அனுமதி கோரினார். ஆங்கிலேய அரசு அனுமதி தந்தாலும், அவர் இங்கிலாந்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றதற்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டபின்பே அவர் அனுமதிக்கப்பட்டார். இதற்குச் காரணமாக இருந்தவர்கள் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரத் திலகரும்தான் என்பதை நாயர் நன்கு அறிவார்.

1918 ஜுன் திங்களில் நாயர் லண்டன் வந்து சேர்ந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டார். இந்தியாவில் கவர்னர்களாகப் பணியாற்றிய ஆங்கிலேயர் பலர் நாயரின் ஆற்றலையும், அவரின் தன்னலமற்ற சேவையையும் பாட்டாளி மக்களின் குறைகளையும் இடுக்கண்களையும் இடையூறுகளையும் எடுத்துரைக்க வல்லமை படைத்த ஒருவர் டாக்டர் டி.எம். நாயர் அவர்களே, அவரை உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். அதன் காரணமாக அவருக்குப் போட்டிருந்த “வாய்ப்பூட்டு' உடைக்கப்பட்டது.

1918 அக்டோபர் 2 ஆம் நாள் இங்கிலாந்து பாராளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் கூட்டத்தில் நாயர் சிறப்பாக உரையாற்றினார். இந்தியாவில் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நடைபெற்ற வரும் கொடுமைகளை விளக்கினார். பார்ப்பனரல்லாதாருக்குச் சமூக நீதி கிடைக்க வழிவகுத்தார்.

மாண்டேகுசெம்ஸ்போர்டு சீர்திருத்தம் அடிப்படையில் 1920 இல் சென்னை மாகாணத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40லிருந்து 135 ஆக உயர்த்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. நீதிக்கட்சி தனியாகப் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க ஆளுநர் கட்சியின் தலைவர் தியாகராயரை அழைத்தார், தியாகராயர் மறுத்து ஏ. சுப்பராயலு ரெட்டியாரை முதன் மந்திரியாகப் பொறுப்பேற்க வைத்தார். 1920 முதல் 1936 வரை 16 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றது. பார்ப்பனரல்லாதார் பல சலுகைகளையும் பல உரிமைகளையும் பெற்றனர். குறிப்பாக 1921, செப்டம்பர் 16 இல் நீதிக்கட்சி அரசு முதல் வகுப்பு வாதி பிரதிநிதித்துவ அரசாணையை அமல்படுத்தியது. இதுவே இந்தியாவின் முதல் இடஒதுக்கீடு சட்டமாகும். தாழ்த்தப்பட்டோர் என அழைக்கபட்ட மக்களுக்குப் பல உரிமைகள் கிடைத்தன. குறிப்பாக

             தெருவில் நடப்பதற்கு உரிமை

             கோவில்களில் நுழைய உரிமை

             பேருந்துகளில் பயணம் செய்ய உரிமை

             நாடக அரங்குகளில் நுழைய உரிமை

             கல்விக் கூடங்களில் கல்வி பயில உரிமை

             வேலை வாய்ப்பில் உரிமை

             புறம்போக்கு நிலங்கள் உரிமை

             பஞ்சமர், பறையர் என்பதை ஆதிதிராவிடர் என அழைக்க ஆனை

 பெண்கள் தேர்தலில் போட்டியிட உரிமை

 நகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டம்

எனப் பல திட்டங்களை நீதிக்கட்சி நிறைவேற்றினாலும், இதற்காகவே பாடுபட்ட டாக்டர் டி.எம். நாயர் இவைகளைப் பார்க்க முடியாமல் எந்த மக்களுக்காகப் போராட லடண்டன் சென்றாரோ, அங்கேயே அதாவது 1919 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 17 ஆம் நாள் தனது 51ஆவது வயதில் முடிவெய்தினார்.

பார்ப்பனரல்லாதார் ஒரு மாபெரும் தலைவனை இழந்து வாடினார்.

(பாசறை முரசு மே 2012 இதழில் வெளியான கட்டுரை)

Pin It